Bio Data !!

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

12 September, 2011

என்றென்றும் உன்னுடன் அன்புடன் ...

இரவு உணவு முடிந்து அம்மாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்து, முகம் கை, கால் அலம்பி படுக்கையில் சாய்ந்தாள் சுசித்ரா. கல்லூரி காலத்திலேயே அவளுக்கு தனி படுக்கை அறை தரப்பட்டு விட்டது. அதை அவள் ரசனைக்கு ஏற்ப அலங்கரித்திருந்தாள். ஜன்னல்களுக்கு மெல்லிய நீல நிறத்தில் ஸ்க்ரீன். அறையின் மேல் சுவற்றிலிருந்து தொங்க விடப் பட்டிருந்தது, காற்றுக்கு அசையும் போது சின்ன கிண்கிணி சத்தம் போடும் அலங்காரங்கள் . ஒரு புறம் நேர்த்தியாக அடுக்கப்பட்ட புத்தகங்கள். அவளது செல்ல தோழிகள் எனலாம்.
ஏ சி க்காக அடைக்கப்பட்ட ஜன்னல்களை, ஏ சி யை அணைத்து, காலையில் திறந்து விட்டால் கண்ணெதிரே தோன்றும் ஆரஞ்சுப்பழ சூரியன். அறையின் நான்கு மூலைகளிலும் உயரே நிறுத்தப்பட்டிருந்த ஆடியோ ப்ளேயரின் அங்கங்களில் இருந்து மெல்லிய இசை வழிந்தோடும் அந்தப்புரம் போல் ஒரு அறை. அவள் சுலபத்தில் அங்கு யாரையும் விட மாட்டாள். இப்பொழுது புதிதாய் ஒருவனுக்கு இடம் அளித்திருக்கிறாள். அவன் தான் சுந்தர்.

படுத்தவாறே, அதன் ஸ்டாண்டில் ஒய்யாரமாக வீற்றிருந்த அலை பேசியை கூர்மையாய் பார்த்துக் கொண்டே இருந்தாள். எதிர்பார்த்தது போலவே குழந்தையின் சிரிப்பொலியில் அவன் வரவை சொல்லியது. உடல் முழுவதும் பரபரப்பு பரவ அலைபேசியை அழுத்தி "ஹல்லோ " என்றாள். 
"ஹேய் ! டார்லிங்! எப்படி இருக்கிற?" என்றான் சுந்தர் மறு முனையில். 
"நான் நல்லா இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கிறீங்க?" என்றாள் குரல் குழைந்து, குரலில் தேன் குழைத்து. 
உடல் முழுவதும் உற்சாக மின்சாரம் பரவி, அலை பேசி மூலமே அடுக்கடுக்காய் முத்தங்களை அனுப்பி வைத்தான். 
"சுந்தர், கொஞ்சம் மிச்சம் வையுங்க இன்னும் பத்து நாள் தான் இருக்குது." 
"அட ஆமாம், எண்ணி பத்து நாளில் இந்த அழகு சுந்தரி சுந்தரின் வசம்"   இது தாண்டி அவர்கள் பேசியது நமக்கு எதற்கு.நாம் ஒதுங்கி விடுவோம்.

படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து விட வேண்டும் என்று தீர்க்கமான முடிவோடு இருந்தார் சுசித்ராவின் அப்பா. நல்ல இடம் அமைந்ததும் பேசி முடிவு செய்து நாளும் குறித்து விட்டார்கள். சுந்தர் கோவையில் ஒரு தனியார் துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். கை நிறைய சம்பளம், குடும்பத்தின் ஒரே வாரிசு. செல்வத்துக்கும் குறைவில்லை. சுசித்ராவின்  புகைப்படத்தை பார்த்ததும், முத்துப் பற்கள் தெரிய  வெள்ளந்தியான அவள் சிரிப்பை பார்த்ததும் , இவள் என் திருமணத் தேடலின் முற்றுப் புள்ளி என்பதை உறுதி செய்து கொண்டான். அது போலவே பெண்ணின் குடும்பத்தாரையும் தனது கலகலப்பான பேச்சால் கவர்ந்து விட்டதால், திருமணம் நிச்சயமாகி, இதோ மண நாளும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

பகலெல்லாம் நல்ல பிள்ளை போல் வீட்டுக் காரியங்களைப் பார்ப்பதும், இரவானதும், தனது வருங்காலக் கணவனை தனது பேச்சினாலேயே குளிர்விப்பதுமாக நாட்கள் ஓடி விட்டன. திருமண நாளும் வந்து விட்டது.   நண்பன் ஒருவனுடன் தான் புதிதாக வாங்கிய பைக்கிலேயே ஊர் வரை செல்ல முடிவு எடுத்த ஒரு விஷயத்தை மட்டும் ஒருவரிடமும் சொல்லவில்லை.
நண்பன் எவ்வளவோ சொல்லியும், அவன் வர மறுத்தால் தான் தனியாகவே செல்லப் போவதாக சொல்லி நினைத்ததை சாதித்து விட்டான். 

"டேய், பயப்படாம வாடா, பஸ்ல போறதை விட ரெண்டு மணி நேரம் முன்னாடியே போயிடலாம். "
"சுந்தர்  இது எனக்கு சரியா தெரியல. ரெண்டு நாள்ல கல்யாணத்தை வச்சிக்கிட்டு ரிஸ்க் எடுக்கிறோம்னு தோணுது."
"வாடா, வாடா அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.இரு  ஒரு போன் பண்ணிட்டு கிளம்பிடலாம்." அலை பேசியை எடுத்து சுசியின் பெயரை சேமித்து வைத்திருந்த எண் ஒன்றை அழுத்தினான். மறு முனையில் "ஹலோ " என வழுக்கும் குரலில் சுசித்ரா ஆஜர் ஆக
நண்பனைப் பார்த்து கண் சிமிட்டிய படியே "ஹேய் டார்லிங், நான் பஸ் ஏறிட்டேன், நீ தயாரா இருக்கியா ?"
"எதுக்கு"
"மணப்பெண்ணாக, தாலி வாங்கிக்க, அப்பறம் ....."
"ச்சீய்  உங்களுக்கு வேற நினைப்பே கிடையாதா? பக்கத்தில எல்லோரும் என்னையே பார்க்கிறாங்க. நீங்க நேர்ல வாங்க பேசிக்கலாம்"
" இரு இரு வச்சிடாத"
"நீங்க வாங்க நேர்ல எல்லாம் பேசிக்கலாம்"
"ஏய் சுசி அப்பறம் நீ பேச வரும் போது நான் ஊமையாய் இருந்திடுவேன்"
"பார்ப்போம் பார்ப்போம் " என்றபடி அலைபேசியை துண்டித்தாள். 

கல்யாண வீடு களை கட்டி இருந்தது. முகம் பூரித்து அவள் வருவதைக் கண்டவுடன் மெஹந்தி டிசைன்களை அலசிக் கொண்டிருந்த தோழிகள் கோரசாக " போன்ல யாரு சுந்தராஆஆஆ " என்று அலறினார்கள். 
"ஐயோ ! மெதுவா, ஏய் வாலுங்களா வேலையைப் பாருங்க "  என்றபடியே குளியல் அறைக்குள் நுழைந்தாள். உண்மையில் தோழிகள் தொல்லை இல்லாமல் அவன் பேசியதை மறுபடியும் நினைத்து அலைபேசிக்கு அழுத்தமாய் ஒரு முத்தம் கொடுக்க வேண்டியது அத்தியாவசியத் தேவையாய் இருந்தது. 

சுந்தரும் நண்பனும் பைக்கில் புறப்பட்டார்கள். சுந்தர் ஓட்ட நண்பன் பின்னால் அமர்ந்தான். மணித்துளிகள் அமைதியாய் நகர்ந்தன. இடை இடையே ஓரிரு வார்த்தைகள் மட்டும் பரிமாறிக் கொண்டே பயணம் தொடர்ந்தது. சாலையில் எந்த ஒரு தொந்தரவும் இன்றி நூல் பிடித்தது போல் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. சுசியுடன் இருந்த நிமிடங்கள் நினைவுக்கு வர உணர்ச்சி கொந்தளிப்பில் வண்டியின் வேகத்தை சுந்தர் கூட்டும் போதெல்லாம் நண்பன் அவனை எச்சரித்துக் கொண்டே வந்தான். சாலையின் குறுக்காக நெளிந்து வளைந்து ஒரு நாகம் செல்ல வண்டியின் வேகத்தை குறைத்து ஒளி வெள்ளத்தில் அதன் அழகை ரசித்தான். அவன் தோள்களை தாண்டி வந்தது நண்பனின் குரல்,
"பஸ்ல போனா இதெல்லாம் பார்க்க கிடைக்குமா? சொன்னா கேட்காம பஸ்ல போகணும்னியே?" 
"டேய், கொலை விழும், பஸ்ல போகணும்னு சொன்னது நானா நீயா?"
"சரி ,சரி கூல் மச்சி"
"உண்மையிலேயே பைக்ல போகணும்னு ஆசையை விட கல்யாண வாழ்க்கை தொடங்கும் போதே சுசியின் முன் ஹீரோவா காட்டிக்கணும்னு தாண்டா இந்த பைக் சவாரி" 

ஒரே சீராக சென்று கொண்டிருக்கும் போது ஒரு லாரி வேகமாக அவர்களை தாண்டிச் சென்றது.  லாரியை விட, நீளமாக இரும்புக் கம்பிகள் நிறைத்து அதில் ஒரு சிவப்புத் துணியை கட்டி விட்டிருந்தார்கள்.   அடித்த காற்றுக்கு மெல்ல மெல்ல கயிறு அவிழ்ந்து, சிவப்பு துணி அவர்களைக் கடக்கும் போது லாரியை விட்டுப் பிரிந்து சுந்தரின் முகத்தை ஆரத் தழுவியது. ஒரு வினாடியில் செயல் பட்டு இடது கையால் துணியை பிரித்து வீசினான். 
ஒரு நொடிக்குள் பதறிப் போன நண்பன் ," சுந்தர் ஓரமா வண்டிய நிறுத்து, நீ ஓட்டியது போதும், மீதி தூரம் பின்னால உட்கார்ந்து ரிலாக்ஸா வா " 
இருவரும் இடம் மாற, வண்டி சீரான வேகத்தில் நெல்லையை நோக்கி முன்னேறியது.

மாடியில் உள்ள அறையில் சுசியும் தோழிகளும் பல வித கோணங்களில், கோலங்களில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். திடீரென,மிரட்டும் கனவில் மிரண்டு எழுந்த சுசி அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். "ஏன் சுந்தர் அழைக்கவே இல்லை, நாம் வேணும்னா கூப்பிடலாமா ? வேணாம் ஒரு வேளை அசந்து தூங்கினால் தொந்தரவாய் இருக்கும் " இவ்வாறு பல விதமாக சிந்தித்தபடியே அலைபேசியையே வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாள். அவள் பார்வை ஆசைத் தலைவனுக்கு தகவல் அனுப்பியதோ? , அவள் அதிரலாம் சத்தமிடக் கூடாது என்று சொல்லி இருந்ததால்.கண் சிமிட்டி ஒளிர்ந்தது அலைபேசி
"ஹலோ "
"ஹேய் டார்லிங்"
"என்னங்க ரொம்ப நேரமா பேசவே இல்ல, என்னவோ ஏதோனு பயந்திட்டேன்.ஒரு குழந்தை முகம் கை கால் எல்லாம் ரத்தம் வழிய நின்னது போல கெட்ட கனவு வந்து தான் முழித்தேன். "
"நோ வொர்ரி டியர், மதுரை தாண்டிட்டோம் இன்னும் ரெண்டு மணி நேரத்தில ஊருக்கு வந்திடுவேன், வந்ததும் உன்னை தான் முதல்ல பார்க்கணும், ஸோ சீவலப்பேரி ஆத்துப் பக்கம் வந்திடு."
"அதெல்லாம் முடியாது. என்ன நீங்க, ரெண்டு நாள்ல  கல்யாணம், என்ன வெளியேவே விட மாட்டாங்க. "
"ஹேய் ப்ளீஸ்மா, ப்ளீஸ் ப்ளீஸ் "
இவர்கள் கொஞ்சலில் கொஞ்சம் கவனம் சிதறித் தான் பைக் ஒட்டிக் கொண்டிருந்தான் நண்பன்.தன் சிவப்பு ஆடையை காற்றுக்கு பறி கொடுத்து இவர்களை கடந்து சென்ற லாரி சாலையின் ஓரமாய் இருட்டை ஆடையாகக் கொண்டு நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அதன் கீழே அதன் ஓட்டுனன்.  அதனையும் அதில் நீட்டிக் கொண்டிருந்த கம்பிகளையும் கவனிக்காமலே அருகில் சென்று விட்டதை பார்த்து சுந்தர் அலறினான்,
"டேய் பார்த்து பக்கத்தில லாரி "
எதிர் முனையில் இருந்த சுசிக்கு ஒன்றும் விளங்கவில்லை. பஸ்ல தான வந்து கொண்டிருந்தார். யாரைப் பார்த்து சத்தம் போடுறார்.டிரைவர் தூங்கிட்டானோ? டிரைவர்னா "டேய்" னு சொல்ல மாட்டாரே என பல விதமாக குழம்பி "என்னங்க, என்னங்க " என்பதற்குள் எதுவோ எதனோடோ மோதுவது போல் பெருத்த சத்தம். அதன் பின் அலை பேசியில் சத்தம் இல்லை. மறுபடியும் அவன் எண்ணை அழைத்துப் பார்த்தால்  அழகு தமிழில் அலங்கார மொழியில் ஒத்துழையாமைப் போராட்டம் நடத்தியது அலை பேசி.

உறங்கும் மற்றவர்களை கடந்து மாடியில் இருந்து கீழே இறங்கினாள்.
மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. செக்கர் வானம் தன் சிவப்பை படிப்படியாய் இழந்து கொண்டு இருந்தது . திருமண வீடு, சொந்தக்காரர்கள் கூடி இருந்ததால் சத்தம் அதிகமாக இருந்தது. ஒரு வேலையை அதிகம் பேர் இழுத்துப் போட்டு செய்ததால் ரொம்ப பேசி, இடையிடையே கொஞ்சம் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.கொதித்துக் கொண்டிருந்த கறிக் குழம்பு அத்தனை பேரையும் எழுப்பிக் கொண்டிருந்தது. காலை டிபனுக்கு  இட்லியும்  கறிக் குழம்பும். அவர்களையும் கடந்து முன் வாசல் பக்கம் வந்தாள். ஆண்கள் அரசியலை அலசிக் கொண்டிருந்தார்கள், அன்றைய நாளிதழ் அவர்கள் கையில். அப்பா ஒரு ஓரமாக அமர்ந்து ஹிந்து பேப்பரில் மூழ்கி இருந்தார்.
"அப்பா "
"என்னம்மா சுசி, அதுக்குள்ளே எழுந்திட்டியா?"
"கொஞ்சம் வரீங்களாப்பா" அதற்குள் குரல் பதறி கண்ணீர் வடியத் தொடங்கியது.
 ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவராக அவளைப் பின்தொடர்ந்தார். மற்றவர்கள் அலசலில் ஆழ்ந்திருக்க சித்தப்பா மட்டும் அவர்களைப் பின் தொடர்ந்தார்.
"அப்பா கொஞ்சம் முன்னால சுந்தர் போன்ல பேசிட்டு இருந்தாங்க, திடீர்னு 
"டேய் பார்த்து பக்கத்தில லாரி " னு அலறின சத்தம் வந்தது. எதோ மோதுற மாதிரி பெரிய சத்தம். அதுக்கப்பறம் காண்டக்ட் பண்ண முடியல. எனக்கு என்னமோ பயமா இருக்குப்பா" 
"மாப்பிள்ளை பஸ்ல தானே வரேன்னார்" 
"ஆமா, பஸ் தான் இன்னும்  ரெண்டு மணி நேரத்தில வந்திடுவேன்னாங்க. "
அதற்குள் அருகில் வந்த அவள் சித்தப்பா " நீ போய் படும்மா, ஒண்ணும் ஆகி இருக்காது. எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். கல்யாணப் பொண்ணு நிம்மதியா போய் தூங்கு."

