Bio Data !!

18 May, 2023

#நாவல் விமர்சனம் : நாவலின் பெயர் : கண் வரைந்த ஓவியம் ஆசிரியர் : தாமரை செந்தூர் பாண்டி பதிப்பகம் : சிவகாமி புத்தகாலயம். விலை : ரூ 100/- முதல் பதிப்பு : டிசம்பர் 1985 தாமரை செந்தூர் பாண்டி அவர்கள் எனது கல்லூரி காலங்களில் விகடனில் முதல் பரிசு வாங்கிய சிறுகதையின் ஆசிரியராக அறிமுகம். சமீபத்தில் ஒரு விழாவில் பொன்னீலன் அண்ணாச்சி நேரில் அறிமுகப் படுத்தினார். மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர். அன்பாக பேசினார். இந்த நாவலும் 1982 ஆம் ஆண்டில் அமரர் சி.பா ஆதித்தனார் நினைவுப் போட்டியில் ரூ.ஐந்து ஆயிரம் பரிசு பெற்றது. வழக்கமாக வட்டார பின்னணியில் எழுதும் கதைகளிலிருந்து மாறுபட்டு பட்டணத்து கதா நாயகன் பற்றி எழுந்த கதை என்கிறார் ஆசிரியர். ஒரு நாவலில் நல்லவனைப் படைப்பதும் வில்லனைப் படைப்பதும் சமுதாயத்தில் பிரதிபலிக்கும். சினிமாவிலும் அப்படித்தான். தொடர்ந்து வரும் போது அது சிந்தனைக்குள் சிறகடிக்கும். அந்த வகையில் கதை நாயகன் குணசீலன் ஒரு ஆகச் சிறிந்த கதாபாத்திரம். தொடக்கத்தில் பள்ளி செல்லும் லீலாவைப் பின் தொடர்ந்து செல்லும் விசிலடிச்சான் குஞ்சாக காட்டப்படும் குணசீலன் மேல் அதற்கான காரணம் புரியும் போது மதிப்பு உயர்கிறது. குணசீலன் பெரும் பணக்காரன். நல்லவன். அவனுடைய எதிர் வீட்டில் தன் பெற்றோருடன் வசிக்கும் லீலா பேரழகி குணசீலனின் கண்களில். ஏன் சொல்கிறேன் என்றால் வெறும் புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆராதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இவர்களிடையே மெல்லக் கனிந்து வரும் காதலும் இணையப் போகும் நேரம் பிரிக்கும் பேரிடிகளும் கதையில் ஒரு அழகிய வலை போல் பின்னப்பட்டு இருக்கிறது. குணசீலனின் அன்பில் இருக்கும் அந்த அளவு தூய்மை லீலாவிடம் இல்லாதது போலவே எனக்கு தோன்றியது. தைர்யமாக நிற்க வேண்டிய ச்ந்தர்ப்பங்களில் பலவீனப் பட்டவளாகவே தோன்றுகிறாள். அப்படிபட்டவர்கள் மேல் வைக்கும் அன்பு விழலுக்கு இறைத்த நீராகவே போகும்.ஆரம்பத்தில் குணசீலன் பணக்காரன் என்று தெரிநநததும் காதலிக்கத் தொடங்குவதும், அவனுடைய உண்மையான அன்பைப் புரியாமல் தன்னைக் காப்பாற்ற எடுத்த முயற்சியில் அவன் பாதிக்கப் பட்டதும் அவனை விட்டு விலகுவதும் , அவளை திருமணம் முடித்தவன் தவிக்க விட்டு சென்ற காலத்தில் மறுபடியும் சந்தித்த குணசீலனோடு சேருவதுமாக அவளூடைய கதா பாத்திரம் சற்று சுய நலம் மிகுந்ததாகத் தான் காட்டப் பட்டிருக்கிறது. லீலாவின் அம்மா ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரம். கண்டிக்க வேண்டிய இடத்தில் மகளைக் கண்டிப்பதிலும் அன்பைப் பிறருக்குத் தெரிய காட்ட வேண்டிய இடத்தில் தெரிந்தும், மறைவாக அக்கரை காட்ட வேண்டிய இடத்தில் மறைத்தும் தாய்மை மிளிர நடமாடும் பெண்மணி. குணசீலனை வாழ வைக்கும் ரயிலே அவனுக்கு எமனாகவும் வருகிறது. கதா பாத்திரங்களோடு கை கோர்த்து கதை நெடுக வரும் ரயிலும் ஒரு கதாபாத்திரமே! மனிதர்களின் சுய நல மிக்க நடவடிக்கை பல இடங்களில் தோலுரித்து காட்டப்பட்டு இருக்கிறது. மிகவும் பிராக்டிகலாக முடிவு எடுக்கும் லீலா தன் கணவன் ஒரு குழந்தையையும் கொடுத்து வாழ வழியில்லாமல் விட்டுச் செல்லும் போது ஒரு முடிவு எடுக்கிறாள். அந்த வரிகள் கதையின் ஆரம்பத்திலேயே அந்த பாத்திரப் படைப்பை அடையாளம் காட்டி விடுகிறது. “கோழையாய் சாவதை விட கொடுமையாய் தன்னை விட்டுப் போனவனை பழி வாங்கி அவனுக்கு படையலிட்ட அமுதத்தில் விஷம் கலந்து ஏன் வாழ்ந்து காட்டக் கூடாது” பணத்துக்காக வேறொருவனின் உடல் பசியை தீர்க்க அவள் முடிவெடுக்கும் போது இப்படி வருகிறது. ஆனாலும் அவள் நல்லவளாகவே இருக்கிறாள். என்பதை டிக்கெட் எடுக்காமல் தான் ஏறிய ரயிலில் உட்கார இடம் இருந்தாலும் நின்று கொண்டே வருவதாகவும் ஒரு பெண்மணி வற்புறுத்தி அமரச் சொல்லும் போது அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி வேறு பெட்டியில் ஏறுவது போலவும் சொல்லி அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் ஆசிரியர். நான் மிகவும் ரசித்த வரிகள்: “ அடுப்பைப் பற்ற வைத்து உலை வைக்கும் பொழுது அவன், அவள் மனத்திரையில் கால் வைத்தான். அடுப்பில் தீ நாக்குகள் தகதகக்கும் பொழுது அதனுள் நின்று அவன் சீழ்க்கை அடித்தான்.” “ கொடுத்து கொடுத்தே கெட்டு போன இந்த மனிதனா கொடுங்கள் கொடுங்கள் என்று கை நீட்டுகிறான். 96 ஏ பக்கங்களில் நம் மனதை இளக வைத்த ஒரு நாவல். *******************************************************************************************************

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!