Bio Data !!

04 August, 2023

திரைப்படத்தின் பெயர் : எறும்பு இயக்குநர் : G. சுரேஷ் முக்கிய கதா பாத்திரங்கள் : சார்லி, சூசன் ஜார்ஜ், M.S. பாஸ்கர், ஜார்ஜ் மரியான் இசையமைத்தவர் : அருண்ராஜ் இந்த படத்தை அமேசானில் பார்த்தேன். படத்துன் பெயர் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் பார்ப்போமே என்று பார்த்தது நல்லதாகப் போயிற்று. இல்லை என்றால் ஒரு அருமையான படத்தை மிஸ் பண்ணி இருப்பேன். சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள்இல்லை. கனிந்து உருகும் காதல் காட்சிகள் இல்லை. பார்த்து ரசிக்க வெளிநாட்டு காட்சிகள் இல்லை. ஆனால் படத்தில் அன்பு இருந்தது. மனிதம் தொலைத்த மனிதர்கள் வந்தாலும் குடும்பம் என்ற கட்டமைப்பின் உறுதியால் அதைக் கடந்து வந்த வலிமை தெரிந்தது. பொதுவாகவே பலரிடம் எல்லோரும் இப்போ வசதியாகிட்டாங்க என்னும் ஒரு எண்ணம் இருக்கிறது. இல்லை ஏழ்மை இன்னும் அங்கங்கே உயிரோடு தான் இருக்கிறது என்பதை உணர்த்திய படம். சார்லி ஒரு ஏழைத் தொழிலாளி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று. பெண் ஒன்று. அவரது இரண்டாவது மனைவி சூசன் . அவளுக்கு ஒரு கைக்குழந்தை. மூத்த மனைவி இறந்தாளா பிரிந்தாளா அந்த விவரத்துக்குள் அதிகம் போகவில்லை. குடும்பம் கடும் பணச் சிக்கலில் இருக்கிறது. அம்மாவின் அன்பு கிடைக்காத தம்பிக்கு , அம்மாவாகவே மாறி அரணாய் காக்கும் அக்கா உறவு. வயதான காலத்திலும் குடும்ப சிக்கலைத் தீர்க்க தன் பங்கிற்கு உதவும் சார்லியின் அம்மா உறவு. கைக்குழந்தையோடு கணவனுக்கு உதவ கரும்புக் கொல்லைக்கு வேலைக்கு செல்லும் மனைவி உறவு. படத்திற்கு பக்க பலமாய் இருப்பவர் ஜார்ஜ் மரியான். படத்தில் இவர் பெயர் சிட்டு. ஆகச் சிறந்த நடிப்பு. படத்தின் கதாநாயகன் இவர் என்றே சொல்லலாம். தான் வரும் ஒவ்வொரு சீனிலும் அசத்தி விடுகிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக முயல் வேட்டைக்கு தயாராகும் போதாகட்டும். காணாமல் போன உண்டியலை உரியவரிடம் சேர்ப்பிக்கும் காட்சியிலாகட்டும். நடிப்பில் ஒளிர்கிறார். அவரை திரைத்துறை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எறும்பு போல் சேர்த்து குடும்ப கடனை அடைப்பதைக் காட்டும் கதையாதலால் "எறும்பு" என்று பெயர் வைத்திருப்பார்களோ? பாருங்கள். அன்பின் இன்னொரு பரிணாமத்தைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!