Bio Data !!

Showing posts with label திரைப்பட விமர்சனம். Show all posts
Showing posts with label திரைப்பட விமர்சனம். Show all posts

25 December, 2011

ராஜ பாட்டை - திரை விமர்சனம் .


நானும் பார்த்தேன் ராஜ பாட்டை.
பண்டிகைக்கு எல்லோரும் சேர்ந்ததனால் நல்ல ஒரு படம் பார்ப்போம்(!) என்ற ஆசையில், தெய்வத் திருமகள் தந்த மயக்கம் இன்னும் முழுவதுமாக போகாத நிலையில் "ராஜ பாட்டை"யை தேர்ந்தெடுத்தோம்.
ஆக மோசமான ஒரு முடிவு.
இதுவே போதும் என நினைக்கிறேன் படத்தை விமர்சனம் செய்வதற்கு.
படம் ரிலீஸ் ஆன வெள்ளிக்கிழமை அன்றைக்கே படத்தின் டிக்கெட் ரேட் பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.

 இயக்குனர் :சுசீந்திரன்
நடிகர் : விக்ரம்
நடிகைகள்: ஸ்ரேயா, ரீமாசென்
என எதிர்பார்ப்புகள் கூடி இருந்தது.

படம் முடிந்து வணக்கம் போட்டுட்டாங்க இன்னும் ஸ்ரேயா, ரீமாசென்னை காணோமேனு பார்த்தா ஒரு சைட்ல பெயர்கள் ஓடுது அடுத்த  சைட்ல பிகர்கள் (ச்சே !சிபி பதிவுகள் வாசிப்பதன் பாதிப்பு) ஆடுது.  அவ்வளவு தாங்க அவர்கள் இருவரின் பங்கு.

விக்ரம் "தெய்வத் திருமகள்"க்காக உடம்பை வருத்தியதன் பாதிப்பு இதில் அதிகம் தெரிகிறது. முகத்தில் கவர்ச்சி குறைந்து இருக்கிறது. நடிப்பில் கவர்ச்சி குறைந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே பாடலில் பதினெட்டு விதமான கெட் அப்பில் வருகிறார். ஆனாலும் பிரயோஜனமில்லை பல கெட் அப்புகளில் அவர் தான் விக்ரம் என்று கண்டுபிடிப்பதற்குள் காணாமல் போய்
 விடுகிறார். ஒரே அடி தடி ரகளை. எதற்காக இப்படி ஒரு கதைக்கு விக்ரமை தேர்ந்தெடுத்தார் இயக்குனர்? விடை தெரியாத கேள்வி.

"வெண்ணிலா கபடிக் குழு" "அழகர்சாமியின் குதிரை" போன்ற அருமையான படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரனின் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்ட விக்ரமைப் போலவே நாமும் ஏமாந்தோம். எடுக்கப் பட்ட கதைக் கரு அருமையான ஒன்று. நில அபகரிப்பு ! புகுந்து விளையாடக் கூடிய கதைக் களம். வில்லியாக வரக் கூடிய அரசியல்வாதி "அக்கா" அருமையான தேர்வு. ஒரு முக்கியமான பாத்திரத்தில் கே. விஸ்வநாத். இவ்வளவு இருந்தும் .......


கே. விஸ்வநாத் தனக்கு நகைச்சுவையிலும் கலக்கத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். ஹீரோயினை வசப்படுத்த ஹீரோவுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும் சிரிக்க வைக்கின்றன. இதற்காகவே இளைஞர்கள் ஒரு வேளை  பார்க்கலாம். திரைப்படங்களில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதாக தெரியவில்லை. இயக்குனராக வரும் தம்பித்துரை தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். முதியவர் என்று மதிக்காமல் நடத்துவதும், அதற்காக விக்ரம் அவருக்கு 300  கோடி சொத்து வரப் போவதாக பொய் சொன்னதும்  , அதன் பின் குழைய ஆரம்பிப்பதுமாக நன்றாக நடித்திருக்கிறார்.


ஹீரோயின் தீக்க்ஷா சேத். இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்று தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல் தெரிகிறது. உணர்வுகள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிந்து விடக் கூடாதென்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் இயக்குனருக்கு பிடித்த(!?!), வித்தியாசமான நீல நிறத்தில் உடை உடுத்தும் போது சிறப்பாக தெரிகிறார். இதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பாரோ இயக்குனர் தெரியவில்லை.

