குடி குடும்பத்தைப் பிரிக்கும்.
என் இளமைக் காலத்தில் ஆண்கள் சிகரெட் பிடிப்பதும் குடிப்பதும் அதிகம் வழக்கத்தில் இல்லை. இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் மறைத்துச் செய்வார்கள். சிகரெட் குடிக்கும் போது ஒரு பெண் பேச வந்து விட்டால் கைகளை பின்னுக்கு மறைப்பார்கள். பேச்சு தொடர்ந்தால் மனதுக்குள் திட்டிக் கொண்டேனும் கீழே போட்டு மிதிப்பார்கள். பெண்களும் இந்த பழக்கமிருக்கும் ஆண்களை வெறுத்தார்கள். வேற வழியில்லாமல் கணவனுக்கு இருப்பது தெரிய வரும் போது திருத்த முயன்றார்கள். பலர் வெற்றியும் பெற்றார்கள்.
அடுத்த ஜெனரேஷன் எப்போவாவது குடித்தால் தப்பில்லை. விசேஷங்களில் குடித்தால் தப்பில்லை என விதிகளை மாற்றி எழுதிக் கொண்டார்கள். குடித்திருக்கும் கணவன் தன்னிடம் ஈகோ இல்லாமல் நடப்பதும் தன்னை தேவதை போல் நடத்துவதும் பிடித்துப் போய் இந்த சலுகைகளை கொடுத்துக் கொண்டார்கள்.
அதற்கும் அடுத்த ஜெனரேஷன் அதாவது தற்போதைய டீன் வயதினர் பெண்களும் குடித்தால் தப்பில்லை என விதிகளை திருத்தி எழுதிக் கொண்டார்கள். குடிப்பது பெண் சுதந்திரம் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்கள்.
நாம் ஆண் பெண் குழந்தைகளை மிகக் கவனமாக கவனிக்க வேண்டிய நேரம் பள்ளி இறுதி ஆண்டுகள். அப்போது தான் பார்ட்டிகளில் பாட்டில்கள் அறிமுகமாகும்.சிறுவனிலிருந்து ஆணாக மாறும் நேரமிது. அவனை ஆண்மை மிகுந்தவனாய் நினைக்க வைக்கும். தன் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸிலிருந்து வெளி வர உதவுவது போல் மாயத் தோற்றம் காட்டும். தான் விரும்பும் பெண் தன்னை விரும்பாத வலியைக் குறைப்பது போல் கோர முகம் காட்டும். இப்படிப் பழகிய பின் கல்லூரிக்கு வெளி யூர் போய் விட்டால் வசதியாகப் போய் விடும். நான்கு ஆண்டுகள் சில நேரம் இன்னும் கூடுதலாய் இரண்டாண்டுகள் முடித்து வரும் போது நம்மால் குழந்தைகளை மீட்க முடியாமல் போய் விடும். அதற்குள் பார்ட்டிகளில் குடித்தது தினப்படி வழக்கமாகி இருக்கும்.
தான் குடிப்பதற்கான காரணங்களைத் தேடச் சொல்லும். தன்னையே நியாயப்படுத்திக் கொள்ளும். குடி முதலில் மூளையைத் தான் வசப்படுத்திக் கொள்ளும். பின் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் முழுத் திறனுடன் இருக்காது. சம்பாதிப்பதில் பெரும் பகுதி குடிக்கே செலவாகும். குடி குடியைக் கெடுக்கும் என்பதை குடும்பத்தைக் கெடுக்கும் என்று தெளிவாக எழுதுங்கள். குடும்பம் சீரழியும். விவாகரத்துகள் பெருகும். அடுத்த தலை முறையும் குடியை பழகும். பின் தலை முறை தலை முறையாய் தொடரும்.
பெண் பிள்ளைகள் குடிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையே நோய்மைத் தலைமுறையாகும். ஆணும் பெண்ணும் சமமென்று சொன்னாலும் தாய்மை பெண்ணை ஆணை விட உயர்த்தியே வைத்திருக்கிறது. ஒரு பெண் குடிக்கின்ற புகைப்படமோ வீடியோவோ பகிரப்படுகின்ற பொழுது அதை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற பொழுது அந்த தவறின் தன்மை நீர்த்துப் போகிறது. பகிர்தலை நிறுத்துவோம். ஒரு ஆண் குடிப்பான் என்று தெரிந்தால் நாம் திருத்தி விடலாம் என நினைக்காமல் பெண்களாகிய நாம் திருமணம் செய்ய மறுப்போம்.
சிகரெட்,குடி, போதை இவை எல்லாம் சகோதரர்கள். ஒன்றை அனுமதித்தால் ஒவ்வொருவராய் உள் நுழைவார்கள். அடுத்து பொய் சொல்லுதல் என்னும் சகோதரன் உள் நுழைவான். அவனைத் தொடர்ந்து காமம் நுழையும். கள்ளத் தொடர்பு கொலையிலும் கொண்டு நிறுத்தும். சிகரெட்டை ஓரளவு குறைத்து விட்டோம். குடியினால் அரசாங்கத்துக்கு வரும் வருமானம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சப்பைக்கட்டு கட்டாமல் டாஸ்மாக்குகளை இழுத்து மூடுங்கள். கஞ்சியை குடித்தாலும் கண்ணியமாய் குடிப்போம்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!