Bio Data !!

19 February, 2026

நாவல் : குட்டிமா. ஆசிரியர் : அராத்து Auto narrative Publishing விலை 500/- ரூபாய். முதல் பதிப்பு : ஜனவரி 2026 சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நாவலின் ஆசிரியரைப் பார்த்து ஒரு ஆணாதிக்கவாதி. பெண்களை மதிக்காதவர் என்ற கருத்துக் கொண்டிருந்தேன். அதனாலேயே பெண்களைப் பற்றி என்ன எழுதி இருக்கிறார் பார்க்க வேண்டும் என்று தான் புத்தகத்தை வாங்கினேன். பெண்கள் தாமே தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு கிடப்பதைப் பார்த்த ஆதங்கம் தான் எழுத்தில் வெளிப்படுகிறது. கொஞ்சம் "ரா" வாகத் தான் எழுத்து இருக்கிறது. ஆனால் நான் பதின்ம வயதிலிருந்தே ஆங்கில நாவல்கள் வாசித்துப் பழக்கப்பட்டவள் என்பதால் என்னைத் தயார்படுத்திக் கொண்டு தான் வாசிக்கத் தொடங்கினேன். , ஆரம்பமே பதை பதைக்க வைக்கிறது. கதை நாயகி சிந்துவின் ( இரண்டு கால்களையும் விபத்தில் இழந்த) தகப்பன் தன் மனைவியுடன் உடையின்றி இயங்கிக் கொண்டிருப்பதை சிந்து பார்த்து விடுகிறாள். ச்சீ!! இதையெல்லாம் எப்படி வாசிக்கிறது என்பவர்கள் இந்த இடத்தில் நகர்ந்து விடலாம். பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவளோடு உறவு கொண்டு விடலாம். ஆணுக்குத் தான் அது சிரமம் என்று நினைத்திருந்த என் நம்பிக்கையை தவிடு பொடியாக்கியது இந்த நாவல். ஒரு பெண் ஆரோக்கியமான திருமண வாழ்வு நடத்த அவளுக்கு அதிர்ச்சி தராத நியாயமான பால்யமும், பதின்ம காலமும் அத்தியாவசியம் என்பதைப் புரிய வைக்கத் தான் அந்த முதல் காட்சி. "அழகுப் பெண்கள் அடங்கி இருந்தால் ஆண்களுக்குத் தேவி. அந்தப் பெண்கள் சுதந்திரமாக பேச ஆரம்பித்தாலே காளி" வஞ்சி என்ற மிகத் தைர்யமான கதா பாத்திரம். தன் எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்கள் தேவை இல்லை. செக்சுவல் ஃபீலிங்குக்கு மட்டுமே தேவை" என்று மாத்தி யோசிப்பவள். எமோஷனல் ஃபீலிங்குக்கு ஆண்களைச் சார்ந்த பெண்கள் தானே ஏமாந்து போய் மரண வேதனை அனுபவிக்கிறார்கள். தேவைக்கும் அதிகமாய் பண வசதி கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தில் ஒரே நேரத்தில் நான்கைந்து ஆண்களை தன்னைச் சீராட்ட அமர்த்திக் கொள்கிறாள் வஞ்சி. இதைத் தான் மாத்தி யோசிப்பவள் என்றேன். ஆசிரியர் , ஒரு ஆண் தன் பண பலத்தாலேயே பல பெண்களோடு உல்லாசமாய் இருப்பதை ரசிக்கிறீர்களே அதை வஞ்சி வழியாக மாத்தி யோசித்தால் உங்களுக்கு எவ்வளவு ஏற்பற்றதாய் இருக்கிறது என்று "ரா" வாக உணர்த்துகிறார். வீணா என்றொரு கதாபாத்திரம். இவள் சிந்துவுக்கும் வஞ்சிக்கும் நடுவாந்தரமாக இருப்பாள். வீணாவை வைப் ஒரு தேவதையைப் போல் பார்த்துக் கொள்வான். ஆனால் அவளாக ஆசை வந்து அந்தரங்கமாக தொட்டால் வெறி வந்தவன் போல் கத்துவான். அவனுக்கு இருக்கும் உடல் குறை மாத்திரை போட்டு நிவர்த்தி செய்து கொள்வதால் அவன் முடிவு செய்யும் போது தான் வீணாவை ஆராதிப்பான். வீணா வஞ்சியிடம் "தன் தூய்மையான தெய்வீகமான காதல் கதை" யை விளக்கிச் சொலறப்போ அடப் போங்கப்பா "எல்லா காதல் கதையும் தெய்வீகமானது தான்" என்று தலையிலடித்துக் கொள்ளத் தோன்றியது் ஆசிரியர் ஆணாதிக்கவாதியோன்னு நினைச்சு வாசிக்கத் தொடங்கின கதை முடிக்கும் போது பெண்ணியவாதியோன்னு ஆகிடுச்சு. ஏன் சார் ரெண்டுக்கும் நடுவுல வாழ வழியிருக்குதா? சுரேந்தர் சிந்துவிடமும், முரளி வீணாவிடமும் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது "இப்படித்தானே ஒரு சில ஆண்கள் கணிக்கப்பட்ட காய் நகர்த்துதலில் பெண்களை வீழ்த்துகிறார்கள் என்று தோன்றியது. ரசித்த வரிகளில் ஒரு சிலவற்றை குறிப்பிடுகிறேன். " நாவல் முழுவதும் வாக்கியங்களும் வார்த்தைகளும் நாக்குப் பூச்சிகள் போல நெளிந்து கொண்டே இருந்தன." " அழகு என்பது புற அழகு மட்டுமல்ல. உள்ளிருந்து பெருகும் அழகும் புறத் தோற்றத்தில் அழகுறக் கலந்து ஒட்டு மொத்த அழகும் ஒளிர்ந்து மிளிர வேண்டும்" "மேட்டர் மேட்டர் என மேட்டர் ஒரு மேட்டரே இல்லை என்று ஆன பின் தான் அனைத்து விஷயங்களிலும் கருத்து மோதல் வரும்" பெண் மென்மையாகத் தான் புணர வேண்டும் என்று ஆண்கள் நினைப்பதாக ஒரு இடத்தில் வருகிறது. பெண் என்று பொதுமைப்படுத்துவதை விட "தன்" மனைவி, "தன் " கதை நாயகி, "தன்" ஆதர்ஷ மனுஷி என ஒரு சிலரை மட்டுமே இந்த வரையறைக்குள் அடைக்கிறது ஆண் மனம். காமத்துக்காக பணம் கொடுத்து செல்லும் பெண் இந்த வரையறைக்குள் வருவாளா? இல்லையே? ஒரு வித்தியாசமான நாவல் வாசித்த திருப்தியோடு முடித்தேன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!