04 January, 2024
அண்ணன் சப்தரிஷி எழுதிய பதிவு இதை எழுதத் தூண்டியது. பல வருடங்களுக்கு முன் , எனது 30+ வயதில் நடந்த நிகழ்வு.
நாங்கள் அப்போ ஈரோடில் குடியிருந்தோம். இரவில் நானும் என் கணவரும் கடைக்குப் போய் விட்டு நடந்து வரும் போது ஒரு இருபது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் என்னை ஒட்டிய படி நடந்து வந்தாள். மெலிந்த உருவம். சோர்ந்த முகம். வழக்கமான முன்னெச்செரிக்கை உணர்வோடு என் கைப்பையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன்.
எங்க வீட்டுக்குப் பக்கம் வரும் போது தான் கவனித்தேன் எங்களுக்கு இணையாக தெருவின் அடுத்த பக்கத்தில் ஒரு இளைஞன் வருவதை. அந்த பெண்ணை நிறுத்தி "நீ யார்? எங்கு போகிறாய்?" என்று நான் கேட்பதை பார்த்தும் இளைஞன் வேகமாக நகர்ந்து விட்டான். அந்த பெண் ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்கிருந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு அம்மா கூட்டி வந்தாங்க. ஈரோடு பஸ் ஸ்டான்டில் இந்தா வந்திடுறேன்னு சொல்லி "உன் பையை நான் பத்திரமா வச்சிருப்பேன்" னு சொல்லி வாங்கிட்டு போனாங்க. திரும்பி வரவே இல்லை.
காலையில இருந்து இந்த பையன் என்னை சுத்தி சுத்தி வர்ரான். தப்பான காரியத்துக்கு அழைக்கிறான். நான் மறுத்தாலும் என்னை விட்டு போகல. இப்போ நீங்க பேசினதைப் பார்த்து தான் போறான்" என்றாள். பணம் கொடுத்தால் ஊருக்கு போய் விடுவதாக சொன்னாள். நான் அப்போ இருந்தது. இரண்ட்டுக்கு மாடி வீடு.படத்தில் இருக்கும் வீடு தான். அப்போ சிறு நகரங்களில் அபார்ட்மென்ட் வராத காலத்திலேயே ஈரோடில் இது இருந்தது.
மொத்தம் 36 வீடுகள். நிறைய பேர் வந்து ஆள் ஆளாளுக்கு விசாரித்து மணி ஒன்பதாகி விட்டது. ஆளுக்கொரு யோசனை. 1) கொண்டு போலீஸ் ஸ்டேஷன்ல விட்டிடுங்க. 2) பணத்தைக் கொடுத்து ஊருக்குப் போக சொல்லுங்க. 3) இந்த காலத்தில யாரை நம்ப முடியுது. தேவையில்லாம பொறுப்பு எடுக்காதீங்க.
ஆனால் எனக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரம் விசாரிச்சிட்டு அப்படியே விட மனசில்லை. வீட்டுக்கு கூட்டிட்டு போவோம். நாளைக் காலையில யோசிச்சுக்குவோம் னு நினைச்சேன். என் கணவரும் சரி என்றார். ஆனால் மற்றவர்கள் பயமுறுத்தினார்கள். தேவையில்லாம பிரச்னையில மாட்டப் போறீங்க. ஏன் இந்த வேண்டாத வேலைன்னாங்க. ஆனால் நான் "எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்குது. அப்படி விட முடியாது" ன்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டோம்.
சாப்பிட சொன்னேன் . சாப்பிட்டாள் அந்நிய வீட்டில் இருக்கிற உணர்வே இல்லாமல் ஒரு ஓரமாக படுத்து உறங்கி விட்டாள். நானும் கணவரும் நிம்மதியாக உறங்க முடியாமல் மாறி மாறி விடியும் வரை விழித்திருந்தோம். மறு்நாள் அமைதியாக விடிந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் சென்று சொன்னதும் ஒரு கான்ஸ்டபிளுடன் அந்த பெண்ணை அனுப்பி பஸ் ஏத்தி விடச் சொன்னார். ஒரு பெண் குழந்தையை ஒரு இரவு பாதுகாத்த நிம்மதியோடு அன்றாடப் பணியை தொடங்கினேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!