அவளை அந்தப் பக்கம் அனுப்பியதும் பதற்றம் அங்கே இருந்தவர்களை தொற்றிக் கொள்ள ஆளுக்கொரு பைக்கில் ஏறி பஸ் ஸ்டாண்ட் சென்றார்கள். 
கோவையில் இருந்து பஸ் வந்தது. மாப்பிள்ளை வரவில்லை. ஒரு வேளை தனியார் பஸ்சில் வந்திருப்பாரோ என அது நிற்கும் இடத்தை அடைந்தனர். அங்கும் சாதகமான பதில் இல்லை. வந்திருந்தவரில் ஒருவர் "அண்ணே ! இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வந்திடுவேன்னு தான மாப்பிள்ளை பாப்பாக்கிட்ட சொல்லி இருக்கார், ஒரு கார் எடுத்துக் கிட்டு ரெண்டு பேர் மதுரை வர போனா வழியில் ஏதாவது பஸ் விபத்துக்குள்ளாகி இருக்கானு பார்த்திட்டு வந்திடலாம்" என்றார்.
"வாய மூடுறா , சுப முகூர்த்த நேரத்தில அபசகுனமா ஏதாவது பேசிக்கிட்டு. " என்றார் மற்றவர். 
"அவன் சொல்றது சரி தான, போய் பார்த்திட்டு வந்திர்றது தான் நல்லது "என்றார் சுசியின் அப்பா. 
அதற்குள் ஒருவர் டாட்டா சுமோ ஒன்றை ஏற்பாடு செய்து வர வந்திருந்தவர்களில் மூன்று பேர்  அதில் ஏற சுசியின் அப்பா எதோ முணுமுணுத்தபடி இன்னும் ஒருவரை ஏறச் செய்து " நீங்க நாலு  பெரும் போங்க ஏதாவது தகவல் இருந்தா தெரியப்படுத்துங்க." என்றதும் அதிர அதிர புறப்பட்டது சுமோ. 

விருது நகரைத் தாண்டி கொஞ்சம் தொலைவில் செல்லும் போது ஒருவர் "அண்ணே ! வண்டிய நிறுத்துங்க அங்கே கூட்டமா இருக்கு. என்னனு பார்த்திட்டு வந்திடுவோம்" என்றார்.
"டேய் ! நாம வந்தது மாப்பிள்ளையை தேடி. அவர் பஸ்ல வந்ததா தான் பாப்பா சொல்லுது. இங்கே சுற்று வட்டாரத்தில ஒரு வாகனத்தைக் கூட காணோம். அதெல்லாம் இறங்க வேணாம்." என்றார்.
"இல்லைண்ணே,எதுக்கும் பார்த்திடுவோம். "
"பேசாம வாடா "

அதற்குள் தகவல் தெரிந்து மாப்பிளை வீட்டாரும் நெல்லையில் சுசியின் அப்பாவோடு வந்து சேர்ந்திருந்தார்கள். சுந்தரின் அலுவலக நண்பர் ஒருவரை அழைத்து கேட்ட போது, சுந்தரும், அவர் நண்பர் ஒருவரும் நேற்று இரவே கிளம்பி விட்டதாகக் கூறி நண்பரின் தொலை பேசி எண்ணைக் கொடுத்திருந்தார்கள். அதில் அழைத்த போது ஒரு கிராமியக் குரல் " யாரு , இங்கே ரெண்டு தம்பி பைக்ல வந்து ஆக்சிடென்ட் ஆகி கிடந்தது. இப்ப தான் ஆசுபத்திரிக்கு தூக்கிட்டு போறாங்க. நீங்க யாரு " என்று இழுத்து இழுத்துக் கேட்டது. 
எதோ புரிந்தும் புரியாமலும் இருக்க "ஐயா நீங்க .... உங்க கையில இந்த செல் எப்படிக் கிடைச்சது."
"எல்லோரும் கிளம்பி போய்ட்டாங்க. ஏதாவது விழுந்து கிடந்தா கொண்டு கொடுக்கலாமேனு பார்த்தேன். ஒரு முள் புதர்ல விழுந்து கிடந்தது. எடுக்கறேன் நீங்க கூப்பிடுறீங்க"
அவரிடம் எங்கே கொண்டு போய் இருக்கிறார்கள் என்ற தகவல் பெற்று மதுரை சென்றவர்களை அழைத்தார்கள் . சுசியின் அப்பா  தொடர்பு கொள்ள, அவர்கள் குரலிலும் பதற்றம் கூடி இருந்தது.

ஆண்கள் அனைவரும் ஆஸ்பத்திரி வந்து சேர பெண்கள் வீட்டில் கண்ணீரும் கம்பலையுமாக கூடி இருந்தார்கள். மணக்க மணக்க கொதித்து இறக்கிய கறிக் குழம்பு சீந்துவாரின்றி ஓரமாய் இருந்தது. சுசி சிறிது நேரம் மயங்குவதும் விழித்து எழுந்ததும் அழுவதும் அதிக அழுகையில் மறுபடியும் மயங்குவதுமாக இருந்தாள்.என்ன சொல்லி தேற்றுவது என்று அறியாமல் அவள் தோழிகள் அவளை அணைத்தபடியும், ஆறுதல் சொல்லிய படியும் இருந்தார்கள். வாழை மரத் தோரணம் கட்ட வந்த ஆட்கள் மாப்பிளையின் நிலை என்ன, லேசான அடி என்றால் தோரணம் கட்ட வேண்டி வருமே என்று ஒரு ஓரமாக அமர்ந்து காத்திருந்தார்கள். ஆரஞ்சுப் பழ சூரியன் வேதனையை வெளிப்படுத்த அறியாமல் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.

வீட்டில் உள்ள தொலைபேசி சத்தமாய் ஒலி எழுப்ப, அனைவரும் விளக்கை நாடி வரும் விட்டில் பூச்சிகளாய் நெருங்கினர். விபரம் புரியா ஒரு காலத்தில் தந்தியைக் கண்டதும் அழத் தொடங்கியதைப் போல தொலைபேசியை எடுக்கவே பயந்தார்ப் போல் நின்றனர். சுசியின் அம்மா தான் மனதை திடப்படுத்தி எடுத்தாள்"ஹலோ "
"சுசி எப்படி இருக்கிறா?"
"அவ நல்லா இருக்கிறா , மாப்பிள்ளை எப்படி இருக்கிறார்?"
"அடி கொஞ்சம் பலமாத் தான் பட்டிருக்கு. குறிப்பிட்ட தேதியில்  கல்யாணம் நடத்த முடியாது போல இருக்கு . முக்கியமானவங்க கிட்ட போன் ல சொல்லிடுங்க. மண்டபத்தில ஒரு பலகை "திருமணம் தள்ளி வைக்கப் பட்டது" னு வைக்க சொல்லு. சுசியை பத்திரமா பார்த்துக்க, மாப்பிள்ளைக்கு நினைவு வந்ததும் அங்கே கூட்டி வந்திடலாம்னு இருக்கோம்."
"நான் அங்கே கிளம்பி வரவா?"
"வேண்டாம் வரவங்களுக்கு பதில் சொல்ல நீ அங்கே இருந்தா தான் தோதா இருக்கும் சரி வைச்சிடு"

கண்ணீர் மல்க நின்றிருந்த சுசியை தோளில் சாய்த்தபடி, தோரணம் கட்ட காத்திருந்த ஆட்களை பார்த்து, " ஐயா கல்யாணம் தள்ளிப் போயிடுச்சு. நீங்க அதை எல்லாம் எடுத்துப் போயிடுங்க" என்றாள் அங்கே நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். விம்மிய சுசியை லேசாகத் தட்டி சமாதனப் படுத்தினாள்.

மாப்பிள்ளையின் நண்பன் விரைவில் உடல் அதிர்ச்சியில் இருந்து விடுபட்டு இருந்தாலும் மன அதிர்ச்சியில் இருந்து மீளாமலே இருந்தான். மாப்பிள்ளை நினைவு திரும்ப மூன்று நாட்கள் ஆகின. மேலும் ஒரு வாரம் அங்கே இருந்தால் தான் பயணம் செய்ய முடியும் என்ற நிலையில் எல்லோரும் அங்கேயே தங்கினர். மாப்பிள்ளையின் அப்பாவும், மணப்பெண்ணின் அப்பாவும் அருகருகே உட்கார்ந்திருந்தாலும் ஒருவரோடு ஒருவர் பேசாமல் இருந்தனர். சுசியும் , அவள் அம்மாவும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் சுந்தரின் அம்மா சாமி வந்தவள் போல் கத்தத் தொடங்கினாள்," எங்கேடி வந்தே , என் குலத்தை கருவறுக்க வந்தவளே! எந்த வேளையில கல்யாண வேலைகளை ஆரம்பிச்சோமோ அன்னியிலிருந்து ஒரே தடங்கல் தான். இந்தா இப்போ என் பிள்ளையே இருப்பானா, புளைப்பானானு தவிக்கும் படி ஆகிடுச்சு. முதல்ல அவளைக் கூட்டிகிட்டு புறப்படுங்க. " என்று அவர்கள் இருவரையும் இரு கைகளால் வெளியே தள்ளினாள்.

சுசியைப் பார்த்ததும் சுந்தரின் விழிகளில் புது வெளிச்சம். வலது கையை மெல்ல அவளை நோக்கி உயர்த்த முயற்சித்தான். தன்னைத் தள்ளிக் கொண்டிருந்த சுந்தரின் தாயை உறுதியாக தள்ளிய படி ஓடி வந்து படுக்கையின் அருகில் மண்டியிட்டு அந்தக் கையை இரு கைகளாலும் அள்ளி முத்தமிட்டாள். சூடாக கண்ணீர்த் துளிகள் அவன் கைகளில் மழைத் தாரையாக பட்டுத் தெரித்துக் கொண்டிருந்தது. கத்தல் சத்தம் கேட்டு அங்கு வந்த நர்ஸ் மறுபடியும் சுசியை இழுக்கப் போன சுந்தரின் அம்மாவை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். "சத்தம் போடாதீங்க, இது ஆஸ்பத்ரியா என்னனு நினைச்சீங்க " னு அதட்டினாள்.
"என்ன விடுங்க , இந்த சிறுக்கி, கிட்டப் போனா என் புள்ளை என்னை விட்டு போய்டுவான் "
"சும்மா இருங்கம்மா " என்றாள் முறைத்தபடி.
" இவளக் கல்யாணம் பண்ண விட மாட்டேன். வருமுன்னையே இவ்வளவு அந்தஸ்தைக் கொண்டு வந்திட்டா இன்னும் வீட்டுக்குள்ளேயே வந்திட்டானா சொல்லவே வேணாம் "
சுந்தர் நர்சைப் பார்த்து தான் எழுதுவதற்கு ஏதாவது வேண்டும் என்று சைகை செய்தான். 'நீங்க ரொம்ப ஸ்ட்ரெயின் செய்யாதீங்க சார்," என்றாள் நர்ஸ் இருந்தாலும் அவன் கண்களில் தெரிந்த பரிதாபத்தை பார்த்து ஒரு அட்டையில் ஒரு பேப்பரை செருகி ஒரு மெல்லிய பென்சிலையும் கையில் கொடுத்தாள். "பார்த்து மொள்ளமா " என்றாள்.
சுந்தர் மெதுவாக கிறுக்கலாக எழுதத் தொடங்கினான்.
"மா, இவளுக்காகத்  தான் நான் புழைச்சிருக்கேன் . 
சுசி, என்றென்றும் உன்னுடன் அன்புடன்"
இதைப் பார்த்ததும் தாயின் உள்ளம் உருகத் தொடங்கியது "கவலைப்படாத ராஜா, நீ நல்லா எழுந்து வந்ததும் வர்ற முகூர்த்தத்தில உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்த நடத்திடுவோம். நீ அலட்டிக்காம தூங்கு. " என்றபடி ஒரு கையால்   அவன் தலை முடியை நீவி நெற்றியில் உதடு பதித்தாள்.
மற்றொரு கையால் சுசியை இழுத்து மடியில் சாய்த்துக் கொண்டாள். அங்கு நின்றிருந்த அனைவர் முகத்திலும் நிம்மதிப் புன்னகை விரிந்தது.

09 August, 2011

சிவசு வாத்தியார் ‍‍ நிறைவு பாகம்

(அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்கு  மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.)

பள்ளிக்குச் சென்றதும் மகன் அவரைக் கண்டு ஓடி வந்தான். " அப்பா , எங்களுக்கு ஒரு புது சார் வந்து இருக்காங்க. அவர் உங்கள்ட தான் படிச்சாராம். உங்களை ரொம்ப புகழ்ராருப்பா.எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாங்கப்பா அவரை பார்க்கலாம். "
மகன் பெருமையாக ஓடி சென்று அழைத்து வந்தான். வந்தது ஐயாவின் பழைய மாணவன். "இன்று வரை தன் வாழ்வின் எந்த அடியும் அவரை நினைத்து தான் எடுப்பதாகவும் எந்த இடத்திலும் தவறியதில்லை என்றும், தன்னைப் போல் அவருடைய பல மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் தான் எடுக்கும் வகுப்பு மாணவர்களிடம் அவரை குறிப்பிடத் தவறியதில்லை" என்றும் பேசிக் கொண்டே சென்றார். 

ஆசிரியர் ஒரு வித மயக்க நிலைக்கு போய் விட்டார். தான் எடுக்கும் எந்த முடிவும் தன்னை மட்டும் பாதிப்பதில்லை இன்னும் எத்தனை பேரை?ஓய்வு பெரும் வரை யாவது.  வெளி உலகுக்காக இந்த வாழ்க்கை வாழ்ந்து தான் ஆக வேண்டும். முடிவு எடுத்த பின் மகளை அவசர அவசர மாகப் பார்த்து விட்டு ஊர் போய் சேர்ந்தார். அதன் பின் இருவரும் நடை பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

அவரது மனம் சஞ்சலப் படுவதை புரிந்து கொண்ட சந்துரு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொண்டான். அவளைப் பற்றி பிறர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டு அவளே தன்னிடம் சொன்னது போல் சிவசு ஐயாவைப் பார்க்கும் போதெல்லாம் சொன்னான். தன் மனைவியிடம் வெளிப்படையாக பேசி இருந்தால்  சுலபத்தில் சரி செய்யக் கூடிய விஷயத்தை இடியாப்பச் சிக்கலாக்கினார். அவளிடம் பேசுவதையே முற்றிலுமாக குறைத்துக் கொண்டார். 

சியாமளாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. பள்ளி விழாவன்று சொன்ன சொல்லுக்காகத்தான் இந்த தண்டனை என்று நினைத்துக் கொண்டாள். அங்கே மேலும் மேலும் அக்னி சேர்ந்து கொண்டே இருப்பதை அவள் அறியாமலே போனாள். அவரது வைராக்கியம் அவள் அறிந்த ஒன்று என்பதால் அவரிடம் பேசிப் பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. திரௌபதியின் ஒற்றைச் சிரிப்பு ஒரு இதிகாசத்தையே உருவாக்கியது. இவளது ஒற்றை சொல் இவள் வாழ்வையே பறித்தது. 

 சிவசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதற்கு மேல் பிறருக்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்த பாரம் நெஞ்சில் கருங்கல்லாய் இறங்குகிறது. ஒரு வக்கீலைப் பார்த்து தன் பிரச்சினையை பட்டும் படாமலும் சொல்லி விட்டார்." இப்படியே மிச்ச நாளையும் போக்கி விடலாமே . இந்த வயதில் விவாகரத்து தேவையா" என்ற அவரின் கேள்விக்கு " நான் மட்டும் இந்த வாத்தியார் தொழில் பார்க்காமல் இருந்தால் என்றோ அவளை விட்டு பிரிந்து இருப்பேன். அவளாவது சந்தோஷமாய் இருந்திருப்பாள். என்னைக் கட்டிய பாவத்துக்கு இவ்வளவு நாள் என்னோட இருந்தது போதும். மிச்ச நாளாவது அவள் விருப்பப்படி இருக்கட்டும். சந்துரு சொன்னதெல்லாம் வைச்சு பார்த்தா எந்த வயசிலும் அவளை ஏத்துக்கிடுவான் போலத் தான் தெரியுது. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்களேன்" என்று பரிதாபமாகச் சொன்னதும் வக்கீலும் சம்மதித்து விட்டார்.

சியாமளா வக்கீலிடம் இருந்து வந்த நோட்டீஸ் ஐப் பார்த்து பதறிப் போனாள். ஐயா பேசாமல் இருந்தாலும் மிச்ச நாட்களை அவரைப் பார்த்துக் கொண்டே ஓட்டி விடலாம் என்று இருந்தாள். இது பேரிடி. வருடங்கள் பல கடந்ததால் அவளால் அவரிடம் பேச முடிய வில்லை. தயங்கி தயங்கி அவர் அருகில் போய் பேசுவதற்கு நின்றாலும் அழுகை தான் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவரோ அதற்குள் இடத்தை காலி செய்து விட்டு இருந்தார். இப்படிப்பட்டவர்கள் தன்னைப் போல் வைராக்கியம் யாருக்கு உண்டு என்ற வெட்டி ஜம்பத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மீதி அனைத்தையும் இழக்கிறார்கள். சியாமளா இந்த பிரச்சினையை யாரிடமும்  கொண்டு செல்வதாய்  இல்லை. நேராக குடும்ப வழக்கு நடக்கும் இடத்திற்கே சென்று என்ன ஆனாலும் தான் அவரை பிரிவதாக இல்லை என்றும் ஆயுள் முடியும் வரை அவருடனே வாழ விரும்புவதாகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். 

அவள் எடுத்த முடிவை பற்றி அறியாமல் , கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார் சிவசு  வாத்தியார்.அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம் " நீங்கள் நினைப்பது போல் எனக்கும் சந்துருவுக்கும் எதுவும் இல்லை நான் உங்களுடனே வாழ விரும்புகிறேன் " என்று அவள் சொல்லி விட மாட்டாளா என்று மனதின் ஒரு ஓரம் அவருக்கு முனங்கிக் கொண்டு தான் இருந்தது. 

(முற்றும்)

(இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும். பதிவர் ஒருவரின் விருப்பத்திற்காக மனச் சிக்கலை கொண்டு ஒரு கதை எழுதிப் பார்த்தேன். வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. முடித்து விட்டேன் நாடோடி, நன்றி ) 

08 August, 2011

சிவசு வாத்தியார் -Part III

இத்தனை ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும் சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். ..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்....)

அன்று இரவு அதிர்ச்சியிலும் , கலக்கத்திலும் கடந்தது.
அடுத்து வந்த இரு நாட்களும் ஒரு வித அழுத்தமான அமைதியில் அடர்ந்து இருந்தது.

சிவசு ஐயா பல விதமான குழப்பத்தில் இருந்தார். "இத்தனை ஆண்டுகள் இருவரும் தொடர்பில் இருந்திருப்பார்களோ? இல்லையென்றால் அவளுடைய என்றுமில்லாத அலங்காரத்திற்கு வேறு அர்த்தம் தெரியவில்லையே? இவளை விவாகரத்து செய்து விட வேண்டியது தான். பிள்ளைகள் இருவரும் மதுரையில் தான் படிக்கிறார்கள். இவளில்லாமல் அவர்களை சமாளித்து விட முடியாதா? " என பல விதமான எண்ணச் சூழல்களில் சிக்கிச் சுழன்று கொண்டு இருந்தார்.

சியாமளா வேறு விதமான சிந்தனையில் சிக்கிக் கொண்டு இருந்தாள். அந்த நிமிட கோபத்திலும், வெறுமையிலும், அவனைப் பார்த்த சந்தோஷத்திலும் சொல்லி  விட்டாளே ஒழிய வேறு எந்த விதமான அந்தரங்க ஆசையும் அவளிடம் இல்லை. தன் மனம் அவனிடம் செல்வதைக் கூட, தன் கணவனிடம் உண்டான அன்பை அதிகரித்துக் கொண்டு தான் தடுக்க வேண்டும் என முடிவெடுத்தாள். ஆனால் அவரது இறுக்கம் அவளுக்கு மூச்சு முட்டியது. . எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் தானாக சென்று பேசி சுமுகம் ஆக்கிக் கொள்ளும் திறமை படைத்தவள் தான். ஆனால் நெருங்கி இருக்க வேண்டிய சிவசு ஐயாவிடம் அவளால் நெருங்க முடியவில்லை. இயல்பான நேரங்களில் பேச முடிகிறதே தவிர இறுக்கமான நேரங்களில் அவரது மௌனம் அவர்களுக்கிடையே ஒரு அரணாய் நின்று விடுகிறது.

அன்று இரவு அவர் படுத்ததும் மெல்ல பக்கத்தில் போய் அவர் காலை பிடித்து விட போனாள். விருட்டென்று இரு கால்களையும் சுருக்கிக் கொண்டவர் போர்வையை இழுத்து தலை வரை மூடினார். " என்னை மன்னிச்சிருங்க, ஏதோ ஒரு வேகத்தில சொல்லிட்டேன். மற்றபடி நான் வாழ்ற வாழ்க்கையில சந்தோஷமாத்தான் இருக்கேன். " இன்னும் எவ்வளவோ பேச நினைத்தாலும் அழுகையும் துக்கமும் சேர்ந்து தொண்டையை அடைக்க வெறும் தரையில் தலையணையை தூக்கி போட்டு படுத்து கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனாள்.

அடுத்து வந்த நாட்களில் அவர் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது போல் இருந்தாலும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அவரது தேவைகளை ஒற்றை வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொறுமை காத்துக் கொண்டு இருந்தாள். அவர்களுக்கிடையே தாம்பத்தியம் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய பிரச்னையும் பனி போல் விலகி இருக்கும். அதற்க்கு வழி இல்லாமல் இருந்தது.

கொஞ்ச நாள் சியாமா தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று தவிர்த்து ஒரு வாரம் கழித்து சந்துரு அவர்கள் வீட்டிற்க்கு புறப்பட்டான்.அதிகம் பேர் கண்ணில் படாமல் தப்பலாம் என்று மதியம் மூன்று மணியைத் தேர்ந்தெடுத்தான். டிரைவரிடம் அவர்கள் வீடு எங்கே இருக்கிறது என்று ஏற்கனவே கேட்டு வைத்து இருந்தான். வீட்டிற்க்கு கொஞ்சம் தள்ளி உள்ள சந்தில் காரை பார்க் செய்து வந்து கதவில் மெல்ல தட்டினான்.
கதவைத் திறந்த சியாமா அதிர்ச்சி ஆகி சுதாரித்துக் கொண்டு " வாங்க" என்றாள்.

' ரொம்ப வருஷங்களுக்கு பின்ன ஸ்கூல் இல உன்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டேன். ஷ்யாம். என்னால உன்னை மறக்க முடியல. நீயும் நிச்சயம் அப்படித்தான் இருந்திருப்ப. அது உன் பார்வையிலே தெரிஞ்சது. என்னடா, ஒண்ணுமே பேசாம இருக்கிற? ' அவசரம் பிடித்தவன் அவள் என்ன நினைக்கிறாள் என்பதே தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவோடு பேசிக்கொண்டிருந்தான்.

அவன் இப்படி நேரிடையாக விஷயத்துக்கு வந்ததும் அவனை முகத்தில் அடித்தாற் போல் விரட்டுவதா இல்லை மென்மையாக புரிய வைத்து அனுப்புவதா என்ற குழப்பத்தில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'என்ன ஷ்யாம் என்னைப் பார்த்த சந்தோஷத்தில உனக்கு பேச்சே வரல்ல போல் இருக்குது. இப்போ நீ மட்டும் ம்ம்ம் னு சொல்லு ஐயா, என்ன கேட்டாலும் கொடுத்து உன்னை என்னோட கூட்டிட்டு போய்டுறேன். '

சேறு எனக் கண்டு விட்டோம் என்றால் தன் மீது தெறித்து விடாமல் ஒதுங்கிச் செல்வது தான் புத்திசாலித்தனம். மீறிக் கோபத்தில் அதனை உதைத்தால் அசிங்கப் படப் போவது தான் தான் என்பதை புரிந்தவளாய் சரம் சரமாய் வார்த்தைகளை கோர்த்து அவனை அழுத்தமாகப் பார்த்த படி சொன்னாள். " அவுக இல்லாத நேரத்தில நீங்க இங்க வரது எனக்கு பிடிக்கல. அதுவும் இந்த மாதிரி பேசுறது சுத்தமா பிடிக்கல. " என்றாள். அப்போது தான் தன்னை அவள் அமரக் கூட சொல்லவில்லை என்பது உரைத்தது.
"இல்ல ஷ்யாம், " என்று இழுத்தான். அவள் இறுக்கமான முகத்துடன் வாசலைப் பார்ப்பதைப் பார்த்து முகம் தொங்கிப் போக வெளியேறினான்.

பள்ளியில் மனம் ஒரு நிலைப் படாமல், சிவசு ஐயா வீட்டுக்கு போய் ஒரு தூக்கம் போட்டால் நல்ல இருக்கும் போல் தோன்ற அரை நாள் விடுப்பு சொல்லி வந்து கொண்டு இருந்தார். அவரை தூரத்தில் பார்த்ததுமே மனதுக்குள் ஒரு திருட்டுத்தனம் எட்டிப் பார்க்க தனது தொங்கிப் போய் இருந்த முகத்தை இஸ்திரி செய்தது போல் மாற்றிக் கொண்டு முக மலர்ச்சியுடனும் துள்ளல் நடையுடனும் அவரைப் பார்க்காதது போல் சென்று காரில் ஏறி புறப்பட்டான் சந்துரு .

அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்க்கு மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.

(இன்னும் வரும் )

07 August, 2011

சிவசு வாத்தியார் -Part II

(பாகம் ஒன்றிலிருந்து கொஞ்சம் ......

எண்ணி விடலாம் சேர்ந்து இருந்த நாட்களை. அப்படிப் பட்ட அற்புதமான நாட்களில் உருவானது தான் இரண்டு முத்துக்கள்.

மற்ற சந்தர்ப்பங்களில் அவளை ஒரு மனுஷியாக மதித்து அவளது ஆசா பாசங்களுக்கு முக்கியத்துவமே தரத் தோன்றியதில்லை. இயல்பிலிருந்து தான் விலகி இருப்பதாகவே தோன்றியது. சிந்தித்த படியே கண் அயர்ந்து விட்டார். "ஐயா, வீட்டுக்கு போகலிங்களா ஐயா ?" என்று பள்ளி யின் பணியாள் வந்து குரல் கொடுத்ததும் தான் விழித்தார்.

மறு நாளில் இருந்து தனது வாழ்க்கையில் இடி மின்னல் புயல் வரப் போவதை உணராமல் வீட்டுக்கு கிளம்பினார்.)
இனி தொடருங்கள் .... 

மறு நாள் மாலை பள்ளி ஆண்டு விழாவுக்கு புறப்பட்டுக்  கொண்டு இருந்தார்கள்.
"சியாமா! சீக்கிரம் மா . விழா தொடங்கிடும். "
"இதோ "

என்றபடி மெல்லிய ரோஜா வண்ண புடவையில், எடுப்பாக தெரியும் படி கருக மணி மாலையை தவழ விட்டு  தலையில் வைத்த பூவை சரி செய்த படியே வந்தாள். அவளது நீள முடிக்கு நீளமாக பூ வைத்தால் தான் அழகு. என்னமோ வைப்பதில்லை. ஆனால் இன்று எல்லாமே ஸ்பெஷல் தான்.

ஒரு நிமிடம் அவளைப் பார்த்ததும் சிவசு ஐயாவுக்கு கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதெல்லாம் செய்ய வேண்டிய வயதில் செய்ததில்லை. இன்று செய்ய வேண்டும் போல் இருக்கிறது. வெட்கம் தடுக்கிறது.

"என்ன மனுஷன்! ஒரு பாராட்டு வாய் வார்த்தையாய். இல்ல சின்ன ஒரு இமை உயர்த்தல். மரக்கட்டை போல வாழும் இந்த மனிதரிடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது என் தவறு." என்று எண்ணியபடி சியாமா தன் விரல் நுனிகளால் தலையில் லேசாக தலையில் தட்டிக் கொண்டாள்.

அதைக் கவனித்து விட்ட ஆசிரியர் " என்னம்மா எதையாவது மறந்திட்டியா? " என்றார்.
" ஆமா ... எல்லாமே மறந்து போச்சு" என்று முணுமுணுத்த படி " வாங்க போகலாம்" என்றாள்.

பள்ளி பக்கத்தில் தான் என்பதால் நடந்தே போய் விடுவார்.  ஸ்கூட்டர் ஒன்று வைத்து இருக்கிறார். அந்த காலத்திய வெஸ்பா. எப்போவாவது எடுப்பதுண்டு. எப்பொழுதும் துடைத்து துடைத்து அழகு பார்ப்பது தான் . இப்படித்தான் சிலர், உபயோகித்தால் வீணாகி விடும் என்று ஒரு பொருள் உருவானதன் பயனையே வீணாக்கி விடுகிறார்கள்.

