Bio Data !!

25 September, 2011

சொத்துக் குவிப்பு !!

என்னங்க எதோ அரசியல் பேசப் போறேன்னு வந்தீங்களா? நமக்கு எதுக்குங்க அந்த வம்பு. நம்ம உடல் நலத்தைக் கொஞ்சம் அக்கறை எடுத்து பார்த்துப்போமேனு ஏதோ எனக்கு தெரிஞ்சத கொஞ்சம் சொல்ல வந்தேன். 

ஐம்பது வயசு ஆனா நரையோடு சேர்ந்து ப்ரஷர், சுகர் எல்லாம் வந்துடுதுன்னு முணுமுணுக்கிறோம் ஆனா நம்மளோட சாப்பாட்டு முறையை மாத்துறோமா? இல்லையே ? வளர்ற வயசுல நம்ம உடம்புக்கு தேவையான சத்துக்கள் சேருது. நாம் ஓடி ஆடி(?) வேலை செய்வதில் கரைந்து விடுகிறது. ஆனா அதே உணவை வயதான பின்னும் எடுத்துக் கொள்ளும் போது சேருது ஆனா செலவளியிறதில்லை அவை தான் சொத்தாக உடம்புக்குள் குவிந்து (அப்பாடா தலைப்புக்கு வந்தாச்சு) தொல்லைகள் தருது.

இவை தவிரவும் ஹார்மோன் இம்பாலன்ஸ் லொட்டு லொசுக்குனு காரணங்கள் இருக்குது. நம்மால முடிஞ்சது உணவு முறையை மாற்றி சொத்துக் குவிப்பை சொத்துக் குறைப்பாக்கலாம். சாம்பார்ல இட்லியை குழைச்சு அடிச்சவங்க கொஞ்சம் ஓரமா விட்டுக்கிட்டு தொட்டு சாப்பிடலாம், முடிஞ்சா பார்த்துக்கிட்டே சாப்பிட்டிட்டு ஓடிடலாம். ஒரு பத்து பன்னிரெண்டு முழுங்குனவங்க (ஐயோ என் பிள்ளை சாப்பிடுறதை பார்த்து கண்ணு போடுறானு எந்த தாயும் அடிக்க வந்துடாதீங்க) நாலு ஐந்துனு இறங்கி வந்துடுங்க. 

'வீ  ஈட் ஒன்லி சிக்கன்னு' நாகேஷ் பாணியில் சொல்றவங்க மெதுவா சைவத்துக்கு மாறிடுங்க. காய் கறிகள் சாப்பாட்டில் அதிகம் சேர்த்துக்கிடுங்க. இல்லத் தலைவிகள் சமைக்க சோம்பேறிப் படாமல் தினசரி சமையலில் இரண்டு காய்களாவது இருக்குமாறு பார்த்து சமையுங்கள்.

முக்கியமா இரவு உணவு முறை, மாற்றம் அத்தியாவசிய தேவை. இரவில் full மீல்ஸ் எடுக்கிறவங்க டிபனுக்கு மாறிடலாம். முதல்ல கொஞ்ச நாளைக்கு வயிறு நிறையாதது போல் இருக்கும் போக போகப் பழகிடும் . 
அது ஏனோ நம்ம பக்கங்கள்ல பழங்கள் சாப்பிடுறது வழக்கமாவே இல்லாம போச்சு. சாயங்காலம் ஆச்சுனா பஜ்ஜி உருளைக்கிழங்கு போண்டா, சுடச் சுட வாழையிலை போட்ட அல்வான்னு ருசிச்சு சாப்பிடுறோம். ஆனா பழங்கள் பக்கம் தலை வச்சு கூட படுக்கிறதில்லை. "நாங்க என்ன முதல் இரவா கொண்டாடுறோம் தலை மாட்டில பழங்கள் வச்சு படுக்கிறதுக்குனு " எடக்கு மடக்கா கேட்கக் கூடாது. நமது 'நெல்லை அண்ணா' சங்கரலிங்கம் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தது போல சாப்பாட்டுக்கு அரை மணி முன்போ பின்போ பழங்கள் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது.   

ஏதாவது விஷேசங்களுக்கு போய் தவிர்க்க முடியாமல் இனிப்பு கொஞ்சம் அதிகம் சாப்பிட வேண்டி வந்து விட்டால் அதை சரி செய்ய  அன்றைய டீ அல்லது காப்பியில் சர்க்கரையை குறைவாக சேர்த்துக் கொள்ளலாம். நமது இல்ல விஷேசங்களில் விருந்து முடிந்ததும் வெற்றிலை போடுவது என்ற சிறந்த பழக்கத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கை விட்டு வருகிறோம். சில வீடுகளில் மட்டும் பீடா தரும் வழக்கம் இருக்கிறது. உதடு சிவப்பதற்காக இல்லாவிட்டாலும் உணவு செரிப்பதற்காகவாவது வெற்றிலையை விட்டு விடாதீர்கள். 

உணவு முறையை மாற்றுவோம்! உடல் நலம் காப்போம் !! 

