26 May, 2023
புத்தகத்தின் பெயர் : தரிசனம்
ஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம்.
சந்தியா பதிப்பகம்.
விலை : ரூ . 120/-
முதல் வெளியீடு 1952. சந்தியா பதிப்பகத்தில் முதல் பதிப்பு 2013.
ஆசிரியர் லா.ச. ரா முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆங்கில எழுத்துலகம் அந்த நாளில் ஒரு சில இந்தியர்களைத் தான் தொடர்ந்து எழுத அனுமதித்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட தொடர்ந்த வாய்ப்பு கிடைக்காததாலேயே நமக்கு தமிழில் ஒரு அற்புத எழுத்தாளர் கிடைத்திருக்கிரார். இவர் எழுத்துணர்வுகள் தமிழில் ரசிக்கப் பட்ட அளவு ஆங்கிலத்தில் ரசிக்கப் பட்டிருக்குமா? சந்தேகம் தான்.லா.ச.ராவுக்கு ஒவ்வொரு தலை முறையிலும் ரசிகர்கள் உண்டு.
“ தரிசனம்” பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும், வானொலியில் வந்த பேச்சுகள் அடங்கிய கட்டுரைகளுமாக ஒரு சிறு தொகுப்பு. அதன் முதல் கட்டுரையே சான்றோர் சிந்தனை என்ற பகுதியில் வந்த அவருடைய வானொலிப் பேச்சு“ அம்மா” என்ற தலைப்பிட்டது. அவரது எழுத்துக்கு எவ்வளவு ரசிகையோ அதே அளவுக்கு லா.ச.ராவின் அம்மாவுக்கும் நான் ரசிகை. அவர்களைப் பற்றி வாசித்திருக்கிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு ஆச்சாரம் பார்ப்பார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மனிதாபிமானம்
மிருந்தவர். அதனால் முதல் கட்டுரையை மிகவும் ஆவலோடு படிக்கத் தொடங்கினேன்.
தெய்வம் உண்டா இல்லையா என்பதைப் பர்றி சந்தேகங்களும் சர்ச்சைகளும் இருந்த்தாலும் தாயின் நிரந்தரம் பற்றி சந்தேகிப்பார் யாரும் இல்லை என்கிறார்.. சங்கரர் அம்பாளைக் கேட்கிறார். “ தாயே ஸ்திரியில் கெட்டவள் இருக்கலாம். ஆனால் தாயாரில் கெட்ட தாயார் என்று உண்டோ” பட்டினத்தாரின் இரங்கலைக் குறிப்பிடுகிறார்.
முன்னையிட்ட தீ முப்புரத்தில்
பின்னையிட்ட தீ தென்னிலங்கையில்
அன்னையிட்ட தீ அடிவயிற்றில்
அன்னை பற்றிய கட்டுரையில் தொடங்கி அடுத்து தான் பிறந்த ஊரான லால்குடியை பற்றி எழுதுகிறார். நாட்டில் எந்த முடுக்கில் நீங்கள் ஒரு சப்தரிஷியை சந்திக்க நேர்ந்தாலும் அவர் பூர்விகம் சந்தேகமின்றி லால்குடியாய் இருக்கும் என்கிறார். “யாரும் என்னை பார்க்கவில்லை என்று நான் நினைத்துக்கொண்ட சமயம் சட்டென்று குனிந்து பூமியிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணை அள்ளி நிமிர்ந்து வாயுள் தூவிக் கொள்கிறேன்” என்று முடிக்கிறார். மெய் சிலிர்த்து போகிறது.
சத்யப்ரஸாதினி என்ற பெயரில் ஒரு கட்டுரை. சான்றோர் சிந்தனை என்ற தலைப்பில் வானொலியில் பேசி இருக்கிறார். அதைப் புரிந்து கொள்ள மிகவும் கடினப்பட்டு ஒவ்வொரு பாராவையும் மூன்று முறை வாசித்தேன். ஏதோ கொஞ்சம் புரிந்தது. ஸத்யப்ரஸாதின்மை என்பதை ஸத்யத்தின் பிரஸாதமானவள் என்று அர்த்தம் பண்ணிக் கொண்டதாகச் சொல்கிறார்.
