16 April, 2023
புத்தகத்தின் பெயர் : மூன்றாம் பிறை. தமிழில் : கே வி சைலஜா .
இது மம்மூட்டி அவர்களின் வாழ்வு அனுபவம்.
வம்சி வெளியீடு .
விலை 130 ரூபாய்
கேரளாவில் வைக்கத்துக்கு பக்கத்தில், "செம்பு " என்ற கிராமத்தில் , இஸ்மாயில் , பாத்திமா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார் மம்முட்டி. சட்டக் கல்லூரியில் படித்தவர். மலையாளம்மலையாளம் , தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,ஆங்கிலம் (அம்பேத்கார் பற்றிய படம்) போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது முதல் படம் "வில்காணுண்டு சொப்பனங்கள்" . தமிழில் "கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது" இவர் சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் பலமுறையும் பெற்று இருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய "பத்மஸ்ரீ" பட்டம் பெற்றவர்.
தமிழ் படுத்திய கே.வி. ஷைலஜா கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். வம்சி புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்துகிறார். கணவர் பெயர் பவா செல்லதுரை. நாம் அனைவரும் அறிந்தவரே தான். மகன் வம்சி. மகள் மானசி.
முகமது குட்டி என்று மம்மூட்டிக்கு வைக்கப்பட்ட பெயர் மம்முட்டியாக மாறி இருக்கிறது . அவருக்கு அந்த பெயர் பிடிக்காததால் அதை மறைத்து ஒமர் ஷரீஃப் என்று கல்லூரியில் சொல்லியிருந்திருக்கிறார் . அதை ஒரு மாணவன் கண்டுபிடித்து விட, அவரை அனைவரும் மம்மூட்டி என்று அழைக்க தொடங்கி இருக்கிறார்கள் அதில் இருந்து அவர் மம்முட்டியானார். அவரது மூன்றாவது படத்தில் நடிக்கும் போது பி.ஜி. விஸ்வாம்பரன் என்பவர் இவர் பெயரை சுஷில் என்று மாற்றி அடைப்புக் குறிக்குள் மம்முட்டி என்று போட்டிருந்திருக்கிறார். ஆனால் அடைப்புக் குறிக்குள் இருந்த பெயரே நிலைத்து விட்டது.
ரொம்ப வெளிப்படையாக, பெண்களைப் பொருத்த வரை , மலையாளிகளின் மன நிலையை ஒத்துக் கொண்டு்ள்ளார். ஒரே மேடையில் அமிதாப் பச்சனோடு அமர்ந்திருந்த போது, அவர் வயதுக்கு ஏற்ப, பெண்களுக்கு எழுந்து மரியாதை செய்த போது தான் தன் மனநிலை இவருக்கு புரிந்திருக்கிறது. இதை நினைக்கும் போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு மேலிட தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வதாக வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார்.
ரதீஷ் என்ற நண்பனின் மரணம் பற்றி சொல்லும் போது "தவறுகளுக்குப் பிராயச் சித்தம் கேட்க ஒரு வாய்ப்பினைக் கூடத் தராமல் மரணம் ஏன் எங்கேயோ தாகத்துடன் காத்திருந்தது" என்று வருகிறது. நல்ல மொழி அழகு. இது மொழி பெயர்ப்பின் போது சேர்ந்த அழகா எனத் தெரியவில்லை. இப்படி ரசிக்கத் தக்க பல இடங்கள்.
அடுத்து புத்தகத்தின் தலைப்பான மூன்றாம் பிறை என்று ஒரு கட்டுரை. ஆசிரியர் ஷைலஜா தன் முன்னுரையில் சொல்லி இருக்கிறார் , இந்த தலைப்பை வைக்கும் முன் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் அனுமதி கேட்டதாகவும், அவர் அனுமதித்து "மூன்றாம் பிறையில் தான் நல்ல விஷயங்கள் செய்வார்கள். மூன்றாம் பிறை கண்ணுக்குத் தெரியாது சட்டென்று மறைந்துவிடும் . ஆனால் மிக முக்கியமானது" என்று சொன்னதாக எழுதி இருக்கிறார். இந்த கட்டுரை எனக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது . முதிய தம்பதியர் இடையே ஏற்பட்ட விவாகரத்து வழக்கு பற்றிய ஒரு கட்டுரை. மனதை நெகிழ வைத்தது. விவாகரத்து என்ற விஷயத்தில், சம்பந்தப்பட்டவர் தவிர மற்றவர்கள் எவ்வளவு அதிகம் பங்கு எடுக்கிறார்கள் என்பதை உணர் வைத்த கட்டுரை.
உயிர் காத்த ராணுவ வீரர் பற்றிய கட்டுரை ரட்சகன்.
வீட்டிலிருப்பவர்களுக்கு இனிமையான நினைவுகளாக மாற விருந்தினர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் "விருந்தினர்கள்" கட்டுரை.
வேலைப் பளுவைக் காரணம் சொல்லி வாக்களிக்காமல் இருந்து ஜனநாயகத்தை குறை சொல்வது கோழி முட்டையை நன்றாக அடை காத்து அன்னப்பறவை பொரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது என்று சொல்லும் "லஞ்சத்தின் வேர்" என்ற கட்டுரை.
இப்படி பல சுவாரஸ்யமான கட்டுரைகள் நிறைந்த புத்தகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!