Bio Data !!

06 February, 2026

தற்பொழுது அரசியலில் முக்கியமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு விஷயத்துக்கு லேசாக தொடர்புடைய ஒரு வெப் சீரீஸ் "குற்றம் புரிந்தவன்" சோனி லைவ்வில். ஏழு எபிஸோடுகள். இயக்கியவர் : செல்வமணி முனியப்பன். பசுபதி, விதார்த் ஆகியோர் முக்கியமான கதா பாத்திரங்களில். பசுபதி வைத்திருக்கும் விக் மிக இயல்பாக அவருக்குப் பொருந்துகிறது. பசுபதி, லட்சுமி பிரியா, லிஸி ஆன்டனி மூன்று பேருக்கும் நடிப்பில் கடும் போட்டி. விதார்த் நன்றாக நடித்திருந்தாலும் இவர்கள் அளவுக்கு வாய்ப்புகள் இல்லை. மருத்துவமனையில் மருந்தாளராக பணி புரிபவர் பாஸ்கரன் ( பசுபதி) அவர் மகள் இறந்து போன நிலையில் மருமகனும் இல்லாமல் போக நோய்வாய்ப்பட்ட பேரன் பாஸ்கரன் தம்பதியர் பொறுப்பில். அவர்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் எஸ்தரின் குழந்தை காணாமல் போக கதை வேகமெடுக்கிறது. எதிர்பாராத எத்தனையோ திருப்பங்கள். பேரனாக வரும் குழந்தை தன் தந்தையுடன் யூட்யூபில் நடிப்பவர். தன் கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து முகத்தில் பாவனை காட்டி இருக்கிறது. சோதனைகள் பல திசைகளில் தாக்குதல் நடத்தும் போது ஒரு நல்ல மனிதன் கூட தடம் புரள நேரிடுகிறது என்பதைக் காட்டுகிறது. கொஞ்சம் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பார்க்க வேண்டிய சீரீஸ்.