Bio Data !!

20 March, 2011

பகல் வீடு - பாகம் II

வீட்டுக்கு வந்ததில் இருந்து என் மகனிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதே பெருங் குழப்பமாக இருந்தது. அவன் டிவி முன் அமர்ந்து ஒரு நொடிக்கு நூறு தரம் சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான், கூட அமர்ந்திருக்கும் தந்தையோ, தன் மனைவியோ எப்படி இதை சகித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே துளியும் இன்றி. "இப்படி மாற்றிக்கிட்டே இருந்தா என்ன புரியும் பாலா என்றேன்?"
"அப்பறம் உங்களை மாதிரி சீரியல் பார்க்கச் சொல்றீங்களா?"
பூமராங் போல் திரும்பிய பதிலில் நான் என் கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டேன். 

மெல்ல எழுந்து, அடுத்த அறையில் இருந்து, காகிதத்தில் பெயிண்டிங் செய்து கொண்டிருந்த பேரன் அருகில் அமர்ந்து,

"ஏண்டா செல்லம், வசதியா உட்கார்ந்து வரையலாம் தானே?" என்றேன். அவன் பதிலே பேசாமல் அவன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். கவனம் கலையாமல் ஒரு காரியம் செய்தால் தான் முழுமை இருக்கும் என்று அங்கே உட்கார்ந்து அவனை கவனித்துக் கொண்டிருந்தேன். முழுதாய் பதினைந்து நிமிடங்கள் ஆன  பின்னும் அவன் என்னிடம் பேசாமல் இருந்தது என்னை அலட்சியம் செய்தது போல் நினைக்க வைத்தது. 

வீட்டை சுற்றி என் பார்வையை சுழல விட்டேன். நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. நீளமாக வரிசை வரிசையை தொங்க விட்டிருந்த மணிகள் காற்றுக்கு அசைந்து மெல்லிய நாதம் இசைத்துக் கொண்டிருந்தன . யார் கவனித்தாலும், அசட்டை செய்தாலும் தன் பணியை அது நிறுத்தியதே இல்லை. என் மனம் மட்டும் ஏன் இப்படி அலை பாய்கிறது. ஹாலில் என் பார்வை நின்றது. நான் எழுந்ததும் என் மருமகள், மகனின் காலடியில் நெருங்கி அமர்ந்து அவன் தொடையில் தலை சாய்த்திருந்தாள். இவர்களுக்கு நான் இடைஞ்சல் தானோ? 

என் அறைக்கு செல்லலாம் என்று எழுந்தேன். பேரனுக்கு இணையாக தரையில் அமர்ந்திருந்ததால் எழுந்ததும் இடது முழங்காலில் சுண்டியது போல் வலி. உடம்பின் எல்லா பாகங்களும் ஒரே நேரத்தில் தானே பிறக்குது, இந்த முழங்காலுக்கு மட்டும் ஏன் சீக்கிரம் வயசாகிடுது என்று நினைத்த படி என் அறைக்குள் சென்றேன்.
முந்திய நாட்களில் மகன் பேசியது நினைவுக்கு வந்தது. 
"எங்கேப்பா கிடைச்சது இந்த கர்ட்டன் . அது ஏன் தான் உங்க ரசனை இப்படி இருக்குதோ?"
"இத்தனை புத்தகங்களை வாங்கி அடுக்கி வச்சிருக்கீங்களே? எப்போவாவது புரட்டி இருக்கீங்களா? எல்லாம் துட்டுக்கு பிடிச்ச விரயம்." (மகனே விடிய விடிய படித்தாலும் அதை அடுக்கி ஒழுங்கு படுத்தி விட்டு நான் படுப்பது உனக்கு தெரியுமா?)
ஜன்னலோரத்தில் நான் தேடி தேடி வாங்கி வந்த ஈசி சேர். கால் பகுதியை   நீட்டியபடி சாய்ந்து அமர்ந்தேன். புத்தகம் படித்தபடியே உறங்குவதற்கு ஏற்ற வாகனம். அதை வாங்கி வந்த அன்று ,கொஞ்ச நேரத்திலேயே மருமகள் அதை எடுத்து போட்டு டிவி முன்னால் அமர்ந்தாள். எனக்குள் அப்பப்போ உண்டாகும் ஆழிப் பேரலை. 
"அலைஞ்சு திரிஞ்சு கடை கடையாய்  ஏறி இறங்கி வாங்கி வந்தால் நீ அதிலே மகாராணி மாதிரி சாஞ்சிகிட்டு இருக்கே" என்றேன். வெடுக்கென எழுந்தவள் அதை முரட்டுத் தனமாக மடித்து என் அறை வாசலில் சாய்த்து முணுமுணுத்தபடியே  சமையல் அறைக்குள் சென்றாள். உள்ளே பாத்திரங்கள் சில்வராய் இருந்ததால் உடையாமல் தப்பின. அதன் பின் அவள் சகஜமாகி எனக்கு சாதம் பரிமாற சரியாய் மூன்று மாதங்கள் ஆனது. 