(அடிக்கடி உடல் நலம் பற்றி பேச ஆரம்பிச்சாச்சுனாவே வயதாகுதுன்னு அர்த்தம் என்று தோழர் ஒருவர் கிண்டல் செய்வார். வயது ஆகித்தான் போச்சோ !!) 

22 comments:

  1. பகிர்வு உடல் ஆரோக்கியத்தை உணர்த்துகிறது நன்றி!

    சகோ வயசாகறது பிரச்னை இல்ல...மனசுக்கு வயசாகாம பாத்துக்கறது தான் முக்கியம் இது என் தாழ்மையான கருத்து...

    ReplyDelete
  2. மனசு இன்னும் துள்ளலோடும் இளமையோடும் ,
    அது தான் சிக்கலே விக்கி ,
    முதல் அடி, "வயசாகிப் போச்சு இன்னும் என்ன முழு நேரமும் கணினியோடே மல்லாடிக்கிட்டு "

    ReplyDelete
  3. உணவு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று, இந்த காலகட்டத்தில் உடல் பருமன் மட்டும் ஒரு பிரச்சனையல்ல, அதையும் தாண்டி sugar, bp, என பிரச்சனை பலமுகம் எடுக்கின்றது. . . நன்றி சகா. . .

    ReplyDelete
  4. உள்ளம் உறுதியாய் இருந்தால் உடல் சோர்ந்து போக பார்த்தாலும், போராடும்... ஆனால் உள்ளம் சோர்ந்து விட்டால் போராட்டம் நீர்த்து போய் உடல் உபாதைகள் சேர்ந்து விடும்... வாழ்க்கையே போர்க்களம்...

    ReplyDelete
  5. வெற்றிலை போடுவது என்ற சிறந்த பழக்கத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கை விட்டு வருகிறோம்.//

    அதானே நம் மூதாதையர்களின், உணவு முறையை நாம் கொஞ்ச கொஞ்சமா கைவிடவேதான் இத்தனை நோய்களும் வந்து குவிகிறது. என்னத்தை சொல்ல, அருமையான உணவு சாரி பதிவு...!!!

    ReplyDelete
  6. நன்றி பிரணவன், தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக

    ReplyDelete
  7. நன்றி suryajeeva பல தளங்களில் உங்கள் பின்னூட்டங்கள் பார்த்திருக்கிறேன். தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக.

    ReplyDelete
  8. மனோ பதிவு எல்லாம் கலக்குறீங்க போல் இருக்கு

    ReplyDelete
  9. தலைப்புக்குள் வந்த விதம அருமை!

    ஆமா!நம்ம பக்கங்களில் பழங்களை கண்டுக்கறதே இல்ல.ஏனோ நோயாளிகள் மட்டுமே சாப்பிடும் பொருளைப்போல பாக்குறோம்!
    வெற்றிலையின் மகத்துவத்தையும் மறந்து விட்டோம்!

    ReplyDelete
  10. நன்றி கோகுல், 'பழம்' பெரும் பழக்க வழக்கங்களை விடுவது நல்லதல்ல அல்லவா அது தான் இந்த பதிவு

    ReplyDelete
  11. வயதாகிறதே என்று வருத்தம் கொள்ளாதீர்கள்...

    அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை!!!!!!!!

    ReplyDelete
  12. நாக்கும் மூக்கும் மனசும் சேர்ந்து
    அடிச்ச கொட்டத்திலே உடலும் குடலும்
    பெருத்துப் போனவங்கள் எல்லாம்
    அவசியம் படிக்கவேண்டிய அருமையான பதிவு
    பயனுள்ள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  13. உண்மை தான் குணசீலன், எங்கள் தந்தை எங்களை தவிக்க விட்டு செல்லும் போது அவருக்கு வயது நாற்பது

    ReplyDelete
  14. நன்றி ரமணி சார், இதை சிந்திக்கும் போது தான் "நாக்கு முக்கு " பாடல் பிறந்திருக்குமோ ?

    ReplyDelete
  15. நன்றி சீனிவாசன், வாங்க பழகலாம்னு கூப்பிடுறீங்க இல்ல ...

    ReplyDelete
  16. என்ன ஆச்சு உங்களுக்கு ?

    ReplyDelete
  17. சாரி ஃபார் லேட். ஆனாலும், பதிவு சூப்பர்.நம்ம சப்ஜக்டுங்கோ.

    ReplyDelete
  18. ஏன் பார்வையாளன் நல்லாத் தான் இருக்கேன். வயசாயிப் போச்சு னு வருத்தப் படுறதா அது சும்மா .. i am alright

    ReplyDelete
  19. உங்க பெயரைக் கூட குறிப்பிட்டு இருக்கேன் Food நல்லா இருக்கீங்களா? தொலைபேசி நிலையப் பொறுப்பு அதான் பேசவே முடியிறதில்லை

    ReplyDelete
  20. டாக்டர் வாழ்க! நர்ஸ் வாழ்க

    ReplyDelete
  21. எவ்வளவு நல்ல விஷயம் சொன்னாலும் லொள்ள பாரு! லோலாயியை பாரு ! CP this is for u

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!