இசை யுவன் சங்கர் ராஜாவாம்!!
அடிதடி படங்களுக்கு என ஒரு கூட்டம் அடியாட்களை ( அவர்களுக்கு எண்ணை செலவும் இல்லை மேக் அப்  செலவும் இல்லை ) விடும் பழக்கத்துக்கு யாராவது போர்க்கொடி  உயர்த்தினால் தேவலை.
கொஞ்ச நேரம் நகைச்சுவையை ரசிக்க மட்டுமே நினைத்தால் படத்துக்கு  போகலாம் .

17 July, 2011

தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்

விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு முகம் எடுக்கிறார்.
இதில் அப்பாவி, மன வளர்ச்சி குன்றியவர் முகம்.
பெயர் போடும் போது வலைப்பதிவர் அஜயன் பாலாவுக்கு நன்றி போடுகிறார்கள் அவர் பங்கு     இதில் என்ன  என்று கேட்க வேண்டும்
முதல் சீனில் ஓடி வரும் விக்ரம் அடி பட்டு கீழே விழுவதும், அவரைத்தாண்டி, 'மன நலம் மிகுந்தவர்கள்' சட்டை செய்யாமல் செல்வதும்,
சிறிது  நலமாகி  எழுந்து  செல்லும் விக்ரம்  அடிபட்டு  கீழே கிடக்கும்  மற்றவனுக்கு  உதவி  செய்வதும், வீணாகச் செல்லும் தண்ணீர் குழாயை அடைப்பதும் , ஒரு ஆள் கூட  இல்லாத சிக்னலில் பச்சை விளக்கு எரியும் வரை நின்று செல்வதும், மன நலம் குன்றியது விக்ரமா அவரைச் சுற்றியுள்ளவர்களா என யோசிக்க வைக்கிறது

அங்கேயே டாப் கியரில் தொடங்கும் டைரக்டர் விஜய் இறுதி வரை அந்த வேகம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் .
இரண்டு பாடல்கள் விக்ரம் தன் சொந்த குரலில் பாடி இருந்தாலும் "ப பா ப பா வருதே எனக்கு பாப்பா" பாடலில் நல்ல உணர்வு கொண்டு வந்திருக்கிறார்.


அடுத்து சின்ன பொண்ணு சாரா. பேபி அஞ்சு, பேபி ஷாலினி போன்ற சில செல்லக் குழந்தைகள் திகட்ட திகட்ட அத்தனை பேரையும் பேச வைத்திருக்கும் அந்த வரிசையில் சாராவும் வருவார். துல்லியமான உணர்வுகளை புரிந்து வெளிக் கொணர்ந்திருக்கிறார்.  அவள் தந்தையிடம் காட்டும் பாசம் எந்தத் தந்தைக்கும் தனக்கு அப்படி ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையை துளிர்க்க வைக்கும். கோர்ட்டில் நாசர் வாதாடிக் கொண்டிருக்க கூண்டுக்குள் இருந்து தந்தையும், தூரத்தில் இருந்து மகளுமாக சைகை மூலம் சமாதானம் ஆகிக் கொள்வது ரசிக்க வைக்கிறது.

அனுஷ்கா  எனக்கு மிகவும் பிடித்த நடிகை. பெரிய பொட்டும், நீள கூந்தலுமாக அருந்ததி அளவு வேறு எந்த படத்திலும் மிரட்டவில்லை என்றாலும் கோர்ட்டில் வாதாடும் போது மறைந்த சுஜாதாவின் 'விதி' யை நினைவூட்டுகிறார். படத்தின் ஆரம்பத்தில் விக்ரமிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதும், அதே நேரம் சந்தானத்தை கோபப்பார்வை பார்க்கும் போதும் அவர் முகத்தில் பல வித பாவனைகள் நர்த்தனம் ஆடுகின்றன. கிடைத்த பாலை சிக்ஸர் அடிக்காம விடுவதில்லை. ஊரின் மிகப் பெரிய ஒரு வக்கீலை கதாநாயகி என்ற காரணத்தாலேயே வென்று விடுவதாக காட்டாமல் அந்தக் கூட்டத்தின் ஒரு 'வெள்ளை ஆடு' வெற்றிக்கு உதவுவதாக காட்டுவதில் இயக்குனர் யதார்த்தத்துக்கு முயற்சி செய்வது தெரிகிறது. இருந்தாலும் இடி க்கு பயந்து
 அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் காதல் தோன்றி கனவுப் பாட்டு போட்டு அதை சரி செய்து விடுவது தான் உறுத்தல்.