இன்று இவ்வளவு அலங்காரத்துடன் அவருடன் நடந்து செல்ல கூச்சமாக இருந்தது. இன்றாவது வண்டியை எடுப்பாரானு எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். "பக்கத்தில தான எட்டி நடை போட்டா பத்து நிமிஷம் தான் " என்ற படி வேகமாக நடக்கத் தொடங்கி விட்டார். இவ்வளவு அலங்காரத்தோட அவரை பிடிக்க ஓட்டமும் நடையுமாக செல்வது அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

ஆனாலும் இந்த அலங்காரத்திற்கு காரணம் உண்டு. ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்க வருவது ஒரு பெரிய மில் அதிபர் சந்திரசேகரன் என்று சொல்லி இருந்தார். அது தன்னை கல்லூரி நாட்களில் விழுந்து விழுந்து காதலித்த சந்துரு வாக இருக்குமோ என்ற நப்பாசை தான் காரணம். அவனோட அப்பாவும் மில் தானே வைத்து இருந்தார். ஆனாலும் அவனோட மாமரத்து நிழலில பேசிக்கிட்டு இருக்கும் போது அவனோட  அப்பா  புல்லேட்ல வந்து இருவரையும் மிரட்டி அவனை இழுத்து வண்டியில போட்டுக்கிட்டு போன பிறகு அவனைப் பற்றிய தகவலே யாரும் சொல்லவில்லை. சியாமாவும் ஒரு காலத்துக்கு அப்பறம் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாம இந்த  சிவசு வாத்தியாருக்கு கழுத்தை நீட்டி காலமும் ஓடி போச்சு.

பள்ளிக்கு போனதும் சியாமளாவை ஒரு இடம் பார்த்து அமர வைத்து விட்டு வாத்தியார் தன் வேலைகளைப் பார்க்க போய் விட்டார். சியாமளாவுக்கு படபடப் பாக இருந்தது. கார்கள் விரையும் சத்தம் கேட்டதும். காரிலிருந்து இறங்கியது அவனே தான். வருடங்கள் ஓடியதால் கொஞ்சம் பூசினார் போல் இருந்தான். நிறம் கொஞ்சம் கூடி இருந்தது, சியாமளாவைப் பார்த்ததும் கண்கள் விரிய புன்னகைத்தான். அதைப் பார்த்த தலைமை ஆசிரியர் " எங்கள் பள்ளி சிவசு ஐயாவோட மனைவி. " என்றார்.

அவன் இரு கரம் கூப்பி வேகமாக நடந்தான். கொஞ்ச தூரம் போனதும் பின்னால் இருப்பவரிடம் எதோ கேட்கப் போவது போல் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் ஒரு திருப்தியோடு மேடை ஏறினான்.

இந்த நாடகத்தை சிவசு வாத்தியார் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தார். அவள் அதிகப் படியான அலங்காரமும், படபடப்பும் சந்திர சேகரனின் நடையில் இருந்த கர்வமும் ஏதோ சொல்வது போலவும் இருந்தது.தனது எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.  பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது. இடை இடையே அவர் சந்துருவையும் சியாமா வையும் பார்க்கும் போது இருவரது பார்வையும் நேர்கோட்டில் இருப்பது போலவே பட்டது. சந்துரு பேச எழுந்தவன் "உங்கள் எல்லோரையும் பார்த்ததில் நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் . இந்த பள்ளியின்  ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்பதை  என் பாக்கியமாக கருதுகிறேன். ஒரு பொருளை தொலைத்த இடத்தில தான் தேட வேண்டும் என்பார்கள் ஆனால் நானோ எங்கள் ஊரில் தொலைத்த என் சந்தோஷத்தை உங்கள் பள்ளியில் கண்டு எடுத்து இருக்கிறேன். பள்ளியில் ஒரு கட்டடம் கட்ட டொனேஷன் வேண்டும் என்று உங்கள் தலைமை ஆசிரியர் கேட்டு இருந்தார். அந்த கட்டடத்தின் மொத்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்...."
அரங்கம் கை தட்டலால் அதிர்ந்து கொண்டு இருந்தது.

சிவசு ஐயா சியாமளாவை பார்த்தார். அவள் கற் சிலை போல் நின்றிருந்தாள். பயமும் பதற்றமும் அவருக்குள் ஊறியது. தேவை இல்லாத கற்பனை என்று ஒதுக்க முயன்றாலும் நடப்பவை எல்லாம் அவர் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்துவதாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து ஆசிரியருக்கும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருக்கு அதில் கலந்த கொள்ள விருப்பம் இல்லை. அவளை கூட்டி கொண்டு அந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும் போல் இருந்தது. ஏன் அந்த ஊரை விட்டே எங்காவது போய் விட்டால் தேவலை போல் இருந்தது.

"என்ன ஐயா கிளம்பிட்டீங்களா? " சந்துருவிடம் இருந்து கிளம்பிய கேள்வி சிவசு ஐயாவிடமும்,  பார்வை அவர் மனைவி இடமும் இருந்தது.
" ஆமாங்க, கொஞ்சம் அவசர வேலை."
"எப்படி போவீங்க?"
"இந்தா இங்க பக்கத்தில தான். நடந்தே போய்டுவோம்."
"நோ நோ, என் கார் ல டிராப் பண்ண சொல்றேன் "
அவர் மறுக்க மறுக்க காரில் அவர்களை அனுப்பி வைத்தான். அதில் அவர்கள் வீட்டை தெரிந்து கொள்ளும் கள்ளத் தனமான ஆவலும் அடங்கி இருந்தது.

வழி முழுவதும் ஒன்றுமே பேசாமல் வந்தார். வீட்டிற்க்குள் சென்றதும் கதவை சாத்தி " உனக்கு அவரை முன்னமே தெரியுமா? " என்றார்.
"யாரை?"
"மிஸ்டர். சந்திர சேகர்"

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

(இன்னும் வரும் )

03 August, 2011

சிவசு வாத்தியார் part I

நிறைய புது வரவு இருப்பதாலும், புதிய கதை எழுத நேரத்தட்டுப்பாட்டாலும், பழைய கதை புதிய மொந்தையில் !!
சிவசு வாத்தியார்.
கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அவரது நடையில் ஒரு மெல்லிய சோகம்.
இன்றோடு இருபது ஆண்டுகளாக சுமந்து கொண்டிருந்த சோகத்தை இறக்கி விடலாம்.
அவரது அறுபதாம் கல்யாணத்தை சிறப்பாக கொண்டாட பிள்ளைகள் திட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சி தான்.
அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம்.
இன்றோடு அவருக்கும் சியாமளாவுக்கும் இருந்த திருமண உறவு முறிகிறது.

சிவசு ஐயா நாற்பது ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கும் காரைக்குடிக்கும் இடையேயான நத்தம் என்ற கிராமத்துக்கு ஆசிரியராக வந்து சேர்ந்தார். நல்ல உயர்ந்த ஆஜானுபாகுவான தோற்றம். அசப்பில் அன்றைய ரங்காராவ் . மாணவர்கள் அவரை சினிமா கதாநாயகன் போல் கவனித்தார்கள். அவர் சொல்வது தான் மாணவர்களுக்கு வேத மந்திரம்.

அவரது உயரத்திற்கு பொருத்தமாய் திருமாலுக்கு லக்ஷ்மி போல் கூட வந்தாள் அவரது மனைவி சியாமளா.இருவருக்கும் இடையே பத்து வயது வித்தியாசம். இருவரையும் கிராமமே கொண்டாடியது. ஆதர்ச தம்பதிகளுக்கு ஒரு உதாரணமாக. . காலையில் காபி டபராவுடன் இருவரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டு இருப்பதை வயலுக்கு போகும் அவசரத்திலும் கவனித்து புன்னகைக்கும் கிராம மக்கள்.

எந்த ஒரு பரபரப்பும் இன்றி வாழ்க்கையை ரசித்து சுவைக்கும் ஒரு குடும்பம். அழகழகாய் ஆணொன்றும் பெண் ஒன்றுமாய் இரு பிள்ளைகள். இரவு படுத்த படி அவர் கதைகளை உரக்க படிக்க, வேண்டாம் வேண்டாம் என்றாலும் கூட  கால்களைப் பிடித்து விட்ட படி சியாமளா அதை கேட்பது வாடிக்கையாய் இருந்தது. காவியக் குடும்பம்.

அன்று  பள்ளியில் ஆண்டு விழாவுக்காக மாணவர்கள் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்க மீதி மாணவர்கள் வகுப்பில் இருந்தனர். 

வாத்தியார் "இப்போ எல்லோரும் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குது. எப்படி இருக்கணும்னு ஆசைப்படுறீங்கனு ஒவ்வொருத்தராய் வந்து சொல்லுங்க பார்ப்போம் " என்றார்.  

வேகமாய் எழுந்து வந்த ஒரு மாணவன் " ஐயா ! நான் பெரியவன் ஆனதும் உங்களைப் போலவே வாத்தியார் ஆகணும். எங்க அப்பா எப்போ பார்த்தாலும் அம்மாவை அடிச்சிட்டே இருப்பார் ; அப்படி இல்லாம வீட்டிலேயும் உங்களைப் போலவே அன்பா இருக்கணும்."  என்று சொல்லி விட்டு உலகத்துக்கே மிகச் சிறந்த ஒரு சேதியை சொல்லி வந்ததைப் போன்ற பெருமிதத்துடன் நடந்து சென்று அமர்ந்தான். 

மற்றுமொரு மாணவன் " ஐயா ! நான் ஆட்சி தலைவர் ஆகணும். நான் பேசிற எல்லா கூட்டங்களிலும் நான் இப்படி வருவதற்கு சிவசு ஐயா தான் காரணம்னு சொல்லணும். 
இப்போ எங்க வீடு சுத்தமே இல்லாம இருக்கு. நான் பெரியவன் ஆனா எங்க வீட்டை உங்க வீடு போல சுத்தமா வைச்சுக்கணும். " என்றான்.

மொத்தத்தில் எல்லா மாணவர்களுமே  சிவசு ஐயாவை ஒரு ரோல் மாடலாக சித்தரித்து பேசி முடித்தார்கள். இது இன்று நேற்றல்ல . பல ஆண்டுகளாக ஐயாவின் மாணவர்களின் நிலைப்பாடு இது தான்.ஐயாவுக்கு சந்தோஷமாக இருந்தாலும் கூட " எல்லோரும் என்னைப் போல இருக்கணும்னு சொன்னதில எனக்கு சந்தோசம் தான். இருந்தாலும் நானும் ஒரு மனிதன் தான். தவறுகள் செய்யலாம். என்னை முன்னோடியாக கொள்வதற்கு பதிலாக நீங்கள் எப்படி எல்லாம் இருக்கணும்னு நினைக்கிறீங்களோ அந்த குணங்கள் கொண்ட ஒரு மனிதனை கற்பனை முன்னோடியாக வையுங்கள். தினம் தினம் உங்களுக்கு அறிமுகம் ஆகும் நல்ல குணங்களால் அவரை அழகு படுத்துங்கள். அந்த மனிதன் ஒரு போதும் தவறு செய்ய மாட்டார். அந்த மனிதரைப் போல நீங்கள் ஆக முயற்சி செய்யுங்கள்." என்றார். 

பேசிக் கொண்டிருக்கும் போதே பள்ளி மணி அடிக்க மாணவர்கள் மாலையில் கூடு திரும்பும் பறவைகளைப் போல சல சலத்து கலைந்தனர். அதில் சில மாணவர்கள் ஆசிரியரின் அருகில் வந்து ' இரவு வணக்கம் ஐயா' என்று சொல்லி ஓடினர். சிவசு ஐயாவுக்கு தான் பேசிய வரிகளில் ஒன்று மட்டும் மறுபடி மறுபடி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. "நானும் ஒரு மனிதன் தான். தவறுகள் செய்யலாம்." அப்படியே இரு கைகளாலும் தலை முடியை பின்னுக்கு ஒதுக்கி விட்டபடி நாற்காலியில் சாய்ந்தார். " நான் ஏன் எல்லா மனிதர்களையும் போல உழைத்து களைத்து மனைவியை கூடி ஒரு சாதாரண வாழ்க்கை வாழ முடியவில்லை. தமிழக அரசின் விருது பெற்றது போன்ற மிகச் சந்தோஷமான நாட்களிலும், சாதத்தில் கள்ளிச் சொட்டாய் கருவாட்டுக் குழம்பு ஊற்றி  உருட்டிக் கொடுத்த தாய்க்கும் கம்பீரத்தைக் கற்றுத் தந்த தந்தைக்கும் திருமண வெள்ளி விழா  முடிந்த நிறைவிலும், இதைப் போன்ற இன்னும் சில சிறப்பான சந்தர்ப்பங்களில்  மட்டுமே மனைவியைக் கூடி இருக்கிறேன் காரணம் எதுவும் சொல்லாமல் சியாமளா அழுத போது அவளைச் சமாதானப் படுத்தி, அப்பொழுது கூட அழுததன் காரணம் கேட்காமல் பூனைக் குட்டி போல் நெஞ்சில் சாய்ந்திருந்தவளை ஆற்றுப்படுத்திய போது ஒரு முறை. "
எண்ணி விடலாம் சேர்ந்து இருந்த நாட்களை. அப்படிப் பட்ட அற்புதமான நாட்களில் உருவானது தான் இரண்டு முத்துக்கள்.

மற்ற சந்தர்ப்பங்களில் அவளை ஒரு மனுஷியாக மதித்து அவளது ஆசா பாசங்களுக்கு முக்கியத்துவமே தரத் தோன்றியதில்லை. இயல்பிலிருந்து தான் விலகி இருப்பதாகவே தோன்றியது. சிந்தித்த படியே கண் அயர்ந்து விட்டார். "ஐயா, வீட்டுக்கு போகலிங்களா ஐயா ?" என்று பள்ளி யின் பணியாள் வந்து குரல் கொடுத்ததும் தான் விழித்தார்.

மறு நாளில் இருந்து தனது வாழ்க்கையில் இடி மின்னல் புயல் வரப் போவதை உணராமல் வீட்டுக்கு கிளம்பினார்.

(இன்னும் வரும்)

20 March, 2011

பகல் வீடு - பாகம் II

வீட்டுக்கு வந்ததில் இருந்து என் மகனிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதே பெருங் குழப்பமாக இருந்தது. அவன் டிவி முன் அமர்ந்து ஒரு நொடிக்கு நூறு தரம் சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான், கூட அமர்ந்திருக்கும் தந்தையோ, தன் மனைவியோ எப்படி இதை சகித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே துளியும் இன்றி. "இப்படி மாற்றிக்கிட்டே இருந்தா என்ன புரியும் பாலா என்றேன்?"
"அப்பறம் உங்களை மாதிரி சீரியல் பார்க்கச் சொல்றீங்களா?"
பூமராங் போல் திரும்பிய பதிலில் நான் என் கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டேன். 

