Bio Data !!

25 June, 2024

நான் சொல்ல வருவதை நல்ல விதமாகவே எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு சாதாரணர் கூட பிரபலமே. ஒரு அகால மரணம். கட்டடத்தில் தீப்பிடித்து கருகிப் போய் மரணித்த உடல் நாடு கடந்து வரும் போது அங்கு உறவுகளின் துயரம் எந்நிலையில் இருக்கும். அங்கே போய் ஆளாளுக்கு வீடியோ எடுக்கிறீர்களே!! அங்கு துயரத்தின் உச்சத்தில் முகம் கோணி அழுவது படமாகும். பெண் பிள்ளைகளின் உடைகள் விலகலாம். செய்திக்கு பசித்திருக்கும் பலர் ஆர்வக் கோளாறால் படம் எடுத்து வெளியிடுவது குடும்பத்தினரின் துயரை அதிகரிக்காதா? இதில் கண்டபடி விமர்சனம் வேறு. சிலரின் வழக்கப்படி இறந்தவரின் மனைவிக்கு பூ வைத்து கண்ணாடி வளையல் போட்டு அருகில் அமர்த்தி வைத்திருப்பார்கள். இதற்கொரு விமர்சனம். கணவனைப் பறி கொடுத்தவளின் அலங்காரத்தைப் பாருங்கள் என்று. பணம் சம்பாதிக்கத் தானே வெளிநாடு போனீர்களென்று ஒரு சிலரின் கேள்வி. ஏன் அவரவர் நாட்டிலேயே இருந்தால் விபத்து நடப்பதில்லையா?? "வாரேன் வாரேன்னு சொன்னியே இப்படி வந்திட்டியே" என்று இறந்த மகனின் உடலைப் பார்த்து ஒரு தாயின் கதறல். "அப்பா பார்சல் அனுப்பறேன்னு சொல்லிட்டு நீயே பார்சலா வந்து இருக்கியே" என்று ஒரு மகளின் அலறல். கிடைத்த இடைவெளியில் தன் கணவனின் முகத்தை அடையாளம் கண்டு " பார்த்திட்டேன். நான் பார்த்திட்டேன். அவர் தான்" என்றொரு மனைவியின் ஓலம். துயரமனைத்தையும் ஆழ அழுத்தி சத்தமில்லாமல் கண்ணீர் விட்டு ஆண் உறவுகளின், நட்புகளின் அடுத்த கட்ட நடவடிக்கை நோக்கி நகர்வு. இத்தனையும் கலங்க வைக்காமல் எதிர் மறை விமர்சனத்தை தூவி விட்டு அடுத்த பதிவை நோக்கி நகரும் அறிவிலிக் கூட்டம். மாறுங்க மக்களே!!

