07 August, 2023
புத்தகத்தின் பெயர் : போராட்ட வாழ்க்கை.
ஆசிரியர் பூமி பாலகன்
மலர்விழி பதிப்பகம்.
விலை ரூ 120/-
முதல் பதிப்பு : 2013
நியாயமான காரணங்களுக்காக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இணைந்து நடத்திய ஒரு போராட்டத்தை தொட்டு கற்பனை கலந்து இப் பெருங்கதை எழுகிறது. இது இத்தகைய போரட்டங்களில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த காலத்தை நினைவு படுத்தலாம். இப் புதினத்தின் கதாநாயகன் வேலுச்சாமியின் வாழ்க்கையே ஆசிரியரின் வாழ்க்கை. கொஞ்சம் கற்பனை கலந்தது.
விண்ணும் மண்ணும் மாசடைந்து சுற்றுப்புறங்கள் எல்லம் நாசமாகிப் போயின. கல்வித் துறையும் பொல்லாதவர்கால் ந்ல்லவரல்லாதவர்களால் ஏனைய துறைகளைப் போல் கெட்டுப் போய் விட்டதே என்ற ஆதங்கம் நாவல் முழுக்க ஒலிக்கிறது.
கதை தொடங்குவதே சென்னை மத்திய சிறைச் சாலையில் தான். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப் பட்டு இருக்கிறார்கள். போராட்டத்தின் முக்கிய புள்ளியான வேலுச் சாமியைப் பார்க்க கிராமத்திலிருந்து அவர் தாய் தங்கம்மாள் வந்ததை அறிந்து மனம் கலங்கிப் போகிறார். அவர் தாய் அது வரை கிராமத்தை விட்டு வெளியேவே வ்ராதவர்.
பணி நிரந்த்தரம் ஆகாத வேலுச்சாமி போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டதால் ப்ல இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப் படுகிறார். தளராது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மற்ற மாநிலங்களில் வாங்கும் ஊதியத்தை விட குறைவாக வாங்குவதைக் சுட்டிக் காட்டி ஒன்று திரட்டுகிறார். இது ஒரு அவலம். நிதி சம்மந்தமான போரட்டங்களுக்கு மட்டுமே மக்கள் அதிகம் கூடுகிறார்கள்.
சங்கங்களை வலுவிழக்கச் செய்ய போட்டி சங்கங்களை அரசே மறை முக ஆதரவு கொடுத்து உருவாக்குவதைப் பர்றி சொல்கிறார். சங்கங்களில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்ட ஊழியர்களுக்கு கதையோடு தம்மை பொருத்திப் பார்க்க முடியும்.
முதன்மைக் கல்வி இயக்குனரின் நேர்முக உதவியாளர் தங்க முத்துவைப் பற்றி சொல்லும் போது “ சிவந்த நிறமும் ஐந்தே முக்கால் அடி உயரமும் அவரின் செயல்பாடுகளுக்குத் துணை நின்றன. நினைத்ததைச் சாதித்துத் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது” என்கிறார். நம் மக்களின் அழகுக்கும் கம்பீரத்துக்கும் மயங்கும் , அஞ்சும் குணத்தை இப்படி அடிக் கோடிட்டுக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது.
பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் கொடுக்கும் பாலியல் தொல்லை உயர் அதிகாரிகளின் எதேச்சாதிகாரப் போக்கில் பிறக்கும் அதிரடி உத்தரவுகள் அதனால் ஊழியர்கள் அனுபவிக்கும் வேதனைகள் என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார்.
உறுதியான கண்கள் அகன்ற மார்பு கடப்பாறை போன்ற நீண்ட கை கால்கள் அழகான முடி வெண்கலக் குரல், சிங்கம் போன்ற நடை கொண்ட வேலுச்சாமிக்கு கதையில் பெண் துணை இல்லை யென்றால் சுவாரஸ்யமேது . அந்தப் பஎண் துணை வேல் விழி என்ற ஆசிரியை.
வேல் விழியும் அவளுடன் சில பெண் ஆசிரியைகளும் போராட்டத்தில் கலந்து சிறைக்கு செல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் சிறையில் உடல் நிலை சரியில்லாமலும் மாரடைப்பாலும் உயிரிழந்த 27 ஆசிரியர்கள் தந்த நினைவில் உடல் நிலை சரியில்லாதவர்களை மறியல் செய்ய வேண்டாம் என்று சங்கமே ஒதுக்கி விடுகிறது.
