"வாருங்கள் படிப்போம்" என்னும் குழுவில் நேற்று பவா செல்லத்துரை அவர்களுடன் ஒரு ஸூம் மீட்டிங் நடத்தினார்கள். எனது மாலை இத்தகைய நிகழ்வுகளால் மணம் பெறுகிறது.
பவா செல்லத்துரை கதை சொல்லியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர். அவர் எழுத்தாளர், கதைசொல்லி, நடிகர் என பல வேடங்களை ஏற்பவர். அவர் சொன்னது "எந்த கலை வடிவமும் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தால் நீர்த்துப் போகும். எந்த art form ம் உச்சத்தில் இருக்கும் போது நிறுத்தி விட வேண்டும்" என்றார்.
40 வருடங்களாக தொடர் வாசிப்பில் இருப்பதாக சொன்னார்.அனேகமாக ஜெயகாந்தனின் எல்லா கதைகளையும் வாசித்திருப்பதாக சொன்னார்.
தான் எத்தனை கதைகளை சொல்லி இருந்தாலும் ஒரு சிலரது கதைகளை சொல்ல முடிந்ததில்லை என்றார். உதாரணமாக லா.ச.ரா, நகுலன், மௌனி போன்றவர்கள். ஜெயமோகன், பிரபஞ்சன், ஜெயகாந்தன் போன்றவர்களுடைய கதைகள் சொல்வதற்கு எளிதானது என்றார்.
நிகழ்ச்சி நடத்தியவர் கதையின் முடிவையும் சொல்லி விடுகிறீர்களே வாசிப்பவர்களின் ஆர்வத்தை குறைத்து விடாதா என்று கேட்டார். ஒவ்வொருவருடைய வாசிப்பும் தனித்துவமானது. கதை சொல்வதை கேட்பது ஆர்வத்தைக் குறைக்காது என்றார். இதில் எனது எண்ணம் துப்பறியும் கதைகள் போன்றவை தான் முடிவைத் தெரிந்து கொண்டால் ஆர்வத்தை குறைக்கலாம். ஆனால் அது கூட என்னைப் போன்றவர்கள் முடிவைத் தெரிந்து கதை வாசிக்கும் போது எழுத்தாளன் அந்த முடிவுக்கு கதையை எவ்வளவு அழகாக நகர்த்தி செல்கிறார் என்று ரசிப்போம்.
ஒவ்வொரு கதை ஒவ்வொருவரோடு நெருக்கமாக கனெக்ட் ஆகும். உதாரணமாக ஒரு தந்தையை இழந்தவர் ஒரு கதையில் தந்தையின் இழப்பு வரும் இடத்தில் ஒன்றிப் போவார். மற்றவர்கள் எளிதாக கடந்து போவார்கள். பவா தன் தலை மகனை மூன்றரை வயதில் விபத்தில் பலி கொடுத்திருக்கிறார். இவர் சொல்லும் ஒரு கதையில் இதை ஒத்த ஒரு நிகழ்வு வந்த போது கதை கேட்டுக் கொண்டிருந்த இவர் மனைவி கேட்க முடியாமல் அழுது கொண்டே அந்த இடத்தை விட்டுப் போனதாக சொன்னார். தாய் மனம் அல்லவா?
நான் நோ சொல்லத் தெரியாதவன் என்கிறார். "நான் வாசகர்களோடு இருக்கும் போது மீனின் துள்ளலை உணர்கிறேன். இது நீரிலிருந்து கரையில் எடுத்து விட்ட மீனின் துள்ளல் அல்ல. நீருக்குள் இருந்து உல்லாசமாக உயரே எழுந்து நீருக்குள் வீழும் மீனின் துள்ளல். கடவுளின் கைகளில் இருப்பது போல் உணர்கிறேன்" என்றார்
எழுதுபவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். "பயணம் என்பது வெளி நாட்டுப் பயணம் அல்ல. உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் தங்கி இரவில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி வானத்து அழகை ரசிக்கும் அனுபவத்தை உணருங்கள்" என்றார். ஆனால் பெண்களுக்கான் பயணம் துயரமானது. துணை வேண்டும். அனுமதி வேண்டும். "தனிமையில் பயணிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்யவான்கள் " என்றார். எனக்குத் தோன்றியது ஒத்த மனமுடையவர்களுடன் ஒத்த ரசனையுடையவர்களுடன் செய்யும் பயணம் பாக்கியமானது.
நம் பிள்ளைகள் நம் வாழ்வின் நீட்சியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்களை தனித்துவமாக வளர விடுங்கள் என்றார். இவர் கதை சொல்லி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. மீண்டும் கதை சொல்லத் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!