Bio Data !!

25 October, 2020

 அனிதா

அனிதாவுக்கு வயது 60+ என்னா.......துவா? பிறக்கும் போது வைத்த பெயர் அறுபது வயதானாலும் அதே பெயர் தானே! வேணுமானால் பிள்ளைகள் பெயரைச் சொல்லி அம்மான்னு சேர்த்து சொல்லலாம். வேணாம் நாம அனிதான்னே வச்சுப்போம். 

அன்று அனிதா கொஞ்சம் கட்டுப்பாடில்லாமல் தான் சாப்பிட்டு விட்டாள். மதியம் சிக்கன் பிரியாணி. மாலை வீட்டில் செய்த ஒரு ஸ்வீட். இரவு இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்கள். அதுக்கப்பறம் தான் வந்தது வில்லங்கம். ஸ்வீட் செய்து மிச்சமிருந்த சுகர் சிரப்பைத் தொட்டு பிரட்டை சாப்பிட்டு வைத்தாள்.

இரவு நாலைந்து முறை பாத்ரூம் போக வேண்டி வந்ததுமே தன் சுகர் அளவு கூடி விட்டது எனத் தெரிந்து கொண்டாள். தினம் எழுந்ததும் சுமார் ஐம்பது பேருக்கு குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவாள். அனுப்பி விட்டு அன்று மறுபடியும் படுத்தாள். ஒரு அரை மணி நேரம் கழித்து எழுந்து தன் படுக்கையை சரி செய்ய நினைத்த போது இடது கை சிறிதளவு தன் கட்டுப்பாட்டில் இல்லாதது போல் பட்டது. நடக்கும் போது ஒரு சின்ன தடுமாற்றம். மெல்ல தன் மகளை எழுப்பி அனேகமாக டாக்டரிடம் செல்ல வேண்டி இருக்கும் எனச் சொன்னாள். 

பிபி செக் செய்த போது 180 எனக் காட்டியது. அன்று வியாழக்கிழமை என்பதும் தன் தந்தை பல வருடங்களுக்கு முன் இதே நிலைமையைச் சந்தித்ததும் நினைவுக்கு வந்து கொஞ்சம் ஆடித் தான் போனாள்.

டாக்டரிடம் ஃபோனில் தன் நிலைமையைச் சொன்னதும் ஃபோனை மகளிடம் கொடுக்கச் சொன்னார். மகள் கண்ணில் தண்ணீர் துளிர்க்க அந்த இடம் விட்டு நகர்ந்ததும் பதறினாள். பேசி வந்த மகளிடம் "சொல்லம்மா எனக்கு என்ன?" என்று கேட்டாள். ஒன்றுமில்லை என்றவளிடம் "தைரியமாக சொல். எனக்கு ஹார்ட் அட்டாக்கோ பிரெயின் அட்டாக்கோ சின்ன அளவில் வந்திருக்கிறது என சந்தேகப்படுகிறேன்" என்றாள். மகளும் "ஆமாம்மா சின்ன அளவில் பிரெயின் இன்ஞ்சுரி இருக்கலாம் என சந்தேகப்படுகிறார். CT Scan எடுக்கணும். மருத்துவமனை வரச் சொல்கிறார்"என்றாள். 

அனிதாவுக்கு அவள் தாய் நோய்வாய்பட்ட போது மருத்துவர் "ரொம்ப சீக்கிரமா கண்டு பிடிச்சிட்டீங்க. அதனால பராலிடிக் ஆகல" என்று சொன்னது நினைவு வந்தது. தானும் இரண்டு மாடி இறங்கிப் போனால் ஏதும் சிக்கலாகலாம் என்று நினைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கச் சொன்னாள். அதற்குள் ஒரு பதினைந்து முறையாவது வாந்தி எடுத்திருந்ததால் மிகப் பலவீனமாக இருந்தாள். 

மருத்துவமனையில் சுகர் பிபி மிக அதிகமாக இருந்ததாகவும் CT Scan , ECG சாதாரணமாக இருப்பதாகவும் சொல்லி மருத்துவமனையில் தங்க வைத்தார்கள். அவளுடைய தோழிகள் பலருடைய உதவியாலும் மகளுடைய அன்பான கவனிப்பாலும் நலமாகி வீட்டுக்கு வந்தாள். 

கண்ணாடியைக் கடக்கும் போது அதனுள்ளிருந்த உருவம் கேட்டது "அனிதான்னு பேரு இருந்தா வயசே ஆகாதுன்னு நினைச்சியா? உனக்கு வயசாகிட்டுது. கவனம்" 

ஆமா இந்த கதையில் அனிதா நான் தான். ஒரு கடினமான கால கட்டத்தை கடந்த வாரம் கடந்து வந்தேன். இப்பொழுது நலமாக இருக்கிறேன். கொரோனா காலத்தில் நோய் வாய் பட்டால் உயிர் பயம் வருகிறது. கவனமாக இருப்போம்.


No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!