Bio Data !!

11 January, 2023

சில உணவு வகைகள் முதன் முதல் நாம் சாப்பிட்டது இன்னும் பசுமையாய் நம் நினைவில் இருக்கும். அந்த ருசி வேறெப்போதும் வராதது போல் தோற்றமளிக்கும். நான் திருமணமான புதிதில் நாகர்கோவிலில் ஹோட்டல் பாரதிக்கு போனோம். அப்போல்லாம் மெனு கார்ட் கிடையாது. வரிசையா என்ன இருக்குன்னு வேகமா சொல்றது வெயிட்டருக்கான சிறப்புத் தகுதி. அவர்கள் சொல்வது அவ்வளவு அழகா இருக்கும். அதில் சேமியா உப்புமா என்பது எனக்கு புதுமையாகப் பட்டது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளுக்கு முன். என்னைப் பொறுத்த வரை சேமியா என்பது பாயாசத்துக்காக பயன்படும் ஒரு பொருள் தான். அதை ஆர்டர் பண்ணினோம். அங்கங்கே கல் பதித்தது போல் கடலைப் பருப்பு மினுங்க அந்த உப்புமா இன்றும் நினைவில் சூடாய். இப்போ வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டாலும் அந்த முதன் முறை சாப்பிட்டது ஸ்பெஷல் தான். அடுத்து என் கணவரின் நண்பர் வீட்டுக்கு திருமணமான புதிதில் சென்றிருந்தோம். ஒரு கடற்கரை பட்டணம். ஆப்பத்தின் நடுப் பகுதியில் முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைத்து வேக வைத்து கொடுத்தார்கள். அன்று முட்டை தோசையெல்லாம் கேள்விபட்டிராத காலம். முதல் காதலைப் போல முதல் ருசிக்கும் தனி அழகிருக்கிறது. ரெண்டு நல்லது சொன்னா ரெண்டு சொதப்பலும் சொல்லணும் தானே. திருமணத்துக்கு முன் நான் வைத்த ரசம் இன்றும் என் வீட்டுத் தெருவில் மணக்கிறது. பக்கத்து வீட்டு பாட்டி எல்லாம் சொல்லிக் கொடுத்தவுக அடுப்புல வைக்கணும்னு சொல்ல மறந்திட்டாக. நானும் எல்லா வேலையையும் தரையிலேயே முடிச்சிட்டேன். அந்த நேரம் பார்த்து வந்த என் சித்தியிடம் ருசி பார்க்க சொன்ன போது தான் சூடா இருக்கும்னு ஊதினதும் என் தலையில பல்ப் எரிந்தது. ஆத்தீ! அடுப்புல வச்சிருக்கணும் போலிருக்கேன்னு. இதற்குள் என் தங்கை வாசலில் போய் ப்ராட்காஸ்ட் பண்ணி விட இன்றும் கூட அம்மா வீட்டு பக்கம் போனா ரசம் வாசம் தான். அப்போ என் வயிற்றில் முதல் குழந்தை ஐந்து மாதம். ஏதோ எனக்குத் தெரிந்ததை சமைத்துப் போட்டு என் கணவரை உயிர் வாழ வைத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மத்தியானம் சாப்பாட்டு நேரம் வீட்டு ஓனர் அம்மா வந்தாங்க. கட்டாயப்படுத்தி சாப்பிடச் சொன்னேன். சாப்பிட்டவங்க என் பிரசவம் வரை நீ சாதம் மட்டும் வை. நான் குழம்பும் காயும் கொடுத்து விடுறேன்னு சொல்லிட்டாங்க. இதுக்கு மேல அன்றைய சாப்பாட்டின் மகிமையை நான் சொல்ல வேண்டாம். இன்னும் குலோப் ஜாமூன் செய்றேன்னு குய்யோ முறையோன்னு கத்தின கதை, இடியாப்பம் செய்றேன்னு பிழிய உதவிக்கு கணவரைக் கூப்பிட்டு "இதை அமுக்க யானையைத் தான் கூட்டிட்டு வரணும். நான் கேட்டேனா இடியாப்பம் வேணும்னு" அப்பிடின்னு அவர் சலிச்சுகிட்ட கதை எல்லாம் இருக்குது. நீங்க பாவம். அதனால வேண்டாம். இன்றைய புள்ளைங்க ரொம்ப புத்திசாலிங்க. புகைஞ்சிட்டா கூட smoked chicken னு அதுக்கு ஒரு புது பேரை வைச்சிட்டு அதை ஒரு டிஷ் ஆக்கிடுறாங்க. உங்கள் மனதில் நிற்கும் ஏதாவது உணவு முதன் முறை ருசி பார்த்த அனுபவம் சொல்லுங்களேன். அனுபவிப்போம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!