Bio Data !!

15 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும் - பாகம் ரெண்டு

கண்ணீர் வழிய படுத்துக் கிடந்த அந்த பெரிய உருவம், ஷங்கரை தூங்க விடவில்லை.
தன் இலக்கிய வேலைகளுக்கும், தான் செய்ய நினைக்கும் சேவைகளுக்கும் தோதுப்படாது என்றே ஷங்கர் மணம் முடிக்கவில்லை. பகதூர் பற்றி தான் கொடுத்து இருக்கும் தகவல்களுக்கு ஏதேனும் இடத்தில் இருந்து பதில் வந்து விட்டால் உடனே அவனைக் கூட்டிக் கொண்டு வட மாநிலம் செல்லத் தயாராகத் தான் இருந்தான். பதில் வர வேண்டுமே?  இல்லாத பட்சத்தில் அடுத்து தான் எடுத்து வைக்க வேண்டிய அடி என்ன?  லேசான கலங்கிய எண்ணங்களும் தூக்கமுமாய் தொடங்கி ஆழ்ந்து உறங்கிப் போனான். 

மறு நாள் ஏதும் பேசாமலே ஏக்கம் நிறைந்த கண்களோடு தன்னைப் பார்த்த பகதூரின் முதுகில் ஆதரவாக தட்டிய படியே பணிக்கு கிளம்பினான். அலுவலகம் வந்ததும் தன் நண்பரும், இந்த மாதிரியான விஷயங்களில் தனக்கு குருவும், ஆன தன் அதிகாரியிடம் சென்று
"சார், மெயில் செக் பண்ணிக்கவா? " என்றபடி கணினியின் முன் அமர்ந்தான்."எல்லாம் முடிந்த பிறகு பகதூரிடம் சொல்லி இருக்கணும். நேற்று மெயில் பண்ணி இருக்கிற விஷயத்தை சொன்னதும் அழுதுட்டான் சார், அந்த பெரிய, கருப்பு திராட்சை போன்ற  கண்களில் இருந்து கண்ணீர் விழுந்ததும் நான் ஆடிப் போய்ட்டேன் ரொம்ப நேரம் தூங்க முடியல."என்ற படி மெயிலைத் திறந்தவன், "வாவ்" என்றான்.
இரு ஆட்சியாளர்களிடம் இருந்து மெயில் வந்து இருந்தது. "தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். முயற்சி செய்கிறோம். " என்ற உட் கருத்தோடு ஹிந்தியில் வந்திருந்தது. மூன்றாவது ஆட்சியாளரிடம் இருந்து பதில் இல்லை.
வீட்டுக்கு வந்த ஷங்கரும் தான் எடுக்கும் முயற்சிகளை மறந்தது போல் மறைத்தபடி செயல்படத்  தொடங்கினான். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிய நிலையில் மூன்றாவது ஆட்சியாளரிடம் இருந்து ஒரு செய்தி . "நீங்கள் சொல்லிய தகவலின் படி கீழ் மட்ட அதிகாரிகள் வரை தெரியப் படுத்தி விசாரிக்க வேண்டி இருந்ததால் கொஞ்சம் கால தாமதம் ஆகி விட்டது. அதே சூழ்நிலையிலும், அதே உருவ அமைப்பிலும் தவற விட்டா ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. அவரை ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தால் உறுதி செய்ய உதவியாக இருக்கும்"

ஷங்கருக்கு இந்த மெயிலை பார்த்ததும் லேசாக படபடத்தது. தனது முயற்சி பலித்து விடும் போலிருக்கிறதே ! மெயிலை மறு முறை வாசித்து பார்த்தான்.சொல்லலாம்  என்றால் அதிகாரி வெளியே போய் இருந்தார். எழுந்தான் யாரிடமாவது இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. அது மட்டும் அல்ல பகிர்ந்து கொண்டால் தான் உற்சாக மிகுதியில் தான் கண்டு கொள்ளாமல் விட்ட ஏதேனும் விஷயத்தை குறிப்பிடுவார்கள்.  

