Bio Data !!

30 August, 2024

vvஒரு வாரம் முன்ன, வீட்டின் பின்னாடி உட்கார்ந்து என் மகளுடன் போனில் பேசிக்கிட்டு இருக்கிறேன். கால்ல வழு வழுன்னு ஏதோ பட காலைச் சட்னு தூக்கிட்டேன். பார்த்தா நல்ல ஆரஞ்சு நிறம் வால் பக்கம் சிவப்பாக அரணை. ஒரு நிமிஷம் பயந்திட்டேன். அரணை பற்றி நான் அறிந்த விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வருது. நான் கல்லூரி படித்த காலத்தில் எங்கள் ப்ரௌஃபசரின் மகன் அரணை கடித்து இறந்த்து. எதையும் மறந்து போனால் எங்க அப்பா அரணை புத்தின்னு திட்டினது. கொஞ்ச நேரம் கழித்து அப்பாவிடமே போய் "அரணை புத்தின்னா என்னப்பா கேட்டது. " அது கடிக்க வருமாம். பக்கத்தில வர்ரதுக்குள்ள எதுக்கு வந்தோம்னு மறந்து வேற பக்கம் போயிடுமாம். அது தான் அரணை புத்தின்னு" சொன்னது. இன்னும் என்னவெல்லாமோ நினைவுக்கு வருது. பயந்து போய் என் வீட்டுக்காரரிடம் சொன்னால் அவர் வழக்கம் போல் " நல்லா பார்த்தியா. பல்லியா இருக்கப் போகுது" என்கிறார். நான் பக்கத்து வீட்டுக்குப் போனேன். அவங்க "அரணை கடிக்காது. நக்கத் தான் செய்யும். நக்குச்சா?" ங்கிறாங்க. அது எப்படித் தெரியும்னு நான் கேட்டதும் புழுப் போல் என்னைப் பார்த்து " காலில் எச்சில் மாதிரி பட்டுச்சா" ங்கிறாங்க. அப்படி பட்ட மாதிரி தெரியல. ஆனாலும் உள்ளூர சங்கு சத்தம் கேட்குது. எங்க வீட்டுக்காரர் டெட்டாலை தண்ணியில கலந்து கால்ல ஊத்துறார். அவருக்கு தெரிஞ்சதை செய்றார். பக்கத்து வீட்டு அம்மா வெத்தலையில இருபது மிளகு பக்கம் வைத்து மெல்லுங்கன்றாங்க. உறைப்பு தெரியுதான்னாங்க. எனக்குத் தெரியலையே ன்னு சொல்லி அவங்க சத்தமா " தெரியலயா" ன்னு கேட்கிறதுக்குள்ள தொண்டையில காரம் சுள்ளுனு இறங்குது. " உறைக்குது" ன்னு சொன்னதும் ஒண்ணும் இருக்காதுக்கான்னுட்டாங்க. ஒரு நிமிஷம் ஒண்ணும் ஆகாதுன்னு தோணுது. அடுத்த நிமிஷம் அப்படியே செத்துட்டாலும் என்ன நடந்ததுன்னு தெரியும் அதனால பரவாயில்லைன்னு தோணுது ( தெரிஞ்சு என்ன பிரயோஜனம்?) நல்ல வேளை அமெரிக்காவில இருக்கிற மகள்ட கடைசியா ஒரு தடவ வீடியோ கால்ல பேசிட்டோம் திருப்தி ஆகுது. "அடச்சீ! நீயெல்லாம் ஒரு மனுஷியா? ஒரு அரணை கால்ல பட்டதுக்கு இவ்வளவு யோசிக்கிற" அப்படியும் தோணுது. இரண்டு மணி நேரம் இதையெல்லாம் யோசிச்சுகிட்டே வீட்டு வேலை பார்த்ததுல அரணை மறந்து போச்சு. இப்போ வனநீலி பதிவை பார்த்ததும் ஞாமகம் வந்துட்டுது. நன்றி வனநீலி ஒரு பதிவு எழுத உதவியதற்கு

19 August, 2024

