Bio Data !!

05 January, 2023

புத்தகத்தின் பெயர் : கல்லறை ஆசிரியர் : எம்.எம். தீன் சந்தியா பதிப்பகம். விலை : 260/- ஆசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கறிஞராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருகிறார். 1979 ஆம் ஆண்டு இவர் எழுதிய சிறுகதை முதன் முதலாக பரிசு பெற்றிருக்கிறது. எழுத்தின் மேல் மிகுந்த ஆர்வம் உடையவர். சௌமா விருது, படைப்பு விருது, கலை இலக்கிய பெருமன்ற விருது போன்ற பல விருதுகளை பெற்றிருக்கிறார். மரணம் சம்பந்தப்பட்ட அனைத்து சொற்களும் மனிதனுக்கு சங்கடம் அளிப்பவை. ஏன் இப்படி ஒரு பெயர் என்று ஆசிரியரின் நண்பர் வினவிய போதும் இந்த நாவலுக்கு இது தான் பெயர் என்று தீர்மானமாக இருந்திருக்கிறார். கதை கல்லறையை சுற்றி வந்தாலும் வேறு பல விசயங்களையும் சுவாரஸ்யமாக சொல்கிறது. ஜோ ஒரு கணினித்துறையில் வேலை பார்ப்பவன். அவனது ஆதர்ஸ நாயகன் அவனுடைய தாத்தா. சத்திய நாத உபதேசியார் , கம்பீரமாக அவர் நடக்கும் நடையை அவன் தன் ஹெச் ஆர் மேலாளருடன் ஒப்புட்டு பார்க்கிறான். உயரமானவன் ஆனாலும் கால் வீசிப் பாவி நடக்காது. அது நகர மேட்டிமை நடை. பெருமை வாழ்வு தெரியும், ஆனால் கம்பீரம் இருக்காது என்கிறார். ஜோவுக்கு மாலா என்றொரு தோழி. அவனுக்கு மாலா ஒரு பிரமிப்பான மனுஷியைப் போல உயர்ந்து நிற்கிறாள். சபலம் கொண்ட புதிது புதிதான ஆண்கள் அவளிடம் கெஞ்சிக் கிடப்பதை சிரித்த படி கடக்கிறாள். இந்த இடத்தில் எனக்கும் தோன்றியது “ புதிதாக ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு வந்ததும் ஏன் ஆண் இப்படி குழைந்து போகிறான். காலப் போக்கில் இழுக்கப் பட்ட எலாஸ்டிக் தன் பழைய நிலைக்கு வருவது போல் இறுகி விடுகிறான். ஆரம்ப குழைதலை இயல்பாய் ஏற்றுக் கொள்ளும் பெண்ணுக்கு அவன் இறுக்கமும் இயல்பாய் கடக்க முடிகிறது மாலாவைப் போலவே. ஜோவுக்கும் ஜெனிக்கும் இடையே ஒரு மென் காதல். கல்லறை பற்றிய கதையில் காதலுக்கு ஏன் பெரிய இடமென நினைத்திருப்பார் போலும். ஆனாலும் கதையில் வரும் பெண்களை ஆசிரியர் வர்ணிக்கும் போது அவ்வளவு அழகாக இருக்கிறது. “ ஒரு குடை போல தன்னை விரித்துக் கொள்ளும் ஜெனி காரில் ஒரு மஞ்சள் பூ போல அமர்ந்து இருந்தாள்” என்கிறார். கல்லறை பற்றிய ஒரு கதையை சொல்லும் போது பிரபலங்களின் கல்லறை பற்றிய அரிய தகவல்களையும் ஊடு பாவாக சொல்லி செல்கிறார். மும்தாஜின் கல்லறை மூன்று முறை இடம் மாற்றப் பட்டதாக சொல்கிறார். அதே போல் அருட் திரு சேவியரின் உடல் கோவாவில் இருந்தாலும் அவர் ஜப்பானில் இறந்து பின் அவர் உடல் கோவாவுக்கு கொண்டு வரப் பட்டதாக சொல்கிறார். இப்படி அரிய தகவல்களை கதையில் அங்கங்கே தெளித்திருக்கிறார். ரேனியஸ் அயர்வாள் சொல்வாராம் “ ஒரு நாளை நன்றாக பயன்படுத்தினால் அது ஒரு வாரத்துக்கு சமம். ஒரு வாரத்தை நன்றாக பயன்படுத்தினால் அது ஒரு மாதத்துக்கு சமம். ஒரு மாதம் ஒரு வருடத்துக்கு சமம்” எவ்வளவு அருமையான இந்த காலத்துக்கும் ஏற்ற சொல்லாடல். புலமாடனின் சிலம்புக்கம்பை பற்றி சொல்லும் போது இவர் எழுத்து நடை வியக்க வைக்கிறது. இதோ அவரது வார்த்தைகளிலேயே “ சுழற்றும் போது சர் சர்னு சத்தம் கேட்கும். ராஜநாகம் சீறுறது போல சீறிச் சாரைப்பாம்பு போல மினு மினுக்கும்” நம் கண் முன்னே ஒன்றுடன் ஒன்று பிணைந்து உறவாடும் விஷமற்ற பாம்புகள் தெரியும். ஐயர்வாளை வைத்து பல்லக்கு தூக்கி செல்லும் ஒரு காட்சி வருகிறது. வெளி நாட்டவர்களும் மனிதனை மனிதன் தூக்குவதை எப்படி அனுமதித்தார்கள் என்ற சந்தேகம் வந்தது. ஆசிரியரிடம் கேட்டேன். “ அந்த காலத்தில் எந்த வித போக்குவரத்தும் இல்லாமல் இருந்ததால் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு போக இது தான் வழியாக இருந்தது “ என்றார். முன்பு ஒரு நாவலில் ( வெள்ளை யானை} சாரட்டில் இருந்து இறங்க ஏதுவாக ஒரு ஏழ்மை மனிதன் மண்டி
இடுவதாக வந்தது. மனிதரை மனிதர் இழிவு படுத்தும் மேட்டிமைத் தனம் எங்கும் என்றும் உள்ளது போல் இருக்கிறது. கல்லறை என்பது கற்பனைக்கு ஒரு வரண்ட பகுதி என்றாலும் இடையிடையே இயற்கையை ரசித்து வர்ணிக்கிறார். மேற்கோரத்தில் பெய்த சாரல் நடந்து அவர்களை நோக்கி வானத்திற்கும் பூமிக்குமாக அசைந்தாடி வந்தது என்கிறார். அது மட்டுமில்லாமல் வரும் போது ஒவ்வொரு கல்லறையிலும் சில நொடிகள் நின்று பேசி விட்டு வருவது போல் இருந்தது என்கிறார். சில சமயம் அரை வட்டத்தில் ஆடி வரும் சாரல் என்கிறார். அது காற்றின் வீச்சில் மழை சாரலில் ஏற்படும் நடனம். மிகவும் வித்தியாசமான நாவல். நான் கதையை படித்து முடித்ததும் முதல் சில அதிகாரங்களை மறுபடியும் படித்தேன் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக மனதில் பதித்துக் கொள்வதற்காக.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!