ஒரு சந்தர்ப்பத்தில் வேலுச்சாமி வேலையிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது உடனிருப்பவர்கள் அவரோடு பேசினால் கூட தன் மீதும் பழி வாங்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என் அஞ்சி ஒதுங்குகிறார்கள். நானும் இதே போல் ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாரியின் தவறான பேச்சைத் தட்டிக் கேட்ட போது அனுபவித்திருக்கிறேன். என்னிடம் பேசினாலே மதிப்பெண்ணில் கை வைத்து விடுவார்களோவெனும் அச்சத்தில் என்னிடமிருந்து ஒதுங்குவார்கள். அப்போதெல்லாம் துணை புத்தகங்களே!
ஒரு போராட்டத்தின் உண்மை நிலவர்ம் தெரிந்து கொள்ள கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
04 August, 2023
திரைப்படத்தின் பெயர் : எறும்பு
இயக்குநர் : G. சுரேஷ்
முக்கிய கதா பாத்திரங்கள் : சார்லி, சூசன் ஜார்ஜ், M.S. பாஸ்கர், ஜார்ஜ் மரியான்
இசையமைத்தவர் : அருண்ராஜ்
இந்த படத்தை அமேசானில் பார்த்தேன். படத்துன் பெயர் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் பார்ப்போமே என்று பார்த்தது நல்லதாகப் போயிற்று. இல்லை என்றால் ஒரு அருமையான படத்தை மிஸ் பண்ணி இருப்பேன்.
சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள்இல்லை.
கனிந்து உருகும் காதல் காட்சிகள் இல்லை.
பார்த்து ரசிக்க வெளிநாட்டு காட்சிகள் இல்லை.
ஆனால் படத்தில் அன்பு இருந்தது. மனிதம் தொலைத்த மனிதர்கள் வந்தாலும் குடும்பம் என்ற கட்டமைப்பின் உறுதியால் அதைக் கடந்து வந்த வலிமை தெரிந்தது.
பொதுவாகவே பலரிடம் எல்லோரும் இப்போ வசதியாகிட்டாங்க என்னும் ஒரு எண்ணம் இருக்கிறது. இல்லை ஏழ்மை இன்னும் அங்கங்கே உயிரோடு தான் இருக்கிறது என்பதை உணர்த்திய படம்.
சார்லி ஒரு ஏழைத் தொழிலாளி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று. பெண் ஒன்று. அவரது இரண்டாவது மனைவி சூசன் . அவளுக்கு ஒரு கைக்குழந்தை. மூத்த மனைவி இறந்தாளா பிரிந்தாளா அந்த விவரத்துக்குள் அதிகம் போகவில்லை.
குடும்பம் கடும் பணச் சிக்கலில் இருக்கிறது. அம்மாவின் அன்பு கிடைக்காத தம்பிக்கு , அம்மாவாகவே மாறி அரணாய் காக்கும் அக்கா உறவு. வயதான காலத்திலும் குடும்ப சிக்கலைத் தீர்க்க தன் பங்கிற்கு உதவும் சார்லியின் அம்மா உறவு. கைக்குழந்தையோடு கணவனுக்கு உதவ கரும்புக் கொல்லைக்கு வேலைக்கு செல்லும் மனைவி உறவு.
படத்திற்கு பக்க பலமாய் இருப்பவர் ஜார்ஜ் மரியான். படத்தில் இவர் பெயர் சிட்டு. ஆகச் சிறந்த நடிப்பு. படத்தின் கதாநாயகன் இவர் என்றே சொல்லலாம். தான் வரும் ஒவ்வொரு சீனிலும் அசத்தி விடுகிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக முயல் வேட்டைக்கு தயாராகும் போதாகட்டும். காணாமல் போன உண்டியலை உரியவரிடம் சேர்ப்பிக்கும் காட்சியிலாகட்டும். நடிப்பில் ஒளிர்கிறார். அவரை திரைத்துறை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
எறும்பு போல் சேர்த்து குடும்ப கடனை அடைப்பதைக் காட்டும் கதையாதலால் "எறும்பு" என்று பெயர் வைத்திருப்பார்களோ? பாருங்கள். அன்பின் இன்னொரு பரிணாமத்தைப் பார்க்கலாம்.
03 August, 2023
ஆடிப்பெருக்கு.
*****************
குற்றாலத்தில்
குதூகலமாய்
குளித்திருந்தோம்
குச்சியோடு வந்தார்கள்
காவலர்கள்.