நாவலின் பெயர் அர்த்தநாரி. ஆசிரியர் பெருமாள் முருகன் . காலச்சுவடு பதிப்பகம் . விலை 240 ரூபாய். முதல் பதிப்பு டிசம்பர் 2014 . பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது . அவரை இனி எழுதவே வேண்டாம் என்ற முடிவுக்கு தள்ளியது. அதிலிருந்து மீண்டு வந்ததோடு அதற்கு தொடர்ச்சியாக ஆலவாயன், அர்த்தநாரி என்ற இரண்டு நாவல்களை எழுதினார். சீராயி என்ற தாயின் மகன் காளி. மருமகள் பொன்னா. இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாததால், அந்தக் கால வழக்கப்படி கோவில் திருவிழாவில் மற்றொரு ஆணுடன் இணைந்து விடுகிறாள் பொன்னா. காளியின் சம்மதத்தை பெற்று விட்டதாகச் சொல்லி ஏமாற்றித்தான் அழைத்துச் செல்கிறார்கள். தான் உருகி உருகிக் காதலித்த பொன்னா கரட்டூர் நோம்பியில் கலந்து கொண்டு இன்னொருவனோடு உறவு கொண்டு விட்டாள் என்பதை அறிந்து காளி தூக்கிட்டுக்கொள்ள, பொன்னா தன் வாழ்க்கையை எப்படி கொண்டு சென்றாள் என்று சொல்வது ஆலவாயன். காளி தூக்கிடப் போவதை தற்செயலாகக் கண்டு சீராயி தடுத்து வாழும் காளியின் கதையைச் சொல்வது அர்த்தநாரி. வித்தியாசமான சிந்தனை. பன்னிரண்டு ஆண்டுகளாக இல்லாத குழநகதையை, நோன்பிக்குப் போய் வந்தபின் உண்டானால் தான் வரடன் என்று பொன்னா தன்னை மதிக்க மாட்டாள் என்பது காளியின் எண்ணம். அது மட்டுமல்லாமல் சீராயி தன் மகனிடம் நீ பெரு நோம்பிக்கு போய் வருவது எனக்குத் தெரியும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் தன் மனைவி , குழந்தைக்காக இன்னொரு ஆணுடன் இணைந்து விட்டாள் என்ற எண்ணத்தை தாங்க முடியாமல் தற்கொலை வரை போகும் காளி நோம்பியில் கலந்து கொள்ளாதவன் இல்லை. அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை இது. ஆனால் ரொம்ப முந்தைய காலம் என்பதை காளி கட்டிலில் படுத்து கிடந்த போது அவன் முடி படர்ந்து விரிந்து கிடந்ததை சொல்லி உணர்த்தி விடுகிறார் ஆசிரியர். அதோடு காளியை கருங்கல் சிலையை நிமிர்த்தி வைத்தது போல் இருப்பதாக சொல்லும்போது , உடல் அமைப்புக்கும் குழந்தை கொடுக்க முடியாமைக்கும் சம்பந்தமில்லை, என்ற பெரிய உண்மையை சுலபமாக புரிய வைக்கிறார் . அதுவும் அல்லாமல் காளி நோன்பிக்கு போவது திருமணத்துக்கு முன்பு தான். தனது எல்லா பழக்க வழக்கங்களையும் அறிந்த பொன்னாவின் அண்ணனும் தன் நண்பனுமான முத்து தன்னை நம்பி, தன் தங்கையை திருமணம் முடித்துக் கொடுத்த பின் அவன் பொன்னாவைத் தவிர வேறு பெண்ணை எண்ணியும் பார்த்ததில்லை. " நீயா ஒரு நாளும் என்னை கூப்பிட மாட்டியா" என்று கேட்கும் காளி ஒரு நாள் அவள் ஆசையாக முன்னேறும் போது "தே..... " என்று கொஞ்சுகிறான். ஆண்களின் நுண் உணர்வுகளை கதைக்கு நடுவே சொல்லி விடுகிறார் ஆசிரியர். காளியின் சித்தப்பா ஒருவர் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார். அவர் பெயர் நல்லான். ஆனால் பெண் துணை வேண்டும் போது அனுபவித்துக் கொள்வார். ஒரு இடமும் தங்க மாட்டார். அவர் சொல்லும் கதைகள் காளிக்கு மட்டுமல்ல நமக்கும் கேட்கச் சுவையாகவும், நம்புவதற்கு முடியாததாகவும் , அதே நேரம் நம்புவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. இந்த சித்தப்பா இவரது மூன்று கதைகளிலும், அதாவது மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி இவற்றில் முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்படுகிறார். நகைச்சுவை உணர்வும் பாசமும் மிக்கவர். ஒரு இடத்தில் "மண்ணார்" வீட்டில் இருந்து பெரிய மண் விளக்கு மூன்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, கம்பு வாங்கிப் போனார்கள் என்று வருகிறது. இதில் " மண்ணார் "என்ற பதம் புரியவில்லை . ஏதும் தொழில் சார்ந்த பெயராக இருக்கலாம். ( மட் பாண்டம் செய்பவர்களாய் நாம் குயவர் என்போமே அவர்களாய் இருக்குமோ?) கிட்டத்தட்ட காளியைப் போலவே உடம்பும் உருவமும் இருப்பவனை தான் பொன்னா நோம்பியில் தேர்ந்தெடுத்து இருந்தாள். அதன் மூலம் காளி மேல் அவளுக்கான அன்பை அழுத்தமாகச் சொல்லி இருப்பார் ஆசிரியர். காளியின் உதாசீனத்தால் பொன்னா காளியை விட்டு போய்விடுவோமா? நோம்பியில் தனக்கு குழந்தை கொடுத்த மாச்சாமியிடம் போய்விடுவோமா? இல்லை குழந்தையோடு தண்ணீருக்குள் இறங்கி விடுவோமா? இல்லை தனக்கு நெய்ப் பந்தம் பிடிக்க பேரன் வேண்டும் என சீராயி பண்ணிய ஏற்பாடு தானே இது. நீயே உன் பேரனைப் பார்த்துக்கொள் என்று பேரனை அவளிடம் விட்டுவிட்டுத் தாம் எங்கேயாவது பரதேசம் போய்விடுவோமா என தவிக்கும் பொன்னா நமக்கும் அதே தவிப்பை தருகிறாள். முடிவு என்னானது? நாவல் நம்மை முழுவதுமாக தமக்குள் இழுத்துக்கொள்கிறது. ரசித்தது "முண்டச்சி கதைய முழுசா சொன்னா கல்லும் கரையும் காக்காயும் அழுவும். "சீராயி கதைய மாறாத சொன்னா மண்ணும் கரையும் மரமும் அழுவும்" இந்த வகை சீராயியின் புலம்பலும் ஒப்பாரியும் கதை நெடுக வருகிறது தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றிய ஒன்று. ஒரு சில அடல்ஸ் ஒன்லி சிறுகதைகள் ஊடே வருகின்றன. அவை கிராமங்களில் வழக்கில் இருக்கும் கதைகள் என்றாலும் தவிர்த்து இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது . புத்தகங்கள் எல்லா வயதினரும் வாசிப்பதற்கு ஆனதல்லவா? அதனால் அது ஒன்று இல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

08 August, 2024

நாவலின் பெயர் : நெடு நேரம். ஆசிரியர் : பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம். விலை : ரூ 390/- முதல் பதிப்பு : டிசம்பர் 2022 கொரோன காலத்து “ பொது முடக்கம்” என்னும் தற்காலிக நிகழ்வு பல திரைப் படங்களுக்கு கருவானது போலவே இந்த நாவலுக்கும் ஆகி இருக்கிறது. இது இரண்டு பயணங்களைப் பேசுகிறது. ஒன்று சாலைகளினூடே மேற் கொள்ளும் பயணம். மற்றது வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். வாழ்வுக்காக் விழுமியங்களா விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது. கதையின் ஆரம்பமே ஒரு திடுக்கிடல் தான். அப்பா , அம்மாவைக் காணோம் என்னும் உண்மையை ஆறு மாதங்களாகத் தன் பிள்ளைகளிடம் மறைத்து வைத்திருக்கிறார். மூத்த மகனின் காதல் திருமணத்தை தான் நடத்தி வைக்க மறுத்தால் என்ன் செய்வாய் என அவனிடம் கேட்க “காத்திருப்போம் நீங்கள் ஒத்துக் கொண்டால் தான் திருமணம். அது