Bio Data !!

23 December, 2024

நாவலின் பெயர் : உடைந்த நிழல். ஆசிரியர் : பாரதி பாலன். சந்தியா பதிப்பகம். விலை. : ரூ. 120. முதல் பதிப்பு : 2005. இந்த ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் நாவல். தினமணி கதிரில் தொடராக வந்து பின் புத்தகமாகி இருக்கிறது. " மாம்பூவும் , வேப்பம்பூவும் , தும்பைப் பூவும் பூவிலா சேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அடுக்கடுக்கான அதன் கட்டுடலும் நெகிழ்வும் வளவளப்பும் எத்தனை அழகு!! இதையெல்லாம் பார்க்கத் தனி கண் வேண்டும். மனது வேண்டும். என்று ஒரு முறை நரேஷ் முத்தையா சொன்னது இப்போது மனதில் படுகிறது." இது ஆசிரியர் பாரதிபாலன் தன் உரையில் கூறியிருப்பது. இத்தகைய பூக்களைப் போன்றவர்களே கதையின் மாந்தர்கள். கதை நண்பர்களான இரு இளைஞர்களைப் பற்றிய கதை. ஒருவன் காந்தி ராஜன். நேர்மை, உண்மை, போன்ற எதைப்பற்றியும் நினைக்காமல் லௌகீக வெற்றிகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மனம் போன போக்கில் வாழ்பவன். ஆனால் நண்பனுக்கு உதவத் தன்னாலானதைச் செய்யத் தயங்காதவன். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை மிக முக்கியமானவனாகக் கருதக் கூடிய அளவில் பேசத் தெரிந்தவன். அவன் வாழ்வில் நடப்பவை எல்லாம் சிறந்தனவாகவே இருக்கிறது. அடுத்தவன் நரேஷ் முத்தையா. வேலை தேடி மாநகரம் வந்து காந்தியோடு இணைந்தவன். சரி, தவறு என்ற இரண்டுக்கும் நடுவில் அல்லாடிக் கொண்டு இருப்பவன். நியாயமற்று காந்தி செய்யும் பல காரியங்களில் தன்னை இணைத்துக் கொள்வதை விரும்பா விட்டாலும் வேறு வழியின்றி இணைந்து செல்பவன். தூசி படாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறா? நாம் தோற்றுப் போய் விட்டோமோ? காந்தி தான் புத்திசாலியோ என்ற குழப்பத்துடனே தனது வாழ்வைக் கழிப்பவன். காந்தியிடம் சிரித்துப் பேசும் பெண்களைப் பரிதாபமாகப் பார்ப்பான். "சாக்கடையில் விழப் போகிறது . அதற்கு ஏன் இத்தனை அலங்காரம் " என்று நினைப்பான். காந்தி ராஜன் தொடர்பு வைத்திருக்கும் பெண் ஜெயந்தி அவருடைய அலுவலகத்திலேயே பணிபுரிபவள். பணக்காரப் பெண்ணை திருமணம் செய்த பின்னும் அந்தத் தொடர்பை மிக தந்திரமாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறான். பல இடங்களில் தமிழ் மிக அழகாக நடமிடுகிறது. நரேஷ் ஜெயந்தியின் புருஷன் மீது பரிதாபம் கொள்கிறான். அதைச் சொல்லும் போது " திருட்டு போனது தெரியாமல், திருடியவன் யார் என்று அறியாமல், அந்த ஆத்மா அலையப் போகிறது. பல நேரங்களில் அந்த ஆத்மாக்கள் எரிந்து சாம்பலான பின்னும் அறியப்படாமலே சாம்பலோடு சாம்பலாக கரைந்து விடுகிறது. " ஒரு பெண் செய்யும் தவறு பற்றி கடைசியாக அறிந்து கொள்பவன் அவளுடைய கணவனாகவே இருக்கிறான் என்று சொல்லப்படுவது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது ஊரில் லதா என்னும் தன் உறவுக்கார பெண்ணை காதலிக்கிறான் நரேஷ் . ஆனால் அந்த காதலை அந்தப் பெண்ணிடமே கூட வெளிப்படுத்தும் துணிவு இல்லை. ஆனால் அந்த காதல் அவனை நேர்மையாளனாக வார்த்து எடுக்கிறது. அவள் வேறு ஒருவனைத் திருமணம் செய்து விட்ட பிறகும், அவளைத் தூக்கி எறிந்து விடவும் முடியாமல், சேர்த்து வைத்துக் கொள்ளவும் முடியாமல் மூச்சு திணறுகிறது அவனுக்கு. இவ்விதம் நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை கொண்டு அழகாகப் பின்னித் தாழம்பூ தைத்தது போல் "உடைந்த நிழல்" கதை நமக்கு குளிர்ச்சியை தருகிறது. நல்லதோர் அறிமுகம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!