வேங்கட வீரன்.
எழுதியவர் இலக்கியா சுப்ரமணியன்.
இது "காவியத் தலைவன்" என்ற போட்டிக்காக ஆசிரியர் எழுதிய முதல் வரலாற்று நாவலாம். முதல் நாவலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. தேர்ந்த எழுத்தாளரின் நடை வீச்சு. இது ஒரு கற்பனை கலந்த குறுங்காவியம் என்கிறார்.
வேங்கட வீரனை மிக அழகாக வர்ணிக்கிறார். "பொதிய மலையை ஒத்த அவன் புஜங்களில் நூலிலையில் கோர்த்த ருத்ராட்சமும் அவனது எழில் பொருந்திய கழுத்தில் கூரிய கருஞ்சிறுத்தையின் பற்களும் கைகளில் வளைந்து நெளிந்த கங்கணமும் பாதத்தில் வட்ட வடிவ தண்டையும் அவனுடலோடு பிணைந்து கிடந்தது. "
கதை நாயகியை அதை விட அழகாக விவரிக்கிறார். "தங்கத்தையும் மஞ்சளையும் உரலில் இடித்து பசும் பாலில் குழைத்து கை தேர்ந்த சிற்பிகளை தேர்ந்தெடுத்து செதுக்கிய பொன்னிற சிற்பமொன்றின் பூவுடல் தன்னை உரசியதால் உண்டான மின்னல் தாக்குதலு " க்கு வேங்கட வீரன் ஆளானதாகச் சொல்கிறார்.
ஆதினியாள் அவள் தான் கதை நாயகி. அவளுக்கும் வேங்கட வீரனுக்கும் காதல் முகிழ்க்கும் இடமும் மிகவும் ரசனையோடு சொல்லப் பட்டிருக்கிறது. "தன்னை எதிர்த்த வீர்ர்களிடம் இருந்து தப்பித்த ஆதினியாள் அடுத்த அடி எடுத்து வைக்க பெண்ணவளின் காலானது சேற்றைக் குழைத்து பிறழ அதையுணர்ந்த வேங்கட வீரனின் கைகள் அவளைத் தாங்கிப் பிடித்தது. கொடியிடையை சுற்றி இறுக்கிப் பிடித்தவன் அவளைக் கீழே சரியாமல் தன்னோடு அணைத்திருக்க முதன் முதலில் ஆடவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தபாவையவளின் உடலைநாணம் பிய்த்துத் தின்றது. அவள் விழிகள் அகிலத்தை மறந்து ஆடவனின் விழிகளுக்குள் நுழைந்தது. "
தன்னுடன் வந்தவன் வேங்கட வீரனல்ல வேங்கட அரசன் என ஆதினி அறியும் இடமும் மிகவும் அழகு. "சூரிய திலகத்தை நெற்றியில் அனலென ஏந்தி திரண்டு எழுந்து நிற்கும் இமயம் போன்ற இரு தோள்பட்டைகளிலும் பவளத்தை சூடி ஈசன் குடியிருக்கும் எருதின் திமில் போன்ற நெஞ்சம் நிமிர்த்தி........புல்லி நாட்டுடையன் சிம்ம சொப்பனமாய் நடந்து வந்தான். எனக்கு மட்டும் மன்னன் என்று நினைத்திருந்தவன் இத்தேச மன்னா?" இப்படிச் செல்கிறது.
அரசனிடம் தான் வந்த காரியம் சொல்லி தன் நாட்டு இளவரசியைக் காக்க வேண்டிய அவசியத்தையும் அவள் விரும்பும் சந்திர சீரனுடன் இளவரசியுன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றும் அரசரின் நண்பரான சந்திர சீரர் சொல்லியே தான் அரசரை சந்தித்ததாகவும் சொல்ல அரசன் தன் நண்பனின் உதவிக் குரலுக்கு உடன் இசைந்து சென்று காத்து பின் தன் மனதுக்கு இயைந்த ஆதினியாளுடன் இணைந்து கதை இனிதாக முடிகிறது.
இலைகளை உரசிச் செல்லும் காற்றைப் போல நான் கதையை லேசாக தொட்டு மட்டும் தான் செல்கிறேன். தென்றலின் முழு சுகந்தத்தையும் அனுபவிக்க கிண்டிலில் "வேங்கட வீரனை" வாசியுங்கள்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!