வரை வெளி நாட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருப்போம் “ என்கிறான். திடுக்கிட்ட தந்தை திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறார் அடுத்த மகள் காதலித்து விடக் கூடாது என்பதற்காக் படிப்பை முடிக்கும் முன்னே தன் இனத்தைச் சேர்ந்த பையனுக்கு படு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறார். வீட்டுக்கு வந்த மூன்றாவது மகனிடம் மறைக்க முடியாமல் தன் மனைவியை ஆறு மாதமாக காணவில்லை என்ற உண்மையை சொல்லி விடுகிறார். தான் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்த போது தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்ட செய்தியை தாங்கிய கடிதம் தான் வரவேற்றது என்ற துயரத்தையும் அவள் ஏன் பிரிந்தாள் எங்கு போனாள் என்று எதையும் புரிந்து கொள்ள முடியாத வருத்ததையும் பகிர்ந்து கொள்கிறார். அவர் தன் மனைவியைப் புரிந்து கொள்ளாததைப் போலவே தானு தன் தந்தை குமராசுரனின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதில்லையே என்ற ஆதங்கத்தில் மூன்றாவது மகன் முருகாசு கேட்க சொல்லத் தொடங்குகிறார். தன் தந்தை குப்பாசுரன் வயலுக்கு தண்ணீர் விடும் போது ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையில் கொலை செய்யப் பட்டு இறந்த்ததையும் தன் தாய் குப்பாசுரியின் அண்ணன் தன் படிப்புக்கான பொறுப்பை ஏற்று வேலையில் அமர்த்தியதையும் அவர் மகளையே தனக்கு மணமுடித்துக் கொடுத்ததையும் சொன்னார். அப்பாவுக்கு பள்ளியும் வீடும் அம்மாவுக்கு வீடு மட்டும் என்று நினைத்துக் கொண்டான். கோபப்பட்டு கத்தி சண்டையிட்டு மட்டுமல்ல மௌனமாய் இருந்தே ஒரு பெண்ணால் கணவனை உச்ச பட்ச கோபத்துக்கு ஆளாக்க முடியும் என்பதைக் குமராசுரனின் மனைவி மங்காசுரியின் மூலம் காட்டி இருக்கிறார் ஆசிரியர். இருவரையும் ஜோடியாக ஊருக்குள் அழைத்துச் செல்லவே இல்லை குமராசுரனின் தாய் மாமன். அவளை மணமுடிக்க ஆசைப்பட்ட ஏமாந்த சிலர் ஊருக்குள் இருப்பதால் அவர்களை எரிச்சலூட்டக் கூடும் என்று காரணம் சொல்லி விட்டார். தன் மாமன் சொல்லைத் தட்டாத குமராசுரனும் ஏற்றுக் கொண்டார். ஆனால் இப்போது அதற்கும் மங்காசுரியின் மௌனத்துக்கும் வீட்டை விட்டு சென்றதற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது என்கிறார் தன் மகனிடம். படிப்பில் சிறந்து விளங்கும் குமராசுரன் பசியின் கொடுமையால் தன் வாழ்ந்தாள் சாதனையாக பள்ளியில் வாங்கிய பரிசுப் பொருளான பேனாவை அடமானம் வைத்து பணம் பெற்று சாப்பிட்டதாகச் சொல்வது கொடுமை. இதைப் போலவே என் நண்பர் ஒருவர் தன் பள்ளிக் காலத்தில் பரிசாகப் பெற்ற புத்தகத்தை பழைய பேப்பர் கடையில் விற்று சாப்பிட்டதாகச் சொன்னது வலியோடு நினைவுக்கு வந்தது. முருகாசு தன் நண்பன் மேகாசுவுடன் அவனுடைய விலையுயர்ந்த பைக்கில் தன் தாயைத் தேடிச் செல்வதும் ஒரு கிராமத்தில் ஒரு