Bio Data !!

19 September, 2022

புத்தகத்தின் பெயர் : 18 ஆவது அட்சக்கோடு ஆசிரியர் : அசோகமித்திரன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை : 90/- ஆசிரியர் தன் முன்னுரையில் எழுதி இருக்கிறார். “ பிரபலமில்லாதிருப்பதின் ஒரு நன்மை பிரபலம் அடையாத நிலையே கவசமாகச் செயல்படும்” ஆரம்பமே என்னை சிந்திக்க வைத்தது. ஒருவர் பிரபலமாகாத வரையிலும் அவரை பற்றிய எந்த ஒரு எதிர்மறை செய்தியும் பெரிதாக வருவதில்லை. பிரபலமடைந்ததும் எத்தனையோ வருஷத்துக்கு முந்திய செய்திகள் எல்லாம் புற்றீசல் போல் புறப்பட்டு வரும். அப்படி பார்த்தால் ஆசிரியர் சொல்வது சரி தான் போல் இருக்கிறது. இந்த புத்தகம் ஹிந்தி மொழி பெயர்ப்புக்கு போன போது பத்தாண்டுகள் புறக்கணிப்பில் இருந்து பின் ஒருவர் துணிந்து வெளிக்கொணர்ந்தாராம். ஆனால் அது நூலுருவம் பெற்ற நாளில் கொலை செய்யப்பட்டு இருந்தாராம். சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் அழகில் ஆரம்பிக்கிறது கதை. “ ஒரு முறை தரையில் விழுந்து பிடித்தாலும் அவுட். இரு முறை தத்தி வந்து பிடித்தால் மூன்று முறை குதித்து குதித்து வந்தால் கூட அவுட். என்று வைத்துக் கொள்வோம் என்கிறார்கள்.எந்த ஒரு சட்ட திட்டமும் இல்லாத குழந்தை விளையாட்டு. அந்த காலத்திய உடையை இப்படி வர்ணிக்கிறார். ஹிந்து முஸ்லிம் பையன்கள் நிஜார் அல்லது பைஜாமா பேண்ட் மீது சட்டையை தொங்க விட்டுக் கொள்வார்கள். சட்டைக்காரப் பையன் கள் சட்டையை இடுப்பில் நிஜார் அல்லது பேன்ட்டில் சொருகிக் கொள்வார்கள். தமிழர்களில் பெரியவர்கள் முழுக்கைச் சட்டையை உள்ளே சொருகிக் கொண்டு கச்சம் வைத்த வேஷ்டி கோட், தொப்பியில் இருப்பார்கள். வேஷ்டியில் முழுக்கை ஷர்ட் இன் பண்ணி எங்க அப்பா போட்டோ ஒண்ணு நான் பார்த்திருக்கிறேன். இப்போ தான் புரியுது இது அந்தக் கால ஸ்டைல் போலிருக்கிறது. பிச்சைக்காரர்கள் கூட ஒரு இடம் விட்டு ஒரு இடம் சென்றால் சங்கடப்பட வேண்டி இருக்கும். இந்த ரெப்யூஜிஸ் எதை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள் என்கிறார். அங்கே நமக்கு நாடு விட்டு நாடு அகதிகளாக வருபவர்களின் மனநிலை நன்கு புரிகிறது. சந்திரசேகரன் படிக்கும் கல்லூரியில் இருந்து சில மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு கலவரத்தைப் பற்றி விவரிக்கிறார். எனக்கு பாளையில் லூர்துநாதன் என்ற மாணவர் இறந்த சமயம் நடந்த கலவரம் நினைவில் கிளம்பியது. இந்திய நாட்டுக்குள்ளேயே இரண்டு விதமான நாணயங்கள் இருந்திருக்கின்றன. இந்திய நாணயம் ஹைதராபாத் ஹாலி நாணயம். “ அவள் விவரமணிந்த கண்கள் உடையவள். விவரமறிந்த கண்கள் ஏனோ அழகைக் குறைத்து விடுகின்றன.”´இதை வாசித்ததும் என்னுள் ஒரு கோபம் எழுந்தது. ஏன் எளிதாக ஏமாற்ற முடியாது என்பதாலா? ஹைதராபாத் சமஸ்தானத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூளூம் அபாயம். இதை வாசிக்கும் போது பிரகாஷ் ராஜின் சொல்லாததும் உண்மை புத்தகத்தில் அவர் மகள் “ பம்பாயில் ஏன் வெடிகுண்டு போட்டார்கள். அங்கேயும் பார்டர் வாரா? அது இந்தியாவுக்குள்ளே தானே இருக்கிறது. “ என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. இந்தியாவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையேயான போர் நடக்கும் போது இந்திய கவர்னர் ஜெனரலாக சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரி இருந்திருக்கிறார். அவரும் கே. எம். முன்ஷியும் இந்தியா ஒன்றாக இணைவதற்கு உதவி இருக்கிறார்கள். நான் ரசித்த வரி1 : “ உலகமே அவன் காலடியிலிருந்து கிளம்பி எல்லாத் திசைகளிலும் சரிந்து வழிந்து போவது போலிருந்தது. ஒரு மிகப் பெரிய பலூன் மீது வரைந்த சித்திரம் போல……” நான் ரசித்த வரி2: இருட்டு ஒரு திரவம் என்று தோன்றியது. திரவமாகக் காற்றில் மிதக்கக் கூடியது என்று தோன்றியது. “ ஹ கதையின் முடிவு என்றென்றும் நம் மனதில் அழியாமல் நிற்கும் துயர சம்பவம். . இத்தகைய புத்தகங்களை வாசித்து நம் கடந்த காலங்களை புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!