Bio Data !!

02 February, 2011

என் மகள் இனி அவர் மனைவி !!

சில பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.
வரத் தயாராய் இருப்பவர்கள் என் புகை வண்டியில் ஏறிக்  கொள்ளலாம். 
எல்லோரும் தனக்கு முன் இருப்பவரின் இடுப்பை இறுக்கமாக பிடித்துக் கொள்ளவும் இல்லை என்றால் வண்டி போய்க் கொண்டிருக்கும் போது சில பெட்டிகள் கழண்டு கொள்ளலாம்.போலாமா? 
குச் குச் .......... ஊ ஊ ஊ .....
நாம் வர வேண்டிய இடம் வந்து விட்டது. வரும் போது எங்கும் நிற்காமல், எதையும் பார்க்காமல் வந்து விட்டதால் திரும்பிச் செல்லும் போது ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் நின்று பார்த்து செல்வோம், சரியா?
நாம் இப்பொழுது நிற்கும் இடம் என் மகள் பிறந்த வருடம்,மாதம், நாள்,நேரம் 
நான் காதல் திருமணம் செய்து இருந்ததால் என் கணவரை என் தாய் அங்கீகரிக்காமல் இருந்தார். எனவே ஒரே ஊருக்குள்ளேயே தனி வீடு எடுத்து நானும் என் கணவரும் இருந்தோம். செக்கர் வானம் பகலவனை பிரசவிக்க தொடங்கிய நேரம் எனக்கு வலி எடுக்கத் தொடங்கியதால் என் கணவர் என்னை மெதுவாகக் நடத்திச் சென்று என் தாயின் வீட்டில் விட்டு வாசலோடு விடை பெற்றார். நாங்கள் செல்ல வேண்டிய மருத்துவமனைக்கு முன்னமேயே சென்றார். சில ஆயத்த ஏற்பாடுகளை செய்த பின் நானும் என் தாயும் மருத்துவமனை சென்றோம். நான் பொதுவாகவே என் வலிகளை, வேதனைகளை வெளிப்படுத்த மாட்டேன். இன்னும் நேரமாகும் என்ற எண்ணத்தில் என் கணவர் வீட்டுக்கு செல்ல, என் தாய் அருகில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து வீட்டுக்கு தகவல் சொல்ல செல்ல, அங்கே வந்த மருத்துவர்," இன்னும் கொஞ்ச நேரத்தில பிரசவம் ஆகிடும். உங்க கூட வந்தவங்களை எங்கே?" என்றார். 
"இந்தா இப்போ வந்திடுவாங்க" என்றேன்.
கோபப் பட்ட மருத்துவர் லேபர் வார்டுக்கு என்னை அனுப்பிய படி, ஏதோ அவசர வேலையாக மாடியில் இருந்த தன் வீட்டுக்கு செல்ல லேபர் வார்டில் இருந்த நர்ஸ் ஏதோ நினைவில் அறைக் கதவை தாளிட்டு விட்டார். மாடிக்கு சென்ற மருத்துவர் சில நொடிகளில் வந்து, கதவு தாளிட்டு இருப்பதைப் பார்த்து பதட்டத்தோடு பட பட வென கதவை தட்ட, அங்கே என் மகள் தன் உச்சந்தலையை மெல்ல காட்டத் தொடங்க , அனுபவம் மிகுந்த அந்த நர்ஸ், தான் செய்து விட்ட தவறுக்கு மருத்துவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளப்போவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பொறுமையாக என் மகள் வெளி உலகுக்கு வர வழி காட்டி என் வலியை போக்கினாள்.
என்ன சாதரணமா சொல்லுறேன்னு நினைக்கிறீங்களா? எனக்கே இப்போ அதை நினைச்சா பயம்மா இருக்கு. இளங் கன்று பயம் அறியாதே! 
சரி புறப்படலாமா? குச் குச் ....... ஊ ஊ .....
ஆறு மாதங்கள் நானும் கணவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து பார்த்த பின், அவளை பார்த்துக் கொள்ள யாரும் சரியாக அமையாததால், கோவையில் இருந்த என் மாமியாரின் வீட்டில் அவளை விட்டு, வாரம் ஒரு முறை நாகர்கோவிலில் இருந்து நானும் கேரளாவின் காசர்கோடில் இருந்து என் கணவரும் அவளைக் காண கோவை வருவோம். விடிந்தும் விடியாத நேரத்தில் போய் சேரும் என்னை பரக்க பரக்க பார்த்த படி என் மடியில் முக்கால் தூக்கத்தோடு என் மடியில் அமரும் மகள் நான் இருக்கும் இரண்டு நாளும் (அப்போ சனி, ஞாயிறு விடுமுறை) என்னை விட்டு ஒரு நொடி கூட விலக மாட்டாள்.  நான் கிளம்ப வேண்டிய நேரம் என் மாமனார் நான் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் அவளை எடுத்து செல்ல, திடீரென திரும்பிய அவள், என் பின்புறத்தை வைத்தே நான் செல்வதை புரிந்து கொண்டு வீலென்று அழத் தொடங்க, கண்களில் முட்டிப் பெருகும் கண்ணீரோடு திரும்பிப் பார்க்காமல் வேகு வேகுவென நடை போடுவேன். அடுத்த வாரமும் இதே நிகழ்வு தொடரும்.
குச் குச் .... ஊ ஊ .....
கேரளாவில் இருந்த என் கணவருக்கு ஈரோடுக்கு பணி மாற்றல் ஆக, நாகர்கோவிலில் இருந்து நானும் மூன்று வயது ஆன என் பெரிய மகளும் , கோவையில் இருந்து என் கணவர் குடும்பத்துடன் என் சின்ன மகளும் ஆக எல்லோருமாக  ஈரோட்டில் வந்து செட்டில் ஆனோம்.  கலைமகள் கல்வி நிறுவனம் என் இரு பெண்களை வார்த்து எடுத்ததில் பெரும் பங்கு பெற்றது .படிப்பு, தவிரவும் நடனம் பாடல் என அவர்களின் திறமைக்கு நல்ல அடித்தளம். அது ஒரு பொற்காலம். 
குச் குச் .... ஊ ஊ ....
சொந்த ஊருக்கே போய் விடலாம் என நானும், என் கணவரும் மாற்றல் வாங்கி நெல்லை வந்து சேர்ந்தோம் இரு மகள்களுடன்.  பள்ளி, கல்லூரி என தன் கவனம் முழுவதும் படிப்பில் செலுத்தி, எனது அபிரிமிதமான அன்பு அவளை நேர் பாதையில் செலுத்த, தன்னை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்வதால் அவள் பாதையில் இருந்த முட்களையும், சிறு கற்களையும் கூட நான் நகர்த்தி விட இது வரை அவள் வந்தது ராஜ பயணம். 
குச் குச் .... 
திருமண வயதை நெருங்கியதும் அன்பும், அழகும் நிறைந்த என் மகளுக்கு பொருத்தமான ஆண் மகனைத் தேடி முடிவு செய்தோம். அன்பும், அக்கறையும் நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இதோ நாளும் நெருங்கி விட்டது. 
வரும் திங்கள் (7 .2 .2011 ) தைத் திங்கள் 24  ஆம் நாள் உத்திரட்டாதி நட்சத்திரமும்,சித்தயோகமும்  கூடிய சுபயோக சுபநாளில் காலை 9 .00 மணிக்கு மேல்    10 .30  மணிக்குள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பாளை தூய சவேரியார் பேராலயத்தில்  திருமணம் நடக்க இருக்கிறது, அனைவரும் வருக!     
அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சாலையில் உள்ள  S .A . ராஜா கல்யாண மண்டபத்தில் நிகழும் வரவேற்பிற்கும், தங்கள் தங்கள் சுற்றமும் , நட்பும் சூழ வந்திருந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன். 
என்ன வர வேண்டிய இடம் வந்தும் இன்னும் இறங்காம இருக்கீங்க? 
என் மகள் இனி அவர் மனைவி !!