பெண் இளம் காலையில் பறவைகளுக்குத் தானியங்கள் விசிறுவதை அறிந்து பறவைகள் மிருகங்கள் மேல் பற்றுக் கொண்ட தன் தாயாக இருக்குமோ என்ற ஆசையில் செல்வதை விவரிக்கும் இடம் மிகவும் ரசனைக்குரியதாய் இருக்கும். மேகாசு தன் நண்பனிடம் கொஞ்சம் விரசம் கலந்தே பேசுவான். தேனாசிரத்தாங்கல் கிராமத்தில் இவர்கள் ஆலமரத்தடி மேடையில் படுத்திருக்கும் போது அங்கே எல்லோருமே ஒருவரை ஒருவர் வயசு வித்தியாசமில்லாமல் இவ்விதமே சீண்டிக் கொள்கிறார்கள். இது கிராமங்களில் வாழ்பவர்களின் இயல்பாய் இருக்கிறது. பள்ளிக் காலத்தின் மூன்று நண்பர்களும் இணந்து இருக்கும் போது அவரவரின் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டுப் புறாவாய், கூண்டுக் கிளியாய் வளர்ந்து வந்த முருகாசுவுக்கு இப்படி ஒரு அழகான காதல் அனுபவம் உண்டு என்பது அவன் நண்பர்களை மட்டுமல்ல நம்மையுமே ஆச்சர்யப்பட வைக்கிறது. எல்லோரையும் மிஞ்சும் விதமாக நகரத்தில் ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதராக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொள்கிறார். பலவீனப்பட்ட ஒரு நொடி இவன் உள் மனதைக் காட்டி விட்டதால் அவள் கோபப்பட மனம் வெறுத்து ஊருக்கு வந்தான் முருகாசு. ஆனால் இங்கோ பேரிடி. அம்மாவை ஆறு மாதமாக காணவில்லை. அம்மா ஏன் வீட்டை விட்டு போனார்கள் . முருகாசு கண்டு பிடித்து தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று விட வேண்டும் என்று நினைத்தது நடந்த்தா. சுவாரஸ்யத்தைத் தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். நான் ரசித்த ஒரு சில வரிகள்: “ஒரு நொடியில் கிடைக்கிறது பேரன்பு. ஒரு நிமிஷத்தில் கிடைக்கிறது அன்பு. அவ்வளவு தான். ஒரு நிமிஷத்துக்கு மேல் அன்புக்கு ஆயுள் கிடையாது. (ஆணென்பதால் இப்படி உணர்ந்திருப்பாரோ. எனக்கு இதோடு உடன்பாடில்லை ஆனாலும் வரிகளின் அழகு ஈர்த்தது. “ அதீதச் சுத்தம் கொண்டிருக்கும் வீடு ஆட்களை விரட்டி விடுகிறது. சுத்தத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்று எச்சரிக்கையாய் புழங்க வேண்டி இருக்கிறது. ( வந்த விருந்தினர் போய் தெரு திரும்பு முன்னமே வீட்டைச் சுத்தம் செய்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்) “கைகளை விரித்திருந்த அவர் தலை மேல் , தோள்களில் , கைகளில், பாதங்களில் பறவைகள் அமர் இலைகளை உதிர்த்து விட்டு பறவைகள் முளைத்த மரம் அங்கே உதித்தது. தலைக்கு மேல் பறக்கும் பறவைக் காட்சியும் சேர்ந்து மரம் வானை நோக்கி உயர்ந்து உயர்ந்து சென்றது. அதிசயப் பறவை மரத்தைப் பார்த்த படி அவர்கள் உறைந்தார்கள்” ( இந்த அழகிய கற்[பனை நம்மையும் உறைய வைக்கிறது) “பொதுவாக தான் காதலித்த பெண்ணுக்கு அமையும் கணவன் கொடுமைக்காரனாக இருப்பான் என்னும் கற்பிதம் மேகாசுக்கும் வந்திருக்கும் ( யதார்த்தமான மன உணர்வுகளை கதை நெடுக சொல்லிச் செல்வது கதையின் வெற்றிக்கு காரணமாய் இருக்கலாம்)