21 December, 2023
ஊறும் காய். ஊறிய காய் ஊறுகாய்
ஊறுகாய்
எனக்கு திடீரென்று அந்த நாளில் ஊறுகாய் போட்டது ஞாபகம் வந்தது. நல்ல பெரிய பெரிய எலுமிச்சம் பழமாய் மார்க்கெட்டில் பொறுக்கி எடுத்து வந்து அதை மேல் பக்கமிருந்து நாலாய் கீறி கீழே பிளந்து விடாமல் பக்குவமாய் பிடித்து கல் உப்பை அது கொள்ளுமளவு அடைத்து பெரிய பீங்கான் ஜாடியில் அதை அடுக்கி வைப்போம். இரண்டு நாள் வைத்தால் கல் உப்பு இளகி நீராய் இறங்கி இருக்கும்.
அதன் பின் தினம் இரு முறை அந்த பீங்கான் ஜாடியை குலுக்கி விடணும்.
எலுமிச்சம் பழம் நன்கு ஊறிய பிறகு எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து வற்றல் தூள் பெருங்காயத் தூள் வறுத்த வெந்தயத் தூள் எல்லாம் போட்டு அதில் எலுமிச்சம் பழங்களை துண்டுகளாக நறுக்கிப் போட்டு கிளறி எடுத்து வைக்கணும். ஜாடிக்கு மேல் ஒரு துணியைப் போட்டு கட்டி மூடி வைப்போம். கை படாமல் எடுப்போம். நல்லா ஈரம் இல்லாமல் துடைத்த கரண்டி போட்டு எடுக்கணும். எவ்வளவு பக்குவம்?
ஆமா இப்ப எதுக்கு இந்த ஊறுகாய் கதைங்கிறீங்களா? காரணம் இருக்கு சார் இருக்கு. நான் என் கணவரிடம் கேட்டேன் "நாம அந்த காலத்தில தினம் ஊறுகாய் சாப்பிட்டிருக்கோம். ஒன்றும் பண்ணதில்லை. ஆனா இப்போ ஆ ஊ ன்னு உப்பைக் குறை பிபி ஏறும் எண்ணையைக் குறை கொலஸ்டிரால் கூடும்னு கண்டிஷன் போடுறாங்களே! அந்த காலத்தில ஊறுகாய்ல சேர்த்த உப்புக்கும் எண்ணைக்கும் ஏன் எதுவுமே செய்யல."
அவர் சொன்னார் ' அன்றைய உடல் உழைப்பு இன்று இல்லை" உண்மை தான் இன்றைய குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப நாம் படும் பாடு என்னவென்று நமக்குத் தான் தெரியும். காம்பாக்ட்டா டீவிக்கு முன்னால செட்டில் ஆகிடுறாங்க. அசைக்க முடியல.
இளைஞர்களும் நண்பர்களுடன் ஊரெல்லாம் சுற்றி படுக்கத் தான் வீட்டுக்கு வந்தார்கள் முன்பு. இப்போ அவர்களும் டீவியின் முன்னமர்ந்து பார்ப்பது மட்டுமல்லாமல் ஸ்நாக்ஸ் இடைவிடாத கொரிப்பு.
பெரியவர்களுக்கும் நாளெல்லாம் இருந்த சமையல் வேலை ஒரு மணி நேரத்துக்குள் முடிந்து விடுகிறது. அதன் பின் அவர்களும் டீவியின் முன் தஞ்சம்.
இப்படி நம் வாழ்க்கை முறை மாறியதால் தான் நோய் அதிகமாகி விட்டதோ என்று யோசித்தால் இன்னொன்றும் தோன்றுகிறது. முன்பு பிபி பணக்காரர்களின் நோயாக கருதப்பட்டது. கையில் நாய் ஒன்றை பிடித்தபடி வாக்கிங் போவது பணக்கார தோரணை. ஆனால் இன்று நகரில் கேடிசி நகர் ரஹ்மத் நகர் என்று நகர் தோறும் ஒரு பார்க். அங்கே அத்தனை மனிதர்கள் ஒரு கடமையைச் செய்வது போல் நடக்கிறார்கள். அன்று முற்றிய பின் தான் நோய் வெளியே தெரியும். அதனால் இந்த பிபி சுகர் கச்சடா எல்லாம் இருக்குனு தெரியாமலே எத்தனை பேர் இறந்து போனார்களோ?
அதனால் இன்றுமே உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றதை தவிர்ப்பதே நல்லது. முடியவில்லை என்றால் அளவையாவது குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம் துரதிர்ஷ்டம் அன்றைய கால கட்டத்தில் கிடைத்த மாசு மருவில்லாத சத்துக்கள் இப்போ கிடைக்கிறதில்லை.
நன்கு கவனித்துப் பார்த்தால் நம் உடம்பு நம்மிடம் பேசும். ஏன் இதைக் கொடுத்து என்னைக் கஷ்டப்படுத்துறன்னு கேட்கும். அப்படிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்திட்டாலே போதும். நலமாய் வாழலாம். காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!