19 April, 2026
#நான் கேட்ட நற்செய்தி 2
"அதிகாரம் எப்போதுமே ஒரே இடத்தில் குவிந்து கிடக்கக்கூடாது. அது பரவலாக்கப்பட வேண்டும். அப்போது தான் தவறுகள் குறையும். பணிகள் முடிவுக்கு வரும். "
ஆமாங்க நினைச்சுப் பார்த்தா வேலை நடக்காத ஒரு அலுவலகத்தை உற்று நோக்கினா மற்றவர் மேல் நம்பிக்கை இல்லாமல் அத்தனை பொறுப்பையும் தானே சுமந்து , தானும் முடிக்க முடியாமல் பணிகள் தேங்கிக் கிடப்பதைப் பார்க்கலாம்.
வீடுகளில் மாமியார் மருமகளிடம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கத் தெரியாமல் தானே செய்து புலம்பிக் கிடப்பதைப் பார்க்கலாம்.
அதிகாரம் தேங்கும் போது மாற்றி யோசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. தவறு ஏற்பட்டு விட வாய்ப்பு அதிகம். பிரித்துக் கொடுத்து விட்டால் நாம் மேற் பார்வை மட்டும் பார்த்தால் போதும்.
சிந்திப்போமா.
#நான் கேட்ட நற்செய்தி 1
ஞாயிற்றுக் கிழமை சர்ச்க்குப் போனேன். குருவானவர் சொன்ன ஒரு விஷயம் பகிரணும்னு தோணுச்சு.
"தன்னிடம் இருப்பதிலிருந்து கொடுப்பது மனித இரக்கம். தன்னிடமிருப்பதை எல்லாம் கொடுப்பது இறை இரக்கம்"
அருமைல்ல. யாரோ ஒருவருக்கு நம்மிடமிருப்பது எல்லாம் கொடுத்து விடலாம்னு தோணும். அந்த நட்பை எக்காரணம் கொண்டும் கை நழுவ விட்டிடக் கூடாது.
18 April, 2026
"பிரமிக்க வைத்த பிரபலம்"
முக நூல் தந்த வரங்களில் மிகப் பெரியது யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நெருங்கிப் பேசி விடலாம்.
அப்படி எனக்கு பலர் அறிமுகமாகி இருந்தாலும் நான் சொல்லப் போகிறவர் அதையெல்லாம் தாண்டி உயர்ந்தோங்கி நிற்பவர். இவர் ஒரு மிகப் பெரிய எழுத்தாளரின் மகன். தன் சிறு வயதிலேயே ஒரு பாப்புலாரிட்டியை பார்த்து வளர்ந்தவர். ஆனால் அந்த பெருமிதம் அவரிடம் கொஞ்சம் கூட இருக்காது.
பரந்த வாசிப்பு உடையவர். மிகச் சிறப்பாக எழுதக் கூடியவர். இதையெல்லாம் தாண்டி மிகவும் ருசியாக சமைக்கத் தெரிந்தவர். நான் பிரமித்த முக்கியமான விஷயம் என்னவென்றால் ஈகோ கிஞ்சித்தும் இல்லாதவர். தான் ஆண் என்ற அகந்தை அற்றவர்.
இவர் அசோக் லேலான்டில் பணி புரிந்த போது இவர் மனைவி வங்கி மேலாளர். எனக்கு இந்த வேலை நல்லாத் தெரியும் மனைவிக்கு இந்த விஷயம் நல்லாத் தெரியும். அவரவருக்குத் தெரிந்த பொறுப்பு இரண்டு பேரும் எடுத்துக் கொண்டோம். இதில் ஆண் என்ன பெண் என்ன என்பார்.
பல பிரபலங்கள் இவர் வீட்டிற்கு வந்து தங்கி இருக்கிறார்கள். பல பிரபலங்களின் தனிப்பட்ட அலைபேசி எண் இவரிடம் உண்டு. யாரையும் தானாய் அழைத்து பேச மாட்டார்.
இவரிடம் பேசிக் கொண்டிருந்தால் தந்தை பற்றிய செய்தி தாய் பற்றிய செய்தி ஏன் பாட்டி பற்றிய செய்தி கூட அருவி போல் கொட்டும். நாம் உம் மட்டும் கொட்டிக் கொண்டிருந்தால் போதும்.
நான் இவர் வீட்டுக்குச் சென்று திரும்பும் போது இவர் கொடுத்து விட்ட பொருட்கள் தாய் வீட்டு சீதனம் போல் இருந்தது. மனதிலிருந்து "அண்ணா " என்று நான் அழைக்கும் ஒரு நபர். " உன் மனைவியைத் தவிர மற்ற பெண்கள் அனைவரையும் சக்தியின் வடிவமாகத் தான் பார்க்கணும் " என்று இவர் அப்பா சொல்லி வளர்த்திருக்கிறார் . அப்படியே வளர்ந்திருக்கிறார்.
இவருக்கு ஒரே ஒரு பெண். அவள் இப்போ பல் மருத்துவர். நான் நினைப்பேன் இவருக்கு ஒரு மகன் இருந்திருந்தால் சமுதாயத் துக்கு ஒரு நல்ல ஆண் மகன் கிடைத்திருப்பான்.
