19 August, 2024
நாவலின் பெயர் அர்த்தநாரி.
ஆசிரியர் பெருமாள் முருகன் .
காலச்சுவடு பதிப்பகம் .
விலை 240 ரூபாய்.
முதல் பதிப்பு டிசம்பர் 2014 .
பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது . அவரை இனி எழுதவே வேண்டாம் என்ற முடிவுக்கு தள்ளியது. அதிலிருந்து மீண்டு வந்ததோடு அதற்கு தொடர்ச்சியாக ஆலவாயன், அர்த்தநாரி என்ற இரண்டு நாவல்களை எழுதினார்.
சீராயி என்ற தாயின் மகன் காளி. மருமகள் பொன்னா. இவர்களுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாததால், அந்தக் கால வழக்கப்படி கோவில் திருவிழாவில் மற்றொரு ஆணுடன் இணைந்து விடுகிறாள் பொன்னா. காளியின் சம்மதத்தை பெற்று விட்டதாகச் சொல்லி ஏமாற்றித்தான் அழைத்துச் செல்கிறார்கள்.
தான் உருகி உருகிக் காதலித்த பொன்னா கரட்டூர் நோம்பியில் கலந்து கொண்டு இன்னொருவனோடு உறவு கொண்டு விட்டாள் என்பதை அறிந்து காளி தூக்கிட்டுக்கொள்ள, பொன்னா தன் வாழ்க்கையை எப்படி கொண்டு சென்றாள் என்று சொல்வது ஆலவாயன்.
காளி தூக்கிடப் போவதை தற்செயலாகக் கண்டு சீராயி தடுத்து வாழும் காளியின் கதையைச் சொல்வது அர்த்தநாரி. வித்தியாசமான சிந்தனை. பன்னிரண்டு ஆண்டுகளாக இல்லாத குழநகதையை, நோன்பிக்குப் போய் வந்தபின் உண்டானால் தான் வரடன் என்று பொன்னா தன்னை மதிக்க மாட்டாள் என்பது காளியின் எண்ணம். அது மட்டுமல்லாமல் சீராயி தன் மகனிடம் நீ பெரு நோம்பிக்கு போய் வருவது எனக்குத் தெரியும் என்று சொல்கிறார்கள். அப்படியானால் தன் மனைவி , குழந்தைக்காக இன்னொரு ஆணுடன் இணைந்து விட்டாள் என்ற எண்ணத்தை தாங்க முடியாமல் தற்கொலை வரை போகும் காளி நோம்பியில் கலந்து கொள்ளாதவன் இல்லை. அப்பட்ட மான ஆணாதிக்க சிந்தனை இது.
ஆனால் ரொம்ப முந்தைய காலம் என்பதை காளி கட்டிலில் படுத்து கிடந்த போது அவன் முடி படர்ந்து விரிந்து கிடந்ததை சொல்லி உணர்த்தி விடுகிறார் ஆசிரியர். அதோடு காளியை கருங்கல் சிலையை நிமிர்த்தி வைத்தது போல் இருப்பதாக சொல்லும்போது , உடல் அமைப்புக்கும் குழந்தை கொடுக்க முடியாமைக்கும் சம்பந்தமில்லை, என்ற பெரிய உண்மையை சுலபமாக புரிய வைக்கிறார் . அதுவும் அல்லாமல் காளி நோன்பிக்கு போவது திருமணத்துக்கு முன்பு தான். தனது எல்லா பழக்க வழக்கங்களையும் அறிந்த பொன்னாவின் அண்ணனும் தன் நண்பனுமான முத்து தன்னை நம்பி, தன் தங்கையை திருமணம் முடித்துக் கொடுத்த பின் அவன் பொன்னாவைத் தவிர வேறு பெண்ணை எண்ணியும் பார்த்ததில்லை.
