Bio Data !!

26 September, 2022

 நேற்று ஒரு அற்புதமான அனுபவம். "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " குழுவில் எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வில் மாலன் அவர்கள் வைத்தீஸ்வரன் அவர்களின் கதைகளைப் பற்றி  பேசினார். வாய்ப்பு கிடைத்தது கலந்து கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மிகப் பயனுள்ளதாக கழிந்தது.

இவரைப் பற்றி தெரிந்து கொள்ள கூகிளில் தேடிய போது இவருடைய மிக அருமையான கவிதை ஒன்று கையிலகப்பட்டது.
இதோ!!
"கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.”

எத்தனையோ புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். பலராலும் புகழப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்களே  முன்னுரிமை பெறுகின்றன. நன்றாக எழுதும் ஆனால் மிகப் பெரிய கவனிப்பு பெறாத எத்தனை எழுத்துகள் நம் கண் தப்பி இருக்கின்றனவோ எனத் தோன்றியது நிஜம். எனது லிஸ்ட்டில் இவருடைய புத்தகங்களை இணைத்து விட்டேன். அவமானமாக இருக்கிறது கிட்டத்தட்ட அவர் வயது தொண்ணூறை நெருங்கும் வரை  ஒருவரை இவ்வளவு காலம் அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என. 

இனி மாலன் அவர்களின் உரையிலிருந்து:
தமிழர்கள் வாங்கி வந்த வரம் எத்தனை திறமைகள் இருந்தாலும் ஒரு சின்ன சிமிழுக்குள் அடைப்பது. ஒருவர் பல திறமைகள் கொண்டவராய் இருந்தாலும் அவற்றுள் ஒன்றில் அவரை முன்னிலைப்படுத்தி விடுவதால் மற்றவை தெரியாமல் போய் விடுகின்றன என்றார். வைத்தீஸ்வரன்  அவர்கள் தொல்லியல் படிப்பை பரோடாவில் படித்தார். கவிதைகள்  அதிகம் எழுதி உள்ள  வைத்தீஸ்வரனின் சிறு கதைத் தொகுப்பு கால்  முளைத்த மனம் . 12 சிறு கதைகள். "ஒரு கொத்துப் புல்" 26 சிறு கதைகளின் தொகுப்பு.
கிட்டத்தட்ட 50 கதைகள் எழுதி இருக்கிறார்
ஏறத்தாழ 15 ஆவது வயதில்  எழுத தொடங்கினார்.  கவிதைகள் எழுத தொடங்கி தாமதமாகத் தான் கதைகள் எழுத தொடங்கினார்.

.எழுத்தாளர்களின் மனதில் பொதுவாக காலம் உறைந்து விடும். இதற்கு விதி விலக்கு வைத்தீஸ்வரன் என்றார். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த பல எழுத்தாளர்கள் அதைப் பற்றி எழுதாமல் இருந்த  காலத்திலும் இவர் "கொடியின் துயரம்" என்ற சிறுகதை சுதந்திர போராட்டத்தைப் பற்றி எழுதி உள்ளார். சுதந்திரம் வந்த போது வைத்தீஸ்வரனுக்கு 12 வயது.

 (நேற்றைய தொடர்ச்சி. படிக்கலைன்னா அதை வாசிச்சிட்டு இதை வாசிங்க)

 "கசங்கிய காகிதம் "என்னும் ஒரு அருமையான கதையை விவரித்தார் மாலன்.  இவர் எழுதியதில் ஆகச் சிறந்த கதை "மலைகள்"  என்றார்.இது சுற்றுச்சூழலைப் பற்றிய கதை. கவிதையை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதை காட்டும் கதை. கதையின் பல வரிகள் நான்காக மடக்கி எழுதினால் மிகச் சிறந்த புதுக் கவிதை ஆகி இருக்கும் என்றார். அவர் எழுதிய காலத்தில் மரபுக் கவிதைகள் உயர்ந்தோங்கி நின்றன.  அதிகம் பேசப்படாத ஆனால் பேசப்பட வேண்டிய கதைகள் வைத்தீஸ்வரன் அவர்களின்  கதைகள் என்றார். 

மாலன் அவர்களிடமோ வைத்தீஸ்வரன் அவர்களிடமோ நம்  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன போது வாய்ப்பை தவற விடாமல் நான் மாலன் அவர்களிடம் பேசினேன். என் எழுத்தை அங்கீகரித்த முதல் மனிதர் அல்லவா. அவர் இந்தியா டுடேயின் ஆசிரியராக இருந்த போது கிரிக்கெட் பற்றி நான் எழுதிய கடிதம் 100₹ பரிசு பெற்ற விவரத்தை சொன்னேன். அதன் பிறகு தான் நான் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதாக நினைத்த என் கணவர் உருப்படியாக நான் ஏதோ எழுதுகிறேன் என்று ஏற்றுக் கொண்டார் என்றேன். சிரித்தார். மற்றொரு விஷயத்தை சொன்னார். பெண்களுக்கு அரசியல் விளையாட்டு போன்றவை தெரியாது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தமிழ் இந்தியா டுடே மூலம் பெண்கள் அவர்கள் உலக அறிவை வளர்த்துக் கொண்டார்கள் என்றார். உண்மை தான். 

அதன் பின் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள்  முழுமையாக கற்பனையாக எனக்கு எழுத வராது.வாழ்வில் நான் சந்தித்த பார்த்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு தான் கதை எழுதுவேன் என்றார். இந்த நிகழ்வை பிறந்த நாள் பரிசாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.சார்வாகன் அவர்கள் இவரிடம் "வந்து பார்த்திடுங்க. அடுத்த வாரம் இருக்க மாட்டேன் என்றாராம். போய் பார்த்து வந்திருக்கிறார். மறு வாரம் சொன்னது போலவே அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். பார்த்த போது சொல்லி இருந்தாராம் " என் மனைவி இறந்தது,  கூடவே இருந்தாலும் எனக்குத்  தெரியாது. உறங்குகிறார்கள் என்று நினைத்து இருந்திருக்கிறார்.  இரண்டு பேரும் டாக்டர். ஒரு அவையில் பேசிக் கொண்டிருத்தவர்க்கு போன் மூலம் தான் இறந்த செய்தி சொல்லப்பட்டதாம்.   இதை கதையாக எழுதினாராம் வைத்தீஸ்வரன் அவர்கள். ஆனால் முடிவை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபடி மாற்றி எழுதினாராம். 

நானும் இதே போல் ஒரு செய்தி கேள்விப்பட்டு இருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் காலையில் மனைவி தூங்குகிறாள் என நினைத்து பேப்பர் படித்து வாக்கிங் போய் வந்து ரொம்ப நேரம் கழித்து தான் மனைவி இறந்த விஷயமே தெரிந்ததாம். 

வழக்கத்துக்கு மாறாய் எது நடந்தாலும் அதை உத்தேசமாய் எடுத்துக் கொள்ளாமல் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை  காப்பாற்ற கூட முடியலாம். 

வாழ்க இணையம். வாழ்க "வாசிப்போம் தபிழ் இலக்கியம் வளர்ப்போம்" குழு

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!