மெல்ல எழுந்து, அடுத்த அறையில் இருந்து, காகிதத்தில் பெயிண்டிங் செய்து கொண்டிருந்த பேரன் அருகில் அமர்ந்து,

"ஏண்டா செல்லம், வசதியா உட்கார்ந்து வரையலாம் தானே?" என்றேன். அவன் பதிலே பேசாமல் அவன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். கவனம் கலையாமல் ஒரு காரியம் செய்தால் தான் முழுமை இருக்கும் என்று அங்கே உட்கார்ந்து அவனை கவனித்துக் கொண்டிருந்தேன். முழுதாய் பதினைந்து நிமிடங்கள் ஆன  பின்னும் அவன் என்னிடம் பேசாமல் இருந்தது என்னை அலட்சியம் செய்தது போல் நினைக்க வைத்தது. 

வீட்டை சுற்றி என் பார்வையை சுழல விட்டேன். நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. நீளமாக வரிசை வரிசையை தொங்க விட்டிருந்த மணிகள் காற்றுக்கு அசைந்து மெல்லிய நாதம் இசைத்துக் கொண்டிருந்தன . யார் கவனித்தாலும், அசட்டை செய்தாலும் தன் பணியை அது நிறுத்தியதே இல்லை. என் மனம் மட்டும் ஏன் இப்படி அலை பாய்கிறது. ஹாலில் என் பார்வை நின்றது. நான் எழுந்ததும் என் மருமகள், மகனின் காலடியில் நெருங்கி அமர்ந்து அவன் தொடையில் தலை சாய்த்திருந்தாள். இவர்களுக்கு நான் இடைஞ்சல் தானோ? 

என் அறைக்கு செல்லலாம் என்று எழுந்தேன். பேரனுக்கு இணையாக தரையில் அமர்ந்திருந்ததால் எழுந்ததும் இடது முழங்காலில் சுண்டியது போல் வலி. உடம்பின் எல்லா பாகங்களும் ஒரே நேரத்தில் தானே பிறக்குது, இந்த முழங்காலுக்கு மட்டும் ஏன் சீக்கிரம் வயசாகிடுது என்று நினைத்த படி என் அறைக்குள் சென்றேன்.
முந்திய நாட்களில் மகன் பேசியது நினைவுக்கு வந்தது. 
"எங்கேப்பா கிடைச்சது இந்த கர்ட்டன் . அது ஏன் தான் உங்க ரசனை இப்படி இருக்குதோ?"
"இத்தனை புத்தகங்களை வாங்கி அடுக்கி வச்சிருக்கீங்களே? எப்போவாவது புரட்டி இருக்கீங்களா? எல்லாம் துட்டுக்கு பிடிச்ச விரயம்." (மகனே விடிய விடிய படித்தாலும் அதை அடுக்கி ஒழுங்கு படுத்தி விட்டு நான் படுப்பது உனக்கு தெரியுமா?)
ஜன்னலோரத்தில் நான் தேடி தேடி வாங்கி வந்த ஈசி சேர். கால் பகுதியை   நீட்டியபடி சாய்ந்து அமர்ந்தேன். புத்தகம் படித்தபடியே உறங்குவதற்கு ஏற்ற வாகனம். அதை வாங்கி வந்த அன்று ,கொஞ்ச நேரத்திலேயே மருமகள் அதை எடுத்து போட்டு டிவி முன்னால் அமர்ந்தாள். எனக்குள் அப்பப்போ உண்டாகும் ஆழிப் பேரலை. 
"அலைஞ்சு திரிஞ்சு கடை கடையாய்  ஏறி இறங்கி வாங்கி வந்தால் நீ அதிலே மகாராணி மாதிரி சாஞ்சிகிட்டு இருக்கே" என்றேன். வெடுக்கென எழுந்தவள் அதை முரட்டுத் தனமாக மடித்து என் அறை வாசலில் சாய்த்து முணுமுணுத்தபடியே  சமையல் அறைக்குள் சென்றாள். உள்ளே பாத்திரங்கள் சில்வராய் இருந்ததால் உடையாமல் தப்பின. அதன் பின் அவள் சகஜமாகி எனக்கு சாதம் பரிமாற சரியாய் மூன்று மாதங்கள் ஆனது. 

 நான் பணியில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளிலேயே கடனை உடனை வாங்கி கட்டிய இந்த கட்டடம் இப்பொழுது எனக்கே அந்நியமாகிப் போனது போல் இருந்தது. மனைவி என்பவள் ஒரு பெரிய உறவுப் பாலம் தான். அவள் போன இரண்டு ஆண்டுகளுக்குள் உறவுகளுக்குள் எத்தனை இடைவெளி. என் மனைவி என்னிடம் காட்டிய பரிவை நினைத்தபடியே துணிமணிகளை எடுத்து ஒரு ரோலர் பெட்டியில் அடுக்கி வைத்தேன். ஓரங்கள் மடங்காமல் நேர்ப் படுத்தினேன் . ஒரு பையில் மற்ற சில்லறை சாமான்களை எடுத்து வைத்தேன். என் மனைவி இருந்த போது குடும்பத்தோடு எடுத்து லாமினேட் செய்திருந்த போட்டோவை எடுத்து ஒரு கைத்துண்டினால் துடைத்தேன். அவள் 'களுக் ' கென போட்டோவில் இருந்து சிரித்தது போல் இருந்தது. "எத்தனை நாள் கூத்துக்கு இந்த புறப்பாடு?" என்று கேட்பது போல் இருந்தது. 

"எங்கேப்பா? ஊருக்கு போறீங்களா?" குடும்ப புகைப் படத்தை எடுத்து வைப்பதை பார்த்தும் அசட்டுத் தனமாக கேட்டான் என் மகன்.
"பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் போகலாம்னு இருக்கேன்" எப்படி சொல்வது என்று பல விதமாக தயங்கிக் கொண்டிருந்தது போய் சிதறு தேங்காயாய்  உடைத்து விட்டேன். 
"என்னது?" அவன் போட்ட சத்தத்தில் என் மருமகளும், பேரனும் பயந்த படி அரை வாசலில் வந்து நின்றார்கள். அதன் பின் அன்று இரவும் மறு நாள் விடிந்த பின்னும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. நான் சிற்றுண்டிக்காக வந்து அமர்ந்ததும் ஒரு தட்டில் ஐந்து இட்லிகளும், வெங்காயச் சட்னியும், ஒரு கிண்ணத்தில் பொடியும் எண்ணையும் கலந்து அமைதியாகவே வைத்துச் சென்றாள். ஒவ்வொரு துண்டு இட்லியும் தொண்டையில் சிக்கி சிக்கியே உள்ளே இறங்கியது. இரண்டு பெட்டிகளையும் இரு கைகளில் எடுத்துக் கொண்டு 
"வரேன் பாலா, வரேன்மா , வரேண்டா செல்லம்" என்றபடி படிகளில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

03 October, 2010

நந்தினி !

நந்தினி பால்கனியின் கம்பிகளில் சாய்ந்து, கீழே எதையோ உன்னிப்பாக கவனித்துக் கொண்டு இருந்தாள். பிரபாகர் அங்கே கொஞ்ச நேரம் நின்று அவளையே ரசித்துக் கொண்டிருந்தான். அவள் நின்றிருந்த நிலை அவள் உடல் அமைப்பை ஒரு சிலை போல் அழகாக்கி அவனை உடனடியாக செயல்படத் தூண்டியது. மெல்ல சத்தமில்லாமல் அவள் அருகில் சென்றவன் அவள் இடுப்பை வளைத்த படி, வயிற்றில் விரல்களால் தாளமிட்டான். திடுக்கிட்டு தன்னை கட்டிக் கொள்வாள் என எதிர்பார்த்தால் அசைவில்லாமல் நின்று கொண்டிருந்தாள். அவள் பார்வையின் கோட்டைப் பிடித்த படி கீழே சென்றான். காரணம் புரிந்தது. அங்கே குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். ஆனால் அவள் கவனம் குழந்தைகளிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஏதோ தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருந்தாள்.

அவர்களுககு திருமணமாகி ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன. பெருசுகளின் பேச்சின் படி சொல்வதென்றால் " ஒரு பூச்சி பொட்டைக் காணோம் " இப்பொழுது தான் அவர்களின் குடும்ப வைத்தியர் சின்ன வயதில் அவனுக்கு வந்த பெரியம்மை, அணுக்களை மிகவும் பாதித்து இருக்கலாம் என்று  சொல்லி, ஒரு குழந்தையை தத்து எடுக்கும் ஆலோசனை சொல்லி இருந்தார். நந்தினி பாவம், அவள் திருமண ஆசையே குழந்தை என்பதை நடுப் புள்ளியாக கொண்ட வட்டமாக இருந்தது. தன் வாழ்வில் குழந்தைப் பேற்றுக்கு வாய்ப்பில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

பிராபகரிடம் ஒரு கெட்ட குணம் இருந்தது. அது சிக்கனத்தை தாண்டிய கஞ்சத்தனம். "இந்தக் காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்று வளர்த்து ஆளாக்க ஏகப்பட்டதை செலவழிக்க வேண்டி இருக்கிறது. உனக்கு நான், எனக்கு நீ குழந்தை தானே" என்று சொல்லிப் பார்த்தான். நந்தினியை வெறுமையில் இருந்து வெளியேற்ற முடியவில்லை. சரி ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று விசாரித்தால், சட்ட திட்டங்களும், அதற்கு செய்ய வேண்டிய செலவும் கண்ணைக் கட்டியது.

இப்பொழுது தான் உணர்வு பெற்றவளாக நந்தினி,
"எப்போ வந்தீங்க? "
"அதெல்லாம் அப்போவே வந்தாச்சு. நீ என்ன யோசனையில இருக்கிற? நான் வந்து உன் இடுப்பில தாளம் போட்டதைக்  கூட உணரல்ல. வேற எவனாவது வந்திருந்தா என்னத்துக்கு ஆகுறது. "
"ச்சீய்ய்யய்" என்று வெட்கப்பட்டாள். இதற்காகவே  இவளுக்கு எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனா ஒன்று கூட ,முடியலையே. அவன் சோர்வுறுவதைக் கண்ட அவள் உற்சாகமானவள் போல் மாறி ,
"வாங்க, ஒரு டீ சாப்பிட்டு, யாரோ நண்பனை பார்க்கணும்னு சொன்னீங்களே போகலாம்,"
சாகசக் காரி, தான் எதை நினைத்து மருகுகிறோம்கிறதை மறைமுகமாக உணர்த்தி விட்டாள். அந்த நண்பன், குழந்தை தத்து எடுக்கும் விஷயமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பவன்.

"நான் ரிப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுறேன். நீயும் கிளம்பு போயிட்டு வந்திடலாம். "
புறப்பட்டு வண்டியில் ஏறும்போதும் அவள் பார்வை அந்த காலனி குழந்தைகள் விளையாடிக்  கொண்டிருக்கும் பகுதிக்கு போய் உடனே மீண்டதை கவனித்தான்.
போற வழியில் ஒரு கோயிலைக் கண்டதும் " கொஞ்சம் வண்டிய ஒரு ஓரமா நிறுத்துங்க. உள்ளே போய் சாமிகிட்ட ஒரு வேண்டுதல் போட்டுட்டு வந்திடுறேன். " என்றாள் நந்தினி.
அவள் கோவிலுக்குள் செல்ல பிராபகர் செல்லில் அந்த நண்பனை அழைத்தான் " ரிச்சர்ட், நாங்க வந்து கிட்டு இருக்கோம். நீயும் தயாரா இருந்தா, நீ சொன்ன இடத்தில போய் பார்த்திட்டு வந்திடலாம். இன்னும் பிரசவம் ஆக ஒரு வாரம் தானே இருக்குது."
"வாங்க, ஏழைப்பட்ட குடும்பம். அவங்க புள்ளை ஒரு நல்ல இடத்தில வளரணும் அது தான் அவங்க விருப்பம். "
அதற்குள் நந்தினி வருவதைக் கண்டவன் பேச்சை முடித்து வண்டியை தயார் நிலையில் வைத்தான்.
மூன்று பேரும் சேர்ந்து ஒரு சேரிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.
"சார், வண்டிய ஓரமா நிறுத்திட்டு வாங்க. மண்ணில புதைஞ்சா சிரமம் ஆயிடும். 
மேடம், கொஞ்சம் பார்த்து ஓரமா வாங்க."
அவர்கள் சென்ற வீட்டு வாசலில், கூடி,  மலர்ந்த முகத்துடன் பேசிக் கொண்டு இருந்தவர்கள், இவர்களைப் பார்த்ததும், முணுமுணுத்தபடி ஒதுங்கினார்கள்.
"என்னம்மா? ஏதும் விசேஷமா?" என்றான் ரிச்சர்ட்.
" ஆமா, செல்லம்மா , ஆம்புளைப் புள்ளை பெத்திருக்கால்ல"அதைக் கேட்டதும், பிராபகரனின் வயிற்றுக்குள்  முளைத்து, வளர்ந்து, இதயத்தில் விரிந்தது ஒரு தாமரைப் பூ. இனி நந்தினியின் முகத்தில் சிரிப்பை பார்க்கலாம்.
"பரவா இல்லை சார்,நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்.  நாம நினைத்ததுக்கு ஒரு வாரம் முன்னமே பிரசவம் ஆயிடுச்சு."

ஒரு கிழிந்த பாயின் மேல் விரித்த பழைய சேலையில் துவண்ட தாமரைத்  தண்டாக படுத்திருந்தாள் செல்லம்மா. அவளுக்கு அருகே, நீர் பலூனில் இருந்து தற்பொழுது தான் தரையிறங்கிய  செல்லக் குழந்தை அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். குழந்தையின் அருகே சென்ற நந்தினி அதன் பட்டு விரல்களை தன் நுனி விரலால் வருடினாள். செல்லம்மாவின்  கணவன் பிரபாகரனையும், அவன் நண்பனையும் வெளியே அழைத்து சென்றான்.
"சார், நீங்க ரொம்ப நல்லவங்க. நான் கேட்டவுடனே பணத்தை தூக்கி கொடுத்திட்டீங்க. நானும் மூணு பொம்பளை பிள்ளைகளுக்கு பிறகு உண்டாகி இருக்கிறாளே, எங்கே ஆம்பிள பிள்ளை பெறப் போறான்னு பணத்தை வாங்கிட்டேன். இப்போ  மனசு சஞ்சலமா இருக்குது சார், இவன் வளந்து பெரியவனாகிட்டான்னா, மூணு அக்காவையும் கரை ஏத்த ஏந்தலா இருப்பான். கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து,  வாங்கின பணத்தை அடைச்சிடுதேன். " என்றான்.
இருவரும் திகைத்து நிற்கும் போது செல்லம்மா தன் கணவனை உள்ளே அழைத்தாள்.
நந்தினியின் முகத்தை மெல்ல ஏந்தியபடி " ஏங்க, இந்த புள்ளை முகத்தை பாருங்க. எவ்வளவு ஏக்கம், எவ்வளவு பாசம். நமக்கு இந்த புள்ளை போனா இன்னொண்ணு. சொன்ன சொல்ல காப்பாத்துங்க. " என்றாள். 
"ஏம்மா, நந்தினி நீ ஒரு உதவி மட்டும் செய்யணும். ஆம்புளப் புள்ள, தாயி கிட்ட எவ்வளவு பால் குடிச்சாலும் அதுக்கு வயிறு ரொம்பாது.அப்படி இருக்கையில நீங்க இப்போவே கொண்டு போய்ட்டா, அதுக்கு பசி அமர்த்த முடியாது. ஒரு மூணு மாசம் நான் வைச்சிருந்திட்டு அப்பறம் தந்துடுதேன், தாயீ."
நந்தினி அவள் கையை எடுத்து தன் இரு கைகளுக்குள் பொதிந்து கொண்டாள். "நீங்க கவலைப் படாதீங்க. நீங்க எப்போ சொல்றீங்களோ அப்போ கொண்டு போறோம்." என்றாள். அதற்குள் அவள் கண்கள் நிறைந்தன .