" நீயா ஒரு நாளும் என்னை கூப்பிட மாட்டியா" என்று கேட்கும் காளி ஒரு நாள் அவள் ஆசையாக முன்னேறும் போது "தே..... " என்று கொஞ்சுகிறான். ஆண்களின் நுண் உணர்வுகளை கதைக்கு நடுவே சொல்லி விடுகிறார் ஆசிரியர்.
காளியின் சித்தப்பா ஒருவர் திருமணம் வேண்டாம் என்று இருக்கிறார். அவர் பெயர் நல்லான். ஆனால் பெண் துணை வேண்டும் போது அனுபவித்துக் கொள்வார். ஒரு இடமும் தங்க மாட்டார். அவர் சொல்லும் கதைகள் காளிக்கு மட்டுமல்ல நமக்கும் கேட்கச் சுவையாகவும், நம்புவதற்கு முடியாததாகவும் , அதே நேரம் நம்புவதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. இந்த சித்தப்பா இவரது மூன்று கதைகளிலும், அதாவது மாதொருபாகன், ஆலவாயன், அர்த்தநாரி இவற்றில் முக்கியத்துவம் கொடுத்து சொல்லப்படுகிறார். நகைச்சுவை உணர்வும் பாசமும் மிக்கவர்.
ஒரு இடத்தில் "மண்ணார்" வீட்டில் இருந்து பெரிய மண் விளக்கு மூன்றை கொண்டு வந்து கொடுத்துவிட்டு, கம்பு வாங்கிப் போனார்கள் என்று வருகிறது. இதில் " மண்ணார் "என்ற பதம் புரியவில்லை . ஏதும் தொழில் சார்ந்த பெயராக இருக்கலாம். ( மட் பாண்டம் செய்பவர்களாய் நாம் குயவர் என்போமே அவர்களாய் இருக்குமோ?)
கிட்டத்தட்ட காளியைப் போலவே உடம்பும் உருவமும் இருப்பவனை தான் பொன்னா நோம்பியில் தேர்ந்தெடுத்து இருந்தாள். அதன் மூலம் காளி மேல் அவளுக்கான அன்பை அழுத்தமாகச் சொல்லி இருப்பார் ஆசிரியர்.
காளியின் உதாசீனத்தால் பொன்னா காளியை விட்டு போய்விடுவோமா? நோம்பியில் தனக்கு குழந்தை கொடுத்த மாச்சாமியிடம் போய்விடுவோமா? இல்லை குழந்தையோடு தண்ணீருக்குள் இறங்கி விடுவோமா? இல்லை தனக்கு நெய்ப் பந்தம் பிடிக்க பேரன் வேண்டும் என சீராயி பண்ணிய ஏற்பாடு தானே இது. நீயே உன் பேரனைப் பார்த்துக்கொள் என்று பேரனை அவளிடம் விட்டுவிட்டுத் தாம் எங்கேயாவது பரதேசம் போய்விடுவோமா என தவிக்கும் பொன்னா நமக்கும் அதே தவிப்பை தருகிறாள். முடிவு என்னானது?
நாவல் நம்மை முழுவதுமாக தமக்குள் இழுத்துக்கொள்கிறது.
ரசித்தது "முண்டச்சி கதைய முழுசா சொன்னா கல்லும் கரையும் காக்காயும் அழுவும்.
"சீராயி கதைய
மாறாத சொன்னா
மண்ணும் கரையும்
மரமும் அழுவும்" இந்த வகை சீராயியின் புலம்பலும் ஒப்பாரியும் கதை நெடுக வருகிறது
தவிர்த்திருக்கலாம் எனத் தோன்றிய ஒன்று.
ஒரு சில அடல்ஸ் ஒன்லி சிறுகதைகள் ஊடே வருகின்றன. அவை கிராமங்களில் வழக்கில் இருக்கும் கதைகள் என்றாலும் தவிர்த்து இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது . புத்தகங்கள் எல்லா வயதினரும் வாசிப்பதற்கு ஆனதல்லவா? அதனால் அது ஒன்று இல்லாமல் இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!