லா.ச.ரா எழுதுவதற்கு விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை என்கிறார். நான் மெதுவாக ஆனால் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன் என்கிறார்.
ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.. எழுதிப் பிரசுரமானவன் தான் எழுத்தாளன் இல்லை. எண்ணங்களுக்கு உரு கொடுக்கும் போது எண்ணத்தில் வெளியீட்டுக்கு பயன்படும் ஒரு மீடியம் ஒரு எழுத்து என்கிறார்.
எது அழகு. அவரவர் பூத்ததற்கு தக்கபடி என்கிறார். ஆழமான கருத்து எண்ணத்தை எழுத்தால் பூஜித்து சௌந்தர்ய உபாசகனாக இருக்க விரும்புகிறேன் என்கிறார்.
எனக்குத் தோன்றியதை நான் தெரிந்து கொண்டதை என் எழுத்தில் என்னால் சொல்ல முடிந்த வரை சொல்லி இருக்கிறேன் என்கிறார். எவ்வளவு எளிய மனம்!!! “ நான் புரியாத எழுத்தாளன் என்று பல இடங்களில் சொல்லப் படுகிறேன். என் மொழியின் நோக்கமே மௌனம் தான் என்கிறார். திரும்ப திரும்ப வாசித்து அவர் சொல்ல வருவதை பாதியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் எழுகிறது.
தியானத்தின் பாதையும் இது தானே என்கிறார். எண்ணங்களைப் படிப்படியாக அடக்கி ஒவ்வொன்றாய் விலக்கி ஒரே எண்ணமாய் முகப்படுத்தி இதுவன்றி தியானம் யாது என்கிறார்.
ஒரு ஸ்ரீலங்கன் அவரைப் பார்க்க வந்திருக்கிறார். அவர் நாட்டு நிலைமையை பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். “ மனைவி சமையல் செய்து கொண்டு இருப்பாள். திடீரென்று அபாயச் சங்கு ஊளையிடும். அடுப்பைத் தணிக்க்க் கூட நேரமிருக்காது. ஓடி ஒளிந்து கொள்வோம். ALL CLEAR ஒலித்து வெளி வந்து பார்த்தால் வாணலியில் பண்டம் தீய்ந்து போயிருக்கும். சில சமயங்களில் குண்டு விழாமலே அடுப்பிலிருந்து தீ இசை கேடாய்ப் பற்றிக் கொள்ளவும் வழி உண்டு. இது தான் மரணத்தின் அண்டை விட்டு உறவு”
நாலு லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி கட்டிய வீடு பால் காய்ச்சி ஆகிற்று. மறு நாள் குடி போக போனால் வீட்டைக் காணோமாம். ஒரு சுவர் கூட அடையாளத்துக் இல்லாமல் தரை மட்டமாகி இருந்ததாம். பதறிப் போனது நெஞ்சம்.
நான் ரசித்த வரிகள்:
“ பாம்பு வயதாக ஆக உடல் குறுகி விஷம் கூடி மண்டையில் மாணிக்கம் அப்ப தான் உண்டாகிறது. பாம்பு மண்டையில் மாணிக்கம் சர்ச்சைக்குரிய விஷயமாய் இருக்கலாம். கட்டுக் கதையாய் தோன்றலாம். ஆனால் கதையில்லாமல் வாழ்க்கையே இல்லை . முடியாது.”
“ வேண்டியும் தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று. எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம். தானாக நேர்வது தான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. ஒரு முறை ஒரே தடவை தான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. அதற்கு மறு வளர்ச்சி கிடையாது. அந்த ஜ்வாலையின் குபீர். அது நித்யத்வத்தின் பொறி. அந்தப் பொறி நேரம் நானும் ஜ்வாலாமுகி”
நம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவாவது இது போன்ற புத்தகங்களை கஷ்டப்பட்டாவது வாசித்து விட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!