# புத்தக விமர்சனம்
இந்திய இலக்கியச் சிற்பிகள்.
எழுத்தாளர் லா.ச.ரா பற்றி எழுதியவர் லா.ச.ரா.சப்தரிஷி
இன்று லா.ச.ரா அவர்களின் ஜன்ம தினமும் இறப்பு தினமும். எத்தனை பேருக்கு இப்படி அமையும்.
இது சாகித்ய அகடமி வெளியீடு. விலை ₹50/-
பதினைந்து தலைப்புகளில் எழுதி உள்ளார். இதன் கூடுதல் சிறப்பு மகனே தந்தையைப் பற்றி எழுதுவது.
அவருடைய மொத்த புத்தகங்களையும் மனப்பாடம் செய்தவர் போல ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அது எந்த எந்த கதையில் எந்த விதமாக வருகிறது என்று ஒரு ஆய்வு மாணவரைப் போல குறிப்பிடுகின்றார்.
"லா.ச.ரா பற்றி நான்" என்பது முதல் தலைப்பு. அதில் அங்கங்கே ஆங்கில சொற்றொடர்களை ஆங்கில எழுத்துக்களிலேயே சொல்லி இருப்பது லா.ச.ரா வின் தனித்துவத்தைப் பிரதிபலித்தது.
லாசரா அவர்கள் கதைக்கான தலைப்பைத் தீர்மானித்துக் கொண்டு தான் எழுதத் தொடங்க வேண்டும் . சில சமயங்களில் தலைப்புக்கே கதையை மேலே தள்ளிக் கொண்டு போகும் சக்தி உண்டு என்பாராம்.
லாசராவை பிடிக்காதவர்கள் லாசராவைப் படிக்காதவர்கள். அவர் எழுத்தை புரிந்து படித்து உள்ளே இறங்கி விட்டோமானால் அவரை வெளியேற்றுவது கடினம். அவர் எழுத்தின் மயக் அப்படிப்பட்டது என்கிறார் நூலின் ஆசிரியர்.
லாசரா அவர்கள் அவருடைய எழுத்தில் தான் பேசுவதாக நினைப்பதில்லை. அவர் மூலமாய் அவர் எழுத்து மூலமாய் அவர் மூதாதைகளே பேசுவதாய் நம்புகிறார்.
சப்தரிஷி அவர்கள் "எல்லா வார்த்தைகளையும் இந்த கதையிலேயே போட்டு விட்டால் அடுத்த கதைக்கு என்ன செய்வீங்க" என்பாராம். அதற்கு லாசரா "உலகத்திலே எல்லோருமே மூச்சு விடுகிறோம். காத்து தீர்ந்தா போய் விட்டது" என்பாராம்.
"அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்துக் கொள்கையில் மார் மேல் மார்பு அழுந்தித் திணறுகையில் அவள் தொண்டையிலிருந்து புறா முனகல் வெளிப்படுகையில் .............இப்படியே தொடர்கிறது. இவர் சொல்லின் செல்வர் அல்லாமல் வேறெவர்?
அவர் எழுதிய புத்தகத்தின் பெயரான சிந்தா நதியை " ஸிந்தா நதி" என்கிறார்கள். நதி ஸிந்தாமல் இருக்குமா? அது சிந்தா நதி ( Chindha nathi) சிந்தனை நதி என்பாராம்.
லாசரா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டாராம்." சாவே உன்னை ஏற்கிறேன். ஏனெனில் எனக்கு வேறு வழி இல்லை. நீ நியதி. உன்னுடன் என்றுமே சமாதானமாக முடியாது. நீ பலவான். ஆனால் நியாயவான் இல்லை' என்றாராம். உண்மை தானே. வேற வழியில்லை. சாவை ஏற்றுத் தானே ஆக வேண்டும்.
கவிஞர் வாலி அவர்கள் லாசரா பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். " லாசரா இலக்கிய உலகின் பிதாமகர்.அவர் ஆஞ்சநேயர். அவருக்குத் தன் பலமே தெரியாது. வார்த்தைகள் வரிசையா வந்து அவர் வீட்டு வாசலில் நின்று லாசரா நம்மைப் பற்றி பேசாரா என ஏங்கும்."
எழுத்தாளர் பிரபஞ்சன் லாசராவை "சொல் வலை வேட்டுவன்" என்கிறார். லாசராவின் எழுத்துகளைப் பற்றி பல எழுத்தாளர்கள் பேசியதும். இறுதியில் அவரே தன் எழுத்து பற்றி பேசியதும் வாசிக்க வாசிக்க திகட்டாதவை.
30.10.1916 இல் பிறந்த லாசரா தான் எழுத ஆரம்பித்து மிகச் சரியாக எழுபத்தி ஐந்தாம் வருடத்தில் 30.10.2007 இல் மறைந்தார். தனது மனைவி ஹேமாவதியுடன் 62 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இவருக்கு நான்கு மகன்களும். ஒரு மகளும் உள்ளனர்.
்என்னைப் பின்னிருத்திக் கொண்டு முடிந்த வரை லாசராவின் வார்த்தைகளிலேயே சொல்லி இருக்கிறேன் என்கிறார் சப்தரிஷி.
இந்த புத்தகம் வாங்கி பொக்கிஷமாக நம் வீட்டில் வைக்கப் பட வேண்டிய ஒன்று.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!