27 December, 2023
Amazon ல "கிடா" னு ஒரு படம் பார்த்தேன். இதன் இயக்குநர் ரா. வெங்கட். பூ ராம் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். காளி வெங்கட்டும், பேரனாக வரும் சிறுவனும் பாட்டியாக வருபவரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள்.
அதுவும் முக்கியமாக பேரன் விரும்பும் உடையை தன் பணத்தில் வாங்கி கடையை விட்டு வெளியே வரும் போது பாட்டி நடக்கும் கம்பீர நடை!! சான்சே இல்லை. கறி வெட்டுபவராக வந்து படம் முழுவதும் கலக்கி இருக்கிறார் காளி வெங்கட்.
முந்நூறு ரூபாய் குறைவாக இருந்தாலும் இருக்கும் பணத்துக்கே உடையை கொடுக்கும் கடைக்காரர், பாட்டி கேட்டு வரும் பணத்தை மறு கேள்வி கேட்காமல் எடுத்துக் கொடுக்கும் மனிதர், அதோடு தன் கை பணத்தையும் சேர்த்துக் கொடுக்கும் அவர் அம்மா, என்று பலரும் நல்லவர்களாக இருந்து நம் மனதை மயிலிறகால் வருடுகிறார்கள்.
நான் முந்தி "எறும்பு" னு ஒரு படம் பார்த்தேன். OTT ல் படம் பார்க்க விரும்பும் என் பெண் தோழிகளுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறேன். அதில் எல்லோரும் அவரவர் விருப்ப படத்தை குறிப்பிடுவார்கள். அதில் ஒரு தோழி "எறும்பு" படத்தை பார்த்திட்டு "நீ சொல்லலைன்னா இந்த படம் பார்த்திருக்க மாட்டேன். பெயர் ஈர்க்கவில்லை" என்றாள். அது போல ஏழ்மையின் வலி சொல்லும் இந்த படமும் பெயர் பெரிதாய் ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால் மிகச் சிறப்பான படம்.
பெத்த பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாததே வலின்னா, பேரப் பிள்ளைகள், அதுவும் பெற்றோர் இல்லாத பேரப் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாதது பெரும் வலி. அதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள்.
படம் முழுக்க பெண்கள் எவ்வளவு அறிவுபூர்வமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வலிந்து சொல்லப் பட்டு இருக்கிறது. முக்கியமாக கிராமங்களில் ஏழ்மையில் வாழும் பெண்கள் குடும்பத்துக்கு எப்படி ஒரு தூணாய் விளங்குகிறார்கள் என்பதையும், அதை அவர்கள் கணவர்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.
மனதை மிருதுவாக்கும் மிக நல்ல படம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!