10 January, 2022
புத்தகத்தின் பெயர் : தட்டப்பாறை.
நூலாசிரியர் : முஹம்மது யூசுப்
பதிப்பகம் : யாவரும் பப்ளிஷர்ஸ்
விலை : ரூ 650/-
முன்னுரையில் இந்த வரி ஆரம்பமே என்னை ஈர்த்தது. " எல்லோரும் வாசிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்களும் வாசித்தால் எல்லோரும் சிந்திப்பது போல மட்டுமே உங்களாலும் சிந்திக்க இயலும்." ஹாருகி முரகாமி. நாம தான் எல்லோரிலிருந்தும் வேறு பட்டவர்கள்னு நினைப்பவர்களாச்சே. உற்சாகமாக வாசிக்கத் தொடங்கினேன். இது ஒரு வகை டாக்குஃபிகேஷன் வகை நாவல் என்கிறார்.இது நமக்கு புது வகை என்பதால் அங்கங்கே கொஞ்சம் வேகம் குறைகிறது.ஆனால் அந்த இடங்களில் எல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நம் உணர்வுகளை சொல்ல வைத்து விடுகிறார். உலகெங்கிலும் உள்ள இலங்கையைச் சார்ந்த மலை வாழ் இந்தியத் தமிழர்களுக்கும் தமிழ் சொந்தங்களுக்கும் இந்த நூலை சமர்ப்பணம் செய்கிறார்.
தேவ சகாயம் கதை நாயகன். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர். அவருக்கும் கிறிஸ்டியானுக்கும் இடைப்பட்ட நட்பை அழகாக சொல்கிறார். "தன்னருகில் இருக்கும் மற்றவனுக்கு தன்னை விட பெரும் துயரம் என்றதும் கிடைக்கும் மன சமாதானத்தில் ஒருவன் தன்னை மீட்டெடுப்பான் எனும் பொது நியதி அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு உண்டாகக் காரணமாக இருந்தது என்கிறார்.
ஜெசிபா தேவசகாயத்தை காதலித்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்து அற்பாயிசில் இறந்தும் போகிறாள். அவள் இறப்பிற்கு தேவசகாயம் முக்கிய காரணம் என்று நினைக்கும் ஜெசிபாவின் குடும்பத்தார் பெண் குழந்தையை அவரிடம் கொடுக்க மறுத்து எடுத்துச் செல்கின்றனர். அந்த பெண் குழந்தைக்காகவே வாழ்ந்து முடிக்கிறார் தேவசகாயம்.
" நீங்க என்ன ஆளுங்க " என்னும் கேள்வி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தன என்கிறார்.அது தென் தமிழகத்தின் சாபக் கேடு.
நெல்லைக்கு பழைய பெயர் " வேணு வனம்" என்கிறார். எவ்வளவு அழகான பெயர். இந்த மண்ணே மூங்கில் காட்டுக்கான அடையாளம் தான் என்கிறார்.
தீவிர கம்யூனிஸ்ட் சகாவு இருளன்.
பிரான்சிலிருந்து டாக்குமெண்டரி எடுக்க வந்த டேனியல்.
இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடற்கரை
சௌம்யா, செல்வி அபி என பல சுவையான கதாபாத்திரங்கள்.
இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தன்னை முழுமையாக நம்பாத ஒரு சமூகத்தில் வாழும் அவதியை உணரும் படி எழுதி இருக்கிறார்.
நான் மிகவும் ரசித்த சில வரிகள்:
"மர்மத்தின் அந்திம ஆதாரம் காடுகள் எனில் பூமி எனும் முத்தச்சியின் நுறையீரல்
இந்த மழைக் காடுகள் தான்."
" சில காலைப் பொழுதுகள் எந்த ரகசியத்தை சுமந்த படி வருகின்றன என காலத்திற்கு மட்டுமே தெரியும் என்பதால் தான் மனித வாழ்வு இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது"
" நான் செத்தா எல்லா மிருகங்களும் தின்னு மிருகங்கள் மூலமா காடு முழுக்க நான் சுத்தணும் அது தான் என் ஆசை"
" 30 வருட வீட்டுச் சிறையில் இருந்து கிடைத்த விடுதலையில் பறவைக்கு பதினான்கு றெக்கைகள் முளைத்திருந்தன. அது ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் பறக்க விரும்பியது. அத்தனை வேட்கை அதன் கால்களில்."
" தேயிலைத் தோட்டம் எங்கும் உடைந்த சிறு சிறு துண்டுகளாக கலவரக் கதைகள் கிடந்தன. எங்கோ பார்த்தது போல் உள்ளதே என்று அருகில் சென்று உன் பெயரென்ன என்று கேட்டால் நிலம் அழுது விடும் சூழல் இருந்ததால்...."
சில இடங்கள் கடக்க கடினமாய் இருந்தது உண்மை. ஆனால் அங்கே முரகாமி தான் வந்து நம்மை நகர்த்திச் செல்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!