அதன் பின் தினம் பிரபா அலுவலகம் முடிந்து வரும் போதே நந்தினி தயாராக இருப்பதும் இருவருமாக குழந்தையை பார்க்க செல்வதும் திரும்பும் போது குழந்தைக்கு தேவையான ஏதாவது ஒன்று வாங்கிக் கொண்டு திரும்புவதுமாக  மூன்று மாதங்கள் தொடர்ந்தன. நந்தினி திருமணமாகி இவ்வளவு ஆண்டுகளில் இத்தனை சந்தோஷமாக பார்த்ததில்லை என்று பிராபகரன் நினைத்தான். 
அன்று குழந்தையை வீட்டுக்கு கொண்டு செல்ல தயாராக வந்திருந்தார்கள் தம்பதியர். செல்லம்மா ஏதோ ஒரு கலக்கத்தோடு குழந்தையை கையில் கொடுத்தாள். கையில் குழந்தையை  வாங்கிய நந்தினியிடம் " கண்ணு, குழந்தையை கழுத்தோடு சேர்த்து பிடுச்சுக்கோ. அது என்னனு தெரியல, இத்தன நாளாகியும் கழுத்து இன்னும் ஓரக்கல." என்றாள். நந்தினிக்கும் குழந்தையின் பார்வை ஏதோ நிலைப்படாமல் இருப்பது போல் தோன்றியது. 
"என்னங்க, போற வழியில நம்ம டாக்டர்ட குழந்தையை காட்டிட்டு போய்டுவோம். " என்றபடி நந்தினி காரில் ஏற , பிராபகர் பின் தொடர, செல்லம்மா குடும்பத்தினர் அத்தனை பேரின் கண்களும் அவர்களை தெரு முனை திரும்பும் வரை பின் தொடர்ந்தன. 

குழந்தையை  பார்த்த டாக்டர் ஒரு வெடி குண்டை சர்வ சாவகாசமாக வீசினார். 
"என்ன  பிராபகர், குழந்தையை தத்து வாங்கும் முன்ன யாரையாவது கன்சல்ட் செய்திருக்க வேண்டாமா? இட் லுக்ஸ் லைக் எ ஸ்பெஷல் சைல்ட். மூளை சரியாக வளர்ச்சி அடையாத குழந்தை போல இருக்குதே. என்னம்மா நந்தினி, நீயாவது சொல்லி இருக்க கூடாதா? " என்றார்.
நந்தினி பிரமை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள். 
பிராபகர்," டாக்டர், என்ன சொல்றீங்க. சரியா பாருங்க .அப்படி நீங்க சொல்றது சரியா இருக்கிற பட்சத்தல, அப்படியே கொண்டு போய் பெத்தவங்கள்ட்டயே குடுத்துட வேண்டியது தான். பிராடு பய. " என்றான். அவன் குரல் நடுங்கிக் கொண்டு இருந்தது. 

டாக்டர் தான் சொல்வதில் சந்தேகம் இல்லை என்றும் அவர்கள் விரும்பினால் வேறு சிறப்பு மருத்துவர் யாரையாவது  பார்க்கும் படியும் சொல்லியதும்,  பிராபகர் வெளியே செல்ல, நந்தினி இயக்கப்பட்ட ரோபோ போல பின்தொடர்ந்தாள். 
"டிரைவர், வண்டிய வந்த வழியிலேயே திருப்புங்க " என்றான் பிரபா. 
உடனே நந்தினி " இல்லைங்க, நம்ம வீட்டுக்கே போகலாம்."
"அதுவும் சரி தான், என்ன சொல்லித் திருப்பிக் கொடுக்கலாம்னு நிதானமா யோசிச்சிட்டு அங்கே போகலாம்." - பிரபா
வீடு வரை நந்தினி அமைதியாகவே வந்தாள். இடையிடையே குழந்தையை பார்ப்பதும் , தன் கண்களை துடைப்பதும் தான் அவள் இன்னும் சாகவில்லை என்பதன் அடையாளம்.
வீடு வந்தும் ரொம்ப நேரம் அதே அமைதி தொடர்ந்தது. 
"என்னம்மா, நந்தினி, என்ன சொல்ற? நீயுமாச்சு, உன் புள்ளையுமாச்சு. பிடின்னு குடுத்திடலாம். ராஸ்கல், பணத்துக்கு தான் இழுப்பான். அதையும் நீயே வச்சுக்கோன்னு சொல்லிட்டா சரினுடுவான். " 
"இல்லைங்க, என்ன பாவம் செய்தோமோ, இத்தன வருஷமா எதுவுமே உண்டாகல. நமக்கே ஒரு பிள்ளை இப்படி பிறந்திருந்தா தூக்கிப் போட்டுருவோமா? இருக்கட்டும். " என்ற படி குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள். எத்தனை முறை கலங்கினாலும் , குட்டை நிமிடத்தில் தெளிவாவது போல் சட்டென தெளிந்திருந்தாள். 
காலம் உருண்டோடியது.
ரேசில் ஓடுற எல்லோருமா முதலாவது வர முடியுது. அதிலும் கடைசியாக வருபவர் ஒருவர் இருக்கத் தானே செய்கிறார். அப்படி குழந்தை மெல்ல மெல்ல முன்னேறி வந்தது.
அன்று,
குழந்தை தூங்கிக் கொண்டு இருந்தான். பிரபாகரனின் தோளில் சாய்ந்த படியே நந்தினி கிசுகிசுத்தாள், " ரெண்டு மாசமாச்சு ....."
மீண்டும் பிராபகரனின் நெஞ்சில் தாமரைப் பூ பூத்தது. 

11 July, 2010

மரண நிமிடங்கள் - நிறைவு பாகம்

"ஒரு லட்சமா?  யாருட்ட இருக்கு அவ்வளவு  பணம் ."
"டேய், இப்படி சொன்னா எப்படிடா? அவர் நல்லா இருக்கிறப்ப உழைச்சதை எல்லாம் நமக்கு தானடா செலவு செஞ்சாரு தனக்குன்னு ஒத்த பைசா எடுத்து வைக்காத மனுஷன்டா அவரு. "
தன் மனைவி மகனிடம் கெஞ்சிக் கொண்டு இருப்பதை வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார் ராஜன்.
"சரி எப்படியாவது ஐம்பதாயிரம் புரட்டறேன் மீதிய தம்பிகிட்ட வாங்கிக்கோ." தந்தையைக் காப்பாற்ற பங்கு போட்டுக் கொண்டு இருந்தான். எப்படியோ உருண்டு புரண்டு  பணத்தைப் புரட்டி ராஜனைக்  காப்பாற்றி  விட்டாள் அவர் மனைவி.

கைத்தாங்கலாக காரில் இருந்து இறக்கி வீட்டிற்குள் கூட்டி வந்தாள். வீட்டிற்கு வந்த பின் தான், தான் செய்த முட்டாள்தனம் முழுவதும் புரிந்தது ராஜனுக்கு . பென்ஷன் தொகை அவரது மருந்துக்கே முழுவதும் செலவாக வீட்டுச் செலவுக்கு தாயை கெஞ்ச வைத்துக் கொண்டு இருந்தார்கள் மகன்கள் இருவரும்.

ஒரு நாள்
"டேய் பெரியவனே, மஞ்ச மசாலா வாங்க கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு போடா"
" போம்மா , உன்னோட பெரிய ரோதனையா போச்சு, எப்ப பாரு கொடு கொடு னு உசிரை வாங்கறே. " தன் இரத்தத்தை பாலாக்கி தந்த தாயை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி இருந்தான்.
" அவர் வாங்கின தெல்லாம் உங்களுக்கு தானடா கொடுத்தாரு."
"ஆமா கொடுத்தாரு . கொடுத்ததை போல பத்து மடங்கு புடிங்கிடுவாரு போலிருக்கு.  "
மகனும் நல்லவன்  தான். அப்பா திடீர்னு அஞ்சு லட்சம் கொடுத்ததும் மேல பாதிக்கு  கடனை போட்டு ஒரு வீட்டை வாங்கி விட்டான். அவன் நிதி நிலைமை அவனை கல் நெஞ்சக் காரனாய் ஆக்கி விட்டது

ராஜனுக்கு எப்போதுமே வெளிப்படையாய் பேசி பழக்க மில்லை. தன் மனைவி ஒவ்வொரு முறை மகன்களிடம் உதவி கேட்பதும் அவர்கள் உதறிப் போவதையும் கவனித்துக் கொண்டிருந்தார். "உடம்பு கொஞ்சம் நல்லா ஆனதும் மறுபடியும் வேலைக்கு போய் விட வேண்டியதுதான். இந்த பயல்கள்ட வாங்கின பணத்தை எல்லாம் தூக்கி வீசிடணும்." என்று மனதுக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தார். என்ன வேலை பார்ப்பது  என்ற சிந்தனையிலே நேரத்தை போக்கி கொண்டு இருந்தார்.

" ஐயா சுகமா இருக்கீங்களா?"
" வாய்யா சிதம்பரம், வியாபாரம் நல்லா போகுதா? "
"ஏதோ போகுது. இப்போ தான் எந்தக் கடை தொறந்தாலும் உடனே தெருவுக்கு நாலு கடை தொறந்து போடுதான். "
"உனக்கு கடைக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுதாய்யா  "
"யாரும் சின்ன பையங்க வேலை தேடிட்டு இருக்காங்களா?"
"இல்லப்பா, எனக்கு தான் நேரமே போக மாட்டேங்குது. உன் கடைக்கு வந்தா வேலையும் பார்த்தாப்பல ஆச்சு நாலு ஆளைப் பார்த்தாப்ல இருக்கும்."
"போங்கையா உங்களுக்கு எப்பவும்  விளையாட்டு தான்.உடம்ப நல்லா பார்த்துக்கோங்க ஐயா"

வருபவர் போவோரிடம் எல்லாம் ராஜன் தனக்கு வேலை வாய்ப்பு தேடி அழைப்பு விடுவதும் அவர்கள் அதை விளையாட்டாய் நினைத்து சிரித்து பேசி போவதும் வழக்கம் ஆகியது. திடீரென்று அவருக்கு தனது நண்பன் பாரதி,  ஹோட்டல் வைத்து இருப்பது நினைவு வந்தது,
"வீட்டுக்குளேயே  இருக்கிறது ரொம்ப அசதியா இருக்கு கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன்" என்று சொன்னபடி மனைவியின் சொல்லுக்கு காத்திருக்காமல் வேகமாக நடந்தார்.
ஓட்டமும் நடையுமாக பெண்கள் வேலைக்கு போய் கொண்டு இருந்தார்கள். குழந்தைகளை மூட்டைகளாய் உள்ளே அடைத்து,  மேலே அவர்களின் பைகளை அடைத்து ஆட்டோக்கள் விரைந்து  கொண்டு இருந்தன.  தன்னைத்  தவிர எல்லோரும் அவசர கதியில் இருப்பது போல் இருந்தது.
"ராஜன், எப்படியா இருக்கிற?"
குரல் கேட்டதும் தான் ஹோட்டல் பாரதியை தாண்டி தான் சென்று விட்டது புரிந்தது.
"உன்னை பார்க்க தானப்பா வந்தேன்."
"வா உள்ளே வா. "
"தம்பி மாஸ்டர்ட ஸ்ட்ராங் ஆ ஒரு காபி போடா சொல்லு"
"உட்காரு ராஜன், உடம்பு இப்போ எப்படி இருக்கு, பேத்தி என்ன சொல்றா"
"எல்லோரும் நல்லா இருக்கோம். எனக்கு உன் ஹோட்டல்ல ஒரு வேலை வேணும்ப்பா" நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். அவர் நடந்த விஷயங்களை சொல்ல சொல்ல "இங்க வாப்பா இது உன் ஹோட்டல் " என்று சொல்லி எழுந்து கல்லாவில் அவரை உட்கார வைத்தார்.   அன்றிலிருந்து தொடங்கியது அவரது பணி. ஆனால் அவருக்கு தான்   அந்த வேலை சரிப்பட்டு வரவில்லை. ஒவ்வொரு நாளும் பில் தொகைக்கும் கல்லா தொகைக்கும் கணவன் மனைவி சண்டை தான். ஒரு நாளும் ரெண்டும் ஒத்து இருந்ததே இல்லை. முதல் நாள் பாரதி வியாபார நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அடுத்தடுத்த நாட்களில் அவர் குரலில் சலிப்பு தெரிந்ததால் துண்டு விழும் தொகையை ராஜன் தன் பையில் இருந்து போடத் தொடங்கினார். ஒரு மாதம் முடியும் போது இது தனக்கு சரிப்பட்டு வராது எனத் தோன்ற நண்பனிடம் சொல்லி நின்று கொண்டார்.

ரொம்ப யோசனைக்கு பிறகு பழகிய வேலை தான் தனக்கு சரிப்படும் என்று முடிவுக்கு வந்தார். தான் வேலை செய்த அலுவலகத்திலேயே மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு நிறைய பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதிகாரி எவ்வளவோ சொல்லியும் தான் வேலையை விட்டு நின்றது நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது. வேற வழி இல்லை அவரைப் பார்க்க சென்றார்.
"வாங்க ராஜன் நல்லா இருக்கீங்களா?"
"நல்லா இருக்கேன் சார், சார் இடம் ஒரு உதவி கேட்டு வந்தேன். எவ்வளவோ  நடந்து போச்சு சார், நான் வேலையை விட்டு இருக்க கூடாது. எல்லாம் கிடைச்சிடுச்சுனு ஒரு நிறைவு கிடைச்சது. இப்போ புரட்டி போட்ட மாதிரி இருக்குது சார், எதுவுமே இல்லாத மாதிரி ஆகிடுச்சு. " கண்களில் நீர் துளிர்க்க உடம்பு லேசாக குலுங்கியது.
"ரிலாக்ஸ் ராஜன் , ரிலாக்ஸ். நாங்கல்லாம் இருக்கோமே எதுக்கு கவலைபடுறீங்க. எல்லாம் சரி செய்திடலாம். இப்போ நான் என்ன உதவி செய்யணும் சொல்லுங்க. "

"எனக்கு நம்ம ஆபீஸ்ல வேலை வேணும் சார், வேற எந்த வேலையும் எனக்கு செய்ய தெரியல. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் எப்படியும் வேலை செய்யணும் சார், என் பையன்கள் எனக்கு செலவு செய்ததை திருப்பிக் கொடுக்கவாவது நான் வேலை செய்யணும் . தயவு செய்து எனக்கு எப்படியாவது வேலை போட்டுத் தாருங்கள்"   

அதிகாரியின் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி அழுதார். விருது பெற்றபோது இருந்த கம்பீரம் கலைந்து இறைஞ்சும் போது செத்து விடலாமா என்று இருந்தது. இந்த மரண நிமிடங்கள் யாருக்கு வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டார். 