ஆற்றங்கரையில்
அருகமர்ந்து
குளித்திருந்தோம்.
அழுக்கோடு
அரிப்பும் வந்தது
அதை விடுத்தோம்.
கடலாடி
களித்திருந்தோம்
ஆழிப்பேரலையில்
அதிர்ந்து போனோம்.
நதிக்கரையில்
நீராடி
நாகரிகம் வளர்த்தோம்
நதி சுருங்கி
வரியானது
நீர் தலைதெளித்து
முடித்தோம்
******
புத்தகத்தின் பெயர் : கடம்ப வனத்துக் குயில் பாகம் 2
ஆசிரியர் உதயணன்
யாழினி பதிப்பகம்.
விலை ரூ 352
[தொண்டி துறைமுகத்திலிருந்து கோஹினூர் வைரம் வெளி நாடு செல்லப் போகிறது என்று ஆருடம் சொல்லப்பட்டதால் மன்னர் தொண்டி துறைமுகத்துக்கு விரைகிறார். அங்கே என்ன நடந்தது என்பது பாகம் 2 இல்.]
இது பாகம் 1 இல் நான் முடித்திருந்த வரிகள்.
இனி……..
விச்சி மலையிலிருந்து ஒரு ஒற்றன் அராபியன் வேடத்தில் தொண்டிக்கு கோஹினூர் வைரத்தோடு வருகிறான். அங்கு ஒரு மரக்கலத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்ததால் சீந்துவாரின்றி கிடந்தது.
அராபியா என்ற ஒரு பெண்ணும் சல்லியன் என்னும் ஒரு சல்லிப் பயலும் அந்த மரக்கலத்தில் பயணம் செய்கிறார்கள். கோஹினூர் வைரத்தைத் தேடி கொங்கு மன்னர் ஒருவரும் மரக்கலத்தில் பயணிக்கிறார். இடை வழியில் தன் மரக்கலம் பாதிக்கப்பட்டதால் அங்கு வந்து சேருகிறால் கடம்பவனத்துக் குயில் என்னும் கொங்கு மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவள்.
அன்பு எப்படி பிறந்தது என்பதை மிக அழகாகச் சொல்கிறார் ஆசிரியர்.
“ காற்றும் காற்றும் கலப்பது போல நீரும் நீரும் கலப்பது போல மணமும் மணமும் கலப்பது போல மனமும் மனமும் கலக்கும் போது காதலாகிறது.
“கப்பல் வெள்ளி” என்று ஒரு சொற்றொடர் எனக்கு புதிதாய் அறிமுகமானது. வானத்தில் உள்ள சப்தரிஷி மண்டலம் என்ற நட்சத்திரக் கூட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயராக கதையில் வருகிறது. அதைப் பார்த்து திசையை அறிந்து கொள்வார்களாம்.
மரக்கலம் தடம் மாறி ஒரு தீவுக்கு சென்று விடுகிறது. அந்த தீவின் பெயர் சகோத்ரா. அந்த தீவு வாசிகள் மனித மாமிசம் உண்பவர்கள். தீவுக்கு செல்லும் முன்னேயே பெரிய பெரிய பறவைகள் பறந்து வந்து தாக்கும். தீவுத் தலைவனின் வர்ணனையே பயங்கரமாக இருக்கும். மனித மானிசத்தை உண்ணும் முறையை பயங்கரமும் கொடுமையும் நிறைந்த ஒரு விஷயத்தைத் தீவு வாசி ஏதோ சைவ விருந்து உண்ணும் முறையைச் சொல்வது போல சொல்வார்.
சகோத்ரா தீவின் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனை நிறைந்தவையாக இருந்தாலும் ஒரு வித படபடப்போடு நம்மை வாசிக்க வைக்கும். உண்மையிலேயே கனிபால் என்னும் மனித மாமிசம் தின்பவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் அப்படிபட்டவர்கள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டதை உணர்வு பூர்வமாக உணர முடிகிறது.
கோஹினூர் வைரம் இன்னும் உரியவர் கையில் போய் சேரவில்லை.
நான் படித்து ரசித்தது:
“ நகைக்கும் நங்கைக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்.ஆகவே தான் நகைகள் நங்கையருக்கே பொருத்தமாக இருக்கின்றன. தங்கமும் வைரமும் தையலரை அலங்கரிக்கும் போது அழகாக ஜொலிக்கின்றன. “ என்றான் மன்னன்.
பாகம் 3 ம் தொடர்கிறது…….
Subscribe to:
Posts (Atom)