24 June, 2024

சாகித்ய அகடமியின் “இந்திய இலக்கிய சிற்பிகள்”வரிசையில் கு.ப.ராஜ கோபாலனைப் பற்றி இரா. மோகன் எழுதிய புத்தகம். விலை ரூ 50/- தி. ஜானகிராமன் கு.ப.ரா பற்றி இப்படிச் சொல்கிறார். “ நல்ல சிவப்பு. குள்ளம், மெலிந்த பூஞ்சை உடல், பூ மாதிரி இருப்பார். சாப்பாடு கூட கொறிப்புத் தான்.. பல பெரியவர்களுக்கு கிடைக்கக் கூடிய தனிப்பட்ட முக அமைப்பு. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்குத் தடிக் கண்ணாடி. சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். “ இதை வாசித்து முடிக்கும் போது கு.ப..ரா நம் உள்ளத்தில் ஒரு சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறார். கு.ப்.ராவையும் ந. பிச்ச மூர்த்தியையும் இரட்டையர்கள் என்று குறிப்பிடுவார்களாம். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். கு.ப்.ரா வானொலியில் சில சொற் பொழிவுகளும் நிகழ்த்தினார். இறுதி வரை தன் எழுத்தையே நம்பி வாழ்வது என்று முடிவு செய்து வானொலி வேலையையும் விட்டு விட்டார். இவரது 42 ஆவது வயதில் காலின் சதைகள் உயிரர்றுப் போய் இரண்டு கால்களையும் எடுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது தடுத்து ஒரு தம்ளர் காவேரி தீர்த்தம் வாங்கிக் குடித்து 27.4.1944 இல் அமைதியாக உயிர் துறந்தார். 1933 இலிருந்து 1944 வரை மட்டுமே பதினொரு ஆண்டுகள் எழுத்துலகில் இயங்கி இருக்கிறார். இரண்டு நாவல்கள் எழுத முயற்சித்து முற்றுப் பெறாமலே இறந்து விட்டார். இவர் எழுதிய யவ்வனக் கலக்கம் என்னும் நாவலில் தமக்கு முன் வாழ்ந்த சமுதாயம் மூன்றையும் இந்நாவலில் காட்டி உள்ளார். கு.ப..ரா படைத்துள்ள பெண்கள் எதற்கும் தயங்காமல் யாருக்கும் அஞ்சாமல் தம் உள்ளத்து உணர்வுகளை வெளியிடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். கனகாம்பரம் என்னும் கதையில் கணவன் வீட்டுக்கு வந்த மனைவியின் தோழியைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்ததை குத்திக் காட்டும் வகையில் “ என் தோழி என்னிடம் கேட்டே விட்டாள். உன் ஆம்படடயான் என்ன அப்படி வெறிச்சு வெறிச்சுப் பார்க்கிறார்னு “ என்று மனைவி கேட்பதாக எழுதி இருக்கிறார். இளம் எழுத்தாளர்களை உருவாக்குவதில் உண்மையான அக்கரை கொண்டவர். அவர்கள் எழுதியதை படித்துத் திருத்தி இப்படி எழுத வேண்டும் என்று வழி காட்டியவர். எங்கு நல்ல எழுத்தைக் கண்டாலும் பொறாமையோ இதனால் என்ன விளையுமோ என்று எண்ணாமல் பாராட்டுவார்.. இது தமிழில் மற்றவர்களிடம் இல்லாத குணம் என்று க.நா.சு பாராட்டுகிறார். கு.ப.ரா தன் வாழ்விலும் சரி எழுத்திலும் சரி வாழ்க்கைத் தரையிலிருந்து கிளம்பி மனோரத சூரியனிடம் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்துடனே இயங்கினார். ஒரு பிரமாதமான விஷயத்தை இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள். “ உண்மைக் கலைஞனுக்கும் வறுமைக்கும் இடையே நிகழும் போரில் இறுதியில் தோற்பது வறுமை தான். ஏனெனில் வறுமை கலைஞனின் மறைவோடு செத்தொழிகிறது. இல்லாமல் போகிறது. கலைஞனோ தன் உயர்ந்த எழுத்தால் என்றென்றும் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இரவீந்திர நாத் டாகுர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டவர் கு.ப.ரா “ தவசிகள் சந்ததியின் தவத் தோன்றல்” என்றும் டாகுர் முனிவர் என்றும் அத்வைதத்தின் அடிப்படையே உருண்டு திரண்டு உருப் பெற்றவர்” என்றும் புகழ்கின்றார். கவிதையின் மேல் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவரைப் பொறுத்த வரையில் கவிதை எழுதுவது என்பது யோகத்தில் ஈடுபடுவதற்கு சமம். கவிதையின் சன்னிதானத்தில் கு.ப.ரா காவலனாய் பணியாற்ற விரும்பினார். ஆனால் கவிதைப் பெண்ணோ அவரை தன் காதலனாகவே ஆக்கிக் கொண்டாள்.. சிறுகதை உலகில் இருப்பது போலவே அவருக்கு கவிதை உலகிலும் ஒரு சிறந்த இடம் உண்டு. பல வகையான பரிணாமங்களும் பரிமாணங்களும் கொண்ட மகா கவி பாரதியை ஒரு சிறு முத்திரை குத்தி புத்தக அலமாரியில் வைத்து விட்டது திறனாய்வாளர்கள் செய்த தவறு என்பதை கு.ப.ரா சுட்டிக் காட்டினார். திக்குகளையே எல்லையாகக் கொண்ட ஆகாய விமானமும் கடலைக் களமாகக் கொண்ட கப்பலும் நிலப்பரப்பையே அளந்து விட்ட ரயிலும் தேசிய சுவர்களை இடித்துத் தள்ளி விட்ட இந்த பொழுதில் கு.ப.ரா உலக சாம்ராஜ்ஜியம் என்ற அரசியல் திட்டம் குறித்து விளக்குகிறார். புதுத் தமிழ் இலக்கியத்தில் கு.ப்.ரா என்றும் மணம் மிகுந்த மலராக நினைவு கூறப் படுவார் என்பதில் ஐயமில்லை.