இந்த படத்தை பெண்களே இல்லாமல் ஒரு புது விதமாக முயற்சி செய்து பார்த்திருக்கலாம். தமிழ் நாட்டு ஆண்கள் மேல் இயக்குனர்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை என நினைக்கிறேன். மதராச பட்டினம் என்னும் ஓவியத்தை  படைத்த இயக்குனர் விஜய் இதில் ஒரு நவீனம் படைத்திருக்கிறார். பாராட்டுக்கள் விஜய் புது புது முயற்சிகளுக்கு!!
கேமரா உறுத்தல் இல்லாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது.
'மேலே சொல்லு' னு சொல்றீங்களா,
இன்னும் படம் பார்க்கலைனா உடனே கண்டிப்பா 'தியேட்டரில் ' சென்று பாருங்கள்.
பார்த்தாச்சுன்னா இன்னும் ஒரு ஒருமுறை பாருங்கள், நாம் கவனிக்காத விஷயங்கள் கண்ணில் படும், நல்ல முயற்சிகளுக்கு நாம் செய்யும் பதில் மரியாதை இது தானே ?

02 January, 2011

திரை விமர்சனம் - மன் மதன் அம்பு

யார் சொல்லப் போகிறீர்கள் கமலிடம் நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் 'சூப்பர்'  என்று சொல்வோம் என்று இன்னும் எத்தனை நாள் எண்ணிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்.

த்ரிஷா போன்ற சின்னப் பொண்ணை ஜோடியாய்ப் போடுவானேன் அவள் அருகில் தான் ரொம்ப வயதானவனாய்த் தோன்றி விடுவோமோ என்று லாங் ஷாட் வைப்பானேன். நான் இறுதிக் காட்சியில் கப்பலில் புள்ளியாய் இருவரும் தெரிவதை சொன்னேன்.

த்ரிஷா ரொம்ப underplay . அது சில இடங்களில் நடிப்புக்கு சிறிதும்  சிரத்தை எடுக்காதது போல் தோன்றி விடுகிறது. ஆனால் ஒரு ரகசியம் தெரியாவிட்டால் தலை விக்ரமாதித்தன் கதையில் வருவது போல் வெடித்து விடும் போல் இருக்கிறது. இந்த ஜீரோ சைஸ் இத்தனை வருடங்கள் எப்படி மாறாமல் வைத்து இருக்க முடிகிறது.

மாதவன் சந்தேகப் படும் கணவன் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதை, தான் நம்புவதை நடப்பதாக சொல்லும் வரை தான் நம்பப் போவதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக  நன்கு  செய்திருக்கிறார். இருந்தாலும் அவரது பாத்திரப் படைப்பு கொஞ்சம் கவனக் குறைவாகத் தான் படைக்கப் பட்டு இருக்கிறது.

பெண்களில் நகைச்சுவை சிறப்பாக செய்யும் ஊர்வசியை அநியாயத்துக்கு இப்படி ஒரு அழுமூஞ்சியாக காட்டி இருப்பது கண்டனத்துக்கு உரியது. கிடைத்த கேப் இல் அலை பேசியில் தன் தாலியை தட்டிக் காட்டி தன் கணவன் பிழைத்து விட்டான் என்பதை உணர்த்தும் இடம் சிறப்பு.

இப்படி எல்லாம் இருந்தும் படத்தில் என்னைக் கவர்ந்த ஒருவர் உண்டு. கமல் ? ம்ம்ஹும் இல்லை சங்கீதா. படம் தொடங்கும் பொழுதில் இருந்து முடியும் வரையில் தன் கதாப் பாத்திரம் இது தான் என்பதை அழுத்தமாக பதிய வைக்கிறார். கொஞ்சம் புத்திசாலித் தனம் குறைந்த பெண் என்பதை "சூப்பர் ஜீவனாம்சம் " என்பதில் காட்டுவதில் தொடங்கி படம் இறுதியில் மயங்கி விழும் வரை குரல் , நடை, உடை பார்வை என ஒவ்வொன்றிலும் அவர் முயற்சி சிறப்பு. இந்தப் பெண்ணுக்கு ஏற்ற தீனி கொடுக்கும் கதைப் பாத்திரம் யார் கையில் இருக்கிறது

