Bio Data !!

24 June, 2024

சாகித்ய அகடமியின் “இந்திய இலக்கிய சிற்பிகள்”வரிசையில் கு.ப.ராஜ கோபாலனைப் பற்றி இரா. மோகன் எழுதிய புத்தகம். விலை ரூ 50/- தி. ஜானகிராமன் கு.ப.ரா பற்றி இப்படிச் சொல்கிறார். “ நல்ல சிவப்பு. குள்ளம், மெலிந்த பூஞ்சை உடல், பூ மாதிரி இருப்பார். சாப்பாடு கூட கொறிப்புத் தான்.. பல பெரியவர்களுக்கு கிடைக்கக் கூடிய தனிப்பட்ட முக அமைப்பு. தலையில் பாதி வழுக்கை. கண்ணுக்குத் தடிக் கண்ணாடி. சிந்தனையில் ஆழ்ந்த கண்கள். “ இதை வாசித்து முடிக்கும் போது கு.ப..ரா நம் உள்ளத்தில் ஒரு சிம்மாசனமிட்டு அமர்ந்து விடுகிறார். கு.ப்.ராவையும் ந. பிச்ச மூர்த்தியையும் இரட்டையர்கள் என்று குறிப்பிடுவார்களாம். இருவரும் சேர்ந்து ஏறக்குறைய ஒரே சமயத்தில் எழுதத் தொடங்கி இருக்கிறார்கள். கு.ப்.ரா வானொலியில் சில சொற் பொழிவுகளும் நிகழ்த்தினார். இறுதி வரை தன் எழுத்தையே நம்பி வாழ்வது என்று முடிவு செய்து வானொலி வேலையையும் விட்டு விட்டார். இவரது 42 ஆவது வயதில் காலின் சதைகள் உயிரர்றுப் போய் இரண்டு கால்களையும் எடுக்க வேண்டும் என்ற நிலை வரும் போது தடுத்து ஒரு தம்ளர் காவேரி தீர்த்தம் வாங்கிக் குடித்து 27.4.1944 இல் அமைதியாக உயிர் துறந்தார். 1933 இலிருந்து 1944 வரை மட்டுமே பதினொரு ஆண்டுகள் எழுத்துலகில் இயங்கி இருக்கிறார். இரண்டு நாவல்கள் எழுத முயற்சித்து முற்றுப் பெறாமலே இறந்து விட்டார். இவர் எழுதிய யவ்வனக் கலக்கம் என்னும் நாவலில் தமக்கு முன் வாழ்ந்த சமுதாயம் மூன்றையும் இந்நாவலில் காட்டி உள்ளார். கு.ப..ரா படைத்துள்ள பெண்கள் எதற்கும் தயங்காமல் யாருக்கும் அஞ்சாமல் தம் உள்ளத்து உணர்வுகளை வெளியிடுபவர்களாக இருந்திருக்கிறார்கள். கனகாம்பரம் என்னும் கதையில் கணவன் வீட்டுக்கு வந்த மனைவியின் தோழியைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்ததை குத்திக் காட்டும் வகையில் “ என் தோழி என்னிடம் கேட்டே விட்டாள். உன் ஆம்படடயான் என்ன அப்படி வெறிச்சு வெறிச்சுப் பார்க்கிறார்னு “ என்று மனைவி கேட்பதாக எழுதி இருக்கிறார். இளம் எழுத்தாளர்களை உருவாக்குவதில் உண்மையான அக்கரை கொண்டவர். அவர்கள் எழுதியதை படித்துத் திருத்தி இப்படி எழுத வேண்டும் என்று வழி காட்டியவர். எங்கு நல்ல எழுத்தைக் கண்டாலும் பொறாமையோ இதனால் என்ன விளையுமோ என்று எண்ணாமல் பாராட்டுவார்.. இது தமிழில் மற்றவர்களிடம் இல்லாத குணம் என்று க.நா.சு பாராட்டுகிறார். கு.ப.ரா தன் வாழ்விலும் சரி எழுத்திலும் சரி வாழ்க்கைத் தரையிலிருந்து கிளம்பி மனோரத சூரியனிடம் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்துடனே இயங்கினார். ஒரு பிரமாதமான விஷயத்தை இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்கள். “ உண்மைக் கலைஞனுக்கும் வறுமைக்கும் இடையே நிகழும் போரில் இறுதியில் தோற்பது வறுமை தான். ஏனெனில் வறுமை கலைஞனின் மறைவோடு செத்தொழிகிறது. இல்லாமல் போகிறது. கலைஞனோ தன் உயர்ந்த எழுத்தால் என்றென்றும் உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். இரவீந்திர நாத் டாகுர் மீது அளவற்ற ஈடுபாடு கொண்டவர் கு.ப.ரா “ தவசிகள் சந்ததியின் தவத் தோன்றல்” என்றும் டாகுர் முனிவர் என்றும் அத்வைதத்தின் அடிப்படையே உருண்டு திரண்டு உருப் பெற்றவர்” என்றும் புகழ்கின்றார். கவிதையின் மேல் ஆழமான ஈடுபாடு கொண்டவர். அவரைப் பொறுத்த வரையில் கவிதை எழுதுவது என்பது யோகத்தில் ஈடுபடுவதற்கு சமம். கவிதையின் சன்னிதானத்தில் கு.ப.ரா காவலனாய் பணியாற்ற விரும்பினார். ஆனால் கவிதைப் பெண்ணோ அவரை தன் காதலனாகவே ஆக்கிக் கொண்டாள்.. சிறுகதை உலகில் இருப்பது போலவே அவருக்கு கவிதை உலகிலும் ஒரு சிறந்த இடம் உண்டு. பல வகையான பரிணாமங்களும் பரிமாணங்களும் கொண்ட மகா கவி பாரதியை ஒரு சிறு முத்திரை குத்தி புத்தக அலமாரியில் வைத்து விட்டது திறனாய்வாளர்கள் செய்த தவறு என்பதை கு.ப.ரா சுட்டிக் காட்டினார். திக்குகளையே எல்லையாகக் கொண்ட ஆகாய விமானமும் கடலைக் களமாகக் கொண்ட கப்பலும் நிலப்பரப்பையே அளந்து விட்ட ரயிலும் தேசிய சுவர்களை இடித்துத் தள்ளி விட்ட இந்த பொழுதில் கு.ப.ரா உலக சாம்ராஜ்ஜியம் என்ற அரசியல் திட்டம் குறித்து விளக்குகிறார். புதுத் தமிழ் இலக்கியத்தில் கு.ப்.ரா என்றும் மணம் மிகுந்த மலராக நினைவு கூறப் படுவார் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!