 நாவலின் பெயர் : நெஞ்சறுப்பு. ஆசிரியர்     : இமயம்

 க்ரியா பதிப்பகம் .

விலை.       :  ரூ275 

முதல் பதிப்பு. :  ஜனவரி 2024 

கதை தன்னிலையில் ஒரு ஆண் சொல்வது போல் இருக்கிறது.  அவர் மனைவி பெயர் காமாட்சி . ஒரு நாள் அவரிடம் தான் கேட்பதற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறார்  காமாட்சி. என்ன கேட்க போகிறாளோ என்று நினைக்கும் போதே. "சசிகலாங்கிறது  யாரு? "  என்கிறாள். " கதக்"  என்று ஆகிறது இவருக்கு . சமாளிக்க முயலும் போதே சாட்சியத்தை அவர் முன் வைக்கிறாள் . ஒரு நோட்டில்,  என்று மெசேஜ் வந்தது , என்று போன் வந்தது,  என்றெல்லாம் இவர் அழைத்திருக்கிறார் , எவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் , என அத்தனை தகவலும் குறிக்கப்பட்டிருந்தது .

 திட்டுறது அடிக்கிறது எல்லாம் கோவத்துல சட்டுனு செய்றது . ஆனா ஏமாத்துறது திட்டம் போட்டு,  நல்லா யோசித்து,  சந்தர்ப்பம் பார்த்து செய்றது . புரியுதா ?" என தலையில் அடிப்பது போல் கேட்கிறாள்.  

காமாட்சியும் கல்லூரி பேராசிரியை என்றாலும் இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து,  அவள் கணவனையும் சசிகலாவையும் திட்டுவது ஒரு படித்த பெண் போலவே இருக்காது.  இன்று ஆணானாலும் பெண்ணானாலும் அவர்கள் சம்பந்தப்படாமல் இருந்தால் கூட அவர்கள் குடும்பத்தில் ஒருவரால் குழப்பத்தை உண்டாக்க முடியும்.  இன்று விவாகரத்துகள் அதிகரித்ததற்கு பல காரணங்கள் சொல்கிறோம்.  இணையம் ஒரு முக்கியமான காரணம் . 

காமாட்சி ஒரு கல்லூரி பேராசிரியை. தன் கணவனை மாமானு கூப்பிட்டது கிடையாது . அதனாலேயே சசிகலா வார்த்தைக்கு வார்த்தை மாமா என்றதும் அவரை நெருங்க காரணமாகி போனது . ரொம்ப நெருங்கினதும் செல்லமாக "கிழவா, கிழவா " என்பாள் . அது அவரை உயிர் நிலையில் உதைத்தது போல் இருக்கிறது. 

 சந்தேகம் என்பது இருபுறம் கூர்மையான கத்தி போன்றது.  காமாட்சி அதனால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டு , மறுபுறம் தன் கணவனான ஸ்ரீரங்க பெருமாளையும்  குதறி எடுக்கிறார். 

