Bio Data !!

20 January, 2025

Reels நாம ரொம்ப பார்க்கிறதால அந்த வீடியோ போடுறவங்களோட பெர்சனலா ஒட்டுதல் ஆகிடுறோம். அதனாலேயே அவங்க மரணம் நம்மை ரொம்ப பாதிச்சிடுது. சில வருஷங்கள் முன்னால உதயா சுமதி ஒரு கப்பிள். ரொம்ப அழகா வீடியோ போடுவாங்க. நிறைய பேருக்கு பிடிக்கும். உதயா திடீர்னு ஒரு விபத்துல சிக்கினதும் அவர்கள் பணத் தேவையை சொல்லி வீடியோ போட பலர் பண உதவி செய்தார்கள். இருந்தும் உதயா மரணித்துப் போனான். பண உதவி செய்ததாலேயே அந்த குடும்பத்துக்கு உரிமைப்பட்டவர்கள் போல பல தலையீடு இருந்தது. இன்றும் அந்தப் பெண் சுமதி தனியாகத் தான் இருக்கிறாள். இப்போது அது போலவே மற்றுமொரு மரணம். ராகுல் டிக்கி. பெண் வேடமிட்டு நடிப்பவர்கள் பல தாக்குதல்களைத் தாங்க வேண்டி இருக்கிறது. நிறைய பெண் வேடமிட்டும் நிறைய நகைச்சுவை காட்சிகளை நடித்தும் வீடியோ போடும் ராகுலும் எனக்கு மிகவும் பிடித்தவர் இன்ஸ்ட்டாவில். இவர் மனைவிக்கு வயது 21 ஆம். சமீப காலமாக ஒன்றரை லட்சம் இரண்டு லட்சம் போட்டு தன் பிள்ளைகளுக்கு இந்த வண்டி வாங்கித் தருபவர்கள் தங்கள் பிள்ளைகளை எமனின் கையில் பிடித்துக் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வண்டிகள் குறிப்பிட்ட வேகம் வரை தான் நம் கட்டுப்பாட்டில் இருக்கும். அதை மீறி வேகமாகச் செல்லத் தொடங்கினால் அதன் கட்டுப்பாட்டுக்குள் நாம் வந்து விடுவோம். அதை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நொடி தவறு ஒரு உயிர் பலி. பிள்ளைகளை பறி கொடுத்து பெற்றோர் படும் பாடு காணச் சகிக்கவில்லை. சந்தோஷம் என்பதே துடைத்துப் போட்டாற் போலாகி விடுகிறது. தன் பெற்றோரை சந்தோஷமாக வைக்க வேண்டும் என்று நினைக்கும் எந்த பிள்ளையும் இத்தகைய சோகத்தை பரிசாகத் தராது. தன்னைப் பெற்றவர்களை தான் பெற்றவர்களை மனதில் நிறுத்தியே ஒவ்வொரு முறையும் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டும். இறப்பு செய்தி கேட்டதிலிருந்து மனசே நல்லா இல்ல.