மெல்ல காரிடாரில் நடந்தான் எதிரே அலுவலகத் தோழி சந்தியா வந்து கொண்டு இருந்தாள்  . "காலை வணக்கம் சந்தியா?"
"வணக்கம்" வழக்கமான சந்தியா அவன்  உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளக் கூடியவள். இன்று என்ன வெறும் 'வணக்கம்'.ஏதேனும் விஷயம் இருக்கும்.  தான் சொல்ல வந்தது அதை விட முக்கியம் குறைந்ததாய் இருக்கலாம்
"ஏதும் சிறப்பான செய்தி உண்டா ?"
"உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்களே எதிரே வந்துட்டீங்க "
"சொல்லு சந்தியா? "
"எங்க வீட்டு பக்கத்தில ஒரு பீடி கடை இருக்கு. சின்ன சின்ன பெண்கள், வசதி இல்லாதவர்கள் பீடி சுற்றி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.அங்கு பணி புரிபவன் கொஞ்சம் சல்லித்தனம் பண்றான். குடுக்க வேண்டிய தொகையை குறைத்துக் கொடுக்கிறான். மறுபடி கேட்டு வரும் பெண்களிடம் சில்மிஷம் செய்து ,பின் தான் பணம் கொடுக்கிறான். இதுக்கு ஒரு முடிவு கட்டணும் சார், தனக்கு ஒத்து வராதவர்களின் பீடிக் கட்டு சரியாக இருக்கிறது என்று சொல்லும் முன் அவர்களை நோகடிக்கிறான். பாவம் கஷ்டப்பட்ட பெண்கள். வேற வழி இல்லாம வாசல் உட்கார்ந்து புலம்பறப்போ  அம்மா கேட்டு சொன்னாங்க" 
"கண்டிப்பா உதவி செய்யலாம் சந்தியா. பீடிக் கடை உரிமையாளரை போய் பார்க்கும் போது யாராவது  ஒண்ணு  ரெண்டு பேர் வந்து சொல்வாங்க தானே ?"
"நிச்சயமா  வருவாங்க சார்"
அதன் பின் அவனுக்கு தன் விஷயத்தை சொல்ல தோன்றவில்லை  அன்றைய அலுவல்களை முடித்து வீடு திரும்பினான்.  
ஏதோ சாதனை செய்த நிறைவு இன்று முழுவதும்.  எல்லோரிடமும் மிகவும் அன்பாக பேசத் தோன்றியது.  தன் வீடு இருக்கும் தெருவில் திரும்பியதும் பன்னீர்  பூக்களின் வாசனை அவனை ஈர்த்தது  வெண் பட்டுக் கம்பளம் விரித்தது போல் மரத்தின் அடிவாரம் முழுவதும் பன்னீர் பூக்கள் பல திசைகளிலும் படுத்துக் கிடந்தன அதன் வாசனையை நன்கு இழுத்து  நுரையீரல் முழுவதும் நிறைத்துக் கொண்டான்.  மனதின் பரவசம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.   மனது நிதானப் பட்டது.  என்ன ஆனாலும் பகதூரை அவன் குடும்பத்தில் கொண்டு சேர்க்கும் வரை இதைப் பற்றி அவனிடம் மூச்சு விடக் கூடாது என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.
"பகதூர் ஜம்னு குளிச்சிட்டு வா பார்க்கலாம் ஒரு போட்டோ எடுப்போம். "
கொஞ்ச நாட்களாகவே அவனிடம் மலர்ச்சியும் இல்லை,  மறுதலிப்பும் இல்லை. இயந்திரம் போல் சொன்னதை செய்து கொண்டு இருந்தான் 
தான் வைத்திருக்கும் டிஜிட்டல் காமெராவை அம்மாவிடம் கொடுத்து  எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தவன் "அம்மா மூணு போட்டோ எடுக்கணும்.  நானும் பகதூரும் சேர்ந்து ஒண்ணு, என்னை தனியா ஒண்ணு, பகதூரை தனியா ஒண்ணு. சரியா பகதூர்" என்றான். எங்கே அவனை மட்டும் தனியே படம் பிடிக்க வேண்டும் என்றால் முரண்டு பிடித்து விடுவானோ என்று தன்னையும் கூட்டு  சேர்த்துக் கொண்டான். 

நாளை கணினியில் ஏத்தி மெயிலில் வட மாநில ஆட்சியாளருக்கு அனுப்பி விட வேண்டும் என்று முடிவு செய்தான் பகதூரிடம் பேசப் பயமாக இருந்தது  தான் ஏதாவது உளறி விடுவோம் என்று ஜெயமோகன் அவர்களின் "காடு" நாவலை  கையில் எடுத்த படி படுக்கையில் சாய்ந்தான். 
பகதூர் அவனுக்கு ஒதுக்கி இருந்த,வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த, அறையில் தன் உடமைகளை கட்டிப் பிடித்த படி உறங்கப் போனான்.
(இன்னும் வரும்)

11 comments:

  1. ஆகா மெயில் வந்துடுச்சா?
    என்ன நடக்கப் போகுதோ? ம் வெய்டிங் :)

    ReplyDelete
  2. இவ்ளோ கேப் விட்டு திரும்ப தொங்கல்ல விட்டுடீங்களே. அவ்வ்வ்.

    ReplyDelete
  3. நன்றி பாலாஜி, தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்

    ReplyDelete
  4. மன்னியுங்கள் வானம்பாடிகள் ஐயா, அலுவலக பணி மென்னியைப் பிடிக்குது. அடுத்த பதிவு விரைவில்

    ReplyDelete
  5. நல்லா போகுது கதை... அவசரப்படாம , கவனத்தோட எழுதுவதுதான் சிறப்புக்கு காரணம்...

    பணி சுமை அதிகமா இருந்தா , இந்த மாதிரி , கொஞ்சம் கொஞ்சமா எழுதுங்க.. அவசரப்பட்டு முடிக்க வேண்டாம்..

    ReplyDelete
  6. பார்வையாளன் முதலில் வாழ்த்துக்கள் பரிசு பெற்றமைக்கு. முதன் முதலில் பரிசு பேரும் போது உண்டாகும் சந்தோஷம் எனக்கு தெரியும். அது இன்னும் பல படிகள் உங்களை உயர்த்தும். எழுத்து பிழைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் இன்னும் ஒரு முறை நாம் எழுதியதை வாசித்தாலே சரி செய்து விடலாம். உங்கள் குருங்கதைகளிலேயே கதை சொல்லும் திறமை தெரிந்தது. மறுபடியும்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. "இன்னும் ஒரு முறை நாம் எழுதியதை வாசித்தாலே சரி செய்து விடலாம் "

    வாழ்த்துக்களுக்கு நன்றி... நீங்கள் சொன்னதை கவனத்தில் கொண்டு பிழைகளை தவிர்க்க முயல்வேன்.. கதைகளில் மட்டுமல்லாமல், அலுவலக கடிதங்களிலும் உங்கள் கருத்தை கவனத்தில் கொள்வது நல்லது என்பதை உணர்கிறேன்

    ReplyDelete
  8. ரொம்ப இண்டரஸ்டிங்கா போகுது.. அடுத்தது எப்பப்பா..??

    ReplyDelete
  9. நன்றி சிட்டுக்குருவி தங்கள் முதல் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  10. நன்றி தேனம்மை, அடுத்த பதிவு ரயில் ஏறியாச்சு. இறங்க வேண்டியது தான்.

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!