காதல் மன்னன் கமலிடம் காதல் இன்னும் பாக்கி இருக்கிறது என்பதை சொல்லும் சில இடங்கள். அடல்ட்ஸ் ஒன்லி ஷோ பார்க்கும் இடத்தில் இருக்கையின் கம்பிகளுக்கு மேலும் கீழுமாக பார்வையை மாற்றி மாற்றி த்ரிஷாவிடம் செலுத்தும் இடமும், பதில் பார்வை அதே போல் மேலும் கீழுமாக மாறி மாறி வருவதும். கொடிது கொடிது வயதின் முதிர்ச்சி கொடிது. திரைப்படத்தின் இறுதி காட்சியில் காதல் கொப்பளிக்க கமல் பார்க்கும் பார்வை முப்பது ஆண்டுகளுக்கு முந்திய அதே பார்வை. அதை கண் இரைப்பைகளின் வீக்கம் அதன் பவர் குறைக்கிறது. ஆனால் உங்கள் முப்பது வயதில் பார்த்த பார்வையை பார்த்தவர்களுக்கு அந்த கண்களின் கூர்மை நினைவூட்டியது.

அதே அடல்ட்ஸ் ஒன்லி ஷோ முடிந்து வெளியே வரும் த்ரிஷா பார்க்கும் பார்வை "என்னை பின் தொடர்ந்து வா " என சொல்ல டிவி திரையில் நடனம் ஆடும் பெண்களும் இசைக்கு ஏற்றவாறு "பின் செல்" எனச் சொல்லும் இடம் சொல்லியது கதா நாயகனோ, இயக்குனரோ, துணை இயக்குனரோ யாரை இருந்தாலும் ஒரு பாராட்டு.

ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு பாராட்டு.
தேவி ஸ்ரீப்ரசாத் இசையில் ஒரு சில பாட்டுக்களில் கலக்கி இருக்கிறார். கமலும் த்ரிஷாவும் கப்பலில் கவிதை சொல்லும் இடம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது படத்தின் நடுவில் வந்திருந்தால். கமலின் படத்தை இசை அமைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரின் படத்தின் வசனங்கள் சில இடங்களில் மிகச் சிறப்பாக அமையும். அந்த இடங்களில் இசையை குறித்தோ, முழுவதுமாக நீக்கியோ உதவி செய்தால் அந்த வசனங்களில் நகைச்சுவையும், சிறப்பும் அனவைரும் ரசிக்கும் படி இருக்கும்.

படத்தின் அத்தனை குறைகளையும் சொல்லியும் விகடனில் மதிப்பெண்கள் ஏன் 40 ?
தைரியமாக விமர்சனம் செய்யுங்கள் அது கலையின் உச்சத்தை அடைந்தவர்களுக்கு சில நேரம் ஏற்படும் தொய்வை சரி செய்யும்.

எதிர்பார்ப்பில்லாத ஏமாற்றத்தை விட எதிர்ப்பார்த்து ஏமாறும் வலி அதிகம். அந்த வலியை இனி கொடுக்காமல் இருக்கப் பாருங்கள் கமல். யாரும் சொல்லா விடினும் நானே சொல்லி விடுகிறேன்
"நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் 'சூப்பர்'  என்று சொல்வோம் என்று இன்னும் எத்தனை நாள் எண்ணிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்."

19 December, 2010

ஈசன்!

நெல்லையில் புதிப்பிக்கப்பட்ட 'ரத்னா' திரை அரங்கம் .
திரைப்படம் : ஈசன்.
திரை அரங்கத்தில் நுழைந்து  "கூட்டத்தைப்" பார்த்ததும் ஒரு 'திக்'.
இனிய ஞாயிறு வீணாய்ப் போகுமோ? 
படம் வந்து அதிக  நாள் ஆகலியே , கூட்டம் இன்னும் அதிகமா இருக்கணுமே என்று எண்ணிய படியே அரங்கத்தினுள் நுழைந்தேன். 

பாட்டுடனே படம் ஆரம்பம். இந்த மாதிரி பாட்டோட படம் ஆரம்பித்தாலே பிடிக்க மாட்டேங்குது. ஆனால் அந்த பாடல் நடைபெறும் பப் தான் படத்தின் 'கோர் ' என்பது போக போகத்தான் புரியுது.