நான் பிரமித்துப் பார்க்கும் அந்த பிரபலம் பிரபல எழுத்தாளர் லா.ச.ர அவர்களின் புதல்வன் எழுத்தாளர் சப்தரிஷி. இவர் தன் பரந்த மனதின் முக்கியம் கூட தெரியாமல் ஒருவரை யொருவர் அன்பு செய்வது என்பது அவ்வளவு பெரிய விஷயமா என சாதாரணமாக கடந்து செல்வர்.
அவர் எனக்கு நண்பரானது முக நூல் எனக்கு செய்த அருந் தவப் பயன்.
#social awareness #Toxic relationship
சமீபத்திய " நீயா நானா" வில் காதல் தோல்வி உற்றுத் தவிக்கும் பெண்ணை அத்தனை பேரும் பாராட்டினார்கள். அந்தப் பெண்ணே நிகழ்ச்சியில் அதை ஒத்துக் கொள்ளவும் செய்தாள். அது தான் தனது முதல் காதல் அதனால் விட முடியவில்லை என்றாள். தான் மிகவும் டாக்ஸிக்காக நடந்து கொண்டதாக அவளே ஒத்துக் கொள்ளவும் செய்தாள்.
இருந்தும் வேறொரு பதிவு ஒரு குழுப் புகைப்படத்திலிருந்து அவர்கள் இருவர் மட்டும் இருக்கும் ஒரு புகைப்படத்தை எடுத்து பதிந்து "இந்தப் பொண்ணு ரொம்ப டாக்ஸிக்கான பொண்ணு " என எழுதி இருக்கிறார்கள். அதைத் தான் அவளே சொல்லிட்டாளே அப்புறம் என்ன புதுக் கண்டுபிடிப்பு.
அவங்க ரெண்டு பேரில் யார் செய்தது தப்பு என விவாதிக்க வேண்டாம். அதன் பின் உள்ள மனோ தத்துவத்தை மட்டும் நான் பேசுகிறேன்.
இருவர் காதலிக்கிறார்கள் வேண்டாம் இருவர் பழகுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.்அதில் ஒருவருக்கு அந்த அனுபவம் புதிது. அது தான் இத்தப் பெண் சொன்னது போல் முதல் காதல்.்இவள் மனதில் இருக்கும் அதே மகிழ்ச்சி அதே அனுபவம் அடுத்தவருக்கு இருக்காது. ஆனால் இருப்பதாக இவள் நம்பிக் கொள்வாள்/ன்.
குறுகிய காலப் பிரிவு வரும் போது தன்னைப் போலவே அடுத்தவரும் துயரப்படுவார்கள் எனக் கற்பனை செய்து கொள்வாள். அது இருக்கலாம் இல்லாமலும் போகலாம். அவரால் சரி செய்ய முடியாத பிரிவை தான் சரி செய்து விடலாம் என நம்புவாள். அதற்கு எடுக்கும் முயற்சியைத் தான் நாம் டாக்சிக் என்கிறோம்.
அனேக சமயங்களில் பிரிந்து செல்பவர் தான் பழகுவதற்கு முதல் அடியை எடுத்து வைத்திருப்பார்கள். ஏன் அழுத்தம் கூட கொடுத்திருப்பார்கள் அவர்களைப் பொறுத்தவரை தான் ஆசைப்பட்டதை அடைந்த உடன் அவர்கள் நிறைவடைந்திடுவார்கள். அதனால் தான் அடுத்து நகர முடிகிறது.
நகர முடியாத ஒருவர் முயற்சி செய்வதோ முடியாத போது தற்கொலை செய்வதோ நடக்கிறது. நான் இங்கே பெண்ணுக்காக வக்காலத்து வாங்கவில்லை. ஆண் பெண் இருவரிலுமே பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
பழகத் தொடங்கிய உடன் அதை நண்பர்களிடம் பிரகடனப்படுத்திய ஒருவனுக்கு பிரிய நினைத்ததும் பகிர ஆட்கள் இருக்கிறார்கள். அதில் கிடைக்கும் சரியான/ தவறான உதவிப்படி அவன் வாழ்க்கை அமைகிறது.
ஆரம்பத்தைப் பகிராத பெண் பிரிய நேரும் போதும் பகிர ஆள் இல்லாமல் தன் காதலனின் நண்பர்கள் மூலம் முயற்சி செய்கிறாள். அதைத் தான் டாக்ஸிக் என்கிறோம். இது இன்று நேற்று அல்ல. அன்றே பாடி வைத்தான் கவிஞன் " நினைக்கத் தெரிந்த மனமே உனக்குப் பழகத் தெரியாதா? பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா" என்று.
பழகி விட்டதால் இறுதி வரை இருந்து தான் தீர வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அது ஒரு முறையான பிரிதலாக இருக்க வேண்டும். ஏனென்றால் இருவருக்கும் அந்தக் கடமை இருக்கிறது.
ஒருவரிடம் நெருங்க எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்கள் அதே முயற்சி விலகும் போதும் காயம் படாமல் / படுத்தாமல் விலக எடுக்க வேண்டும். முயற்சிப்போம்.
Subscribe to:
Posts (Atom)
