Bio Data !!

25 July, 2024

நாவலின் பெயர் : கூகை ஆசிரியர் : சோ. தர்மன். காலச்சுவடு பதிப்பகம். விலை : ரூ. 175/- முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2005 கூகை என்பதற்கு இன்னொரு பெயர் கோட்டான் ( எங்க அப்பா என்னை சிறு வயதில் கோட்டான் மாதிரி முழிக்காதேன்னு திட்டினது ஞாபகம் வருது. சரியா தெரியல)இடப் பெயர்ச்சியில் ஆர்வமில்லாத பறவை. மிகுந்த வலிமை உடையது. ஆனால் அவசியப்பட்டால் மட்டுமே பயன்படுத்தும். கூகையைக் காண்பதையும் அதன் குரல் கேட்பதையும் பாரம்பரியமாக அபசகுனமாக கருதுவதுண்டு. கூகையை தலித்துகளுக்கான குறியீடாக்கி பலரின் குணங்களை பறவைகள் விலங்குகளுடன் ஒப்பிட்டு சமகால தலித் வாழ்க்கையை படைப்பாக்கி வெற்றி கண்டிருக்கிறார் ஆசிரியர். சோ. தர்மன் அவர்களின் முதல் நாவல் “தூர்வை” இது ஆங்கிலம் ஹிந்தி மலையாளம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது. கூகைக்கு பகலில் கண் தெரியாது. அதனால் சிறு பறவை கூட பகலில் அதை கொத்தி துன்புறுத்தும். இரவில் அருகில் அண்டாது. அந்தக் காலத்தில் பெண்களை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை, ஜாதிப்படியில் தாழ்த்தி வைக்கப்பட்டவர்களை என்ன பாடு படுத்தி இருக்கிறார்கள் என்று நாவலில் வாசிக்க வாசிக்க நெஞ்சு பதறுகிறது. இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்து விட்டால். (ஒரு கிழ அரசன் 1700+ களில் இறத்த போது அவரோடு சதியில் இறங்கியவர்கள் 45 பெண்களாம். ) கணவனை ஏதாவது வாங்கி வரச் சொல்லி விட்டு மனைவியுடன் சல்லாபம் செய்யும் so called மேல் வர்க்கம் , அந்தப் பெண் பெற்ற பெண் குழந்தை தன் முகத்தை முட்டிகளில் புதைத்துக் கொண்டு அழும் கொடூரம். இந்த அவமானங்கள் அனைத்தும் தமக்கானதே என்று ஏற்றுக் கொள்ளும் அப்பாவி பொது ஜனம். இவர்களுக்கு நடுவில் காலம் காலமாய் தனக்கு உழைத்த அப்பாவி மக்களுக்கு தன் நிலத்தை பகிர்ந்து கொடுத்துவிட்டு பட்டணம் போக முடிவெடுக்கும் நல்லவர் நடராஜய்யரும் அங்கே தான் வாழ்கிறார். அவருக்கு எதிராய் கிளம்பியவர்கள் அவரோடு மோதி முடியாமல் ஜமீனிடம் சென்று புகார் கொடுக்க அவர் மிகப் பெரிய வில்லனாய் முடிவு எடுக்கிறார். “நடராஜய்யர் பகிர்ந்து கொடுக்கட்டும். அவர்கள் உழைக்கட்டும். விளைவிக்கட்டும். அறுவடை மட்டும் நாம் செய்து கொள்வோம் “ என்கிறார். என்ன ஒரு வில்லத்தனம். அதைப் போலவே பாவப்பட்ட ஜனங்கள் பாடுபட்டு நெல் விளைந்து வரும் போது ஜமீன் தன் ஆட்களை வைத்து அறுவடை செய்கிறார். சீனிக்கிழவன் என்னும் அவர்களின் தலைவன் எவ்வளவோ முறையிட்டும் ஏதும் நடக்காததால் நடராஜய்யரின் வயலில் ரத்தம் சிந்தியது. மோதல் வலுத்துக் கொண்டே போகும் போது தாழ்ந்த இனப் பெண்களுக்கு நீர் இறைத்து ஊற்ற மேல் ஜாதி எனப்படும் பெண்கள் மறுத்ததும் தாமே கிணறு தோண்டினார்கள். கடைகளில் சாமான் தர மறுத்ததும் தாமே கடை