08 August, 2024
நாவலின் பெயர் : நெடு நேரம்.
ஆசிரியர் : பெருமாள் முருகன்
காலச்சுவடு பதிப்பகம்.
விலை : ரூ 390/-
முதல் பதிப்பு : டிசம்பர் 2022
கொரோன காலத்து “ பொது முடக்கம்” என்னும் தற்காலிக நிகழ்வு பல திரைப் படங்களுக்கு கருவானது போலவே இந்த நாவலுக்கும் ஆகி இருக்கிறது. இது இரண்டு பயணங்களைப் பேசுகிறது. ஒன்று சாலைகளினூடே மேற் கொள்ளும் பயணம். மற்றது வாழ்வினூடே மேற்கொள்ளும் அகப் பயணம். வாழ்வுக்காக் விழுமியங்களா விழுமியங்களுக்காக வாழ்க்கையா என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்புகிறது.
கதையின் ஆரம்பமே ஒரு திடுக்கிடல் தான். அப்பா , அம்மாவைக் காணோம் என்னும் உண்மையை ஆறு மாதங்களாகத் தன் பிள்ளைகளிடம் மறைத்து வைத்திருக்கிறார். மூத்த மகனின் காதல் திருமணத்தை தான் நடத்தி வைக்க மறுத்தால் என்ன் செய்வாய் என அவனிடம் கேட்க “காத்திருப்போம் நீங்கள் ஒத்துக் கொண்டால் தான் திருமணம். அது வரை வெளி நாட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து கொண்டு இருப்போம் “ என்கிறான். திடுக்கிட்ட தந்தை திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறார்
அடுத்த மகள் காதலித்து விடக் கூடாது என்பதற்காக் படிப்பை முடிக்கும் முன்னே தன் இனத்தைச் சேர்ந்த பையனுக்கு படு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறார்.
வீட்டுக்கு வந்த மூன்றாவது மகனிடம் மறைக்க முடியாமல் தன் மனைவியை ஆறு மாதமாக காணவில்லை என்ற உண்மையை சொல்லி விடுகிறார். தான் ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்த போது தன் மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்ட செய்தியை தாங்கிய கடிதம் தான் வரவேற்றது என்ற துயரத்தையும் அவள் ஏன் பிரிந்தாள் எங்கு போனாள் என்று எதையும் புரிந்து கொள்ள முடியாத வருத்ததையும் பகிர்ந்து கொள்கிறார்.
அவர் தன் மனைவியைப் புரிந்து கொள்ளாததைப் போலவே தானு தன் தந்தை குமராசுரனின் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொண்டதில்லையே என்ற ஆதங்கத்தில் மூன்றாவது மகன் முருகாசு கேட்க சொல்லத் தொடங்குகிறார்.
தன் தந்தை குப்பாசுரன் வயலுக்கு தண்ணீர் விடும் போது ஏற்பட்ட ஒரு சின்ன சண்டையில் கொலை செய்யப் பட்டு இறந்த்ததையும் தன் தாய் குப்பாசுரியின் அண்ணன் தன் படிப்புக்கான பொறுப்பை ஏற்று வேலையில் அமர்த்தியதையும் அவர் மகளையே தனக்கு மணமுடித்துக் கொடுத்ததையும் சொன்னார். அப்பாவுக்கு பள்ளியும் வீடும் அம்மாவுக்கு வீடு மட்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கோபப்பட்டு கத்தி சண்டையிட்டு மட்டுமல்ல மௌனமாய் இருந்தே ஒரு பெண்ணால் கணவனை உச்ச பட்ச கோபத்துக்கு ஆளாக்க முடியும் என்பதைக் குமராசுரனின் மனைவி மங்காசுரியின் மூலம் காட்டி இருக்கிறார் ஆசிரியர். இருவரையும் ஜோடியாக ஊருக்குள் அழைத்துச் செல்லவே இல்லை குமராசுரனின் தாய் மாமன். அவளை மணமுடிக்க ஆசைப்பட்ட ஏமாந்த சிலர் ஊருக்குள் இருப்பதால் அவர்களை எரிச்சலூட்டக் கூடும் என்று காரணம் சொல்லி விட்டார். தன் மாமன் சொல்லைத் தட்டாத குமராசுரனும் ஏற்றுக் கொண்டார். ஆனால் இப்போது அதற்கும் மங்காசுரியின் மௌனத்துக்கும் வீட்டை விட்டு சென்றதற்கும் ஏதோ தொடர்பு இருக்கும் என்று இப்போது தோன்றுகிறது என்கிறார் தன் மகனிடம்.
படிப்பில் சிறந்து விளங்கும் குமராசுரன் பசியின் கொடுமையால் தன் வாழ்ந்தாள் சாதனையாக பள்ளியில் வாங்கிய பரிசுப் பொருளான பேனாவை அடமானம் வைத்து பணம் பெற்று சாப்பிட்டதாகச் சொல்வது கொடுமை. இதைப் போலவே என் நண்பர் ஒருவர் தன் பள்ளிக் காலத்தில் பரிசாகப் பெற்ற புத்தகத்தை பழைய பேப்பர் கடையில் விற்று சாப்பிட்டதாகச் சொன்னது வலியோடு நினைவுக்கு வந்தது.