20 comments:

  1. Thats a great news! Convey our wishes to the newly weds!


    பாளை தூய சவேரியார் பேராலயம்..... மறக்க முடியுமா?????
    Now, I am missing home!

    ReplyDelete
  2. சகோவின் திருமணம் இறைவன் அருளால் இனிதாய் நிகழ மனம் கனிந்த வாழ்த்துக்கள்! சம்பவங்களை நெகிழ்வாய் எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள்! :)

    ReplyDelete
  3. எந்தப் பொண்ணுக்கு கல்யாணம் ரூஃபினா..

    என்ன சட்டுன்னு இறங்க சொல்லீட்டீங்க.. பிள்ள என்ன பண்ணுறா .. படிக்காளா., வேலை பாக்காளா.. ஒரு ஃபோன் இல்லை.. என்ன பிஸி ஆயிட்டீகளா..:))))))))))))))))))

    ReplyDelete
  4. அருமையோ அருமை..
    கண்ணின் மணிக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்..
    முத்தங்களும்..

    சீரும் சிறப்புமாய் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. நன்றி சித்ரா, அலெக்ஸ் மோகன் என் கணவரின் பெரியம்மா பையன். இப்போ புரியுதா நான் அடிக்கடி நாம சொந்தம்னு சொல்வேனே?

    ReplyDelete
  6. நன்றி பாலாஜி, பதிவாளர்களின் பிரார்த்தனைக்காகத்தான் இந்த பதிவு

    ReplyDelete
  7. தேனம்மை எனக்கு இரண்டு பெண்கள். இது இரண்டாவது. பேசவே முடியாத அளவு வேலைப் பளு. நாளை கண்டிப்பாக காண்டக்ட் பண்ணுகிறேன். இல்லத்தில் அனைவரும்நலமா?

