21 December, 2021
ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. கதை அறுபது வயது, மனைவியை இழந்த ஆண். பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில் காலை நடையில் சந்தித்த ஐம்பது வயது, கணவனை இழந்த பெண்ணை மணக்கிறார். பதிவு இதை பகடி செய்தது. சாகப் போகும் காலத்தில் இது தேவையா என்கிறது.
இது சார்ந்த என் கருத்து:
முதலில் அறுபது வயது சாகப் போகும் வயது இல்லை. நிறைய பேருக்கு பிள்ளைகள் படிப்பு திருமணம் முடிந்து பெற்றோர் தமக்காக வாழத் தொடங்கும் நேரம். உடலின் நோய் கூறுகள் எதையும் கண்டு கொள்ளாமல் ஓடி இருப்போம். அவை அப்போது தான் தலை தூக்கும். என்னை கொஞ்சம் கவனி என்று சொல்லும். பல் கண் ஆகியவற்றில் வயதுக்கே உரிய மாற்றங்கள் நிகழும். அப்போ தான் தனியாகவே சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கும் மருத்துவ மனையில் தனிமையில் காத்துக் கிடக்கும் போது ஒரு துணை தேடும். இரத்தத்தை பரிசோதனைக்கு கொடுத்து என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோன்னு பயப்படும் போது “ஒண்ணும் இருக்காது “ன்னு தோள் தட்டி சொல்ல ஒரு கரம் தேடும்.
படுக்கை சுகத்துக்கு மட்டும் அல்ல திருமணம். பிள்ளைகள் இப்போ தூர தேசங்களில் வேலை செய்யும் போது பெற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் துணை வர முடிவதில்லை. அப்பொழுது அவர்களுக்கு தேவையான துணையை தேடுவதில் தவறில்லை. சுற்றி இருக்கும் உலகம் “ இந்த வயதில் இது தேவையான்னு” தான் சொல்லும். தனிமையில் வயதான் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் நல்ல நட்பின் பொருட்டு அடிக்கடி சந்தித்துக் கொண்டால் மட்டும் வயதுக்கு மரியாதை கொடுத்து தவறாக பேசாமல் இருக்குமா? பேசும். அதற்கு திருமணம் நல்ல தீர்வல்லவா?
அவர்கள் மன நிலைக்கு பொறுத்தமான துணை கிடைத்தால் செய்து கொள்ளட்டுமே! இதில் நமக்கு என்ன பிரச்சினை. கூட இருபது முப்பது ஆண்டுகள் வாழ்வார்கள். நல்லது தானே. சில மரணங்கள் என்னை ரொம்ப தொந்தரவு செய்கின்றன. வளர்த்தெடுக்க சின்ன பிள்ளைகள் இருக்கும் போது நேரும் மரணங்கள். பிள்ளைகள் எல்லாம் வெளி நாட்டில் இருக்கும் சந்தோஷத்தில் கணவனும் மனைவியுமாக சந்தோஷமாக வாழும் நேரத்தில் இணையில் ஒரு பறவை மரணித்து போவது. சிலருக்கு தனிமை சொர்க்கம். இங்கு அவர்களைப் பற்றிய பேச்சில்லை. தனிமை நரகமாய் இருப்பவர்கள் தங்களுக்கேற்ற துணை கிடைத்தால் சேர்ந்து கொள்ளட்டும். வாழ்த்துவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!