 நான் பணியில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளிலேயே கடனை உடனை வாங்கி கட்டிய இந்த கட்டடம் இப்பொழுது எனக்கே அந்நியமாகிப் போனது போல் இருந்தது. மனைவி என்பவள் ஒரு பெரிய உறவுப் பாலம் தான். அவள் போன இரண்டு ஆண்டுகளுக்குள் உறவுகளுக்குள் எத்தனை இடைவெளி. என் மனைவி என்னிடம் காட்டிய பரிவை நினைத்தபடியே துணிமணிகளை எடுத்து ஒரு ரோலர் பெட்டியில் அடுக்கி வைத்தேன். ஓரங்கள் மடங்காமல் நேர்ப் படுத்தினேன் . ஒரு பையில் மற்ற சில்லறை சாமான்களை எடுத்து வைத்தேன். என் மனைவி இருந்த போது குடும்பத்தோடு எடுத்து லாமினேட் செய்திருந்த போட்டோவை எடுத்து ஒரு கைத்துண்டினால் துடைத்தேன். அவள் 'களுக் ' கென போட்டோவில் இருந்து சிரித்தது போல் இருந்தது. "எத்தனை நாள் கூத்துக்கு இந்த புறப்பாடு?" என்று கேட்பது போல் இருந்தது. 

"எங்கேப்பா? ஊருக்கு போறீங்களா?" குடும்ப புகைப் படத்தை எடுத்து வைப்பதை பார்த்தும் அசட்டுத் தனமாக கேட்டான் என் மகன்.
"பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் போகலாம்னு இருக்கேன்" எப்படி சொல்வது என்று பல விதமாக தயங்கிக் கொண்டிருந்தது போய் சிதறு தேங்காயாய்  உடைத்து விட்டேன். 
"என்னது?" அவன் போட்ட சத்தத்தில் என் மருமகளும், பேரனும் பயந்த படி அரை வாசலில் வந்து நின்றார்கள். அதன் பின் அன்று இரவும் மறு நாள் விடிந்த பின்னும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. நான் சிற்றுண்டிக்காக வந்து அமர்ந்ததும் ஒரு தட்டில் ஐந்து இட்லிகளும், வெங்காயச் சட்னியும், ஒரு கிண்ணத்தில் பொடியும் எண்ணையும் கலந்து அமைதியாகவே வைத்துச் சென்றாள். ஒவ்வொரு துண்டு இட்லியும் தொண்டையில் சிக்கி சிக்கியே உள்ளே இறங்கியது. இரண்டு பெட்டிகளையும் இரு கைகளில் எடுத்துக் கொண்டு 
"வரேன் பாலா, வரேன்மா , வரேண்டா செல்லம்" என்றபடி படிகளில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

8 comments:

  1. ”ஒரு நொடிக்கு நூறு தரம் சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான், கூட அமர்ந்திருக்கும் தந்தையோ, தன் மனைவியோ எப்படி இதை சகித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே துளியும் இன்றி”

    ”முழுதாய் பதினைந்து நிமிடங்கள் ஆன பின்னும் அவன் என்னிடம் பேசாமல் இருந்தது என்னை அலட்சியம் செய்தது போல் நினைக்க வைத்தது”

    இது போன்ற வரிகளை எப்படி எழுதினீர்கள் என வியக்கிறேன்..
    ஒவ்வொருவரும் , தன்னை அறியாமலேயே மற்றவர்களை காயப்படுத்தி வருகிறார்கள்.. சென்சிடிவி என்பது வேண்டும்.. ஒரு செயல் மற்றவரை எப்படி பாதிக்கும் என்ற அறிவு பலரிடம் இல்லை...

    ”நீளமாக வரிசை வரிசையை தொங்க விட்டிருந்த மணிகள் காற்றுக்கு அசைந்து மெல்லிய நாதம் இசைத்துக் கொண்டிருந்தன”

    ”புத்தகம் படித்தபடியே உறங்குவதற்கு ஏற்ற வாகனம்”

    ”மனைவி என்பவள் ஒரு பெரிய உறவுப் பாலம் தான்”

    இதெல்லாம் உங்களுக்கே உரிய கவி நயம் மிக்க வரிகள்...

    அனுபவ முதிர்ச்சி கதை முழுதும் தெரிகிறது...

    ReplyDelete
  2. ஆழ்ந்த அலசலுக்கு நன்றி பார்வையாளன்

    ReplyDelete
  3. இயல்பான நடை முதியவர்களின் மனோ நிலையை
    மிக அழகாகச் சொல்லிப் போகிறீர்கள்
    முடிவு மனதிற்கு கொஞ்சம் சங்கடம் கொடுத்தாலும்
    அதுதான் சரி எனப் படுகிறது
    மிகச் சிறந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக. கதையை இன்னும் கொஞ்சம் நீட்டிக்க நினைத்திருந்தேன். இது முடிவு போல் உணர்த்துவதால் இங்கேயே போட்டு விடுகிறேன் சுபம் !!

    ReplyDelete
  5. //எழுந்ததும் இடது முழங்காலில் சுண்டியது போல் வலி. உடம்பின் எல்லா பாகங்களும் ஒரே நேரத்தில் தானே பிறக்குது, இந்த முழங்காலுக்கு மட்டும் ஏன் சீக்கிரம் வயசாகிடுது//

    நல்ல கேள்வி?கதை அமைப்பு அருமை.வீட்டுப் பெரியோர்களின் உணர்வை மதிக்கனும்.

    ReplyDelete
  6. Did really reflect an elderly person's thought process..

    ReplyDelete
  7. thirumathi bs sridhar நன்றி, என் கதை ஒரு சிலரையேனும் சிந்திக்க வைக்கணும் என்பது தான் என் எண்ணமும்

    ReplyDelete
  8. thank u JK, தங்கள் முதல் வரவு நல்வரவு ஆகுக .இப்படி முகமூடியின் பின் நின்று முன்னுரைப்பது சரி தானோ? எனக்கு JK என்றொரு நண்பர் உண்டு. அவராய் இருக்கலாம் என்ற நப்பாசையில் இந்த கேள்வி who r u?

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!