தன் நண்பன் சமுத்திரக்கனியை காவல்துறை அதிகாரியாக்கி அழகு பார்த்திருக்கிறார் சசிகுமார்.  பொருத்தமான உடல் வாகு சமுத்திரக்கனிக்கு. காவல் அதிகாரிகள் ஜிம்முக்கு போய் கட்டுக்கோப்பாய் உடலை வைத்திருப்பது பார்க்க அழகாத்தான் இருக்கிறது. கமிஷனரிடம்"லவ் பண்ணி போட்ட டிரஸ் சார் இது" என சமுத்திரக்கனி சொன்னதும் "இந்தக் கரை வேட்டி போனா இன்னொரு கரை வேட்டி. சலாம் போட கத்துக்கோ. " என்கிறார். அதில் அரசியல் வாதிகளுக்கு சலாம் போட வேண்டிய காவல் துறையின் வேதனை இழையோடுகிறது. சமுத்திரக்கனி இன்னும் கொஞ்சம் மிடுக்கைக் காட்டி இருக்கலாம் என்பது என் எண்ணம்.  

படத்தின் முதல் பாதி 'நீதி போதனை கதைகள்' புத்தகம் படிப்பது போல்  இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் செய்தித்தாளில் ஏற்கனவே பார்த்த செய்திகளை நினைவூட்டுவது போலவே இருக்கின்றன. இன்டர்வெல்லில் "இந்த அபிநயாப் பொண்ணுக்காக படம் பார்க்க வந்தேன்,பொன்னான நேரத்தை வீண் செய்திட்டேன் போலிருக்கே" என்றேன். இன்டர்வெல் வரை அபிநயாவைக் கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார்கள். என் மகள் " தலை (சசிகுமாருக்கு அவள் கொடுத்த பெயர்) ஏமாத்த மாட்டார் பாப்போம் " என்றாள்.  என் அருகில் இருந்த பெண் " என்ன சொல்ல வர்றாங்கன்னே புரிய மாடேங்குதே" என்றாள். இப்படியாக இடைவேளை இனிதே வந்தது.

சும்மா சொல்லக் கூடாது இடைவேளைக்கு அப்பறம் அரங்கம் அமைதி காத்தது. ஈசனூர் - சிவகங்கை மாவட்டம் என்ற பின் குறிப்புடன் அழகழகான இயற்கைக் காட்சிகள். அம்மா இல்லாமல் இருந்தாலும் தந்தையின் அரவணைப்புடன் கூடிய அழகான குடும்பம். என்று தொடங்கி நகரத் தொடங்கிய கதை அழகு. 

நகர வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கும் நண்பனிடம் " நகரத்தில உதவி கேட்டா ஒவ்வொருத்தரும் ஒதுங்கிக்கிறாங்க. ஒருத்தர் முகத்தில கூட சிரிப்பைக் காணோம்" என்று அபிநயாவின் அப்பாவாக வரும் (மலையாள இயக்குனர்) நபர்  கேட்க " இன்னம் கொஞ்ச நாளில உங்களுக்கு இதெல்லாம் பழகிடும். அப்பறம் உங்க முகத்திலையும் சிரிப்பை பார்க்க முடியாது" என்கிறார். பின்னால் வரப் போவதை முன்னாடியே உணர்த்திய வசனம். 

அபினவ் வருகிறார். நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக சொல்லும் படி எதுவும் இல்லை.
அமைச்சராக வரும் A .L . அழகப்பன் அம்சமாக பாத்திரத்தில் பொருந்துகிறார். அவர் மனைவியாக வருபவர் துளசி தானே? 
அபிநயா தான் யார் என்று அறிமுகப் படுத்தும் கட்டத்தில் "Poornima, the silence speaker"
என்கிறார். தான் வாய் பேச முடியாதவள் என்று சொல்ல "மௌன மொழி பேசுபவள்" என்பது ரசிக்க வைத்தது. 
அபிநயாவின் தம்பியாக வரும் துஷ்யந்த் சரியான தேர்வு. 
சுப்ரமணியபுரத்தில் மைனராக வருபவர் அமைச்சரின் அந்தரங்க சேவகனாக தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். 
பாடல்கள் ஜேம்ஸ் வசந்தன். இசைத்திருக்கிறார். கடற்கரையில்  ஆஜானுபாகுவான அந்த பெண்ணின் பாடலும் பாடல் சார்ந்த நடனமும் வித்தியாசமாக இருந்தது. 

உதவி செய்பவன் மேல் உடனடிக் காதல். இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படி காட்ட போகிறார்களோ என்று வேதனையாக இருக்கிறது . எனக்கு ஒரு சந்தேகம். இப்படி காதலிக்க ஆரம்பித்த பின் இன்னொருவன்  வந்து உதவி செய்தால் என்ன செய்வார்கள் .

