#cinema சினிமா
You tube இல் ஆதாமின்ட மகன் அபு என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். படத்தின் பெயரே உரைப்பது போல ஒரு முஸ்லிம் தம்பதியர் ஹஜ் யாத்திரைக்காக பணம் சேர்க்கிறார்கள். அவர்கள் ஹஜ் போனார்களா? திரும்பி வந்தார்களா என்பதைப் பற்றி சொல்லும் கதை.
கதையின் அத்தனை மாந்தர்களுள் 99.9% சதவீதம் நல்லவர்கள். அந்த .1% கெட்டவனும் மனம் மாறி சொல்லும் வசனம் நம் நெஞ்சில் அறையும்.
அபு ஹஜ்க்கு புறப்படு முன் ஒவ்வொருவரிடமாகப் போய் தான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும் படி கேட்பார். அப்படி தன் பக்கத்து வீட்டுக்காரன் நிலத்துக்காக தன்னிடம் சண்டையிட்டவனிடம் செல்வார். அவன் ஒரு விபத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடப்பான். இவரைப் பார்த்தும் ஒன்று சொல்வான். "நான் அல்லா ஏன் என்னை எடுத்துக் கொள்ளாமல் இன்னும் கஷ்டப்பட விட்டிருக்கிறான் என நினைப்பேன். நீங்க மன்னிப்பு கேட்க வரும் போது நான் இல்லாமலிருந்தால் உங்க மனம் வருந்தும். அது கூடாதுன்னு தான் என்னை இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வைத்திருக்கிறான். "
ஹலால் என்பது உணவுக்கு தான் சம்பந்தப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த படம் பார்ந்த பிறகு தான் ஹஜ் செல்ல பயன்படுத்தும் பணம் சம்பந்தமாக கூட ஹலால் வருகிறது என்று புரிந்தேன். அபுவின் மனைவி ஹஜ் செல்ல தன் மகனை பணம் அனுப்ப சொல்லலாமா எனக் கேட்கும் போது அவர் மறுத்து இவன் எந்த வழியில் சம்பாதித்ததோ என்று சொல்லும் போதும் ஹலால் என்று வருகிறது. நம் இஸ்லாம் தோழர்கள் யாராவது தெளிவுபடுத்துங்கள்.
அபு என்ற முஸ்லிம், ஜான்சனாக வரும் கலாபவன் மணி கிறிஸ்தவர் பள்ளி ஆசிரியர் , கோவிந்தன் மாஸ்டராக வரும் நெடுமுடி வேணு மூவரும் நல்லவர்களாக இருப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறார்கள். அபு வாக வரும் சலீம் குமார் தேசிய விருது வாங்கினாராம். காமெடி நடிகர்களாக வருபவர்களிடம் தைர்யமாக இத்தகைய ரோல்களைக் கொடுக்கிறார்கள்.
என் கணவர் சொன்னார் "இவருக்கு நேஷனல் விருது கிடைத்திருக்கிறது. நேஷனல் என்ன இன்டர் நேஷனல் விருதே கொடுக்கலாம். " ஆமாம் இந்த ஆஸ்கார் விருது கொடுப்பவர்கள் மென்னுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தால் இவர் நிச்சயமாக ஆஸ்கார் வாங்கி இருப்பார். இவர் மனைவியாக வரும் ஜரினா வகாப் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர் சலீம் அகமதுவுக்கு இது முதல் படமாம்.
மலையாளப் பின்னணியோடு இயைந்து பார்க்கத் தக்க நல்ல ஒரு படம்.2011 இல் வெளி வந்த படம். எப்படியோ என் கண்ணில் இவ்வளவு நாள் சிக்கவில்லை. யூட்யூபில் சப் டைட்டிலும் வருகிறது. கண்டிப்பாக பாருங்கள்
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!