முருகாசு தன் நண்பன் மேகாசுவுடன் அவனுடைய விலையுயர்ந்த பைக்கில் தன் தாயைத் தேடிச் செல்வதும் ஒரு கிராமத்தில் ஒரு பெண் இளம் காலையில் பறவைகளுக்குத் தானியங்கள் விசிறுவதை அறிந்து பறவைகள் மிருகங்கள் மேல் பற்றுக் கொண்ட தன் தாயாக இருக்குமோ என்ற ஆசையில் செல்வதை விவரிக்கும் இடம் மிகவும் ரசனைக்குரியதாய் இருக்கும்.
மேகாசு தன் நண்பனிடம் கொஞ்சம் விரசம் கலந்தே பேசுவான். தேனாசிரத்தாங்கல் கிராமத்தில் இவர்கள் ஆலமரத்தடி மேடையில் படுத்திருக்கும் போது அங்கே எல்லோருமே ஒருவரை ஒருவர் வயசு வித்தியாசமில்லாமல் இவ்விதமே சீண்டிக் கொள்கிறார்கள். இது கிராமங்களில் வாழ்பவர்களின் இயல்பாய் இருக்கிறது.
பள்ளிக் காலத்தின் மூன்று நண்பர்களும் இணந்து இருக்கும் போது அவரவரின் காதல் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். வீட்டுப் புறாவாய், கூண்டுக் கிளியாய் வளர்ந்து வந்த முருகாசுவுக்கு இப்படி ஒரு அழகான காதல் அனுபவம் உண்டு என்பது அவன் நண்பர்களை மட்டுமல்ல நம்மையுமே ஆச்சர்யப்பட வைக்கிறது. எல்லோரையும் மிஞ்சும் விதமாக நகரத்தில் ஒரு பெண்ணுடன் ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதராக இருந்தாலும் மிகவும் கண்ணியமாகவே நடந்து கொள்கிறார். பலவீனப்பட்ட ஒரு நொடி இவன் உள் மனதைக் காட்டி விட்டதால் அவள் கோபப்பட மனம் வெறுத்து ஊருக்கு வந்தான் முருகாசு. ஆனால் இங்கோ பேரிடி. அம்மாவை ஆறு மாதமாக காணவில்லை.
அம்மா ஏன் வீட்டை விட்டு போனார்கள் . முருகாசு கண்டு பிடித்து தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று விட வேண்டும் என்று நினைத்தது நடந்த்தா. சுவாரஸ்யத்தைத் தெரிந்து கொள்ள புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.
நான் ரசித்த ஒரு சில வரிகள்:
“ஒரு நொடியில் கிடைக்கிறது பேரன்பு. ஒரு நிமிஷத்தில் கிடைக்கிறது அன்பு. அவ்வளவு தான். ஒரு நிமிஷத்துக்கு மேல் அன்புக்கு ஆயுள் கிடையாது. (ஆணென்பதால் இப்படி உணர்ந்திருப்பாரோ. எனக்கு இதோடு உடன்பாடில்லை ஆனாலும் வரிகளின் அழகு ஈர்த்தது.
“ அதீதச் சுத்தம் கொண்டிருக்கும் வீடு ஆட்களை விரட்டி விடுகிறது. சுத்தத்திற்கு பங்கம் வந்து விடுமோ என்று எச்சரிக்கையாய் புழங்க வேண்டி இருக்கிறது. ( வந்த விருந்தினர் போய் தெரு திரும்பு முன்னமே வீட்டைச் சுத்தம் செய்பவர்களை நான் பார்த்திருக்கிறேன்)
“கைகளை விரித்திருந்த அவர் தலை மேல் , தோள்களில் , கைகளில், பாதங்களில் பறவைகள் அமர் இலைகளை உதிர்த்து விட்டு பறவைகள் முளைத்த மரம் அங்கே உதித்தது. தலைக்கு மேல் பறக்கும் பறவைக் காட்சியும் சேர்ந்து மரம் வானை நோக்கி உயர்ந்து உயர்ந்து சென்றது. அதிசயப் பறவை மரத்தைப் பார்த்த படி அவர்கள் உறைந்தார்கள்” ( இந்த அழகிய கற்[பனை நம்மையும் உறைய வைக்கிறது)
“பொதுவாக தான் காதலித்த பெண்ணுக்கு அமையும் கணவன் கொடுமைக்காரனாக இருப்பான் என்னும் கற்பிதம் மேகாசுக்கும் வந்திருக்கும் ( யதார்த்தமான மன உணர்வுகளை கதை நெடுக சொல்லிச் செல்வது கதையின் வெற்றிக்கு காரணமாய் இருக்கலாம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!