09 June, 2023
நாவலின் பெயர் : கடம்ப வனத்துக் குயில் (பாகம் 1)
ஆசிரியர் : உதயணன்
யாழினி பதிப்பகம்
விலை : 246/- ரூபாய்
உதயணன் அவர்கள் சமூக நாவல்களைப் போலவே சரித்திர நாவல்களும் மிகவும் நன்றாக எழுதக் கூடியவர். இவர் சேரர் சோழர் பாண்டியர் பல்லவர் போன்ற பலரைப் பற்றி எழுதி இருந்தாலும் கொங்கு சேரர்களைப் பற்றி எழுதாத குறை இருந்திருக்கிறது. அக்குறை இந் நாவலின் மூலம் தீர்ந்தது என்கிறார். திருச்சி அருகேயுள்ள கரூர் அந்தக் காலத்தில் கருவூர் என்றழைக்கப் பட்டிருக்கிறது. அதை ஆண்டவர்கள் தான் கொங்கு சேரர்கள்.
இந்த கதையில் மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையை வர்ணிக்கும் அழகு ரம்யமாய் இருக்கும். வயது முப்பது. வயதுக்குரிய பருவத் தோற்றம். உடல் கட்டு துடிப்பு. தீட்சண்யமான கண்களில் ஒளி வீசியது. இயற்கை ஒளியோடு போட்டி போடுவது போல காது மடல்களில் அவன் அணிந்திருந்த வைரக் கடுக்கன் விண்மீனைப் போல ஜொலித்தது. மன்மதனைப் போல விளங்கினான் வேந்தன்.
பாலி என்னும் அசுர குலத் தலைவர் பயணிக்கும் குதிரையைப் பற்றி அஸ்வ சாஸ்திரம் சொல்லும் ஒரு அழகான கதை ஒன்று வருகிறது. அதில் நான் ரசித்தது “ மேலே அமர்வது புலவராக இருக்கலாம். புரவலனாக இருக்கலாம். ஆனால் குதிரை குதிரை தான். அதற்கு எல்லோரும் ஒன்று தான்”
மயிலுக்கு போர்வை ஈன்ற பேகனின் கதை நமக்குத் தெரியும் . அந்த பேகன் பரத்தையர் வீதியில் பரத்தை ஒருத்தியை கானம் இசைக்கச் சொல்லி மயங்கிக் கிடந்தான். அந்த பரத்தையான கடம்ப வனத்துக் குயில் தான் கதையின் நாயகி.
விச்சிக்கோ கதையில் வில்லன். அவன் கடம்ப வனத்துக் குயிலிடம் மாட்டிக் கொள்கிறான். அவள் இசைக்கத் தொடங்கிய உடன் பல்வேறு பாம்புகள் அவனை சூழ்ந்தன. நாகப் பாம்புகள் படமெடுக்க பிற பாம்புகள் ஊர்ந்தன. பாம்புகள் சூழ்ந்து கொண்டால் அரசன் அஞ்சுவது மட்டுமல்ல. அலறவும் செய்தான்.
கொங்கு நாட்டுக்கு சொந்தமான கோகினூர் வைரம் திருடப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்தும் அதை திருடியவன் விச்சி மலை மன்னன்.
மிக அழகான உவமைகளை கதாபாத்திரங்கள் மூலம் சொல்கிறார். விச்சி மலை மன்னனை மன்னன் இரும்பொறை விட்டு விடும் போது அது பிடிக்காத கடம்ப வனக் குயில் இப்படிச் சொல்கிறாள். “ ஒரு கள்வனை ஒழுக்கம் கெட்டவனை கொலைகாரனை மன்னனாக இருப்பதற்கு அருகதையற்றவனை உயிரோடு விடுவது சகல தீமைகளுக்கும் வாய்ப்பளித்து விடும். நாம் கெட்டவனை அழிக்கும் போது பால் மரங்களை வெட்டுவது போல நடந்து கொள்கிறோம் அவை விரைவில் துளிர்த்து விடுகின்றன. என்ன அழகான உவமை. தீமை செய்பவனை அடியோடு அழிக்கணும். துளிர்க்க விடக் கூடாது.
தொண்டி துறைமுகத்திலிருந்து கோஹினூர் வைரம் வெளி நாடு செல்லப் போகிறது என்று ஆருடம் சொல்லப்பட்டதால் மன்னர் தொண்டி துறைமுகத்துக்கு விரைகிறார். அங்கே என்ன நடந்தது என்பது பாகம் 2 இல்.
இதில் நான் படித்து ரசித்தது : இந்த ஓவியத்தில் இருக்கும் மலை தட்சிண மலை. இதைக் கடப்பது கடினம். என்றார்கள். ஓவியனின் கைகளுக்கு அடங்கிய மலை என் கால்களுக்கும் அடங்கும்”
“ சாமர்த்தியங்கள் நற்காரியங்களுக்குப் பயன்படும் போது தான் பாராட்டப் படும். கள்வர்களீன் சாமர்த்தியம் இகழத் தக்கது.”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!