    ReplyDelete
  8. பேசவே முடியாத அளவு வேலைப் பளு"

    இவ்வளவு வேலையிலும் , இவ்வளவு உணர்வு பூர்வமாக எழுதியதற்கு நன்றி...

    ”இப்போ புரியுதா நான் அடிக்கடி நாம சொந்தம்னு சொல்வேனே”

    நீங்கதான் சொல்றீங்க,, அவங்க கண்டுக்கவே மாட்டேங்கறாங்களே...ஒரு வேளை வேறு யாரையோ அவர்னு நினைத்து பேசுறீங்களோ ? :)

    ”எனது அபிரிமிதமான அன்பு அவளை நேர் பாதையில் செலுத்த, தன்னை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்வதால் அவள் பாதையில் இருந்த முட்களையும், சிறு கற்களையும் கூட நான் நகர்த்தி விட இது வரை அவள் வந்தது ராஜ பயணம்”

    ஒரு சிறந்த எழுத்தாள்ர் , நண்பர் என்பதுடன் சேர்த்து சிறந்த தாய் என்பதையும் உணர்த்தி விட்டீர்கள்..... இந்த வரி என்னை நெகிழ வைத்தது... மகிழ வைத்தது

    ReplyDelete
  9. பார்வையாளன் சித்ராவும் நானும் பேசிக் கொண்டதில்லை, பார்த்துக் கொண்டதில்லை,
    அதனால் அவர்களுககு நான் எப்படி சொந்தம் என்று புரிந்திருக்க வாய்ப்பில்லை.
    இப்போ புரிந்திருக்கும்னு நினைக்கிறேன், கண்டு கொள்ளாம இருக்கிறதுக்கு சித்ரா அலட்டல் பொண் கிடையாது.
    அடுத்த நாரதர் வேலையா?
    நான் எடுத்திருக்கும் பல வேஷங்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த வேஷம் தாய் வேஷம் தான்
    "என் மகள் இனி அவர் மனைவி" இதில் இழையோடும் என் மென் சோகம் புரிகிறதா?

    ReplyDelete
  10. வசீகர எழுத்து நடை.. வாழ்த்துகள் அம்மா...:)
    சகோதரிக்கு வாழ்த்துக்களும் அன்பும்... :)

    ReplyDelete
  11. நன்றி சிவா, புது வேலை பிடித்திருக்கிறதா? பிடித்திருக்க வாழ்த்துக்கள். நாம் அதிக நேரம் இருக்கும் பணியிடம் மிகவும் பிடித்ததாக இருக்கவேண்டும்

    ReplyDelete
  12. தங்கள் மகளுக்கு திருமண வாழ்த்துகள்.தங்களது இரண்டாவது பெண்ணின் திருமணம் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்,நீங்களும் அடுத்த மாமியாராக ப்ரோமொசன் ஆனதற்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Nice Info Keep it up!

    Home Based new online jobs 2011

    Latest Google Adsense Approval Tricks 2011

    Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

    More info Call - 9994251082

    Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

    New google adsense , google adsense tricks , approval adsense accounts,

    latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

    Quick adsense accounts ...

    More info Call - 9994251082

    Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

    More info visit Here www.elabharathi2020.wordpress.com

    ReplyDelete
  14. திருமணம் நன்கு முடிந்தது குறித்து சந்தோஷம் ரூஃபினா..:))

    ReplyDelete
  15. மகளுக்கு வாழ்த்துக்கள். மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைய நிறைய வாழ்த்துக்கள்

    இந்த மாசம் ஊர்லதான் இருந்தேன். முன்னாடியே தெரிஞ்சா வந்திருப்பேன். சோறு போச்சே. :))

    ReplyDelete
  16. நன்றி தேனம்மை
    நன்றி எறும்பு, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக . வந்திருந்தால் சோறு மட்டுமா கிடைத்திருக்கும். உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றும் கிடைத்திருக்கும். அஸ்கா!

    ReplyDelete
  17. படிச்சதும் திகிலாகிடுச்சுங்க முதல்ல.. உள்ள வச்சி பூட்டிட்டாங்கன்னா ஏ அப்பா..

    உங்கள் மகளின் திருமணத்துக்கு வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  18. **************

    இது ப்ரசுரிக்க அவசியமில்லை. சும்மா உங்களுக்கு ஒரு செய்தி சொல்லத்தான்.. பின்புலம் கருமையாக இருப்பதை வெளிர் நிறத்துக்கு மாற்றமுடியுமென்றால் செய்யுங்கள். படிக்கின்றவர்களுக்கும் இன்னும் எளிதாக இருக்குமென்பதனால் தான் ..
    நன்றி

    ReplyDelete
  19. வெளிர்பின்புலத்துக்கு நன்றிகள் ரூபினா..:)

    ReplyDelete
  20. நன்றி முத்து லக்ஷ்மி, வருகைக்கும் வாழ்த்துக்கும்

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!