"கண்ணத் தொடச்சுக்கோங்க ராஜன், இன்னைக்கே வேலையில சேருங்க. உங்க அனுபவம் எங்கள் சொத்து. அது திரும்ப கிடைச்சதில எனக்கு  ரொம்ப சந்தோஷம். 
எல்லாம் சரி ஆயிடும். சந்தோஷமா போய் வேலையை ஆரம்பியுங்க. " என்றார்.
தன் வீட்டில் கிடைக்காத பாதுகாப்பு இங்கே கிடைத்ததாக உணர்ந்தார். 

இனிமேலாவது மனைவி சொல்லும் போது கொஞ்சம் யோசிப்போம்னு நினைத்தபடியே வேலையில் மூழ்கி உற்சாகமானார். "எல்லாம் சரி ஆயிடும்" எவ்வளவு பாதுகாப்பு தரும் சொற்கள் என்று எண்ணிய படியே மாலையில் வீடு நோக்கி மெல்ல நடைபோடத் தொடங்கினார். 
(முற்றும்) 

06 July, 2010

மரண நிமிடங்கள் - பாகம் இரண்டு

விருது பெரும் நாளும் வந்தது. உடம்பெல்லாம் ராஜனுக்கு பரபரப்பாக இருந்தது. தான் செய்யும் பணி கௌரவிக்க படும்போது வரும் சுகமே தனி தான். அந்தக் காலத்தில் அரசனைப் புகழ்ந்து பாடிய கவிகள் பரிசு பெரும் போது இப்படித் தான் உணர்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

விழா முடிந்து வந்த பிறகு வீட்டில் நல்ல விருந்து ஒன்று ஏற்பாடு செய்து நண்பர்கள் உறவினர்கள் அனைவரையும் அழைத்து. மகிழ்வித்தார். தான் முடிவு செய்தது போலவே அடுத்த ஒரு மாதத்தில் பணி ஓய்வுக்கு எழுதிக் கொடுத்தார். மகன்களுக்கு அதில் சந்தோஷம் தான் என்றாலும் அவர் மனைவி ஒரு வித கலக்கத்துடனே இருந்தாள்.

பணி ஓய்வும் வந்தது. அலுவலகத்தில் பணி ஓய்வு பெரும் விழாவில் அனைவரும் புகழ புகழ  ஒரு வித போதை தலைக்கேறியது போல் இருந்தது. அவர் நினைத்துக் கொண்டார் நல்ல வேளை விருப்ப ஓய்வு எடுத்து விட்டோம். திடீர்னு நமக்கு ஏதாவது ஆகி விட்டால் இந்த புகழ் வார்த்தைகள் எல்லாம் கேட்காமலே போய் இருப்போம்.

அலுவலகம் தந்த பணம் அனைத்தையும் இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தார். மனைவி " எல்லாத்தையும் எடுத்துக் கொடுக்காதீங்க. நமக்குன்னு கொஞ்சமாவது இருக்கட்டும்." என்று சொல்ல சொல்ல " ஏன் இப்படி சுயநல வியாதி ஆகிப் போனே? எனக்கு கிடைக்கிற பென்ஷன் நமக்கு போதாதா? " என்று அவள் வாயை அடைத்தார். சொல்லப் போனால் தன்னை  "பாரி வள்ளலாகவே " நினைத்துக் கொண்டார். எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து அவரவர் வேலையை அவரவர் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

ஆரம்பத்தில் சுகமாகத் தோன்றிய ஓய்வு நாளாக நாளாக பாரமாக ஆனது. முக்கி முக்கி வேலை பார்த்தாலும் பதினோரு மணிக்கு மேல் வேலை எதுவும் இல்லை. மனைவிக்கு உதவி செய்வது கௌரவக் குறைச்சல் என்று இருந்த மன நிலை மாறி மனைவிக்கு ஒத்தாசை செய்ய போனார். " ரெண்டு பேர் இருக்கிற வீட்டில எனக்கே வேலை இல்லை. இதுல ஒத்தாசைக்கு வரீங்களாக்கும். ரெண்டு சின்ன பிள்ளைகளோட திண்டாடினேனே அந்தக் காலத்தில, அப்ப உதவிக்கு வந்து இருக்கலாம். " தான் பணியில் இருக்கும் போது அதிக மரியாதை கொடுத்த மனைவி இப்பொழுது மதிக்காதது போல் தோன்றுகிறது.
இந்த எண்ணத்தால் இப்பொழுது எல்லாம் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வரத் தொடங்கி விட்டது. இந்த சண்டையை தவிர்க்க காலை பதினோரு மணிக்கு எல்லாம் ஓரமாக துண்டை உதறிப் போட்டு தூங்கத் தொடங்கினார். பகலில் உறங்கியதால் இரவில் உறக்கம் வராமல் தவிக்கத் தொடங்கினார்.

வேலைக்கு போய் வந்த போது அலுப்பில் எப்போது படுத்தோம் எப்போது தூங்கினோம் என்பதே தெரியாது. அதெல்லாம் அந்தக் காலம். நடு ராத்திரியில தூக்கம் வராமல் முழித்து இருப்பது கொடுமையாக இருக்கிறது. தவிர்க்க முடியாமல் மனைவியை நெருங்கி அணைத்து காதில் முணுமுணுத்தார், " ஏய் ! மனுஷன் தூக்கம் வராம தவிச்சுக்கிட்டு இருக்கேன். நிம்மதியா தூங்கிட்டு இருக்கே. "
"ச்சும்மா இருங்க, காலம் போன காலத்தில இது வேற !"

வேலை இல்லாமல் இருப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை. ஒழுங்கற்ற உணவு,
 ஒழுங்கற்ற உறக்கம், ஒளிந்திருந்த வியாதிகள் ஒவ்வொன்றாக வெளி வரத் தொடங்கின. தனது முடியாமையை சொல்லிய போதெல்லாம் மனைவி முணுமுணுக்கத் தொடங்கியதால், சொல்லாமலே மருத்துவரிடம் போகத் தொடங்கினார்,  நாளாக நாளாக போகாமலே, வேதனையை சகித்துக் கொள்ள தொடங்கினார். அவரது உடல் மெல்ல மெல்ல மெலியத் தொடங்கியது. கொஞ்ச நாளில் எடை இழப்பு அதிகமானது. முதுகில் வலி  அதிகரித்தது. ஒரு நாள் வலி தாங்க முடியாமல் மருத்துவ மனைக்கு சென்றவரை உடனடியாக அட்மிட் செய்து வீட்டுக்கு தெரிவித்தார்கள்.

என்னவோ ஏதோ என்று பதறி வந்தவர்களிடம்  "உடனடியாக அறுவை சிகிச்சை செய்யணும் சுமாரா ஒரு லட்ச ரூபா தேவைப்படும், பணம் தயாரானதும் சொல்லுங்க, அவர் ரொம்ப ஆபத்தில இருக்கார். " டாக்டர் சொல்லிக் கொடுத்த வசனத்தை சொல்லி முடித்தது போல் அடுத்த நோயாளியை பார்க்க போனார்.

"அய்யய்யோ ! உங்களுக்கு என்ன ஆச்சு. ஏன் என்னிட்ட கூட சொல்லாம தனியா வந்தீங்க."  அலறத் தொடங்கினாள்  ராஜனின் மனைவி.
செல் போனில் மகனை அழைத்தாள் " டே,  ரகு உங்க அப்பாக்கு உடம்புக்கு முடியலடா, தனியா வந்து ஆசுபத்திரியில படுத்து இருக்கார், உடனடியா ஆபரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்றார். ஒரு லட்ச ரூபா வேணுமாம்டா" சொல்லும் போதே ஓவென்று அழத் தொடங்கினாள்.

"ஒரு லட்சமா? "

(இன்னும் வரும் ) 

27 June, 2010

மரண நிமிடங்கள் !!

அது ஒரு அரசு அலுவலகம். அதற்கே உரிய இலக்கணத்தோடு,  தொழில் பக்தியோடு உள்ளவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க,  அந்த எண்ணமே இல்லாதவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அலுவல்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. மேலதிகாரி தனக்கு வந்த தபால்களில் அந்த குறிப்பிட்ட தபாலைப் பார்த்ததும்  முகத்தில் புன்னகையோடு அழைப்பு மணியை தட்டினார். வந்த ஊழியரிடம்

"ராஜன் சார் இருந்தாக் கூப்பிடுங்க" என்றார்.
உள்ளே வந்த ராஜன் தனது ஐம்பத்தைந்து வயதுக்கு அதிக பணிவோடு இருந்தார்.
"உட்காருங்க ராஜன்"
"இருக்கட்டும் சார், "
" சும்மா உட்காருங்க. இது பணி சம்பந்தமானது இல்லை."

நாற்காலியின் நுனியில் அமர்ந்தார். இந்த பணிவு இந்தக் கால இளைஞர்களிடம் காண முடிவதில்லை. ஆனால் அதுவும் அழகு தான். வித்யா கர்வம்.

"இந்த ஆண்டுக்கான அரசின் விருது உங்களுக்கு கிடைச்சிருக்கு. ஏற்கனவே தெரியும் இருந்தாலும் தபால்லா வந்திடட்டுமேனு சொல்லாம இருந்தேன். வாழ்த்துக்கள். உங்க உழைப்பு கௌரவப் படுத்தப் பட்டிருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜன்." தனக்கு கீழ் பணி புரியும் பணியாளர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுக்கும் போது அதை கௌரவிக்கும் விதமாக அதிகாரிகள் கொஞ்சமேனும் மெனக்கெட்டால் தான் இந்த மாதிரி விருதுகள் கிடைக்கும். அந்த விதத்தில் ராஜன் அதிர்ஷ்டசாலி.

ராஜனின் முகம் அன்றலர்ந்த பூப் போல மலர்ந்திருந்தது. "ரொம்ப நன்றி சார், இந்த மாதிரி விருதுகளை எதிர்பார்த்து வேலை செய்றதில்லைனாக் கூட கிடைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது. உங்க முயற்சிக்கு ரொம்ப நன்றி."

தனது சீட்டிற்கு  வந்த கொஞ்ச நேரத்தில் செய்தி கசிந்து ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்ல ஆரம்பித்தார்கள். சிலரது வாழ்த்து மனதிலிருந்து வந்தது. சிலர் பிறர் சொல்வதற்காக தானும் சொன்னார்கள். சிலர் தங்களது ஆற்றாமையை புன்னகையால் திரையிட்டு மூடி வாழ்த்தினார்கள். அப்பாவி ராஜன் அத்தனையையும் ஒன்றாகவே புரிந்து கொண்டார். சில நல்ல உள்ளங்களுக்கு பிறரது வஞ்சகங்கள் புரிவதில்லை.

மாலை வீட்டிற்கு  போனதும் அவரது இரண்டு மகன்களும் அவரது கை பற்றி குலுக்கினார்கள் . தொலை பேசியில் முன்னமே தகவல் சொல்லி இருந்தார். நேரம் போவது தெரியாமல் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.
"அப்பா இது வரை நீங்க கஷ்டப் பட்டு உழைச்சது போதும். VRS கொடுத்துடுங்க. இந்த விருது பெற்ற நிறைவிலேயே விலகிட்டா  தான் நல்லது. என்  பிள்ளையுடன்  உங்க மீதி நேரத்தை போக்குங்கள்" என்றனர். . அவருக்கும் அது ஆசையாகத்தான் இருந்தது.

தனக்காக எதுவும் செலவு செய்யாமல் கஷ்டப் பட்டு உழைத்து குடும்பம் நல்ல நிலைக்கு வந்து விட்டது. மூத்தவன் திருமணம் முடிந்து விட்டது. நல்ல வசதியில் இருக்கிறான்.  இளையவன் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டான். இப்போலாம் ஆரம்பத்திலேயே எவ்வளவு  சம்பளம் கொடுக்கிறார்கள். ராஜன் ஆரம்பத்தில்  வாங்கிய சம்பளம் நானூறு ரூபாய். அப்போ விலை வாசி குறைவுன்னு சொன்னாக் கூட சொந்த வசதிகளுக்காக செலவு பண்ண போதியதில்லை. கைக்கும் வயிற்றுக்குமாய் சரியாய் இருக்கும். இப்போ நன்றாக சம்பாதிக்கிறார்கள் நன்றாக செலவு செய்கிறார்கள். பிள்ளைகள் சொல்வது சரி தான் VRS வாங்கிட்டு  நிம்மதியா இருந்திட வேண்டியது தான்.

"நீ என்னம்மா சொல்றே. நம்ம ரெண்டு பேருக்கும் பென்ஷன் போதாதா?"
அருகில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்த மனைவியிடம் கேட்டார்.

" நீங்க யோசித்து செய்யுங்க. ஆனால் நல்லா இருக்கிற காலத்தில உழைச்சுக்கலாமே? காசு பணம் சேர்த்தா பிற் காலத்தில யாருக்கும் பாரமாகாம இருக்கலாம். ஒரு யோசனை தான். நீங்க முடிவு செய்துக்கோங்க " என்றாள்.

இரவு முழுவதும் சிந்தனையிலே இருந்தார். உடம்பு ரொம்ப பலவீனம் ஆனது போல் இருந்தது. சுகர் பிரஷர் னு எதுவும் கிடையாது. பள்ளிக் காலங்களில் பார்க் மதில் சுவர்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்தது நினைவு வந்தது. இப்போ கூட பாளை லூர்து நாதன் சிலை பக்கம் வயதானவர்கள் கூடுகிறார்கள். அங்கே போனா தான் தான் இளைஞனாக  இருப்போம் என்று நினைத்துக் கொண்டார். இப்போவே வேலையை  விட்டு விட ஆசையாக இருந்தது. அந்த ஆசையிலே உறங்கிப் போனார்.

மறு நாள் அலுவலகம் சென்றதும் மேலதிகாரியை சென்று பார்த்தார். " சார், இந்த விருது விழாவெல்லாம் முடிஞ்சதும் பணி ஓய்வு பெற்றிடலாம்னு இருக்கேன்." என்றார்.

"என்ன சொல்றீங்க ராஜன், விருது கொடுக்கிறது, நல்லா பணி செய்றவங்களை ஊக்கப் படுத்துறதுக்கு தான். நீங்க என்ன இப்படி முடிவு எடுக்குறீங்க. சரி, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?"
"ரெண்டு பசங்க, மூத்தவனுக்கு   கல்யாணம் பண்ணியாச்சு. ரெண்டாவது பையன் வேலைக்கு போய்ட்டான். இன்னும் ரெண்டு வருஷத்தில முடிக்கணும்."

