பெயர். : மாயம்
பெருமாள் முருகனின் சிறு கதைத் தொகுப்பு.
பதிப்பகம் : காலச்சுவடு
விலை : ₹200
இருபது சிறு கதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துப் பரல். அனேகமாக எல்லா கதை நாயகர்களின் பெயரையும் முருகேசு என்றே வைத்திருக்கிறார். முருகேசு அப்பாவியாய், அதகளம் பண்ணுபவனாய், காதலனாய், கணவனாய், அப்பாவியாய் , அயோக்கியனாய் எல்லாமாய் வருகிறான்.
கடைக்குட்டி : கடைசி வரி வெடி குண்டு.
நுங்கு : நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு "ஏறி வேலை" என்று சொல்வதுண்டு என்கிறார். அரசாங்க வேலை அலுவலகத்தினாலாலும் ஏரியேயானாலும் ஒரு வித மெத்தனத்தோடு இருப்பதை சாடுகிறார்.
போதும் : இந்த கதையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது "காதலைச் சொல்லவும் முன் எடுத்துச் செல்லவும் முடியாத ஒருவனுக்கு காதலிக்க தகுதியில்லை. அவர்கள் தான் காதல் தேர்வில் தோற்கிறார்கள்.
வீராப்பு: விளையாட்டு வினையாகும் என்பதைச் சொன்ன கதை. " வேலை பார்த்து உன் சம்பளத்தைச் சேர்த்து வை. ஓரளவு சேர்த்ததும் மீதியை நான் போட்டு உன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். " என்ற அப்பாவின் வளர்ப்பு அருமை.
ஆட்டம் : ஏரோப்ளேன் கரம் என்னும் ஒரு வித தாய விளையாட்டை இந்தக் கதையில் நமக்கு நினைவுபடுத்துகிறார். தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாவும் மகனும் கொரோனா காலத்தில் இந்த விளையாட்டை விளையாடி ஜெயித்தவர் ஆர்ப்பாட்டமாய் சிரிக்கும் போது அந்த காலத்துக்கே போனது போல் இருக்கிறது.
இந்த கதையில் நான் மிகவும் ரசித்த வரி . " குற்றம் சாட்டுபவரையும் குற்றம் சாட்டப்பட்டவரையும் சமமாகப் பாவித்து ஒவ்வொரு வாக்கியத்தில் இருவருக்கும் பாதகமில்லாமல் நடந்து கொள்ளும் வித்தை அம்மாக்களின் தனித்திறன்"
தொடை : பஸ் பயணம் பல காதல்களைப் பார்த்திருக்கும். இதுவும் அது போல் ஒரு அழகான காதல் கதை.
அருவி : இந்த கதையில் வரும் "நீரோலம்" என்னும் வார்த்தைவரப் போகும் துயரத்தை முன்னுணர்த்துவதாய் இருந்தது. குறிப்பிடப்பட்ட "அருவி" எனக்கு பல ஆண்டுகளுக்கு முன் கொல்லி மலையில் பார்த்த அருவியை நினைவூட்டியது.
நாய் : காதல் என்பதில் பெண்களுக்கு என்ன வித தெளிவு வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லும் கதை.
கருவாடு : பகைமையை பல ஆண்டுகள் தேவையில்லாமல்மனதில் சுமந்து வருகிறோம்.அது ஒரு எளிய முயற்சியில் மணல் வீடாய் சரிந்து போகும் என்பதைச் சொல்லும் கதை.
பந்தயம் : ஆண் நட்பினிடையே பணம் கொடுக்கல் வாங்கல் வெகு சகஜம். பெரும்பாலும் நட்பு முறிவதும் பணத்தாலோ பெண்ணாலோ தானே? இந்த கதையில் நண்பர்கள் நட்பு முறிந்ததா? தெரியவில்லை.
தொழில் : தொழில் போட்டி பலருக்கு இடையே வந்திருக்கும். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே கூட வருமா? வரும் என்று சொல்லும் கதை.
பரிகாரம் : அழுத்தமான அழ வைக்கும் கதை.
மாயம்: போட்டி என்பது இருவருக்கும் தெரிந்து வருவது தான். அப்படி ஒருவனுக்குத் தெரியாமலே நடக்கும் போட்டியும் அதனால் நேரும் விபரீதமும் தான் கதை. இந்த கதை தான் புத்தகத்தின் பெயரும் கூட.
என்ன?? இருபது கதைகள் வரலையேன்னு பார்க்கிறீங்களா? சில கதைகள் என்னன்னே தெரியாம நீங்க வாசிப்பதற்காக. உங்கள் வாரிசுகளின் வாசிப்பை மெருகேற்ற நினைத்தால் இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம்.
ஏன் இடைவெளி ?தொடர்ந்து எழுதுங்க
ReplyDelete