திறந்தார்கள். ஆனால் அதைப் போல் சுளுவாக அவர்கள் செய்ய மறுத்த சாவுச் சடங்குகளை மேல் சமூகம் எனப்படுபவர்கள் தாமே செய்யத் திணறினார்கள். பேச்சி என்றொரு சிறப்பான கதா பாத்திரம். அவள் விருப்பமில்லாமலே அவளை அடைந்த காளித்தேவர் விஷயம் தெரிந்து குடும்பம் எதிர்த்ததும் பேச்சியுடனே வாழப் புறப்பட்டு போராட்ட வாழ்க்கை வாழ்ந்து இறந்தும் போகிறார். அந்த வாழ்க்கையை பேச்சி அப்புச்சுப்பனிடம் விளக்கும் இடம் ரசிக்கத் தக்கதாய் இருக்கும். இந்தக் கதையின் சிறப்பு அதிகாரங்கள் பிரிக்காமலே மொத்தமாக எழுதி இருந்தாலும் அதன் சுவை குன்றாமல் இருப்பது தான். எந்த இடத்திலும் தயங்கி நிற்காமல் சிற்றோடை போல் செல்கிறது இந்தப் பெருங்கதை.மொத்த நாவலையும் இரண்டு பாகங்களாகப் பிரித்திருக்கிறார். இரண்டாவது பாகத்தில் ஒரு கற்பனையான வனப் பகுதியை சித்தரித்து அதில் அரசரை எப்படித் தேர்ந்தெடுப்பார்கள் என்பதை கற்பனையை விரித்து புனைந்திருக்கிறார். ரசனை மிகுந்த பகுதி அது. ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம் பழம், ஈயம் பூசறது போல அழிந்து போன தொழில்களில் ஒன்று தங்கத் துகள் சலித்து எடுக்கும் வேலை. அதைப் பற்றி எழுதி இருக்கிறார். நகைக் கடைகள் நிறைய வந்த பின் இந்தத் தொழில் அழிந்து விட்டது. எனக்கு நினைவு இருக்கிறது. முன்பு தங்க ஆசாரிகளிடம் கொடுத்து நகை செய்யச் சொல்வார்கள். அப்பொழுது சிதறும் கண்ணுக்குத் தெரியாத மென் பொன் துகள்கள் கடைக்கு அருகில் உள்ள சாக்கடை மண் தெருமண் போன்றவற்றில் கலந்து இருக்கும். அதை பெருக்கி சேர்த்து சலித்து கிடைக்கும் தங்கத் துளிகளை ஆசாரிகளிடம் விற்பார்கள். மிகவும் கடினமான வேலை அது. இன்று வழக்கொழிந்து போய் விட்டது. கதை நெடுக பல இடங்களில் வரும் அழகு தமிழ் நடையை ரசித்தேன். உதாரணத்துக்கு ஒரு சில. ****ஒதுங்க நினைத்தாலும் உள்ளிழுக்கும் அலை. இழுப்பதும் அலை . தள்ளுவதும் அலை. அலை ஓய்ந்து குளிக்கக் காத்திருக்காது கடல் பறவை. நிலையற்ற சுழற்சியால் வதைபடும் வாழ்வு. நிலை தேடியலைந்து சிதையில் எரியும் உடல்: ***** கூகை ஒரே நொடியில் கடல் தண்ணீர் அத்தனையும் உறிஞ்சிக் கொண்டது. கடல் வற்றிய தரையிலிருந்து வெண் சங்குகள் கூட்டமாய் பறந்து வந்தன. அண்ணாந்து துப்பியது உறிஞ்சிய கடல் நீரை. பறந்து திரிந்த வெண் சங்குகளும் உதிர்ந்த அத்தனை நட்சத்திரங்களும் கொக்குக் கூட்டங்களாக மாறின. *****ஜமீன் கூப்பாடு போட்டான் கும்பிட்டே நின்ற கைகளின் முன்னால் முதன் முறையாக கும்பிட்டு நின்றான். கதை முடியும் போது அடித் தட்டு மக்கள் மீது நமக்கு இரக்கம் பிறப்பது நிச்சயம். நாம் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஒரு நாவல் கூகை. ********************************************************************************************

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!