18 May, 2023
புத்தகத்தின் பெயர் : கடல் நீர் நடுவே
ஆசிரியர் : கடிகை அருள்ராஜ்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பாலஸ்
விலை : ரூ 120/-
எனக்கு பொதுவாகவே புத்தகங்கள் மேல் அதிக ஆர்வம். அது தான் தெரியுமேங்கிறீங்களா? புத்தக கண் காட்சி, கடைகள், ஆன் லைன் தவிரவும் பழைய புத்தகக் கடைகளிலும் தேடுவேன். அப்படிக் கிடைத்தது தான் இந்தப் புத்தகம். ஒரு மாணவனின் பி.காம் முதலாண்டுக்கான புத்தகம்.
மீன் பிடி தொழிலில் இருப்பவர் தான் கடிகை அருள் ராஜ். கடல் நடுவே இருக்கும் போது அவர்கள் சந்திக்கும் நாமறியாத அனுபவங்களை கதையாக்கி இருக்கிறார். கடலையும் அதன் தொழில் முறையையும் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி உள்ளார். புரியாத வார்த்தைகளுக்கு இறுதியில் அகராதியும் தந்துள்ளார்.
ஒவ்வொரு தொழிலிலும் ஆபத்து உண்டு. என்றாலும் ஆபத்தையே தொழிலாகக் கொண்டது மீன் பிடித் தொழில் என்கிறார். மீன் பிடிப்பவன் கடல் எல்லையின் ஊதியமில்லா பாதுகாவலன். அன்னிய சக்திகளின் கைகளைக் கட்டிப் போடும் இரும்புச் சங்கிலி. உலகம் உள்ள வரை மீன் பிடித் தொழிலும் அழியாமல் இருக்க வேண்டும் என்கிறார்.
இரண்டு கால கட்டமாக கதையை சொல்லி நகர்த்துகிறார். ஒன்று படகில் சென்று மீன் பிடிக்கும் காலம். மற்றொன்று டீசல் போட்டு செல்லும் எலக்டிரிக் படகின் காலம். பழைய காலத்தில் தாம் கொண்டு போகும் கஞ்சிக் கலயத்தின் நீரையே மிச்சம் பிடித்துக் குடித்துக் கொள்வார்கள். இந்தக் காலத்தில் 500 லிட்டர் சிந்டெக்ஸ் டாங்கெ செல்கிறது.
மீன் பிடி வலை நகர்ந்து வருவதை இப்படி வர்ணிக்கிறார். ஒரு திமிங்கலம் வாயைத் திறந்த படி வரும் போது எப்படி சிறிய மீன்கள் எல்லாம் வாயினுள் சென்று விடுமோ அது போல வலையும் வாயை அகல விரித்த படி வருவதாகச் சொல்கிறார்.
சில நேரம் இவர்கள் பிடிக்கும் மீன்களுடன் கடல் பாம்புகளும் வந்து விடுவதுண்டு. அவற்றை கவனமாக எடுத்து கடலிலேயே வீசி விடுவார்கள். டால்பின்களை “கடல் பண்ணி” என்று அழைக்கின்றனர். ஒன்று மாட்டிக் கொண்டாலும் துணைப் பண்ணி அங்கு மிங்கும் உரசி கயிறை அறுத்து விடும்.
மீன் பிடிக்கும் முறையை இப்படி விளக்குகிறார். “ பல வகை நிறமுடைய பட்டு நூலை இணைத்து பந்து மட்டை தயாரிப்பார்கள். இது தண்ணீரின் மேற் பரப்பில் சிறிய மீன் ஓடுவது போல தோற்றமளிக்கும். மேற்பரப்பில் உலவும் மீன்கள் இரை என்று நினைத்து கடிக்கும் போது மாட்டிக் கொள்ளும் . இந்த மீன்களை இரையாக பயன்படுத்தி சுறா மீன்களைப் பிடிப்பார்கள் (இது அந்த கால முறை)
கட்டு மரத்தின் முன் பகுதியை அணிய மரம் என்றும் பின் பகுதியை கட மரம் என்றும் நடுப் பகுதியை நடுமரம் என்றும் சொல்வார்களாம்.
கடல் நடுவே பார்த்த ஒரு பிரம்மாண்டமான சுறாவை இப்படி வர்ணிக்கிறார். “ உடம்பில் பெரிய பெரிய புள்ளிகள் இருந்தன. அந்த புள்ளிகளிலிருந்து பல நிறங்களும் மாறி மாறி ஒளிர்ந்தன. கண்களிலும் பல விதமான நிறங்கள் தெரிந்தன. அந்த கண்களால் சுழற்றி சுழற்றி அனைவரையும் பார்த்தது. “ ஆஹா!!!! கற்பனையே இனிக்கிறதே.
கடலில் தெரியும் மேகத் தூணைப் பற்றி கூறுகிறார். சுழற் காற்று தண்ணீரை உறிஞ்சி எடுத்து மேலே வானை நோக்கிச் செல்லும் போது பார்ப்பதற்கு சுழலும் கரு மேகத் தூண் போலக் காட்சி அளிக்கும் என்கிறார்.
நடுக் கடலில் விழுந்து விடும் சேசடிமையை மீட்கும் காட்சி அவ்வளவு தெளிவாக எழுதப் பட்டிருக்கும். ஒரு திரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு வரும். ஆபத்தையே தொழிலாகக் கொண்டது மீன் பிடித் தொழில் என்பது இதை வாசிக்கும் போது நன்கு விளங்கும். ஒரு உயிரைக் காப்பாற்ற அத்தனை பேரும் தம் உயிரையும் பணயம் வைத்து செல்வது மெய் சிலிர்க்க வைக்கும்.
காடு கடல் போன்ற வித்தியாசமான பரப்புகளில் வாழ்பவர்களின் வேரோடிய பிரச்னைகளை நாம் தெரிந்து கொள்ளவும் அவர்கள் மேல் இரக்கம் கொள்ளவும், அன்பு செய்யவும் இது போன்ற புத்தகங்கள் உதவும். வெறும் நிகழ்வுகளாக சொன்னால் ஆர்வம் குறையும் என்பதால் ஒரு கதை போலவும் கதை மாந்தர் தம் பழைய நினைவுகளை சொல்வது போல அந்தக் காலத்தில் இருந்த மீன் பிடி முறைகளையும் சொல்வது மிகவும் ரசனைக்குரியதாய் இருக்கிறது. படித்து பாருங்கள்!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!