நான் பல விஷயங்களை நான் வாசித்தவற்றை நான் பார்த்தவற்றை என் பேரனுடனான என் சந்தோஷங்களை இன்னும் எனக்கே எனக்கான சில விஷயங்களைத் தவிர அனைத்தையும் உங்களுடன் தான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்ன சொல்வீர்கள் என்ற அச்சமோ என்னைத் தீர்ப்பிடுவீர்கள் என்ற பயமோ இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்த நெருப்பாற்றையும் கடந்து தான் பயணித்திருக்கிறேன்.
சரி சரி விஷயத்துக்கு வாரேன். திரு நங்கைகள் நாம் புரிந்து கொள்ளாத கதாபாத்திரங்களாகவே நம் வாழ்வில் இருந்திருக்கிறார்கள். எனக்கும் அப்படியே. அண்மையில் தான் ஜெர்மனி வாழ் திருநங்கை ஒருவரின் யூட்யூப் சானல் பார்க்க நேர்ந்தது. அந்த பதிவு அவரின் அறிவை ஒளியூட்டிக் காட்டியது.
அதிலிருந்து அவரது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்க்கிறேன். வழக்கமாக டீன் ஏஜ் என்பது சந்தோஷங்கள் நிறைந்தது. என்னைப் போல் காதல் என்னும் சாகரத்தில் வலியப் போய் குதித்து வலிகளை இழுத்துக் கொண்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் அது வஸந்த காலம்.
ஆனால் அந்த வயதில் தான் அனேக திருநங்கையர் தாம் திருநங்கை என்பதை உணரத் தொடங்குகிறார்கள். அந்த குத்தீட்டி அவர்களைக் குற்றுயிரும் கொலை உயிருமாக ஆக்குகிறது. அனேகம் பேர் குடும்பத்தை பிரிகிறார்கள். குடும்பம் ஆதரவளிக்க மறுக்கிறது. ஆனால் நான் பார்த்த இவரோ தாயின் முழு அரவணைப்பில் வளர்ந்து படித்து உயர் நிலைக்கு வந்திருக்கிறார். மெடிக்கல் துறையில் பணி புரியும் இவர் இந்த கொரோனா காலத்தில் சமுதாயத்துக்கு தன் பங்கினையும் அளித்திருக்கிறார்.
அவர் இன்று யூட்யூபில் சொன்ன ஒரு விஷயம் தான் இந்த பதிவின் நோக்கம். " உங்கள் குழந்தை திரு நங்கை என்று அறிந்த நொடி உதறித் தள்ள நினைக்காதீர்கள். நோயிலும் போரிலும் விபத்திலும் குழந்தைகளைப் பறி கொடுத்து அவர்களின் போட்டோக்களோடு பேசிக் கொண்டிருக்கும் பெற்றவர்களைப் பாருங்கள். உங்களுக்கு உயிரும் சதையுமாய் ஒரு குழந்தை இருக்கிறது. பிறர் என்ன சொல்வார்களோ என்ற கவலையில் அந்த குழந்தைகளை உதறித் தள்ளாதீர்கள். அது அவர்கள் தவறல்ல. "
பெற்ற அவர்களே உதறும் போது தான் வாழ வழி அறியாமல் பல தவறான வழியைத் தேடுகிறார்கள். ஏற்கனவே படைப்பின் மேல் கோபத்தோடு தான் இருப்பார்கள். குடும்பம் ஆதரித்து வளர்த்து அவர்களுக்கான திறமையில் அவர்கள் ஜொலிக்க அனுமதிக்க வேண்டும். எல்லோரும் இணைந்து வாழ்வதற்கானது தான் இந்த பூமி. அதை ஒரு சிலருக்கு மறுத்து சாவை நோக்கி அவர்களை நகர்த்தக் கூடாது.
காலையில் அந்த வீடியோ பார்த்ததில் இருந்து மனம் கனத்துப் போய் கிடக்கிறது. பதிவின் மூலம் பாரத்தை இறக்கப் பார்க்கிறேன். ஏதோ ஒருவர் இருவர் இந்த பதிவைப் பார்த்து திருநங்கைகள் மீதான தன் பார்வையை மாற்றிக் கொண்டால் நல்லது தானே.
இதைப் போய் ஏன் எழுதிக்கிட்டு என்று நினைக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!