12 January, 2025

நாவல் : நெஞ்சில் ஒரு நெருஞ்சி ஆசிரியர் : அய்க்கண். சிவா பதிப்பகம். விலை : ரூ 100/- முதல் பதிப்பு : டிசம்பர் 2012. இது ஆசிரியருக்கு மிகப் பிடித்தமான நாவல் எனச் சொல்கிறார். நாவல் உலகின் முடி சூடா மன்னராக விளங்குகிறார் அய்க்கண். கதை நாயகன் முத்து தாய் தந்தையை இழந்தவன். அவனுடைய ஹை ஸ்கூல் வாத்தியார் மாணிக்கம் தான் அவனை படிக்க வைக்கிறார். முத்துவும் காலையில் பேப்பர் போட்டு மாலையில் சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டித் தன் மேல் செலவுகளை பார்த்துக் கொள்கிறார். முத்துவை எதேச்சையாக சந்தித்து, பின் இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதை அறிந்து , மேலும் நெருங்க முயலும் லதா கதை நாயகி. அதை புரிந்து கொள்ளும் முத்துவின் சிந்தனை ரொம்ப உயர்ந்தது. அவளோ உயர்ந்த கோபுரம். அவனோ பள்ளத்தாக்கிற்குள் கிடக்கும் குப்பை. அவளுடைய பரிவு என்னும் காற்றில் அந்த குப்பை பறந்து போய் கோபுரத்தில் உட்கார்ந்து இருக்கிறது . இன்னொரு காற்றில் அந்த குப்பை மீண்டும் பள்ளத்தில் விழுந்து கிடக்கப் போகிறது. எவ்வளவு தெளிந்த சிந்தனை. அந்தக் கதையின் ஆரம்பமே " அவனது நெஞ்சுக்குள் அந்த எண்ணம் நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டிருந்தது. அப்படி நடந்திருக்கக் கூடாது . அவள் சின்ன பெண் . ஆனால் அவன்?? " அப்படி ஒரு எதிர்பாராத நிகழ்வு தெளிந்த சிந்தனை உடைய இவனுக்கும் நிகழ்ந்து விடுகிறது. லதாவின் அப்பா மகாலிங்கம் உடம்பு சரியில்லாமல் போக, வைத்தியத்துக்கு வெளிநாட்டுக்கு கூட்டிச் சென்ற இடத்தில், நடக்கும் இரண்டு நிகழ்வுகள் நெஞ்சை உருக்குபவை. அங்கே ராஜா என்பவரின் மகள் ராஜி, சாமியிடம் போய்விட்டதாக சொல்லிவிட்ட தன் அம்மா, லதா தான் என்று நம்பி ஒட்டிக் கொள்ளும் ஓர் இடம் . இரண்டாவதாக அந்த ராஜாவின் தந்தையான பண்ணையார் தான், தன் வியாபாரத்தில் நஷ்டப்பட்டு, வீட்டில் தற்கொலை செய்ய வேண்டாம் என, ஹோட்டலில் தங்கி தற்கொலைக்கு முயலும் மகாலிங்கத்தை அதிலிருந்து காப்பாற்றி பண உதவி செய்தவர் என்பது விளக்கப்படும் இடம். பிரபஞ்சம் மனிதர்களை எங்கிருந்து எங்கு போய் சேர்க்கிறது என்பது வியப்பாக இருக்கிறது. கதையின் பெயர் "நெஞ்சில் ஒரு நெருஞ்சி" நெருஞ்சி என்பது ஊவா முள் போல வலிக்காது. ஆனால் இருக்கும் இடத்தில் இறுக்கமாய் நின்று உறுத்திக் கொண்டே இருக்கும். அதுபோல் லதாவுக்கு நடந்த ஒரு எதிர்பாராத நிகழ்வு நெருஞ்சியாய் உறுத்தி அவள் மண வாழ்வுக்கு எப்படி இடைஞ்சலாய் இருந்து மன உளைச்சலைத் தருகிறது என அழகாக கதையை நகர்த்திச் செல்கிறார் . காதல் என்பது அந்தக் கால காவியங்கள் போல tragedy யில் ஏங்கி ஏங்கிச் சாகிறதற்கு மட்டுமல்ல . நிஜ உலகிலே பிராக்டிக்கலாக வாழ்வதற்கும் முயற்சி செய்யணும். அதுதான் காதலின் உண்மையான வெற்றி என்று ஆசிரியர் சொன்னவுடன் பரவாயில்லை வித்தியாசமாக சிந்தித்து முடிவும் சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் முடிவு வழக்கம்போல் தியாக வாழ்வு . பன்னிரெண்டு வருஷங்களுக்கு முன் இப்படி. சிந்தித்ததும் சிந்திக்க வைத்ததும் தான் இன்று பலரை துணிச்சலான முடிவு எடுக்கத் தூண்டி இருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம். அது போல் பல நிகழ்வுகளை சொல்லும் குடும்ப கதைகளை எழுதுவதற்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்ற சிந்தனையும் எழுந்தது. இது அவசரயுகம். ரசித்து படித்தது: " இதுவரை என்னைக் காதலனாக அடைந்ததற்காக நீ உன்னையே தாழ்த்திக் கொண்டாய். நவ் இட் இஸ் மை டர்ன். இனி உன்னை மனைவியாக அடைவதற்காக நான் என்னை உயர்த்திக் கொண்டாக வேண்டும். " " ஒரு ஆண் தான் பார்க்கிற அழகிய பெண்களை எல்லாம் விரும்புகிற காலத்தில், பிற ஆண்கள் மனதில் கூட இடம்பெறாமல் இருப்பதே பெண்ணுக்கு கற்பு என்கிற புராண கால இலக்கணத்தை வைத்துப் பார்த்தால் இன்றைக்கு எல்லா பெண்களுமே கற்பு இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள்" "நெஞ்சில் ஒரு நெருஞ்சி" அழுத்தமான, ஆழமான கருத்தினைக் கொண்ட ஒரு நாவல்.