சசிகுமாரிடம்  ஒரு கேள்வி. 'சுப்ரமணிபுரத்தில்'  இருந்த வேகம் இதில் குறைகிறதே ஏன்?
முதல் பாதியில் நகைச்சுவையை அதிகரித்திருந்தால் கதை பாலன்ஸ் ஆகி இருக்குமே. வெற்றியை பற்றிய பயம் கவனத்தை சிதைத்து விட்டதா? இன்னும் சிறப்பான பல திரைப்படங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சசிகுமார். 

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டவில்லை என்றாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியைக் கொடுத்தது ஈசன்

12 September, 2010

பாஸ் (எ) பாஸ்கரன்


                                                                                            
"ஹல்லோ!! என்ன பாஸ்!!"
"**********"
"படித்த புத்தகம் பற்றிய பதிவா?"
"**********"
"அடுத்த போஸ்ட் அது தான் பாஸ், கொஞ்சம் பிஸி "
"********"
"என்ன பிஸியா ?ஹி!! ஹி!!பாஸ் (எ) பாஸ்கரன் பார்க்க போயிட்டேன்  பாஸ்" 
ஆமாங்க !!உலக வரலாற்றில் முதல் முறையாக  பாஸ் (எ) பாஸ்கரன் படம் வந்த ரெண்டாம் நாளே பார்த்து விட்டேன். 
படம் சூப்பருங்க. !!!
கடிகார முள் சுற்ற சுற்ற, படத்தில் உள்ளவங்க பெயர் வரும் போதே படம் வித்தியாசமா இருக்கப் போகுதுன்னு பட்சி சொல்லிருச்சு. 
அட ! ஆர்யா என்ட்ரி சீனுக்கு விசில் தூள் பறந்தது. அதுவும் ,
"பாசு, பாசு, பாசு 
என் பேரக் கேளு பாசு" பாட்டில யுவன் இசையும், முத்துக் குமாரின் பாடல் வரிகளும், ஆர்யாவின் நடனமும் ரசிகர்களின் விசிலும் சேர்ந்து பட்டையைக் கிளப்புச்சு போங்க. 
என் உடன் வந்த எங்க அம்மா படம் பார்க்க விட மாட்டாங்க போலிருக்கே ன்னாங்க.ஆனா கொஞ்ச நேரத்தில அரங்கம் அமைதி ஆகி விட்டது. 

ஆர்யாவுக்கு மதராசப் பட்டணத்துக்கு அப்பறம் மௌசு கூடிட்டுதுன்னு நினைக்கிறேன். பட்சி இன்னும் ஒண்ணும் சொல்லுச்சு. ஆர்யா டாப் லிஸ்ட்ல வர்ற நாள் இன்னும் அதிக தூரத்தில் இல்லை. வரிசையா மூணு படம் சூப்பர் டூப்பர் ஹிட்.(மூணாவது எந்த படமா? இது தாங்க அது)

நயன்தாரா ! ரஜினி கூடவும் சரத் கூடவும் நடித்த பப்ளிமாஸ் நயன் தானா இது? ஒரு சுத்து மெலியும் போது சின்ன புள்ளைங்களுக்கு ஜோடியா நல்லா இருந்தது.ஆனா இப்போ ? ஆனாலும் அந்தச் சிரிப்பு மட்டும் அழகு குறையாமல். ரொம்ப மெலிந்ததால் இயக்குனருக்கு அமலா நினைவுக்கு வந்து விட்டார் போல, அதனால் சத்யாவின் "வளை ஓசை" பாடல் ஒரு 'இடை' செருகல். 

படத்துக்கு வருவோம். வேலை வெட்டி இல்லாத வெட்டிப் பய ரோல நன்கு உணர்ந்து நடிச்சிருக்கார்  ஆர்யா. நயனைக் கை பிடிக்க அண்ணி போடும் கண்டிஷனுக்காக வீட்டை விட்டு வெளியேறி கஷ்டப்பட்டாலும் "சினிமாக் கதாநாயகன் எப்படியும் ஆறே மாதத்தில் அம்பானி ஆகி விடுவான் " ஆதலால் ஆர்யாவின் மேல் இரக்கம் வரவே இல்லை.

ஆர்யாவின் அண்ணா,  தொலைகாட்சி தொடர்களில்  வில்லனாக வந்தவர், அண்ணியும் அப்படித்தான். அழகும் இயல்பான நடிப்புமாக அசத்துகிறார்கள். இவர்களை பெரிய திரையில் முன்னமேயே எதிர்பார்த்தேன். கொஞ்சம் லேட் ஆக வந்தாலும் கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.       