"பணத்தோட தேவை இல்லைன்னு சொல்றீங்க, நம்ம சுய மரியாதை உள் காயம் வாங்காம இருக்கிறதுக்காகவது வேலை செய்யணும். உங்கள் உடல் நிலை எப்படி இருக்குது."
"கடவுள் புண்ணியத்தில ஒரு நோயும் இல்லாம நல்லாத்தான் இருக்கேன்."

" அப்போ இந்த முடிவு ஏன்? இன்னும் ரெண்டு மாசம் இருக்குதே. அப்போ பார்த்துக்கலாம். அது வரை நல்லா யோசித்து முடிவு எடுங்க."
 தனது இடத்துக்கு வந்த ராஜனுக்கு வேலை செய்யவே ஓடவில்லை. எப்போ இதுக்கெல்லாம் முடிவு வரும்னு அலுப்பா இருந்தது. மகன் சொன்ன மூன்றெழுத்து ஒற்றைச் சொல் அவரை முழுவதும் மாற்றி விட்டது.

பணி ஓய்வு பெரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்க ஆரம்பித்து விட்டார்.
(இன்னும் வரும்)

13 June, 2010

சிவசு வாத்தியார் - நிறைவு பாகம்

(அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்கு  மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.)

பள்ளிக்குச் சென்றதும் மகன் அவரைக் கண்டு ஓடி வந்தான். " அப்பா , எங்களுக்கு ஒரு புது சார் வந்து இருக்காங்க. அவர் உங்கள்ட தான் படிச்சாராம். உங்களை ரொம்ப புகழ்ராருப்பா.எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாங்கப்பா அவரை பார்க்கலாம். "
மகன் பெருமையாக ஓடி சென்று அழைத்து வந்தான். வந்தது ஐயாவின் பழைய மாணவன். "இன்று வரை தன் வாழ்வின் எந்த அடியும் அவரை நினைத்து தான் எடுப்பதாகவும் எந்த இடத்திலும் தவறியதில்லை என்றும், தன்னைப் போல் அவருடைய பல மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் தான் எடுக்கும் வகுப்பு மாணவர்களிடம் அவரை குறிப்பிடத் தவறியதில்லை" என்றும் பேசிக் கொண்டே சென்றார். 

ஆசிரியர் ஒரு வித மயக்க நிலைக்கு போய் விட்டார். தான் எடுக்கும் எந்த முடிவும் தன்னை மட்டும் பாதிப்பதில்லை இன்னும் எத்தனை பேரை?ஓய்வு பெரும் வரை யாவது.  வெளி உலகுக்காக இந்த வாழ்க்கை வாழ்ந்து தான் ஆக வேண்டும். முடிவு எடுத்த பின் மகளை அவசர அவசர மாகப் பார்த்து விட்டு ஊர் போய் சேர்ந்தார். அதன் பின் இருவரும் நடை பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

அவரது மனம் சஞ்சலப் படுவதை புரிந்து கொண்ட சந்துரு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொண்டான். அவளைப் பற்றி பிறர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டு அவளே தன்னிடம் சொன்னது போல் சிவசு ஐயாவைப் பார்க்கும் போதெல்லாம் சொன்னான். தன் மனைவியிடம் வெளிப்படையாக பேசி இருந்தால்  சுலபத்தில் சரி செய்யக் கூடிய விஷயத்தை இடியாப்பச் சிக்கலாக்கினார். அவளிடம் பேசுவதையே முற்றிலுமாக குறைத்துக் கொண்டார். 

சியாமளாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. பள்ளி விழாவன்று சொன்ன சொல்லுக்காகத்தான் இந்த தண்டனை என்று நினைத்துக் கொண்டாள். அங்கே மேலும் மேலும் அக்னி சேர்ந்து கொண்டே இருப்பதை அவள் அறியாமலே போனாள். அவரது வைராக்கியம் அவள் அறிந்த ஒன்று என்பதால் அவரிடம் பேசிப் பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. திரௌபதியின் ஒற்றைச் சிரிப்பு ஒரு இதிகாசத்தையே உருவாக்கியது. இவளது ஒற்றை சொல் இவள் வாழ்வையே பறித்தது. 

 சிவசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதற்கு மேல் பிறருக்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்த பாரம் நெஞ்சில் கருங்கல்லாய் இறங்குகிறது. ஒரு வக்கீலைப் பார்த்து தன் பிரச்சினையை பட்டும் படாமலும் சொல்லி விட்டார்." இப்படியே மிச்ச நாளையும் போக்கி விடலாமே . இந்த வயதில் விவாகரத்து தேவையா" என்ற அவரின் கேள்விக்கு " நான் மட்டும் இந்த வாத்தியார் தொழில் பார்க்காமல் இருந்தால் என்றோ அவளை விட்டு பிரிந்து இருப்பேன். அவளாவது சந்தோஷமாய் இருந்திருப்பாள். என்னைக் கட்டிய பாவத்துக்கு இவ்வளவு நாள் என்னோட இருந்தது போதும். மிச்ச நாளாவது அவள் விருப்பப்படி இருக்கட்டும். சந்துரு சொன்னதெல்லாம் வைச்சு பார்த்தா எந்த வயசிலும் அவளை ஏத்துக்கிடுவான் போலத் தான் தெரியுது. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்களேன்" என்று பரிதாபமாகச் சொன்னதும் வக்கீலும் சம்மதித்து விட்டார்.

சியாமளா வக்கீலிடம் இருந்து வந்த நோட்டீஸ் ஐப் பார்த்து பதறிப் போனாள். ஐயா பேசாமல் இருந்தாலும் மிச்ச நாட்களை அவரைப் பார்த்துக் கொண்டே ஓட்டி விடலாம் என்று இருந்தாள். இது பேரிடி. வருடங்கள் பல கடந்ததால் அவளால் அவரிடம் பேச முடிய வில்லை. தயங்கி தயங்கி அவர் அருகில் போய் பேசுவதற்கு நின்றாலும் அழுகை தான் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவரோ அதற்குள் இடத்தை காலி செய்து விட்டு இருந்தார். இப்படிப்பட்டவர்கள் தன்னைப் போல் வைராக்கியம் யாருக்கு உண்டு என்ற வெட்டி ஜம்பத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மீதி அனைத்தையும் இழக்கிறார்கள். சியாமளா இந்த பிரச்சினையை யாரிடமும்  கொண்டு செல்வதாய்  இல்லை. நேராக குடும்ப வழக்கு நடக்கும் இடத்திற்கே சென்று என்ன ஆனாலும் தான் அவரை பிரிவதாக இல்லை என்றும் ஆயுள் முடியும் வரை அவருடனே வாழ விரும்புவதாகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். 

அவள் எடுத்த முடிவை பற்றி அறியாமல் , கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார் சிவசு  வாத்தியார்.அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம் " நீங்கள் நினைப்பது போல் எனக்கும் சந்துருவுக்கும் எதுவும் இல்லை நான் உங்களுடனே வாழ விரும்புகிறேன் " என்று அவள் சொல்லி விட மாட்டாளா என்று மனதின் ஒரு ஓரம் அவருக்கு முனங்கிக் கொண்டு தான் இருந்தது. 

(முற்றும்)

(இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும். பதிவர் ஒருவரின் விருப்பத்திற்காக மனச் சிக்கலை கொண்டு ஒரு கதை எழுதிப் பார்த்தேன். வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. முடித்து விட்டேன் நாடோடி, நன்றி ) 

06 June, 2010

சிவசு வாத்தியார் - பாகம் மூன்று.

(இத்தனை ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும் சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். ..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்....)

அன்று இரவு அதிர்ச்சியிலும் , கலக்கத்திலும் கடந்தது.
அடுத்து வந்த இரு நாட்களும் ஒரு வித அழுத்தமான அமைதியில் அடர்ந்து இருந்தது.

சிவசு ஐயா பல விதமான குழப்பத்தில் இருந்தார். "இத்தனை ஆண்டுகள் இருவரும் தொடர்பில் இருந்திருப்பார்களோ? இல்லையென்றால் அவளுடைய என்றுமில்லாத அலங்காரத்திற்கு வேறு அர்த்தம் தெரியவில்லையே? இவளை விவாகரத்து செய்து விட வேண்டியது தான். பிள்ளைகள் இருவரும் மதுரையில் தான் படிக்கிறார்கள். இவளில்லாமல் அவர்களை சமாளித்து விட முடியாதா? " என பல விதமான எண்ணச் சூழல்களில் சிக்கிச் சுழன்று கொண்டு இருந்தார்.

சியாமளா வேறு விதமான சிந்தனையில் சிக்கிக் கொண்டு இருந்தாள். அந்த நிமிட கோபத்திலும், வெறுமையிலும், அவனைப் பார்த்த சந்தோஷத்திலும் சொல்லி  விட்டாளே ஒழிய வேறு எந்த விதமான அந்தரங்க ஆசையும் அவளிடம் இல்லை. தன் மனம் அவனிடம் செல்வதைக் கூட, தன் கணவனிடம் உண்டான அன்பை அதிகரித்துக் கொண்டு தான் தடுக்க வேண்டும் என முடிவெடுத்தாள். ஆனால் அவரது இறுக்கம் அவளுக்கு மூச்சு முட்டியது. . எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் தானாக சென்று பேசி சுமுகம் ஆக்கிக் கொள்ளும் திறமை படைத்தவள் தான். ஆனால் நெருங்கி இருக்க வேண்டிய சிவசு ஐயாவிடம் அவளால் நெருங்க முடியவில்லை. இயல்பான நேரங்களில் பேச முடிகிறதே தவிர இறுக்கமான நேரங்களில் அவரது மௌனம் அவர்களுக்கிடையே ஒரு அரணாய் நின்று விடுகிறது.

அன்று இரவு அவர் படுத்ததும் மெல்ல பக்கத்தில் போய் அவர் காலை பிடித்து விட போனாள். விருட்டென்று இரு கால்களையும் சுருக்கிக் கொண்டவர் போர்வையை இழுத்து தலை வரை மூடினார். " என்னை மன்னிச்சிருங்க, ஏதோ ஒரு வேகத்தில சொல்லிட்டேன். மற்றபடி நான் வாழ்ற வாழ்க்கையில சந்தோஷமாத்தான் இருக்கேன். " இன்னும் எவ்வளவோ பேச நினைத்தாலும் அழுகையும் துக்கமும் சேர்ந்து தொண்டையை அடைக்க வெறும் தரையில் தலையணையை தூக்கி போட்டு படுத்து கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனாள்.

அடுத்து வந்த நாட்களில் அவர் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது போல் இருந்தாலும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அவரது தேவைகளை ஒற்றை வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொறுமை காத்துக் கொண்டு இருந்தாள். அவர்களுக்கிடையே தாம்பத்தியம் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய பிரச்னையும் பனி போல் விலகி இருக்கும். அதற்க்கு வழி இல்லாமல் இருந்தது.

கொஞ்ச நாள் சியாமா தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று தவிர்த்து ஒரு வாரம் கழித்து சந்துரு அவர்கள் வீட்டிற்க்கு புறப்பட்டான்.அதிகம் பேர் கண்ணில் படாமல் தப்பலாம் என்று மதியம் மூன்று மணியைத் தேர்ந்தெடுத்தான். டிரைவரிடம் அவர்கள் வீடு எங்கே இருக்கிறது என்று ஏற்கனவே கேட்டு வைத்து இருந்தான். வீட்டிற்க்கு கொஞ்சம் தள்ளி உள்ள சந்தில் காரை பார்க் செய்து வந்து கதவில் மெல்ல தட்டினான்.
கதவைத் திறந்த சியாமா அதிர்ச்சி ஆகி சுதாரித்துக் கொண்டு " வாங்க" என்றாள்.

' ரொம்ப வருஷங்களுக்கு பின்ன ஸ்கூல் இல உன்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டேன். ஷ்யாம். என்னால உன்னை மறக்க முடியல. நீயும் நிச்சயம் அப்படித்தான் இருந்திருப்ப. அது உன் பார்வையிலே தெரிஞ்சது. என்னடா, ஒண்ணுமே பேசாம இருக்கிற? ' அவசரம் பிடித்தவன் அவள் என்ன நினைக்கிறாள் என்பதே தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவோடு பேசிக்கொண்டிருந்தான்.

அவன் இப்படி நேரிடையாக விஷயத்துக்கு வந்ததும் அவனை முகத்தில் அடித்தாற் போல் விரட்டுவதா இல்லை மென்மையாக புரிய வைத்து அனுப்புவதா என்ற குழப்பத்தில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'என்ன ஷ்யாம் என்னைப் பார்த்த சந்தோஷத்தில உனக்கு பேச்சே வரல்ல போல் இருக்குது. இப்போ நீ மட்டும் ம்ம்ம் னு சொல்லு ஐயா, என்ன கேட்டாலும் கொடுத்து உன்னை என்னோட கூட்டிட்டு போய்டுறேன். '

சேறு எனக் கண்டு விட்டோம் என்றால் தன் மீது தெறித்து விடாமல் ஒதுங்கிச் செல்வது தான் புத்திசாலித்தனம். மீறிக் கோபத்தில் அதனை உதைத்தால் அசிங்கப் படப் போவது தான் தான் என்பதை புரிந்தவளாய் சரம் சரமாய் வார்த்தைகளை கோர்த்து அவனை அழுத்தமாகப் பார்த்த படி சொன்னாள். " அவுக இல்லாத நேரத்தில நீங்க இங்க வரது எனக்கு பிடிக்கல. அதுவும் இந்த மாதிரி பேசுறது சுத்தமா பிடிக்கல. " என்றாள். அப்போது தான் தன்னை அவள் அமரக் கூட சொல்லவில்லை என்பது உரைத்தது.
"இல்ல ஷ்யாம், " என்று இழுத்தான். அவள் இறுக்கமான முகத்துடன் வாசலைப் பார்ப்பதைப் பார்த்து முகம் தொங்கிப் போக வெளியேறினான்.

பள்ளியில் மனம் ஒரு நிலைப் படாமல், சிவசு ஐயா வீட்டுக்கு போய் ஒரு தூக்கம் போட்டால் நல்ல இருக்கும் போல் தோன்ற அரை நாள் விடுப்பு சொல்லி வந்து கொண்டு இருந்தார். அவரை தூரத்தில் பார்த்ததுமே மனதுக்குள் ஒரு திருட்டுத்தனம் எட்டிப் பார்க்க தனது தொங்கிப் போய் இருந்த முகத்தை இஸ்திரி செய்தது போல் மாற்றிக் கொண்டு முக மலர்ச்சியுடனும் துள்ளல் நடையுடனும் அவரைப் பார்க்காதது போல் சென்று காரில் ஏறி புறப்பட்டான் சந்துரு .

அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்க்கு மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.

(இன்னும் வரும் )

30 May, 2010

சிவசு வாத்தியார் - பாகம் ரெண்டு