Bio Data !!

19 October, 2022

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் :

புத்தகத்தின் பெயர் : பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள். ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம். விலை ரூ 135/- சத்யஜித் ரே வங்காளத்தின் மிகப் பிரபலமான திரை இயக்குனர். இவர் எடுத்த படங்களில் ஆகச் சிறந்த படம் “ பதேர் பாஞ்சாலி” இதைப் பற்றிய தன் கருத்துகளை எஸ் ரா அவர்கள் பகிர்ந்து கொண்ட புத்தகம் தான் இது. இந்த புத்தகம் வெளி வந்தது 2006 இல். அப்போது சொல்லி இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக தினம் ஒரு சினிமா பார்த்து விடுகிறேன். ( இன்றும் தொடர்கிறதா சார் இந்த பழக்கம்?) பதினைந்து வருடங்களாக உலக திரைப்பட விழாக்களுக்குத் தவறாமல் சென்று வந்திருக்கிறார். சினிமாவைத் தெரிந்து கொள்ள எடுத்த முயற்சி தான் புத்தகமாக வெளி வந்து இருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லித் தருகிறது. ஒவ்வொரு திரைப்படம் பற்றியும் ஒவ்வொரு புத்தகம் எழுத வேண்டும் என்பது இவர் ஆசை. அந்த வரிசையில் இது முதல் புத்தகம் என்கிறார்.இந்த புத்தகம் வந்து இப்போது இன்னும் பதினாறு ஆண்டுகள் ஆகி விட்டன. திரைப்படங்கள் பற்றி அவர் எழுதிய வேறு புத்தகங்கள் இருக்கின்றனவா படித்தவர்கள் சொல்லுங்கள். வாசிக்க விருப்பம் உண்டு. பதேர் பாஞ்சாலி என்பதற்கு "சாலையின் பாடல்" என்று பொருள். பதேர் பாஞ்சாலி வந்த புதிதில் சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை விற்று பணம் சம்பாதித்து விட்டார் என்ற அவச் சொல் எழுந்தது. ஆனால் அதற்கு ரே பதிலளிக்க மறுத்து விட்டார். அது வரை மனதில் இருந்த ஆங்கில படங்களின் சாகசங்கள் குதிரை மேல் இரட்டை துப்பாக்கியோடு வரும் நாயகர்களை ரசித்தவை. அனைத்தையும் ஒரேயொரு ராட்சத அலை வந்து அடித்து இழுத்துச் சென்றது போல் இருந்தது பதேர் பாஞ்சாலி பார்த்து முடித்ததும்.என்கிறார் ஆசிரியர். பதேர் பாஞ்சாலி கதையின் போக்கினை இரண்டு கதாபாத்திரங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று துர்கா இன்னொன்று பாட்டி இந்திரா. துர்கா பால்யம் மாறாத சிறுமி. பாட்டி சாவின் அருகாமையில். இந்த இரண்டு முனைகளுக்கும் இடையில் தான் கதையின் மைய நிகழ்வுகள். பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் விபூதி பூஷண். கதை அப்புவை சுற்றியே நகர்கிறது. ஆனால் திரைப்படம் அப்புவின் அக்கா துர்காவின் விருப்பப்படி நடப்பதாக வருகிறது. //கலை வடிவங்கள் ஒவ்வொன்றும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரு வடிவத்தை இன்னொரு கலை வடிவத்தோடு ஒப்பிட்டுப் பேசவே இயலாது// இதை வாசித்ததும் எனக்கு பொன்னியின் செல்வன் பாகம் 1 பார்த்திட்டு பலரும் படம் கதையைப் போலவே இல்லை என்று எழுதியது ஞாபகம் வந்தது. ஒரு வேளை எஸ். ரா இப்போ இணைய தளத்தில் தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருந்தால் பதில் கொடுத்திருப்பாரோ! பதேர் பாஞ்சாலி படத்தின் தயாரிப்பாளராக மேற்கு வங்க அரசின் பொதுப்பணித்துறை இருந்திருக்கிறது. ஆனால் அரசு பிரிண்ட்டை முறையாக பாதுகாக்காமல் விட்டு விட்டது. இதை அறிந்த மெர்சண்ட் ஐவரி, ரேயின் படங்களின் நெகடிவ்களை தான் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தார். ரேயின் ஆறு படங்களின் உரிமையை பெற்றார். துர்திர்ஷ்டவசமாக அந்த ஆறு படங்களின் நெகடிவ்களும் தீக்கிரையாகின. காட்சிகளின் கரையிலிருந்த படியே என்ற தலைப்பில் மிகச் சிறப்பான ஒரு பகுதி. வெகு ஜன சினிமாவில் காட்சிப் படிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்கிறார். ஆனால் கலைப் படங்கள் கதையின் மையத்தை ஒரு குறியீடாக மாற்றி கதையின் ஊடாகவே வெளிப்படுத்தும். அதற்கு உதாரணமாக அடூர் கோபால கிருஷ்ணனின் “எலிப்பத்தாய”த்தை சொல்கிறார். சத்யஜித் ரே தனக்கு உள்ள ஒரு பழக்கத்தை ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். ஏதாவது ஒரு நாவல் திரைப்படமாகப் போவதாக செய்தி வந்தாலே அதற்கு இவர் திரைக்கதை எழுதி விடுவாராம். பிறகு படம் வெளியான பிறகு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்ப்பாராம். இந்த பயிற்சி தான் இவரை திரைக்கதை ஆசிரியராக்கியது என்கிறார்.. திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுத முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த டிப்ஸ் என நான் நினைக்கிறேன். ஒரு முக்கிய விஷயம். படத்தின் இசையமைப்பாளர் பிரபல சிதார் மேதை ரவி சங்கர்.இந்த புத்தகம் வாசித்து முடித்ததும் பதேர் பாஞ்சாலி என்னும் வங்கப் படம் பார்க்கும் ஆர்வம் வந்தது. தேடினேன். யூட்யூபில் இருக்கிறது சப் டைட்டிலுடன்.. உங்கள் குழந்தைகள் பேரக் குழந்தைகளுக்கும் காட்டுங்கள். அப்பொழுது நாம் எவ்வளவு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரியும். வாழ்வின் அருமை தெரியும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!