அடுத்து சந்தானம், படம் முழுவதும் பக்க பலமாக வருகிறார். ஜென்ட்ஸ் பார்லர் வைத்திருப்பதால் கொஞ்சம் ஸ்டைலாகவே இருக்கிறார். இவரும் ஆர்யாவும் சேர்ந்து படம் முழுவதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். எனக்கு இன்டேர்மிஷன் வந்ததும் ஒரு சந்தேகம் அடுத்த பாதி எப்படி இருக்குமோனு. ஒரு நண்பனுக்கு எஸ் எம் எஸ் தட்டினேன். " இது வரை நல்லாத்தான் போயிட்டிருக்கு. இனிமே எப்படி" 
பதில் வந்தது "டோன்ட் வொரி . நல்லாவே போகும்" 
சொன்னது போலவே படம் முடியும் கடைசித் துளி வரை சிரிப்புக்கு பஞ்சமில்லை. 

அது என்னங்க,  பாட்டு சீன் வந்ததும் வெளி நாடு போயிடறாங்க. எந்த நாடு போனாலும் நம்ம நாட்டு ஆண் மக்கள் இருக்கையில் இருந்து  புறப்பட்டுறாங்க. இந்த முறை சில பெண் மக்களும். வேறு சிலர் செல்லில் கேம் விளையாடப் போறதா சொல்றாங்க. லவ்ஸ் வந்ததும் வெளி நாட்ல போய் டான்ஸ் ஆடுறதும், கூடவே சில வெளி நாட்டினர் நம்ம இளைய தளபதி டான்ஸ் ஆடுறதும் படா தமாசா கீதுங்க. 

பலரால் முடியாத ஒரு காரியத்தை ஒரு மாற்றுத் திறனாளி செய்து முடிப்பதாகக் காட்டியதற்கு இயக்குனர் ராஜேஷுக்கு ஒரு பாராட்டு. ஆனால் மலையாளப் பட பிட்  நாயகியை படத்தில் திணித்து மாணவர்களை ஜொள்  விட வைத்ததற்கு ஒரு குட்டு.  

படத்தின் இறுதியில் நட்புக்காக  ஜீவா . அசத்திட்டீங்க  ஜீவா! கட்சி பத்து நிமிடங்களை கல கலப்பாகவே கொண்டு செல்கிறார்.  மொத்தத்தில் நீங்கள் தான் 'நண்பேன்டா'
சித்ரா லக்ஷ்மணன், நாடோடிகளில் சசிகுமாரின் அம்மாவாக வந்தவர், படத்தில் ஆர்யாவின் தங்கையாக வந்தவர் இன்னும் பலரும் தங்கள் பகுதிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நான் ரசித்த காட்சி. ரயில் நிலையத்தில் நயன்தாரா வருத்தத்தில் தனிமையில் இருக்க, ஒரு மன நிலை பிறழ்ந்தவர் தொல்லை கொடுக்க, வருண பகவான் போல எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்த கதாநாயகன் " எங்கேயாவது லவ் தோற்றுப் போய் பொம்பளப் பிள்ளைங்க நே நே நே  னு தலையைப் பிராண்டிக் கிட்டு சுத்தறதைப் பார்த்திருக்கோமா? நீங்க மட்டும் ஏன்டா இப்படி" என்கிறார். அட! ஆமாமில்லை.  

யுவன் சொல்லவே வேண்டாம். 
முத்துகுமார் சொல்லவே வேண்டாம், 
இன்னும் பல விஷயங்கள் சொல்லவே வேண்டாம், என்னங்க இன்னும் கிளம்பாமவா இருக்கீங்க படம் பார்க்க. 

