நாவலின் பெயர் : நெஞ்சறுப்பு. ஆசிரியர் : இமயம்
க்ரியா பதிப்பகம் .
விலை. : ரூ275
முதல் பதிப்பு. : ஜனவரி 2024
கதை தன்னிலையில் ஒரு ஆண் சொல்வது போல் இருக்கிறது. அவர் மனைவி பெயர் காமாட்சி . ஒரு நாள் அவரிடம் தான் கேட்பதற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறார் காமாட்சி. என்ன கேட்க போகிறாளோ என்று நினைக்கும் போதே. "சசிகலாங்கிறது யாரு? " என்கிறாள். " கதக்" என்று ஆகிறது இவருக்கு . சமாளிக்க முயலும் போதே சாட்சியத்தை அவர் முன் வைக்கிறாள் . ஒரு நோட்டில், என்று மெசேஜ் வந்தது , என்று போன் வந்தது, என்றெல்லாம் இவர் அழைத்திருக்கிறார் , எவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் , என அத்தனை தகவலும் குறிக்கப்பட்டிருந்தது .
திட்டுறது அடிக்கிறது எல்லாம் கோவத்துல சட்டுனு செய்றது . ஆனா ஏமாத்துறது திட்டம் போட்டு, நல்லா யோசித்து, சந்தர்ப்பம் பார்த்து செய்றது . புரியுதா ?" என தலையில் அடிப்பது போல் கேட்கிறாள்.
காமாட்சியும் கல்லூரி பேராசிரியை என்றாலும் இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து, அவள் கணவனையும் சசிகலாவையும் திட்டுவது ஒரு படித்த பெண் போலவே இருக்காது. இன்று ஆணானாலும் பெண்ணானாலும் அவர்கள் சம்பந்தப்படாமல் இருந்தால் கூட அவர்கள் குடும்பத்தில் ஒருவரால் குழப்பத்தை உண்டாக்க முடியும். இன்று விவாகரத்துகள் அதிகரித்ததற்கு பல காரணங்கள் சொல்கிறோம். இணையம் ஒரு முக்கியமான காரணம் .
காமாட்சி ஒரு கல்லூரி பேராசிரியை. தன் கணவனை மாமானு கூப்பிட்டது கிடையாது . அதனாலேயே சசிகலா வார்த்தைக்கு வார்த்தை மாமா என்றதும் அவரை நெருங்க காரணமாகி போனது . ரொம்ப நெருங்கினதும் செல்லமாக "கிழவா, கிழவா " என்பாள் . அது அவரை உயிர் நிலையில் உதைத்தது போல் இருக்கிறது.
சந்தேகம் என்பது இருபுறம் கூர்மையான கத்தி போன்றது. காமாட்சி அதனால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டு , மறுபுறம் தன் கணவனான ஸ்ரீரங்க பெருமாளையும் குதறி எடுக்கிறார்.
கத்தியில் முளைத்த மூன்றாவது திசையாக சசிகலாவும் அவர்கள் குடும்பத்திற்குள் குழப்பத்தை கூட்டிக் கொண்டே போகிறாள்.
விரக்தியின் எல்லையில் சொல்வார் "உலகத்திலேயே பெரிய கொடுமை, நாடு கடத்துவதோ , தூக்கில் போடுவதோ இல்லை . புருஷனும் பொண்டாட்டியும் ஒரே இடத்தில் வேலை செய்வது தான் " இதை எத்தனை பேர் ஒத்துக்குவீங்க.
வளர்ந்த குழந்தைகளுக்கு முன்னால் தன்னை மாமியார் கேள்வி கேட்டு மிரட்டும் போது , தன் தாயின் முன்னால் காமாட்சி தன்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குதறிய போதும், தான் போனில் பேசியது தவிர பெருசாய் என்ன செய்து விட்டோம் என்று நெஞ்சை சமாதானப் படுத்தும் நல்லவர் படும் பாடு அந்தோ பரிதாபம்தான்.
பழைய காலமா இருந்தா நான் லெட்டர் போட்டு சசிகலா லெட்டர் போட்டுன்னு விஷயம் கொஞ்சம் இழுத்திருக்கும். இவ்வளவு வேகமா சேர்ந்து இருக்கவும் முடியாது. பிரிஞ்சிருக்கவும் முடியாது. செல்போன் வந்து காலத்தை, தூரத்தை இல்லாமல் ஆக்கிடுச்சு. இதுதான் இன்றைய எதார்த்தம்.
கதையை வாசிக்கும் போது சசிகலா ஏன் விடாது தொந்தரவு கொடுக்கிறாள் என்று தோன்றினாலும், ஒரு இடத்தில் என் மனம் மாறினது, மூணு நாலு மாசத்துல நானும் அவளும் ஏழு கடல் அளவு , ஏழுமலை அளவு பேசி இருப்போம் . எனக்கு எப்போ ஃப்ரீ பீரியட் என்கிறது கூட அவளுக்குத் தெரியும் . இந்த இடத்தில் தான் ஒரு பெண் ஏமாந்து போகிறாள் . ஆண் கொடுக்கும் முக்கியத்துவம் காலா காலத்துக்குமானது என நம்புகிறாள். ஆனால் ஆணுக்கு பிரச்சனை வரும் வரை இருக்கும் ஜோர், அதன் பின் இருப்பதில்லை. அதுவரை தேவதையாய் தெரிபவள், பிரச்சனைக்கு பின் பிசாசாக தெரிகிறார். அதனாலயே பிரிவு பெண் அளவுக்கு ஆணை வாட்டுவதில்லை. " என்கூட படுத்துக்கிட்டே அவ கூட பேசிகிட்டு இருக்கீங்களா " என்று காமாட்சி கேட்பது தன் கணவனிடம் மட்டுமல்ல, இன்று பலரையும் நோக்கி , ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் எழுப்பப்படும் கேள்வி.
எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் தோன்றியது. போலீஸ் அதிகாரி "காற்று ஒருவருக்கு மட்டுமா வீசுது. அதெல்லாம் சுலபமா சரி பண்ணிடலாம் " என்று சொல்கிறார். அந்த அளவுக்கு சசிகலாவை கதையில் காட்டாததால் என் சார்பு சசிகலா பக்கமே சார்ந்தது.
சில விஷயங்களை பெரிது படுத்தாமல் விட்டால் நாளடைவில் அடுத்தவர் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடும். காமாட்சியும் அவளைச் சார்ந்தவர்களும் பெரிதுபடுத்தி விட்டார்களோன்னும் தோணுச்சு.
இன்றைய சூழலில் கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு கருவை கதையாக்கி இருக்கிறார் இமயம். இதுவரை வந்த இவரது எல்லா நாவல்களிலும் இது வேறுபட்டது.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!