Bio Data !!

17 June, 2020

"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல தன்னம்பிக்கை"  அதி காலை நேர வாசிப்புகளில் இப்படி சில விதை நெல் கிடைக்கும். மற்ற நேரங்களிலும் இருக்குமாய் தான் இருக்கும். நம் கண்களில் படுவதில்லை.

இந்த தன்னம்பிக்கை தான் இன்று அதிக நாள் பயன்படுத்தப்படாத சுரப்பி போல பழுதடைந்து கிடக்கிறது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கூட நடக்க கஷ்டமான ஒரு காரியத்தை சேலன்ஜ் ஆக எடுத்துக் கொண்டு நடத்தி முடிக்கும் பழக்கம் நம்மிடையே இருந்தது. பல காதல் திருமணங்கள் காதலை விட எதிர்ப்பு கூடக் கூட இருகி நடந்ததாகவே இருந்திருக்கின்றன.

"காதல் போயின் சாதல்" என்பது மறைந்து "காதல் போயின் காதல் போயின் இன்னுமொரு காதல்" என வந்தது மரணத்தை நிறுத்திய வழியில் வேண்டுமானால் நல்லதாய் இருந்திருக்கலாமே ஒழிய முயற்சியை பின்னடையச் செய்து விட்டது.

இன்று அது இன்னும் கொஞ்சம் அதிகரித்து நம் இயல்பான வாழ்க்கை முறை சிறிது மாறினாலே "எல்லாம் முடிஞ்சு போச்சு " என ஒப்பாரி வைக்கிறது. ஆதி மனிதனின் போராட்டத்தை நினைத்துப் பார்த்தால் நாம் எவ்வளவு வளர்ந்து வந்து நிற்கிறோம் என்பது தெரியும்.

அதற்குள் கடைசி மனிதனைப் பற்றி அங்கங்கே கற்பனைகள். ஒரு எழுபது வயது உள்ளவரைக் கேட்டுப் பாருங்கள் இது வரை எத்தனை உலக அழிவு செய்திகளைக் கடந்து வந்திருக்கிறார் என.இயேசுநாதரின் இரு விரல்கள் உயர்ந்திருப்பதை வைத்து உலகம் இரண்டாயிரம் ஆண்டில் அழிந்து விடும் என்றார்கள்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என் கல்லூரித்  தோழியிடம் சொன்னது " அப்போ என் பிள்ளைக்கு இருபது  வயதை நெருங்குமே. நான் என்ன செய்வேன்" இதைச் சொல்லும் போது எனக்கு திருமணமே ஆகவில்லை. இன்று அந்த மகள் நாற்பதை நெருங்கிய வயதில் தன் பிள்ளையின் வயதை எண்ணி கலங்குகிறாள். இது தான் வாழ்க்கை. இன்னும் பல ஆண்டுகள் கழித்து  என் பேரன் தன் பிள்ளையை நினைத்து கலங்குவான்.

சில டீன் ஏஜ் பிள்ளைகள் தன் பெற்றோர் இருவரும் கொரோனாவில் இறந்து போனால் நாம் என்ன ஆவோம் என கலங்குகிறார்களாம். நோயை விட நோய் வந்து விடுமோ என்ற பயம் தான் மிகப் பெரிய வியாதி.  பயம் தவிர்ப்போம். வருவதை தவிர்க்க திராணியற்ற ஒரு கட்டத்தில்,  இருப்பதை கொண்டாடுவது தானே புத்திசாலித்தனம்.

இப்பொழுது முதல் வரியையே மீண்டும் சொல்கிறேன்.
"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல தன்னம்பிக்கை"

நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் கடப்போம். நம் அத்தனை பேரின் ஒட்டு மொத்த நம்பிக்கை இந்த உலகை மீண்டும் பூத்துக் குலுங்கச் செய்யும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!