Bio Data !!

03 October, 2024

#திரைப்படம் JUNA FURNITURE நேற்று "உலக முதியவர்கள் தினம்" அதை முன்னிட்டு எழுத வேண்டிய பதிவு கொஞ்சம் தாமதமாக. மலையாளப் படங்களைப் போலவே மராத்தி படங்களும் விரிந்த கதைக்களம் கொண்டவை. சமீபத்தில் அமேசான் ப்ரைமில் நான் பார்த்த " JUNA FURNITURE" முதியவர்களிடம் , நாம் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவர்களாக நடப்பதைக் கண்டிக்கும், கடிந்து காட்டும் படமாக இருந்தது. இயக்குநர் : மகேஷ் மஞ்சுரேக்கர். கோவிந்த் பதக் ( மகேஷ் மஞ்சுரேக்கர்) அறிமுகமாகும் போதே அவர் குண நலன், நமக்கு தெரிந்து விடுகிறது. சந்தையில் துணிச்சலாக ஒரு ரௌடியை எதிர்க்கிறார். வீட்டில் மனைவியுடன் ( மனைவியாக மேத்தா மஞ்சுரேக்கர்) அந்நியோன்யமாக குடும்பம் நடத்துகிறார். தன் ஒரே மகனை பலவித சிரமங்களுக்கு மத்தியில் படிக்க வைத்து ஐஏஎஸ் அதிகாரி ஆக்குகிறார். மகனோ ஒரு பணக்கார வீட்டிப் பெண்ணை திருமணம் முடித்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடுகிறான். திடீரென்று மனைவி உடல் நலமில்லாமல் போக, தன் திருமண நாள் பார்ட்டியை, தன் பெற்றோரை அழைக்காமல் பெரிய பெரிய விஐபிக்களோடு கொண்டாடிக் கொண்டு இருக்கும் மகனைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. அன்றே மனைவி இறந்து விடுகிறார்கள். தன் மகனின் அலட்சியத்தால் தான் தன் மனைவி இறந்து விட்டார்கள் , தொடர்பு கொண்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கோர்ட்டில் ஒரு பெரிய தொகை ( பெரிய தொகைன்னா அப்படி இப்படி இல்லை ஜென்டில்மென் நாலே முக்கால் சொச்சம் கோடி) கேட்டு வாதாடுகிறார். அதன் பின் தான் விறுவிறுப்பான கோர்ட் காட்சிகள். எல்லா பெற்றோரும் தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்று சுலபமாக கடந்து போக முடியாது.எல்லாவற்றிற்கும் மேலானதாக top most priority குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கிறார்கள். பதிலாக தன்னைச் சார்ந்து இருக்கும் பெற்றோருக்கு least most priority தான் தருகிறார்கள். எவ்வளவு வேதனை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நெருப்பாற்றில் நீந்தித் தான் தன் பிள்ளைகளை கரை சேர்க்கிறார்கள். ஆனால் கரை சேர்ந்த பிள்ளைகள் தமக்குப் பின்னால் கரை சேர எத்தனிக்கும் பெற்றோருக்கு கை கொடுப்பதில்லை. காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டு அடுக்கப்பட்டு இருக்கின்றன. இசைக்கு அதிகம் வேலை இல்லை. அப்படியே நடனத்துக்கும். ஸ்டன்ட்டுக்கும். இதனாலேயே நம் மொழியில் இது போன்ற கதைக் களன்களை சிந்திக்கத் தயங்குகிறார்களோ. படத்தை முழுவதும் சொல்லிட்டீங்களேன்னு சொல்லாதீங்க. கோர்ட் நிகழ்வுகளும், கடைசியில் வரும் திருப்பமும் கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒன்று. தவறாமல் பார்க்க வேண்டிய படம். ( பதிவு கொஞ்சம் நீளம் தான். ஆனால் வாசிக்க எளிதாக் தான் இருக்கும். கண்டிப்பாக தவற விடாதீர்கள்)

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!