Bio Data !!

26 September, 2022

 "அதுவும் நானும்" 

இந்த தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது எங்க அப்பாவோட கைக்கடிகாரம்.  வட்டமா எண்கள் பெரிது பெரிதாய் பட்டையாய் தங்க  ஸ்டிராப் இணைத்த  கைக்கடிகாரம். அப்பாவுக்கு நகைகள் மேல் கொஞ்சம் ஆசை அதிகம் தான். அப்போ தெரியல. இப்போ நினைச்சு பார்த்தா அப்படித் தான் தோணுது. கழுத்தில் பெரிய தங்க சங்கிலி போட்டிருப்பார். அதன் டாலர் இப்போதுள்ள பத்து ரூபா நாணயத்தை விட கொஞ்சம் பெரிதாய். இன்னும் சரியாய் சொன்னால் ஒரு மஞ்சள் சரிகைத் தாளை இரண்டாய் பிளந்தால் உள்ளே சாக்லெட் இருக்குமே அது போல் இருக்கும். அது சரியாய் வந்து அவர் தொப்புளை மறைக்கும். சின்ன பெண் குழந்தைகளுக்கு அருணா கயிற்றில் ஒரு வெள்ளி இலை போட்டிருப்பாங்களே அது போல.

 விரல்கள் இரண்டில் பெரிதாய் மோதிரம் போட்டிருப்பார். ஒரு மோதிரம் பெரிய சங்கு வடிவில் மேலே ப்ளூ எனாமலில் ரத்தினம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது என்  கையில் இல்லை. எப்பவாவது படம் போடுறேன்.  இன்னொரு மோதிரம் டைமண்ட் ஷேப்பில் டார்க் ப்ளூ கல் வைத்து சுற்றி வெள்ளை கல் பதித்திருக்கும்.

 இந்த மூணு பொருளுமே அம்மாவிடம் அப்பா ஞாபகமாய் எனக்கு வேணும்னு வாங்கி வைத்திருந்தேன். வாட்ச் மட்டும் ஸ்டிராப் இல்லாமல். எவ்வளவு ரசித்து ரசித்து நகைகளை செய்திருக்கிறாங்க. செய்யுமிடம் கூட நல்லா ஞாபகம் இருக்குது. சிவன் கோவில் அருகிலுள்ள தேருக்கு எதிரே போகும் தெருவில் ஒரு ஆசாரி இருந்தார். அங்கே போவோம். ஆமா சின்ன பிள்ளையா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போவாங்க. லேசா தான் ஞாபகம் இருக்கு. ஒரு பெரிய மண் பாத்திரத்தில் தவிடு மாதிரி ஏதோ போட்டு சூடு பண்ணி அதில் தங்கத்தை உருக்கி செம்பு சேர்ப்பாங்க. அதன் பின் நாங்க வீட்டுக்கு வந்திடுவோம். கேட்ட நகைகளை  செஞ்சு வீட்டுக்கு வந்து கொடுத்திடுவார். 

அதே பழக்கத்துக்கு நானும் பெரிய மகள் திருமணம் வரை ஆசாரி மூலம் தான் நகைகள் செய்தேன். சின்ன மகளுக்கு வரும் போது 916 வந்திட்டுது. அதில் பெரிய மகளுக்கு ரொம்ப ஆதங்கம். பின் அவள் நகைகளையும் 916 ஆக மாற்றிக் கொடுத்தேன். 

மெயின் கதைக்கு வருவோம். அந்த தங்க ஸ்டிராப் போட்ட வாட்ச் ஒரு முறை அப்பா மார்க்கெட்டில் காய் வாங்கும் போது தவறி விழுந்து எடுத்தவர்கள் வாட்ச் ரொம்ப பழசா இருந்ததால தங்கம்னு தெரியாம திருப்பிக் கொடுத்தது ஒரு கிளைக் கதை.அதற்கு செல்  கிடையாது. சின்ன திருக்கு தான். எப்போ திருகினாலும் ஓடும்.  அந்த ஸ்டிராப் இல்லாத வாட்ச்சை என் நகைகளோட வைத்திருந்தேன். ஒரு சென்டிமென்டல் அட்டாச்மென்ட். எப்படி தொலைந்தது. நகைகளை எடுக்காமல் அந்த பழைய வாட்ச்சை யார் எடுத்தார்கள். அது புரியாத புதிர். காணாமலே போயிட்டுது.

 அப்பாவுடைய ரெண்டு மோதிரங்களையும் ரெண்டு பேரன்கள் வளர்ந்ததும் கொடுக்கணும்னு வச்சிருக்கிறேன். பெரிய பணக்கார வீட்டில மட்டும் தான் பரம்பரை நகை இருக்கணுமா? நாமளும் வச்சிருப்போமே! 😀

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!