21 April, 2023
நாவலின் பெயர் : மலரும் சருகும்
ஆசிரியர் : டி. செல்வராஜ்
NCBH பதிப்பகம்.
விலை : ₹200
இவர் எழுதிய "தோல்" என்னும் நாவல் 2012 இல் சாகித்ய அகடமி விருது பெற்றது. தோல் பதனிடும் தொழிற்சாலையில் உழைப்பவர்களின் துன்பங்களைப் பற்றிய நாவல் .
"மலரும் சருகும் " நாவலின் முதல் பதிப்பு 1966 இல் வெளி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்கு முன். நல்ல வரவேற்பு இருப்பதால் இன்று வரை பதிப்பிக்கப்படுகிறது. இதை தலித் படைப்பிலக்கியத்துக்குள் கொண்டு வரவும் முடியவில்லை. நிராகரிக்கவும் முடியவில்லை என்கிறார் ஆசிரியர். அந்த காலத்தில் வலு மிகுந்தவர் வலுவற்றவர்களை எப்படி எல்லாம் ஏய்க்கிறார்கள் என்பதை கதை சொல்கிறது. ஏய்ப்பவர்களில் ஜாதி பாகுபாடு இல்லை. அதனால் ஆசிரியர் இப்படி சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன்.
அந்த கால கதையாதலால் ஜாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல் தோன்றுகிறது. ஆனால் அன்று நடைமுறை அது தானே. ஒவ்வொரு பெயரோடும் அவரது ஜாதிப் பெயரும் இணைந்து வரும். அதனால் நம் மனதை அந்த காலத்தில் இறுத்தி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் நடக்கிம் நிகழ்வுகள் கண்டு மனம் கொந்தளிக்கும்.
" மறக்குடி வழியே பள்ளப்பய செருப்பைக் கழட்டாம போவானா" என்ற வரியில் வார்த்தைக்கு வார்த்தை அந்த காலத்தின் வன்மம் தெரிக்கிறது.
அதே போல ஒரு குடும்பத்துக்குள் திருமண காரியத்துக்காக மதம் மாறிய ஈசாக் , தன் தந்தை இன்னும் ஆதி மதத்தில் இருந்தாலும் , அவர் நம்பிக்கைகளை மதிப்பதை பார்க்கும் போது அந்த கால நாகரீகம் உயர்வாகத் தோன்றுகிறது.
மாடசாமிக் குடும்பன் தன்னைக் கடிந்து கொள்ளும் பேரனிடம் " மேல் குலத்தவங்களைக் கண்டதுமே என்னை அறியாமலேயே தலைத் துண்டு இடுப்புக்கு வந்திடுது கை இரண்டும் நெஞ்சிலே குவிஞ்சிடுது" என்கிறார். பேரன் மோசேயின் தைர்யத்தையும் தன்மான உணர்வையும் பார்த்து மாடசாமிக்கு பூரிப்பு பொங்குகிறது.
வேலாண்டி என்னும் ஆடு மேய்க்கும் சிறுவனை பாத்திமா பீவி தன் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்வதை படிக்கும் போது நாம் அன்று முதல் இன்று வரை பெண் குழந்தைகள் அளவுக்கு ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் இருக்கிறோமே என்னும் பதைப்பு ஏற்படுகிறது.
கிழவனின் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்த பணத்தில் வேலாண்டி மகன் நகரத்தில் வித விதமாய் விலையுயர்ந்த உடை வாங்கி உடுத்தி வசந்தி என்னும் பெண்ணை மயக்க முயல்வதை வாசிக்கும் போது இத்தகைய பொறுப்பற்ற பிள்ளைகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
ஊர்க்குடும்பன் வீட்டு விஷயம் ஒன்று பஞ்சாயத்துக்கு வருகிறது. அப்போது அவர் " என் வீட்டுக்குப் பெண் கொடுத்தவங்க விவகாரம். எம் பையனுக்கும் இதிலே பங்கு உண்டு. நான் தலையிட்டா குடும்பன் ஓரவஞ்சமா பேசுதாண்ணு பேர் வரும்" என்று சொல்லி ஒதுங்குகிறார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் இது.
அடிமைப் பட்டுக்கிடந்த எளிய சமுதாயம் ஒன்றின் சில குருத்துகள் எதிர்ப்பு குரல் கொடுக்கின்றன. வெற்றி பெற்றதாக காட்டப்படவில்லை எனினும் இன்றைய பல மாற்றங்களுக்கு தொடக்க புள்ளி இவை தானே.
நம் நூலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு புத்தகம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!