21 July, 2010

களவாணி

இந்த வார விகடனின் 'பொக்கிஷம்' பகுதியில் புதிய வார்ப்புகள் பட விமர்சனம் வந்திருக்கிறது. " பல இயக்குனர்களால் பல முறை அலசப்பட்ட கரு தான். ஆனால் எடுத்துக் கொண்ட கதை .... ஒரே சீராகச் சொல்லி இருப்பதால் இந்த படம் தனித்து இருக்கிறது. அந்த வரிகளை களவாணி பட விமர்சனத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கதாநாயகன் 'என்னைக் கட்டிக்கிறியா?' என்று கதாநாயகியைப் பார்த்து கேட்பதற்கு எந்த உள்ளர்த்தமும் இல்லை என்று காட்டுவதற்காக பத்து வயதுப் பெண்ணைப் பார்த்து கேட்பதாக காட்டப்படுகிறது. அந்த பெண் வெட்கத்தோடு சொல்வது அழகு. பெண்களின் அந்த வெட்கமும் ஆண்களின் நியாயமான வீரமும் உலக மயமாக்குதலால் நாம் இழந்த குடும்பச் சொத்து. பஸ்ஸில் போகும் பெண்களில் முதல் சீட் பெண்ணுக்கு வலது கண்ணும் பின் சீட் பெண்ணுக்கு இடது கண்ணும் அடிக்கும் போது விமல் கிராமத்து விடலையை கண் முன் கொண்டு வருகிறார் .  

கிராமங்களில் பெருசுகள் சின்னப் பெண்களைப் பார்த்து கேட்கும் சொலவடை தான் இது. இங்கே 'என்னைக்  கட்டிக்கிறையா?' என இளைஞன் விமல் கேட்பதில் உருவாகிறது கதை. 

கதாநாயகி ஓவியா அந்தக் கால ஷோபாவை நினைவு படுத்துகிறார். கள்ளங் கபடற்ற முகம். தெளிவான உணர்வு வெளிப்பாடு. இளவரசு வயலில் நாற்று நடத் தொடங்கி வைக்க அழைத்ததும் பாவாடையை தூக்கி செருகிய படி வயலில் இறங்கி நடும் போது கொள்ளை கொள்கிறார். 

சரண்யா தான் திரையில் வரும் நேரங்களில் எல்லாம் அனைவரையும் ஆக்ரமிக்கிறார். துபாயிலிருந்து திரும்பிய கணவனிடம் அடி உதை பெற்ற போதும் ஜன்னலோரம் நின்றபடி 'ஆனி போய்ஆடி போய்  ஆவணி வந்திட்டா என் பையன் டாப்பா   வருவான்' என்னும் போதும் மகன் திருமணம் முடித்து வந்த போது ' என்னப்பா வீட்டு கிரக பிரவேசத்துக்கும், மகன் கல்யாணத்துக்கும் ஒரே சாப்பாடா போட்டுட்டியா?' என ஒருவர் கேட்கும் சின்ன சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கலவர நிலையை சகஜமாக்கும் போதும் சரண்யா ஜொலிக்கிறார். 

இளவரசு விமலின் தந்தை பாத்திரத்தை உணர்ந்து கொஞ்ச நேரம் வந்தாலும் படிக்கல்லாய் கதையின் தரத்தை உயர்த்துகிறார். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு ஊர் திரும்பும் சமயம் மகனை அவல நிலையில் கண்ட கசந்த   மன நிலையை சிறிதும் புரிந்து கொள்ளாமல் 'கோடாலி தைலம் வாங்கி வந்தியா?' 'சரக்கு கொண்டு வந்திருக்கியா?' என சுற்றம் கேட்கும் போது நடிப்பில் வசனம் இல்லாமலே விசனம் காட்டுகிறார். 

வில்லன் திருமுருகன். கோபக்கார அண்ணன், வேகமாக உணர்ச்சி வயப் பட்டாலும் பெரியவர்கள் சொன்னதும் அடங்கும் போதும், இறுதியில் விமலுடன் இணக்கமான காட்சியிலும் இயல்பாக செய்கிறார். உடல் அசைவுகளில் காட்டும் உணர்வு முகத்தில் கொண்டு வர பயிற்சி இன்னும் கொஞ்சம் வேண்டும். படத்தின் இணை இயக்குனர். 

கஞ்சா கருப்பு காமெடி. அறிமுகமாகும் உர மூட்டை கடத்தல் காட்சி தவிர மீதி இடங்களில் எல்லாம் என்ன நடக்கும் என்று முன்பே ஊகிக்க  முடிவதால்  ரொம்ப ரசிக்க முடியவில்லை.  

சில சின்ன சறுக்கல்கள்;
கதாநாயகன் மட்டும் மப்ளர் சுற்றி முகம் மறைத்து பகைவர்களின் ஊருக்கு திரு விழா காண சென்றாலும் கூட இருக்கும் நண்பர்களை வைத்து கண்டு பிடிக்காமல் இருப்பது. 
போன்று இருந்தாலும் படம் முடிந்ததும் மறுபடி பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.