# சிறுகதை "மனச் சிதைவு"
அவள் தன் மனம் சிதைவடைந்து கொண்டிருக்கிறது என்பதையே அறியாதிருந்தாள். தன் தோழி ஒரு முறை சொன்னது லேசாக உறுத்தினாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தன் தோழியிடம் "என்னன்னே தெரியலப்பா. இப்பல்லாம் பீரோவைத் திறந்தாலே ஏன் இவ்வளவு வாங்கி சேர்த்து வைத்திருக்கிறோம்னு வெறுப்பா வருது" ன்னு அவள் சொன்ன போது " உன்னை சின்ன வயதில் இருந்தே எனக்குத் தெரியும். உடை உடுத்துவதில் அதீத ப்ரியம் கொண்டவள் நீ. ரொம்ப பிடிச்ச விஷயத்தில் திடீர்னு வெறுப்பு வருதுன்னா அது டிப்ரஷனின் சிம்ப்டம் ஆச்சே" என்று போற போக்கில் சொன் னாள் தோழி. அதை அவளும் மறந்து விட்டாள். தோழியும் மறந்து விட்டாள்.
இல்லை என்றால் அந்த கொடுமையின் உச்சத்துக்கு போகாமல் காத்திருக்கலாம்.
அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து கொண்டே வந்தது. துள்ளல் நடையோடு தன் வயதை மறந்தவளாய் நடமாடிக் கொண்டிருந்தவள் தன் வேகம் மறந்தாள். "எதுக்கு இந்த வயதில் இவ்வளவு உற்சாகம்" என்று கொஞ்சம் பொறாமையோடு சலித்துக் கொண்டிருந்தவர்கள் கூட என்னவோ ஏதோவென வருத்தப்படத் தொடங்கினார்கள்.
எந்நேரமும் மனதுக்குள் ஒரு அச்சம். அஞ்சா நெஞ்சக் காரி அவள். ஆனால் இப்போதோ தூங்கி எழும் போது நெஞ்சுக்குள் புறா படபடக்கிறது. அலுவலக வேலையில் ஒரு தெளிவின்மை. தனக்குள் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள். எதனால் என்பது புரியவில்லை. இறுதியாய் தனக்கு ஏதோ மிகப் பயங்கரமாய் ஒரு வியாதி வந்து விட்டது என்று முழுமையாய் நம்பத் தொடங்கினாள். தன் நிறம் குறைந்து கருமை அடைந்து கொண்டிருப்பதாய் நம்பினாள். அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்.
தன் மூக்கை உடலாய் கொண்டு இரு கன்னங்களிலும் ஒரு கருப்பு பட்டாம்பூச்சி தன் இறக்கை விரித்து அமர்ந்திருப்பது போல் தோன்றியது. நொடிக்கு ஒரு தடவை தனக்கு இருப்பதாக நினைக்கும் அறிகுறிகளுக்கு என்ன வியாதி இருக்கலாம் என இணையத்தில் தேடினாள். ஒவ்வொரு முறையும் அது பயங்கரமான வியாதியின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தது கூடுதலாய் அருவருப்பான படங்களுடன்.
இதைக் கண்டதும் அவள் மனம் மேலும் சிதையத் தொடங்கியது. தன் கற்பனையின் வீர்யம் தாங்காமல் அவள் ஒரு நாள் அலறிய போது அவள் கணவன் அவள் காலிலேயே விழுந்தார். "வீட்டில் இருக்கும் பிள்ளைகளை பயமுறுத்தாதே! கொஞ்சம் பொறுமையாய் இரு" என்று அமைதிப் படுத்தப் பார்த்தார். நடக்கவில்லை.
அன்று அவள் கணவர் டீவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். அவளோ அவர் காலடியில் அமர்ந்த படி தன் செல்லில் உள்ள கேமராவில் தன் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். "முன்னால இந்த இடம் இவ்வளவு சொறசொறப்பா இருக்காதே. இவ்வளவு கருமையா இருக்காதே" அப்போது டீவியில் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். "கொரோனா வியாதிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதில் சிலருக்கு கருப்பு பூஞ்சை என்னும் வியாதி வருகிறது என்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது" அந்த வியாதி வந்த சிலரின் புகைப்படங்கள் காட்டப்பட்டன.
நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் செல் போனின் காமராவில் தன் முகத்தை பார்த்தாள். அங்கே கருப்பு பூஞ்சை மெல்ல மெல்ல படரத் தொடங்கி இருந்தது. இரு கன்னங்களில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி மெல்ல விஸ்வரூபம் எடுத்தது. "வீல்" என அலறிய படியே மயங்கிச் சரிந்தாள். அவர்கள் குடும்ப டாக்டர் அறிவுரைப்படி ஒரு சைக்யாட்ரிஸ்டிடம் அழைத்து வந்திருந்தார்கள். அவர் சொல்லிக் கொண்டிருந்தார் " மனம் என்பது ரொம்ப அருமையான ஒன்று. அது சிதைவதென்பது ஒரு நாளில் நடப்பதில்லை. தான் வாங்கும் அடிகளை கொஞ்சம் கொஞ்சமாய் தாங்கிக் கொண்டிருக்கும். ஒரு மென்மையான பொழுதில் நொறுங்கத் தொடங்கும்.
தொடக்கத்திலேயே எங்களிடம் வந்து விட்டீர்கள் என்றால் சரிப்படுத்துவது சுலபமாக இருந்திருக்கும். மொத்தமாக சிதைந்த நிலையில் அழைத்து வந்திருக்கிறீர்கள். முயன்று பார்ப்போம். " என்றார். மூன்று வருடங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தார். தான் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னார்.
அது வரை தான் தனது என்று சுயநலமாய் இருந்த கணவர் ஒரு வீட்டின் தலைவி அதிர்ந்து போனால் மொத்த குடும்பமே அதிர்ந்து போகும் என்பதை புரிந்து அவள் மேல் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். முழுமையாக இயல்புக்கு வந்த அவள் அதே துள்ளல் நடையோடு தன் காரியங்களை செய்யத் தொடங்கினாள். டீவியில் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். "உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்து கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டது. உலக மக்கள் அமைதியாக தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். வாண வேடிக்கைகளோடு கொரோனா ஒழிப்பை மக்கள் கொண்டாடினர்"
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!