 கத்தியில் முளைத்த மூன்றாவது திசையாக சசிகலாவும் அவர்கள் குடும்பத்திற்குள் குழப்பத்தை கூட்டிக் கொண்டே போகிறாள்.

விரக்தியின் எல்லையில் சொல்வார் "உலகத்திலேயே பெரிய கொடுமை,  நாடு கடத்துவதோ , தூக்கில் போடுவதோ இல்லை . புருஷனும் பொண்டாட்டியும் ஒரே இடத்தில் வேலை செய்வது தான் " இதை எத்தனை பேர் ஒத்துக்குவீங்க. 

  வளர்ந்த குழந்தைகளுக்கு முன்னால் தன்னை  மாமியார் கேள்வி கேட்டு மிரட்டும் போது , தன் தாயின் முன்னால் காமாட்சி தன்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குதறிய போதும்,  தான் போனில் பேசியது தவிர பெருசாய் என்ன செய்து விட்டோம் என்று நெஞ்சை  சமாதானப் படுத்தும்  நல்லவர் படும் பாடு அந்தோ பரிதாபம்தான். 

 பழைய காலமா இருந்தா நான் லெட்டர் போட்டு சசிகலா லெட்டர் போட்டுன்னு விஷயம் கொஞ்சம் இழுத்திருக்கும்.  இவ்வளவு வேகமா சேர்ந்து இருக்கவும் முடியாது.  பிரிஞ்சிருக்கவும் முடியாது.  செல்போன் வந்து காலத்தை,  தூரத்தை இல்லாமல் ஆக்கிடுச்சு.  இதுதான் இன்றைய எதார்த்தம். 

 கதையை வாசிக்கும் போது சசிகலா ஏன் விடாது தொந்தரவு கொடுக்கிறாள் என்று தோன்றினாலும்,  ஒரு இடத்தில் என் மனம் மாறினது,  மூணு நாலு மாசத்துல நானும் அவளும் ஏழு கடல் அளவு , ஏழுமலை அளவு பேசி இருப்போம் . எனக்கு எப்போ ஃப்ரீ பீரியட் என்கிறது கூட அவளுக்குத் தெரியும் . இந்த இடத்தில் தான் ஒரு பெண்  ஏமாந்து போகிறாள் . ஆண் கொடுக்கும் முக்கியத்துவம் காலா காலத்துக்குமானது என நம்புகிறாள்.  ஆனால் ஆணுக்கு பிரச்சனை வரும் வரை இருக்கும் ஜோர்,  அதன் பின் இருப்பதில்லை.  அதுவரை தேவதையாய் தெரிபவள்,  பிரச்சனைக்கு பின் பிசாசாக தெரிகிறார். அதனாலயே பிரிவு பெண் அளவுக்கு ஆணை வாட்டுவதில்லை. " என்கூட படுத்துக்கிட்டே அவ கூட பேசிகிட்டு இருக்கீங்களா " என்று காமாட்சி கேட்பது தன் கணவனிடம் மட்டுமல்ல,  இன்று பலரையும் நோக்கி , ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் எழுப்பப்படும் கேள்வி. 

எனக்கு ஒரே ஒரு  விஷயம் தான் தோன்றியது.  போலீஸ் அதிகாரி "காற்று ஒருவருக்கு மட்டுமா வீசுது. அதெல்லாம் சுலபமா சரி பண்ணிடலாம் " என்று சொல்கிறார். அந்த அளவுக்கு சசிகலாவை கதையில் காட்டாததால் என் சார்பு சசிகலா பக்கமே சார்ந்தது. 

 சில விஷயங்களை பெரிது படுத்தாமல் விட்டால் நாளடைவில் அடுத்தவர் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடும். காமாட்சியும் அவளைச் சார்ந்தவர்களும் பெரிதுபடுத்தி விட்டார்களோன்னும் தோணுச்சு.

 இன்றைய சூழலில் கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு கருவை கதையாக்கி இருக்கிறார் இமயம்.  இதுவரை வந்த இவரது எல்லா நாவல்களிலும் இது வேறுபட்டது.