அமேசான் ப்ரைமில் JBABY என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். இயக்குநர் சுரேஷ் மாரி. முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன். தயாரிப்பு பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர். OTT வந்த பிறகு நல்ல நல்ல கருத்துகளில் படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயாராய் இருப்பது அதிகரித்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. இது பாராட்டுக்குரியது
இசை டோனி பிரிட்டோ. ப்ரதீப் குமார் அன்னி ஜே பாடிய "நெடுமரம் தொலைந்ததே" என்னும் இப் படப் பாடல் அன்னையர் தினத்தை ஒட்டி வெளியிடப் பட்டு இருக்கிறது. சூப்பர் மெலடி.
மனித மனம் என்பது கண்ணாடி போன்றது. அது Glass, Handle with care என்று அறிவுறுத்த எடுத்த படம் போல் உள்ளது.
JBABY ஆக ஊர்வசி . இது அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற கதாபாத்திரம் என்பதால் ஜொலிக்கிறார். மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் பெற்ற தாய், கணவனையும் இழந்த நிலையில் , வாழ்க்கையின் வலிகளை தாங்க முடியாத ஒரு கட்டத்தில் புத்தி பேதலித்து , பல செயல்களைச் செய்து விடுகிறார்.
கதவிலேயே பூட்டு மாட்டி இருந்தால் அடுத்த வீடுகளில் இருப்பவர்களை உள்ளேயே வைத்து பூட்டி சாவியை எடுத்து வந்து விடுவது, வீட்டில் உள்ள சின்ன சின்ன நகைகளை கொண்டு போய் கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக கொடுத்து விடுவது, பிற வீடுகளின் லெட்டர் பாக்சில் உள்ள கடிதங்களை எடுத்து வந்து விடுவது, பிரச்னைகளில் மாட்டிக் கொள்ளும் போது நான் ஸ்டாலினின் தோழி, ஜெயலலிதாவின் தோழி என புருடா அடித்து விடுவது என ரகளை பண்ணி வரும் ஒரு முதிய பெண் கோபத்தில் வீட்டை விட்டு காணாமல் போய் விடுகிறார். அவர் கல்கத்தாவில் இருப்பதாக அதிகார பூர்வ தகவல் கிடைத்து போய் அழைத்து வருவதற்குள் அந்த நடுத்தரத்துக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகள் படும் துயரம் நம்மை நெகிழ வைத்து விடுகிறது.
பொதுவாகவே வயதானவர்களை பெண் பிள்ளைகள் அளவு ஆண் பிள்ளைகள் கவனித்துக் கொள்வதில்லை என்ற கருத்தை இந்த படத்தில் முறித்திருக்கிறார்கள். ஐந்து பிள்ளைகளுமே அம்மா மேல் அனுசரணையோடு தான் இருக்கிறார்கள்.
சில இடங்களில் நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார் இயக்குநர். உதாரணமாக அம்மா மேல் கோபத்தில் கை ஓங்கி விடும் தினேஷ் அம்மா திரும்பி வந்ததும்
சாப்பிடச் சொன்னதும் , அம்மா முதல் வாயை மகனுக்கு ஊட்டி விட, அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு " ஏம்மா என்னை பாவம் பண்ண வைக்கிற " என்று தினேஷ் கண் கலங்குவதும். அதற்கு அம்மா "நீ ஏன்ப்பா அழுற நானா உன்னை அடிச்சேன். நீ தான என்னை அடிச்ச" என்று கேட்கும் போது நாமும் பதறி விடுகிறோம்.
ஒரு விஷயம் எனக்கு நெருடலாய் இருந்தது. வயதின் முதிர்ச்சியும் பிரச்னைகளின் அழுத்தமும் காரணமாகி வரும் மெல்லிய மன நோயை குணப்படுத்த வைத்திருக்கும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் எல்லாம் முற்றிய மன நோய் உடையவர்களாகக் காண்பித்திருப்பது தான் அந்த நெருடல்.
தந்தை இல்லாத தினேஷ் தன் குடிகார அண்ணனிடம் "வாப்பா போப்பா" என்று பேசுவது அவ்வளவு பாந்தமாக இருக்கிறது.
இது ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையில் எடுத்த படம் என்கிறார்கள் முடிவில். அது மட்டுமல்லாது கல்கத்தாவிற்கு போய் விட்ட பேபி அம்மாவை கண்டு பிடிக்க உதவும் எக்ஸ் மிலிட்டரி மேன் பாத்திரத்தில் நிஜத்தில் உதவியவரையே நடிக்க வைத்திருக்கிறார்கள்.
நம்மை பெற்றவர்களை இறந்த பிறகு அப்படி கவனிச்சிருக்கணும் இப்படி கவனிச்சிருக்கணும்னு சொல்வதை விட்டு இருக்கும் போதே நல்லா பார்த்துக்கணும்னு நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல படம். Don't miss it.
திரைப்படத்தை பார்க்க தூண்டியது தங்கள் விமர்சனம்
ReplyDelete