Bio Data !!

05 July, 2024

நாவலின் பெயர் : ஆலவாயன். ஆசிரியர் : பெருமாள் முருகன் . காலச் சுவடு பதிப்பகம். விலை. : ரூபாய் 240 முதல் பதிப்பு : டிசம்பர் 2014 இவர் எழுதி மிகவும் விமர்சனத்திற்கு உள்ளான மாதொருபாகனின் இரு வெவ்வேறு கோணங்களை அர்த்தநாரி, ஆலவாயன், என இரு நாவல்களாக உருவாக்கியுள்ளார். இரண்டும் ஒரே புள்ளியில் தொடங்கி வெவ்வேறு திசைகளில் பயணிக்கும். மாதொருபாகன் வாசிக்காதவர்களுக்கு ஒரு முன்னுரை. காளியும் பொன்னாவும் கணவன் மனைவி. அந்நியோன்னிய தம்பதி. ஆனால் குழந்தை இல்லை. பெரு நோம்பி அன்று நடக்கும் ஒரு நிகழ்வை எழுதியதால் தான் மாதொருபாகன் மாபெரும் விமர்சனத்திற்கு உள்ளானது . குழந்தை இல்லாதவர்களுக்கு கடவுள் நம்பிக்கையில் நடக்கும் ஒரு நிகழ்வு அது. கொஞ்சம் அதிர்ச்சி தரும் நிகழ்வு தான். காளிக்கு சம்மதம் என்று பொய்யைச் சொல்லி பொன்னாவின் அண்ணன் முத்து இந்த நிகழ்வுக்கு அவளை அழைத்துச் சென்று விடுகிறான். தனக்கே தனக்கென நம்பி இருக்கும் பொன்னா இன்னொருவனோடு இணைந்து விட்டதை தாங்க முடியாமல் , காளி நாண்டு கொண்டான். காளியின் அம்மா சீராயி கணவனையும் இழந்து , தன் ஒரே மகனையும் இழந்து, கண்முன்னே பிணமாய் நடமாடும் தன் மருமகளின் நிலைக்கு, தானும் ஒரு காரணமாய் ஆகிப்போன துயரத்தில் , சிறுக சிறுக செத்துக் கொண்டிருக்கிறாள். சீராயியின் மாமியார் வகையில் சொந்தமான பவுனாயிப் பாட்டி " அடிப்புள்ள பொன்னா, நம்ம உசுரு அந்த சாமி கொடுத்தது. அது அவனுக்கு வேணுங்குறப்போ அவனே எடுத்துக்குவான். வலுவந்தத்தில் போக்கிக்க நம்மளுக்கு ஆக்கின இல்லை " என்று சொல்வது தற்கொலை எண்ணம் வரும் யாரானாலும் சிந்திக்க வேண்டியது. ஆசை ஆசையாகக் காத்திருந்த நிகழ்வும் பொன்னாவுக்கு நேர்ந்து விட்டது. ஆனால் காளிதான் இல்லை. கிராமமாகவே இருந்தாலும், குழந்தை தங்கின சமயம் தகப்பன் இல்லை என்பதால் தவறாக ஒரு சொல் யாரிடம் இருந்தும் வெளிப்படாதது மகிழ்வாய் இருந்தது. பிறக்கும் முன்னே அப்பனை முழுங்கியவள்/ ன் என்று கரித்துக் கொட்டுதல் அங்கு இல்லை. பண்டிதக்காரிச்சி என்றொரு புது வார்த்தை எனக்கு அறிமுகமானது. கிராமங்களில் சவரம் செய்வதற்கென்று ஒருவர் இருப்பார். அவர் மனைவிதான் பண்டிதக்காரிச்சி. அவள் பெயர் தங்காயி. பெண் பிள்ளைகளுக்கு அவள் வைத்தியம் பார்ப்பாள். பொன்னாவின் கையை எடுத்து, நாடி பார்த்து உறுதி சொல்லி திரும்பும் போது, அங்கே அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் வயதானவர்களின் கேலிப் பேச்சும், இரட்டை அர்த்த நக்கலும் அந்தக் காலப் பெண்கள் தங்கள் மன உளைச்சலை இப்படித்தானே தணித்துக் கொண்டார்கள் என்று தோன்றியது. அருவருக்க வைக்காத மெல்லிய நகைச்சுவை. தொரட்டுப்பாட்டி" ஊருக்கு சொல்லியிருங்காயா" என்று நமக்கு ஊர் வழக்கத்தை புரிய வைக்கிறார். கணவன் இறந்த நேரம் மனைவி குழந்தை உண்டாகி இருந்தால் வீட்டுப் பெரியவர்களை வைத்து அறிவித்து விடுவார்கள். இல்லை என்றால் குழந்தை பிறந்ததும் தாயை ஊரை விட்டுத் தள்ளி வைத்து விடுவார்கள் . ரொம்ப காலமாக இந்நிகழ்ச்சி ஊருக்குள் நடக்காமல் இருந்ததால் எல்லோரும் மறந்து இருந்த விஷயத்தைப் பாட்டி நினைவூட்டுகிறார்கள் . செங்கான் என்னும் பாத்திரத்தின் மூலம் பொன்னாவுக்கு ஆசிரியர் சொல்லும் அறிவுரை, தளர்ந்திருக்கும் அனைவருக்கும் ஆனது . " இப்படி எந்திரிச்சு வந்து காட்டு காரியத்தை பாராயா. எல்லா கஷ்டமும் பால மரத்து பஞ்சாட்டம் பறந்து போயிடும்.." சிறந்த எழுத்தாளர்கள் தம் கதைப் பாத்திரங்கள் மூலம் நல்ல கருத்துக்களை விதைத்து கொண்டே இருக்க வேண்டும் . இந்த கதையிலும் ஒரு controversial character உண்டு. திருமணம் ஆகாத, ஆனால் பெண் பலவீனம் உள்ள, தன் அண்ணனின் சொத்து வெளியே போய் விடக்கூடாது என்பதற்காக, தன் மனைவியையே அண்ணனிடம் அனுப்பி வைக்கும் தம்பி. ஆனால் தன்னை மதிக்காத கணவனை விட அவருடைய அண்ணன் எவ்வளவோ மேல் என்று தம்பி மனைவி முடிவு எடுக்கும் போது அவளுக்கு குடும்பத்தார் இழைக்கும் கொடுமை பரிதாபத்தை வரவழைக்கும். அண்ணன் பெயர் நல்லான். அவர் தன்னை " போற இடத்துல எர பொறுக்கிக்கிட்டு, கிடைச்ச இடத்தில தண்ணி குடிச்சிட்டு இருக்கிற புத்தி. அதனால எனக்கு குடும்பம் எல்லாம் ஒத்து வராது" என்கிறார். கதையின் முடிவு நாவலின் பெயருக்கான காரணம் வரும் பகுதி நெஞ்சோடு உறைந்து போகும் . இதை முடித்த கையோடு அர்த்தநாரி வாசிக்கும் ஆவலும் எழுந்தது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!